இந்த வார விசேஷங்கள்

17-9-2022 - சனி - பெரியவாச்சான் பிள்ளை

திருக்கண்ணமங்கை என்று ஒரு தலம். வைணவ 108 திவ்யதேசங்களில் ஒன்று. திருவாரூருக்கு அருகில் உள்ளது. அங்கே திருமங்கை ஆழ்வார், பக்தவச்சலப் பெருமாளைப்  பாடும்பொழுது, பெருமாளுடைய முகக் குறிப்பைக் கண்டு, ‘‘நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே” என்று பாடுகின்றார். திருமங்கை ஆழ்வார் பாசுரங்களைக் கேட்ட பகவான், அந்தப் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களையும் கேட்க வேண்டும் என்று எண்ணுவதைப் புரிந்துகொண்ட ஆழ்வார்,’’என்னுடைய பாசுரங்களின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், நானும் புதிய பிறவி எடுக்க வேண்டும்.

நீயும் ஒரு அவதாரம் எடுக்க வேண்டும்” என்று சொல்ல, அப்படியே பகவானும் ஆழ்வாரும் அவதாரம் எடுத்தனர். திருமங்கையாழ்வார், நம்பிள்ளை என்கின்ற ஆசாரியராக அவதரித்தார். பகவான் பக்தவச்சலப் பெருமாள், கிருஷ்ணர் சூரி என்கின்ற பெயரில் நம்பிள்ளையின் சீடராக அவதாரம் செய்து, பாசுரங்களின் அர்த்தங்களை எல்லாம் கிரகித்து, அந்த அர்த்தங்களை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தானே உரை எழுதித் தந்தார். அந்த கிருஷ்ண சூரிதான் வைணவத்தில் ``பெரியவாச்சான் பிள்ளை’’ என்று அழைக்கப்படுபவர்.

அவர் அவதரித்த திருநட்சத்திரம் ஆவணி ரோகிணி. இன்று ரோகிணி நன்னாள். அவர் அவதரித்த திருத்தலம் சென்னை கும்பகோணம் சாலையில், கும்பகோணத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சேங்கனூர் என்ற திருத்தலம். இந்தத் திருத்தலம்தான் சைவத்தில் சண்டிகேஸ்வர நாயனாரின் அவதாரத் தலம்.

பெரிய வாச்சான் பிள்ளையை வைணவத்தில் வியாக்கியானச் சக்கரவர்த்தி என்று அழைப்பார்கள். இவர் அவதரித்த தலத்திற்குப் பக்கத்தில்,

திருவெள்ளியங்குடி என்கின்ற வைணவத் திருத்தலம் உண்டு. அது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வாய்ப்பு உள்ளவர்கள் பெரியவாச்சான் பிள்ளையின் அவதார நட்சத்திர தினமான இன்று இத்தலங்களைத் தரிசிக்கலாம். அவருடைய பேரருளைப் பெறலாம்.

18-9-2022 - ஞாயிறு  சம்புகாஷ்டமி

கால பைரவருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த நாட்கள் தேய்பிறை அஷ்டமி நாட்கள். புராணங்களில் சிருஷ்டிப் பிரபாவத்தை விஸ்தாரமாகச் சொல்லி முடித்த சூதர் என்ற முனிவர், சிவபெருமானுக்குப் பிடித்தமான அஷ்டமி விரதத்தைப் பற்றி விவரிக்கலானார். ஒவ்வொரு மாதமும் அஷ்டமிகளில் உபவாசமிருந்து சிவபெருமானைப் பூஜிப்பவன் அவரைத் திருப்திப் படுத்தியவனாகி, சகல சௌபாக்கியங்களையும் அடைகிறான்.

இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும், மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் மிகச்சிறந்த நன்மைகள் ஏற்படும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமிக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. ஆவணி மாதம் 32-ஆம் தேதி சனிக்கிழமை இரவு தொடங்கி, புரட்டாசி மாதம் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் வரையும் அஷ்டமி பரவியிருக்கிறது.

இந்த அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். `சம்பு’ என்றாலே சிவபெருமானைக் குறிக்கும். நாவல் மரங்களையும் குறிக்கும். நாவல் மரங்கள் நிறைந்த திருவானைக் கோயிலில் உள்ள ஈசனுக்கு சம்பு என்று பெயர். இன்பத்தைத் தருபவன் என்று பொருள். சம்பு என்பதற்கு சூரியன் என்ற ஒரு பொருளும் உண்டு. இந்த அஷ்டமி சம்புவின் தினமான ஞாயிற்றுக்கிழமை வருவது சிறப்பு. ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பலனுண்டு. இந்த அஷ்டமி விரதம் ஆயுள் தோஷத்தை நீக்கும். ஆயுள் விருத்தி ஏற்படும். பெற்றோர்களுக்கு செய்த பிழைகள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.

18-9-2022 - ஞாயிறு - மஹாளய வியதீபாதம்

நட்சத்திரங்கள் 27. யோகங்களும் 27. இந்த இருபத்தேழு யோகங்களில், வியதீபாதம் என்கின்ற யோகமும் உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் இந்த வியதீபாதம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். சாதாரண தர்ப்பணத்தைவிட இந்த நாளில் செய்கின்ற தர்ப்பணம் பத்து மடங்கு அதிகப்  பலனைத் தரும். மஹாளய பட்சத்தில் இந்த யோகம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு அவசியம் முன்னோர்களை நினைத்து நீத்தார் கடன் செய்ய வேண்டும். அந்த நாள் இன்று.

20-9-2022 - செவ்வாய் - சுக்கிர ஜெயந்தி

நவக்கிரகங்களில் பூரணமான சுபக்கிரகங்கள் இரண்டு. ஒன்று குரு. இன்னொன்று சுக்கிரன். ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் பிரமாதமாக அமைந்துவிட்டால், அந்த ஜாதகர் மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய வாழ்க்கை முழுக்க விளங்குவார். ஒருவர் நல்ல இன்பங்களையும், சுகங்களையும், பல்வேறு யோகங்களையும் அனுபவிக்கிறார் என்று சொன்னால், “சுக்கிர தசை அடிக்கிறது அவனுக்கு” என்று சொல்லுகிறோம் அல்லவா.

 

அந்த சுக்கிரன் இல்லற வாழ்வுக்கும், இல்லற வாழ்வின் சுகங்களுக்கும், வாகனங்களுக்கும், மன நிம்மதிக்கும், ஆசை உணர்வுகளுக்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் காரணமாகிறான். நேத்திரன், பிருகு, பார்க்கவன், சுகி, போகி, மகிழன், வெள்ளி, கவி, அசுரகுரு, புகர், களத்திரக்காரகன், மழைக்கோள் என்றெல்லாம் போற்றப்படுபவன் சுக்கிரன்.

சுக்கிர பகவான் மாய மந்திரங்களுக்கும், தந்திர வித்தைகளுக்கும் அதிபதி என்பதால், தீய சக்திகளுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் அஞ்சுபவர்கள், சுக்கிரனை  வழிபட்டால், பலன் பெறலாம். சுக்கிரன் மகாலட்சுமியின் அம்சத்தை உடையவன் என்பதினால், ஒருவன் செல்வ செல்வாக்கோடு வாழவேண்டும் என்று சொன்னால்  அவருக்கு சுக்கிரனுடைய அருள் கட்டாயம் வேண்டும்.

சுக்கிரனுடைய அவதார நாள் இன்று. இன்று சுக்கிர பகவானுக்கு வெண் பட்டாடை அணிவித்து, வெள்ளை சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்து, ஆறு நெய்தீபம் ஏற்ற, சுக்கிர தோஷம் விலகும். ஆறு என்கின்ற எண்ணுக்கு அதிபதி சுக்கிரன். பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சுக்கிர தசாபுக்தி நடைபெறுபவர்களும், இந்த வழிபாட்டைச் செய்வது நலம் பயக்கும்.

21-9-2022 - புதன் - அஜா ஏகாதசி

ஆசிகளைப் புரட்டும் புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு “அஜா ஏகாதசி’’ என்று பெயர். ``அஜா’’ என்றால் வருத்தத்தை நீக்குவது என்று பொருள். உயிர்களின் வருத்தத்தை நீக்கி, உயர்நிலைக்குக் கொண்டு செல்லுகின்ற ஆற்றலைத் தருவது இந்த ஏகாதசி. ஏகாதசியின் மகிமையை ஏகாதசி மகாத்மியம், ஸ்ரீராமாயணம், மகாபாரதம், மற்றும் பாகவத புராணங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக வலிமையுள்ள மக்கள், நற்கதி பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. அவர்கள் யாகங்கள் செய்யலாம். ஹோமங்கள் செய்யலாம். இந்த சக்தி அவர்களுக்கு உண்டு. அதைப் போலவே சக்தி படைத்த முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் ‘தவம்’ என்கின்ற மகத்தான வழி உண்டு. ஊன் வாட உண்ணாது தவம் செய்து நற்கதி அடையலாம்.

ஆனால், சம்சார வாழ்க்கையில் சிக்கித் தவித்து, தடுமாறும் ஏழை மக்கள் உய்வு பெற, எளிய வழியாகக் கொடுக்கப் பட்டிருப்பதுதான் ஏகாதசி விரதம்.

எளிய மக்களுக்கான சக்தி வாய்ந்த விரதமாக ஏகாதசி விரதம் இருக்கிறது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒரு பகுதி உபவாசம் இருப்பது. உடல் நன்மைக்காகவும், சுத்திக்காகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

இரண்டாவதாக மனம் சுத்தி அடையவேண்டும். அப்போதுதான் அங்கே மாலவன் வந்து அமர்வான். அதற்காக நாம சங்கீர்த்தனம், தானம் செய்தல், கோயிலுக்குச் செல்லுதல், பூஜைகள் செய்தல் என்று பல வழிகள் சொல்லப்படுகின்றன. இந்த இரண்டு பகுதிகளும் ஏகாதசிக்கு அங்கங்களாக இருக்கின்றன. இந்த ஏகாதசியை பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில், நம்மால் இயன்ற அளவு அனுஷ்டித்தால், நாம் இழந்ததைப் பெறலாம். இருப்பதை இழக்காமல் இருக்கலாம்.

23-9-2022 - வெள்ளி - பிரதோஷம்

இன்று பிரதோஷ நாள். மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பு. சிவபெருமானுக்குரிய விரதம் இருக்க வேண்டிய நாள். சிவபெருமானை நாம், நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும், பிரதோஷ காலத்தில் சிவபெருமானை சிவன் கோயிலுக்குச் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய்பிறை திரயோதசி (13-ஆம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.

இந்த நேரத்தில், பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. இன்று சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேகத்தை அவசியம் தரிசிக்க வேண்டும். அருகாமையிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். உங்களால் ஆன அபிஷேகத்துக்கு உரிய பொருளைத் தர வேண்டும். அது சிறப்பான வாழ்க்கையைத் தரும்.

தொகுப்பு : சங்கர்

Related Stories: