திருப்தியாக்குவார் தேவன்

பெத்சாயிதா என்னும் இடத்தில் இயேசுவும் சீடர்களும் ஒருமித்து இருந்தனர். அதை கேள்விப்பட்ட ஜனங்கள் அவரை பின்பற்றினர். இயேசுவும் அவர்களை வரவேற்று தேவனுடைய ராஜ்யத்தை குறித்து அவர்களுக்கு போதித்தார். நோயுற்றிருந்த மக்களை குணப்படுத்தினார். மதியத்திற்கு பிறகு பன்னிரண்டு சீடர்களும் இயேசுவிடம் வந்து, ‘‘இது மக்கள் வசிக்கிற இடம் அல்ல. மக்களை அனுப்பி விடுங்கள். அவர்கள் உணவை தேடவும் இரவை கழிப்பதற்கும் அக்கம் பக்கத்து நகரங்களுக்குச் செல்ல வேண்டும்’’ என்றார்கள்.

இயேசு அவர்களிடம், ‘‘அவர்கள் உண்ணும்படியாய் எதையாவது நீங்கள் கொடுங்கள்’’ என்றார். சீடர்களோ, ‘‘எங்களிடம் ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் மட்டுமே உள்ளன. இங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் அது போதாதே’’ என்று கவலையுடன் கூறினார்கள். அந்த இடத்தில் சுமார் 5000 பேர் இருந்தார்கள். உடனே இயேசு தன் சீடர்களிடம், ‘‘அவர்களை ஐம்பது பேர் கொண்ட  குழுக்களாக அமரும்படி கூறுங்கள்’’ என்றார். அவ்வாறே மக்களும் செய்தனர்.

அப்பொழுது இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்துக்கு நேராய் அண்ணாந்து பார்த்து, அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்னர் இயேசு உணவை பகிர்ந்து அங்கிருந்த தன் சீடர்களிடம் கொடுத்து அதை மக்களுக்கு கொடுக்குமாறு கூறினார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். சாப்பிட்டது போக மீதியும் இருந்தது. அதை பன்னிரண்டு கூடைகள் நிரப்பினர். (லூக் 9: 10-17)

ஐந்து அப்பம், இரண்டு மீன்களைக் கொண்டு 5000 பேரை திருப்தியாக உணவருந்தச் செய்து மீதமும் இருக்குமாறு செய்த தேவன் இன்றைக்கு நம்மையும் திருப்தியாக்குவார். ‘‘என் ஜனங்கள், நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார். (எரே 31: 14), திருப்தி என்பது கவலை, ஆவல் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவதை குறிக்கும். இதற்கான கிரேக்க வார்த்தைக்கு போதுமென்ற மனப்பாங்கு, சுயாதீனம் என்று பொருள்.

வருஷத்தை உம்முடைய நன்மையினால் முடிசூட்டுகிறீர் என்று தாவீது தேவனை புகழ்ந்து பாடுகிறார். (சங் 65: 11). இவ்வசனத்தின்படியே தேவன் நம்மை இவ்வாண்டு முழுவதும் நன்மையினால் திருப்தியாக்கப் போகிறார். நாம் சந்தோஷமாய் அவரைப் புகழ்ந்து பாட வேண்டும். சிங்கக்குட்டிகள் சாப்பிட ஒன்றுமில்லாமல் பட்டினியாயிருக்கும். கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.

(சங் 34: 10). காரணம் நாம் அவருடைய ஜனமாயிருக்கிறோம். தேவன் நம்மை திருப்தியாக்க நாம் சாந்த குணமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (சங் 22: 26). உத்தமமாய் நடந்துகொள்ள வேண்டும் (சங் 37: 18, 19) ஆலயத்திற்கு வரவேண்டும் (சங் 65: 4), தேவன் மீது தாகமாயிருக்க வேண்டும். (சங் 107: 8), நீதியின் மேல் பசி, தாகம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும் (மத் 5: 6), கண் விழித்து ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். (நீதி 20: 13). அப்பொழுது தேவன் இவ்வாண்டு முழுவதும் அவர் கொடுத்த வாக்கின்படி நம்மை நன்மையினால் திருப்தியாக்கி நடத்துவார்.

 

- பரமன்குறிச்சி, பெ.பெவிஸ்டன்

Related Stories: