×

பொறுமை என்கிற வெற்றிச் சாவி

திசைகாட்டும் தெய்வீகம்! 19

நதிக்கரை ஓரத்தில் தன் நீண்ட அலகைத் தொங்கப் போட்ட வண்ணம் நெடு நேரமாய் நின்று கொண்டிருக்கிறது ஒரு கொக்கு! மோனத்தவம்புரியும் ஒரு முனிவன் போல, ஆடாமல் அசையாமல் முழு அமைதியுடன் தனக்கான உணவு வரும் வரை நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்திருக்கிறது அந்தப் பறவை.

ஓடு மீன் ஓட, உறு மீன்வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
என்று நீதி நூலும்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து


என்று திருக்குறளும் கூறுகின்றது. கரையோரம் கொக்கு காத்திருப்பதற்கான காரணம் இரண்டு. ஒன்று, தனக்கான இரை கட்டாயம் கிடைக்கும் என்ற தளராத நம்பிக்கை! இரண்டாவது, போகின்ற சாதாரண புழுக்களையும், பூச்சிகளையும் பொருட்படுத்தாது ‘உறு மீன்’ வரும் என்று காத்திருக்கும் பொறுமை. பறவைக்கு இருக்கும் நம்பிக்கையும், பொறுமையும் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை.

ஆகவேதான் பலர் அசாத்திய திறமைகள் இருந்தும். தங்கள் துறையில் சாதனை படைக்காமல், சாதாரணர்களாக சரிந்துபோய்விடுகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் இலக்கில் ஈடேற இன்றியமையாத பொறுமையும், நம்பிக்கையும்தான் என்று தெளிவாகப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். சாப்பாட்டிற்காகக் காத்திருக்கும் ஒருவன், அவசரப்பட்டால் அவனிடம் சகஜமாக அனைவரும் பயன்படுத்தும் ஒரு நாட்டுப் புற வாக்கியம்;

ஆக்கப் பொறுத்த நீ ஆறப்பொறுக்க மாட்டாயா?
ஏன் அவசரப்படுகிறாய்’


என்பது தான்.

மகாபாரத்தின் முக்கியமான கட்டமாகிய பாஞ்சாலி சபதத்தை குறுங்காவியமாகப் பாடி உள்ளார் மகாகவி பாரதியார். துரியோதனன், சகுனி இருவரின் கூட்டுச் சதிகாரணமாக தருமர் சூதாட்டத்தில் அனைத்தையும் இழக்கிறார். அப்போது பொறுமை இழந்த பீமன் பொங்கி எழுகிறான். சூதாட்டத்தில் நாட்டை இழந்தார், செல்வத்தைத் தொலைத்தார், நம் ஐவரையும் அடிமை செய்தார். அன்பு இல்லாள் திரௌபதியையும் பகடை காய்க்குப் பலியாக்கி விட்டாரே நம் அண்ணா! இதை என்னால எப்படிப் பொறுத்துக் கொள்ளமுடியும்?

இது பொறுப்பதில்லை!-தம்பி
எரிதழல் கொண்டுவா!
கதிரை வைத்திழந்தான்-அண்ணன்
கையை எரித்திடுவோம்!


இவ்வாறு பீமன் சகாதேவனிடம் சொல்ல, அர்ஜூனன்  அப்போது கூறும் அறிவுரை பாரதியின் வாயிலாகக் கீழ்க்கண்டவாறு வெளிப்படுகிறது. கொந்தளிக்கும் கோபத்தால் அறிவு தடுமாறி நிதானம் இழந்து அவ நம்பிக்கையோடு இப்படிப் பேசலாமா என்கிறான் அர்ஜூனன்.

தருமத்தின் வாழ்வ தனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழி தேடி விதி இந்த செய்கை செய்தான்!
கருமத்தை மென்மேலும் காண்போம்! இன்று
கட்டுண்டோம்! பொறுத்திருப்போம்! காலம் மாறும்!
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்!
தனு உண்டு! காண்டீபம்! அதன்பேர்
என்றான்!
கட்டுண்டோம்!
பொறுத்திருப்போம்!
காலம் மாறும்!


அர்ஜூனன் வாயிலாக பாரதியார் தெரிவித்த இந்த மூன்று வாசகங்களும் நிரந்தர வெற்றியை நிதானமும், உறுதிகுலையாத நம்பிக்கையுமே ஏற்படுத்தித் தரும் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்லவா! அனைத்து இதிகாசங்களும், புராணங்களும் மனிதர்க்கு அறிவுறுத்தும் முக்கியமான இரண்டு அம்சங்களே. அவை நம்பிக்கையும் பொறுமையும் தான்! அசோகவனத்தில் அரக்கியர்கள் சூழ-புலிக்கூட்டத்தின் நடுவிலே புள்ளிமான் போல சீதாபிராட்டி அமர்ந்திருப்பதை அனுமன் கண்டான். தன்னை ராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாளமாக, இராமர் தந்த கணையாழியை சீதையிடம் தந்தான்.

‘அம்மணி! அரக்கனின் பிடியிலே அவதிப்படும் தங்களை உங்கள் நாயகரே வந்து மீட்பதற்கு பல நாட்கள் ஆகும்! ஒன்பது மாதங்களாகச் சொல்லொணாத துயரத்தில் வாடுகின்றீர்கள். அடியேன் விண்ணப்பத்தை அன்பு கூர்ந்து கேளுங்கள். இராமபிரான் அணைகட்டி இலங்கை வந்து இராவணனோடு போரிட்டு அவனைவென்ற பின்னர் உங்களை அழைத்துச் செல்லும் வரை நீங்கள் ஏன் இந்த ஆற்ற முடியாத சோகத்தில் அமுங்கிக்கிடக்க வேண்டும். ராமதூதனாகிய என்தோள் மீது ஏறிக்கொள்ளுங்கள். கடலை ஒரு கணத்தில் தாவி அக்கரைக்கு உங்களை, அக்கறையாக அழைத்துச் சென்று இராமபிரானிடம் சேர்க்கின்றேன் என்றார். அப்போது சீதாதேவி கூறுகின்றாள்;

உன்தோள்மீது ஏறி தப்பிச் செல்வதற்காகவா நான் இத்தனை நாள் பொறுமையாக இங்கு இருக்கின்றேன். என் சொல் ஒன்று போதும், இந்த இலங்கையைச் சுட்டெரிக்க! என் நாயகரின் வீரத்தை அரக்கர்கள் அறிய வேண்டும் என்றுதானே நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் நாட்களை நகர்த்தி வருகிறேன். கம்பன்காவியத்தில் ‘சீதை சிறையிருந்த படலம்’ சுந்தர காண்டம் என்றே வழங்கப்படுகிறது. சுந்தர காண்டத்தின் அடிப்படையே நம்பிக்கையும், பொறுமையும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்பினோர் கெடுவதில்லை
பொறுத்தார் பூமி ஆள்வார்.


இவ்விரண்டு வாசகங்களும் வெற்றி பெற்ற பல சாதனையாளர்களின் வாழ்க்கை ரகசியத்தை விளக்குகின்றன. பாரதியார், தாம் பாடிய ``விநாயகர் நான் மணிமாலை’’ என்றும் தோத்திர நூலில் தெளிவாகக் கூறுகின்றார்.

‘அனைத்தும் அவன் செயல்’

`அவனின்று அணுவும் அசையாது’ என்று பரிபூரணமாகத் தெய்வசத்தியை நம்பிக்கையுடன் வழிபடுபவர்கள், பொறுமையை இழந்து ஒரு போதும் பதற்றமடைய மாட்டார்கள். நிலத்தில் விதையை ஊன்றி பதற்றமடைய மாட்டார்கள். நிலத்தில் விதையை ஊன்றிய பிறகு அதற்குரிய பயிர் சிறிது காலத்தில் முளைவிடும். அவசரப்பட்டு பூமியை அகழ்ந்தால் விளைச்சல் வீணாகி விடும் அல்லவா! எனவே ஆணி அடித்தாற்போன்ற நம்பிக்கையும், அவசரப்படாத கால அவகாசமும்தான் செயற்பாடுகளில் ஜெயத்தைப் பெற்றுத் தரும் என்கிறார் பாரதியார்.
    
பக்தி உடையார் காரியத்தில்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மையைப் போல்
மெல்லச் செய்து பயன் அடைவார்!
‘சக்தி தொழிலே!’ அனைத்தும் எனில்
சார்ந்த நமக்கு சஞ்சலம் என்?
வித்தைக்கு இறைவா! கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணி எனையே!


பல்லாயிரம் ஆண்டுகள் பொறுமையுடன் பூமிக்குள் கிடக்கும். கரித்துண்டுகள்தான் வைரக்கற்களாக மின்னுகின்றன. உரிய காலம் கூட்டிற்குள் புழுவாக ஒடுங்கிக் கிடந்ததால் தான் மின்னும் சிறகோடு கண்முன் பறக்கிறது வண்ணத்துப் பூச்சி! நம்பிக்கையும், பொறுமையும் அனைவர் வாழ்க்கையிலும் அணையாக தீபத்தை ஏற்றும் என்பது உறுதி!

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags :
× RELATED சுந்தர வேடம்