×

நிகழ்காலமே நிச்சயம்!

திசைகாட்டும் தெய்வீகம்! 16

- திருப்புகழ் மதிவண்ணன்.

கடவுள் மனித குலத்திற்கு வழங்கிய கருணைக் கொடையே ‘‘காலம்!’’ நாளும் நாளும் நம்மை வளர்ப்பது போல் ஒருமாயத் தோற்றத்தைக் காலம் நிகழ்த்துகிறது. ‘நேற்று நீ சின்னப்பாப்பா! இன்று நீ அப்பப்பா!’ என வாழ்க்கை நம்மை மெருகேற்றினாலும், உண்மையில் நாம் மறைவுத் தேதியை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதுதானே நிதர்சனம். தாயின் வயிற்றில் கருவாக இருந்த காலம் சென்று, குழந்தையாகி விளையாடிய நேரம் மறைந்து, இளைஞனாக உலாவியும், நடுத்தர வயதினனாக மாறியும், தள்ளாடும் முதுமையில் தடுமாறியும் தேய்ந்துகொண்டே இருக்கும் நம் தேதிகள் ‘நிகழ் காலமே நிஜம்’ என்பதைத் தானே நிரூபிக்கின்றன. அதனால்தான், பாரதியார் அனைவர்க்கும் பொதுவாக இப்படி ஓர் அறிவுரையை வழங்கியுள்ளார்.    

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டே
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!
‘அப்போதைக்கு அப்போது என் ஆரா அமுதனே!’


என ஆழ்வார் பாடுகின்றார். ஐஸ்கீரிம் வாங்கினால் அடுத்த வினாடி சுவைத்திட வேண்டும்! அப்படியே கையில் வைத்திருந்தால் பயனின்றி கரைந்து விடும்! காலமும் அப்படித்தான்! உபயோகப் படுத்தினால் வாழ்வில் உயரலாம்! உதாசீனப்படுத்தினால் வரலாறு நம்மை உதாசீனப்படுத்திவிடும்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் இன்னே மேல்வரும் மூப்புமாகி


நாளும் நாம்சாகின் றாமால்; நமக்குநாம் அழாத தென்னோ?

என்கிறார் குண்டலகேசி. அதாவது, பயனின்றிக் கழித்துவிட்ட காலங்களை எண்ணிஎண்ணி வருந்துவதால் அவை மீண்டும் வரப்போகின்றனவா என்ன? கடந்ததை எண்ணி வருந்துவதால் நிகழ்காலம் அல்லவா நிர்மூலம் ஆகிவிடுகின்றது. ஆகவே, நிச்சயமான நிகழ்காலத்தைப் பயன்படுத்திக் கொள்வதில்தான் ஒருவனின் வெற்றி அடங்கி இருக்கிறது.

காலைநேரம், மதியநேரம், மாலை நேரம், இரவுநேரம் என மாறிமாறி ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறது. காலை, மதியம், இரவு நேரங்களை விட அனைவர்க்கும் பிடித்த நேரம் மயக்கும் மாலைப் பொழுதுதான்! ஆனால், மாலை அந்திப்பொழுது விரைவிலேயே கழிந்து விடுகிறது. அறுபதே நிமிடங்களில் அந்திப் பொழுது முடிந்துவிட்டதே என்று நீ கவலைப்பட்டால், நட்சத்திரங்களை உன்னால் ரசிக்க முடியாது என்கின்றார் ஒரு மேல்நாட்டு அறிஞர்!

கடந்த காலம் - அது
நடந்த காலம்!
எதிர் காலம் - அது
புதிர் காலம்
நிகழ் காலம் - அதுவே
மகிழ் காலம்!


நிச்சயமற்ற எதிர்காலம் மதில்மேல் பூனை! நடந்து முடிந்த இறந்த காலம் உடைந்த பானை! கண்ணெதிரில் உள்ள நிகழ்காலமே கையில் உள்ள வீணை! மகாபாரதக் கிளைக்கதை ஒன்று உள்ளது. தருமரிடம் ஏழைக்குடியானவன் ஒருவன், தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தாங்கள் ஆவனசெய்து என்னை அல்லலிருந்து மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். தருமர் அவனை நோக்கி நாளை காலையில் வந்து என்னைப்பார்! உரியமுறையில் உதவிபுரிகின்றேன் என்றார்.

பக்கத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த பீமன், இசைக் குழுவினரை அழைத்து ‘மேளதாளங்களோடு ஆனந்தமாகப் பாட்டுக்கச்சேரி ஒன்றை இப்போதே நடத்துங்கள். அண்ணா தருமரைப் பாராட்டி ஒரு விழா நடத்தப் போகிறேன்’ என்றான்.

‘எனக்கு எதற்கு திடீரென்று திருவிழா?’ என்று புரியாமல் கேட்டார் தருமர். உடனே பீமன், ‘அண்ணா! யாருமே அறியமுடியாத காலக் கணிதத்தை தாங்கள் அறிந்துள்ளீர்கள். அதன் காரணமாகவே உதவி கேட்டு வந்த விவசாயி, நாளை உயிருடன் இருப்பது நிச்சயம்.

தாங்களும் நலமாக நாளை இருப்பீர்கள் என முன்னதாகவே அறிந்துள்ளீர்களே! அதற்குத்தான் இந்த விழா’. தம்பியின் பொருள் பொதிந்த பொன்னுரையால் அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்தார் தருமர். இறைவனின் மர்ம முடிச்சுகளில் மரணத்தேதியும் ஒன்று!

அதேபோல், இன்னொரு கிளைக்கதை ஒன்றும் உள்ளது அதைப்பற்றி அறிந்து கொள்ளலாமா?

வசிட்டரிடம் அவருக்கு மிகவும் வேண்டிய ஒருவர், ‘மகா முனிவரே! தாங்கள் பிரம்மதேவனுக்கு மிகவும் பிரியமானவர் என்று அறிவேன். என்னுடைய மரணத் தேதியை நான் அறிந்துகொள்ள மிகவும் ஆசைப்படுகிறேன். தாங்கள் அன்புகூர்ந்து பிரம்மனிடமிருந்து அச்செய்தியைப் பெற்று எனக்குத் தெரிவியுங்கள்’ என்றார். `மரணத் தேதி மிகவும் மர்மமானது எனக்கு அது பற்றி அறிய வேண்டும் என நெடுநாளாக நெஞ்சத்தில் ஒரு உந்துதல் உள்ளது. பிரம்மரகசியத்தை அறிந்து வருகிறேன்’ என்று புறப்பட்டார் வசிட்டர்.

வசிட்டரின் வருகையால் பிரம்ம தேவர் மிகவும் மனம் மகிழ்ந்தார். ‘முனிவரே! மனிதர்களைப் படைக்கும் தொழில் நடக்கும் போதே இறுதி நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. அனைவரின் ‘தலை எழுத்து ஏடுகளும்’ தனிஅறையில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. தாங்கள் மிகவும் ஆசையுடன் என்னைத் தேடி வந்ததற்கு மகிழ்கின்றேன். அறையின் சாவி இதோ! தாங்களே சென்று குறிப்பிட்ட மனிதரின் ஏட்டைத்தேடி எடுத்துப் படித்துப் பார்க்கும் போது விவரத்தை அறிந்துகொள்ளலாம்.

அறையின் சாவியைப் பெற்று வசிட்டர் திரும்பினார்! ஆயிரக்கணக்கான ஏடுகளைப்புரட்டிப் பார்த்தும் அவர் தேடிய ஏடு கிடைக்கவே இல்லை. மிகுந்த முயற்சிக்குப் பிறகு தன் செயலில் ஜெயம் அடைந்தார். ஆனால், ஏட்டில் எழுதியிருந்த விவரம் அவரை நிலைகுலைய வைத்தது. ‘வசிட்ட முனிவர், என்றைக்கு இதைப் படிக்கின்றாரோ அக்கணமே இதற்குரி யவர் மரணம் அடைவார்’. குறிப்பிட்ட ஆண்டுகள்தான் இவ்வுலகில் அனைவரும் வாழமுடியும் என்பதும், அதற்குள் அவரவர்கள் தங்கள் சாதனைகளைச் செய்து புகழேட்டில் தங்கள் பெயரைப் பொறித்துக் கொள்ள வேண்டும் என்பதும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதே! எனவேதான் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் தெரிவிக்கின்றார்.

காலம் உண்டாகவே
காதல் செய்து உய்மின்!
ஞாயம் உண்டானொடு நான்முகன்
வானவர் நண்ணரிய
ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப்
பிரான் தன் அடியவர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றான்
வந்து முந்து மினே!


கால ஓட்டத்தில் தன்னை முதன்மைப் படுத்தி முந்திக்கொள்பவர்களே வரலாற்றில் முதன்மை பெறமுடியும்! வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி! மக்கள் மனதில் நிற்பவர்கள் மணித்துளியையும் வீணாக் காமல் மகத்தான பணிபுரிந்தவர்கள்தாம்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?