கொடுத்து மகிழ்வதே மனிதம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் - 33 (பகவத் கீதை உரை கர்ம யோகம்)

நாம் ஒருவரிடம் சென்று எதையேனும் யாசிக்கிறோம் என்றால், அது நம்மிடம் இல்லை, அதனால் அது நமக்குத் தேவை, அது யாரிடம் இருக்கிறதோ அவரிடமிருந்து நமக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்த்தலில் யாசிக்கிறோம். அதேபோல, யாரேனும் நம்மிடம் யாசித்தால் நாம் கொடுக்கிறோம் - நம்மிடம் உள்ளதைக் கொடுக்கிறோம். அதாவது, நம்மிடம் கொடுப்பதற்கு இருக்கிறது என்பதை நாம் அறிவிக்கிறோம். எப்படி யாசிப் பவர் இல்லை என்பதைத் தெரிவிக்கிறாரோ, அதேபோல வழங்குபவர் இருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறார்.

அதாவது, யாசிப்பவருக்குக் கொடுத்தது போக மிச்சமுள்ளதைத் தாம் அனுபவிக்கலாம் என்ற பரோபகார சிந்தனை வழங்குபவருக்கு வந்துவிடுகிறது என்பதை இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

யக்ஞசிஷ்டாசினஹ ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை

புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் (3:13
)

‘‘யாகம் வளர்ப்போரெல்லாம் அந்த யாகத்தில் எஞ்சியதை உட்கொள்வார்களேயானால், அவர்கள் தம் பாபங்களிலிருந்து விடுபடுபவர்களாவார்கள். அப்படிப் பொதுநலமின்றி தன் உடல் வளர்ச்சிக்காக மட்டுமே உணவு தயாரிப்பவர்கள் அவ்வாறு தாம் சமைக்கும் உணவைத் தாம் மட்டுமே உட்கொள்கிறார்கள் என்றால் அவர்கள் பாபங்களையே உண்கிறார்கள் என்று

அர்த்தம்.’’

இயல்பாகச் செய்யப்படும் கர்மங்களுக்கென்று தனியே புண்ணியம், பாபம் என்று கிடையாது. ஆனால், அவ்வாறு செய்யப்படும் கர்மங்களின் நோக்கங்களும், அதற்கான சிந்தனைகளும் எப்படி அமைகின்றனவோ அதற்கேற்ப அவை புண்ணியம் அல்லது பாபம் பெற்றுத் தருபவையாக ஆகின்றன. நல்லவர்களின் நலம் பேணுவதற்காகத் தீயவர்களை அழிப்பதாகிய போர் என்ற கர்மாவானது புண்ணியம் சேர்ப்பதாகும். மாறாக அது சுயநல நோக்குடையதென்றால் பாபம் சேர்ப்பதாகும்.

ஒரு சமுதாயப் பிரச்னைக்காக ஒருவர் குறிப்பிட்ட அமைப்பு அல்லது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார் என்றால், சாலையில் அமர்ந்து மறியல் செய்கிறார் என்றால், அந்த நேரத்துக்குப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறார் என்றால் அவருடைய இந்தச் செய்கை புண்ணியம் சார்ந்தது. ஆனால், தன் நலனுக்காக ஒரு சமூக விரோதி சாலையில் ஆர்ப்பாட்டம் செய்கிறான் என்றால், போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்கிறான் என்றால், தனக்கு மாமூல் தரவேண்டும் என்று அடாவடியாக கடைகளை நடத்தவிடாமல் அவன் மிரட்டுகிறான் என்றால் இவனுடைய இந்தச் செயல் பாபம் சார்ந்தது.

இரண்டு செய்கைகளிலுமே பொது இடமும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்தான் என்றாலும், நல்லெண்ணத்தால் மேற்கொள்ளப்பட்ட கர்மாவுக்கு அனைவருமே ஆதரவு அளிப்பார்கள். ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். ஆனால், தீய எண்ணத்தால் மேற்கொள்ளப்பட்ட கர்மாவுக்கு யாருமே ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ஒருவேளை பயம் காரணமாக அவர்கள் அந்த சமூக விரோதியைத் தடுக்காமல் இருக்கலாம். ஆனால், உளமார அவர்கள் அவன் செய்கையை ஆதரிக்க மாட்டார்கள் மனசுக்குள்ளாவது சபித்து மறுகுவார்கள்.

மீண்டும் யக்ஞம் பற்றி யோசிக்கும்போது, ஒருவருடைய வீட்டுக்கு விருந்தாளி வருகிறார் என்றால், தான் சமைத்து வைத்திருப்பதை முதலில் அந்த விருந்தாளிக்கு அளித்துவிட்டு, பிறகு எஞ்சியதைத்தான் விருந்தோம்புபவர் உண்கிறார் என்றால், இவர்தான் உயர்வானவர். மாறாக, விருந்தாளியின் பசித் தேவையைப் புரிந்து கொண்டும் தன்னிடம் அவனுக்கு அளிக்க எந்த உணவும் இல்லை என்று பொய்யாக மறுப்பவன், விருந்தாளி போனபிறகு அந்த உணவை உண்பானானால் அப்படி அவன் உண்பது உணவையல்ல, பாபங்களைத்தான்.

இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் நல்ல எண்ணம், நல்ல செயல் எல்லாம் அனைவருக்கும் நன்மை பயக்கும். இதனால், தன் சொந்த கவலைகளுக்கு நாம் ஆட்பட வேண்டியதில்லை. ஏனென்றால் நம் கவலைகளை இறைவன் எடுத்துக் கொண்டுவிடுகிறார். அதனால், இறைவன் ஆணையால் நம்மைச் சுற்றியுள்ளவை எல்லாமே நமக்கு நன்மையாகவே அமைகின்றன. ‘கவலைப்படுவதில்லை’ என்ற வைராக்கியம் நமக்குள் வளர்ந்துவிடுகிறது.

கவலைப்படுவதில்லை ஆகையால் சுய லாபத்தை, நன்மையைத் தருமோ என பின்விளைவுகளை எதிர்பார்ப்பதும் இல்லை. நாம் பிறர் நலனை முன்னிருத்தி கர்மாக்களைச் செய்யும்போது, நம் நலனைப் பாதுகாக்கவேண்டியது இறைவனின் கடமையாகிவிடுகிறது. இதனால், நாம் எதற்கும் கவலைப்படாமல் நம் கர்மாக்களில் மனப்பூர்வமாக ஈடுபடலாம். சமுதாய நற்பணி ஆற்றலாம்.

இதனால் ‘நான்’ என்ற அகந்தை அடங்கி விடுகிறது. ஏன் காணாமலேயே போய்விடுகிறது. பொதுநல உணர்வு மேலோங்குகிறது. அது சார்ந்த செயல்களும் அதே ஆக்க பூர்வமாக அமைகின்றன. அச்செயல்களின் விளைவுகள், அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித் தருகின்றன. இப்படி நற்செயல்களை நிறைவேற்றும்போது சுற்றுச் சூழலும், இயற்கையும் மேன்மை பெறுகின்றன. உரிய காலத்தில் மழை பொழிகிறது. அது பூமியை வளப்படுத்தி, பயிர்களையும் செழிக்கச்செய்கிறது. சிறு பூச்சி முதலான அனைத்து ஜீவன்களிடமும் ஆனந்தம் ததும்புகிறது.

சாதம் சமைக்கும் சட்டி அந்த சாதத்தின் சுவையையோ மணத்தையோ அனுபவிக்கிறதா? குழம்பு பரிமாறும் கரண்டி அதன் சுவையையோ மணத்தையோ அனுபவிக்கிறதா?  சாதம் சமைக்கப்படவும், குழம்பு பரிமாறப்படவும் உதவியாக இருப்பதுதான் சட்டி, கரண்டி இரண்டின் கர்மாவே! சுயலாபம் எதையும் எதிர்பாராத, பிறர் நலனை மட்டுமே கருத்தாகக் கொண்டு ஆற்றப்படும் சேவை அது. அதுபோல யக்ஞம் இயற்றும் ஒருவன், இறையுணர்வுடனான கர்மாக்களை இயற்றும் ஒருவன், பொதுநலனையே விழைவான்.

இப்படி சந்தோஷம் நிறைவிக்கும் யக்ஞங்கள் மொத்தம் ஐந்து என்று வகுத்திருக்கிறார்கள். முதலாவதாக தேவயக்ஞம். ஒவ்வொரு நாளும் கட்டாயமாக இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு முறை தவறாமல் செய்யப்படுவதுதான் தேவயக்ஞம். இரண்டாவதாக ரிஷியக்ஞம். உலகில் நன்மைகளே நிறைந்திருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் நம் முன்னோர்களான சான்றோர்கள் பல சாஸ்திரங்களை இயற்றித் தந்திருக்கிறார்கள்.

இவர்களில் பலர் தாங்கள்தான் இன்ன சாஸ்திரங்களை இயற்றினோம் என்ற அடையாளத்தைகூட விட்டுச் செல்லவில்லை. ‘உலகப் பொது நன்மைதான் முக்கியம். ஆகவே நான்தான் இயற்றியவன் என்ற சுயபெருமை எனக்குத் தேவையில்லை’ என்பதாகிய பெருந்தன்மை கொண்டவர்கள் அவர்கள்.

அத்தகைய இறையுணர்வு தரும் சாஸ்திரங்களை படித்து, ஆராய்ந்து, அவற்றைத் தனக்கு மட்டுமே உரிமையாக்கிக் கொள்ளாமல், அனைவருக்கும் சொல்லிப் பகிர்ந்து,

எல்லோர் மேன்மைக்காகவும் பாடுபடவேண்டும். சித்தர்கள், மகான்கள் எல்லாம் இப்பணியைச் செய்தார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் இந்தப் பணியிலேயே கழிப்பதே ரிஷியக்ஞம்.

மூன்றாவது, பித்ருயக்ஞம். இந்த ஜன்மத்தில் இப்படி ஒரு பிறவி கிடைத்ததற்குத் தம் முன்னோர்க்கு நன்றிசொல்லக் கடமைப்பட்டவன் மனிதன். அவன் அறிந்தோ, அறியாமலோ அவர்களுக்குப் பல தவறுளை இழைத்திருக்கலாம்; அவர்களுக்கு மனவேதனை ஏற்படும்படியாக நடந்துகொண்டிருக்கலாம். ஆனால், அவற்றுக்கெல்லாம் அவ்வப்போதே மன்னிப்புக் கோரவோ, தவறுகளை ஒப்புக் கொள்ளவோ அவன் தயங்கியிருக்கலாம். இது அவனுடைய ‘சுய கௌரவம்’ காரண மாகவோ, வேறு யாருடைய தவறான ஊக்கம் காரணமாகவோ அல்லது சூழ்நிலை நிர்ப்பந்தம் காரணமாகவோ ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், ஒரு கட்டத்தில் அத்தகைய பெரியவர்கள் நம்மைவிட்டு நீங்கியபிறகு ஆழ்மனசுக்குள்ளிருந்து அவர்களுக்கு இழைத்த துன்பங்கள் வெளியே வரலாம். இப்போது அதற்காக மனம் வருந்தலாம். ஆனால், மானசீகமாகத்தானே அவர்களிடம் மன்னிப்பு கேட்கமுடியும்? இப்படி, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதும், நம் வளர்ச்சிக்குக் காரணமானதால் நன்றி தெரிவிப்பதும்தான் பித்ருயக்ஞம். வீட்டுப் பெரியவர்கள் இறந்தபிறகுதான் இந்த யக்ஞத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை.

அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து அவர்களுக்கு அவர்களுடைய இறுதிக் காலம்வரை ஆதரவுடனும், அன்புடனும் நடந்து கொள்வதும் பித்ருயக்ஞம்தான்! நான்காவதாக நரயக்ஞம். நம்மைப் போன்றே மனிதராகப் பிறவியெடுத்த, பிற அனைவருக்கும் உதவும் கடமைதான் நரயக்ஞம். தேவைப்பட்டோருக்கெல்லாம் பசிப்பிணி, உடற்பிணி நீக்கி, அவர்கள் வாழ்க்கையை மேம்படச் செய்யும் உதவி அது. கல்வியளித்து அவர்களுடைய அறியாமையை அகற்றுவது, தகுதிக்கேற்ப அவர்களுக்குப் பணி அமைத்துத்தருவது முதலானவை இந்த யக்ஞத்தில் அடங்கும்.

ஒரு எல்லைக்கோடு வைத்துக்கொண்டு இந்த யக்ஞத்தை ஆற்ற வேண்டும் என்பதில்லை. காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தேவைகளுக்கு ஏற்ப, தேவையுள்ளோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த யக்ஞத்தை விரிவுபடுத்தலாம். மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஐந்தாவதாக பூதயக்ஞம். ஐந்தறிவு ஜந்துகளான பிராணிகளை முறையாகப் பராமரிப்பது, அவற்றின் பசி போக்குவது, அவற்றின் நோய் நீக்குவது, அவையும் இறைவன் படைத்தவையே என்பதை உணர்ந்து அவற்றை உள்ளார்ந்த அன்புடன் அணுகுவதுதான் இந்த யக்ஞத்தின் நோக்கம். கோசாலைகள், ப்ளூ கிராஸ் அமைப்பு போன்றவை இந்த யக்ஞத்தின் உதாரணங்களாகத் திகழ்கின்றன.

இப்படி ஒரு மனிதன் தினந்தோறும் இந்த ஐந்து யக்ஞங்களிலும் ஈடுபடவேண்டும் என்பது நம் ஆன்றோர் வகுத்த வழி. எந்தெந்த யக்ஞங் களில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மனமொப்பி ஈடுபடவேண்டியது நம் கடமை. இப்படி பஞ்ச மஹாயக்ஞத்தில் மனிதன் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடவேண்டும் என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அறிவுறுத்துவதுபோல, நமக்கும் உணர்த்துகிறார். அதே சமயம் உணவினால்தான் மனிதன் உருவாகிறான் என்றும் கூறுகிறார். அது எப்படி?

அன்னாத் பவந்தி பூதானி பர்ஜன்யாதன்னஸம்பவ யக்ஞாத்பவதி அர்ஜன்யோ யக்ஞஹ கர்மஸமுத்பவ (3:14)‘‘

உணவிலிருந்தே உயிர்கள் உருவாகின்றன. அந்த உணவு மழையினால் கிடைக்கிறது. அந்த மழை யக்ஞத்திலிருந்து வருகிறது. அந்த யக்ஞத்துக்குப் பிறப்பிடம் கர்மம்.’’

மழை நமக்காகப் பொழிகிறது. வறட்சி நாட்களில் நாம் மழையை வேண்டி யாகம், ஹோமம் என்று செய்வதில்லையா? அதாவது மழை நம்மை வளர்க்கிறது, நம்முடைய பசி, தாகத்தைத் தீர்க்கிறது, நமக்கு ஆரோக்கியம் தருகிறது, நம் உடல்நலத்துக்குக் காரணமாகிறது, நம் வாரிசுகளை நாம் உருவாக்க உதவுகிறது. மழை, காடுகளை வளர்க்கிறது. அந்தக் காடுகள் மனித நலத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்குகின்றன. இயற்கையோடு இணைந்து வாழ்வதில் மனிதன் மேன்மையடைகிறான். இயற்கையைப் பழிப்பதுபோல, அதற்கு எதிராக முரண்படுவது, நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்வது போன்றது.

இப்போது, அதுதானே நடந்துகொண்டிருக்கிறது! பசுமையாய் ஒரு வெட்டவெளி இருந்துவிடக்கூடாது உடனே அங்கே பசுமை மறைந்து கான்க்ரீட் மரங்கள் முளைத்துவிடுகின்றனவே! பசுமையை எதிர்பார்த்து வரும் மழைதாங்கிய கருமேகங்கள், உஷ்ணத்தை வெளிவிடும் கட்டடங்களைப் பார்த்து மயங்கி, மலைத்து, கலைந்தும் போய்விடுகின்றன.

இப்படி இயற்கையைப் புறக்கணிப்பதால், இப்போது யக்ஞங்களும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. நல்லவேளையாக சில கோயில்கள், தங்கள் வளாகத்துக்குள் நந்தவனங்களை இன்றளவும் பாதுகாத்துப் பராமரித்து வருகின்றன. இவையும் இல்லையென்றால், மழையை நாம் மறந்துவிடவேண்டியதுதான். இல்லை, இல்லை, மழை நம்மை மறந்துவிடும்!

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

Related Stories: