பதிகம் பாடும் அடிகள்மார்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சிவாலயங்களில் வழிபாடுகள் நிகழும்போது பன்னிரு திருமுறைப் பாடல்களை, அவற்றிலும் சிறப்பாக மூவர் தேவாரப் பாடல்களை மன முருகப் பாடுபவர்களை நாம் ஓதுவார்கள் என்றும், ஓதுவாமூர்த்திகள் என்றும் குறிப்பிடுகின்றோம். திருக்கோயில்களில், தேவாரப் பாடல் களைப் பாடும் இம்மரபு கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து வருகின்றது. தேவாரப் பாடல்

களைப் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் காலத்திலும், பின்னர் பல்லவர், சோழர், பாண்டியர் போன்ற அரசர்தம் காலத்தும் அவர்கள் பாடிய பாடல்களுக்குத் திருப்பதிகம் என்ற பெயரே வழக்கில் இருந்துள்ளது. கல்வெட்டுக்கள் திருப்பதிகம் என்பதைத் திருப்பதியம் எனக் குறிப்பிடுகின்றன.

பிற்காலப் பாண்டியர் காலத்தில்தான் (கி.பி. 13ஆம் நூற்றாண்டில்தான்) திருப்பதிகம் என்பதைத் தேவாரம் எனக் குறிப்பிடத் தொடங்கினர். திருக்குவளை எனப்பெறும் திருக்கோளிலி என்ற தலத்தில் உள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில் (கி.பி. 1286)தான் முதன்முதலில் தேவாரம் என்ற சொல் திருஞானசம்பந்தரின் பதிகத்திற்குக் குறிக்கப்பெற்றுள்ளது. பாண்டிய நாட்டு பிரான்மலை மங்கை நாதசுவாமி திருக்கோயிலிலுள்ள வீரபாண்டியனின் ஒன்பதாம் ஆண்டு (கி.பி. 1306) கல்வெட்டுச் சாசனத்தில் திருப்பதிகத்தைத் தேவாரம் என்ற சொல்லால் குறிக்கப்பெறுவது இரண்டாவது சான்றாகும்.

இலக்கியங்களைப் பொறுத்தவரை இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவில்தான் முதன்முதலாக “மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்ததிருப்பாட்டும்” என்ற குறிப்பு காணப்பெறுகின்றது. காலப்போக்கில் திருப்பதிகம் என்ற சொல் வழக்கு அருகி தேவாரம் என்ற சொல்லே நிலைபெற்றுவிட்டது.திருப்பதிகம் என்பது எவ்வாறு தேவாரம் என மருவியதோ அதைப் போன்றே திருப்பதிகம் பாடுபவர்களின் பெயரும் காலப்போக்கில் பல மாறுதல்களைப் பெற்று வழங்கி வருகின்றது. பல்லவர், முற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் திருப்பதிகம் பாடும் அடிகள்மார் என்றே ஓதுவார்கள் குறிக்கப் பெறுகிறார்கள்.

பிற்காலச் சோழர் கல்வெட்டுக்கள் ஓதுவார்களைத் திருப்பதிகம் விண்ணப்பம் செய்வார், திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் பிடாரர் என்ற சொற்களால் குறிப்பிடுகின்றன. பின்பு ஓதுவார்களைத் தவசிகள், ஆண்டார்கள் பண் எடுப்பார், திருமேனிகள் எனப் பல பெயர்களில் கி.பி. 13 - 14ஆம் நூற்றாண்டுகளில் குறிப்பிட்டு அழைத்துள்ளதைக் கல்வெட்டுச் சாசனங்கள் மூலம் அறிய முடிகிறது. தேவாரம் பாடும் ஓதுவார்கள் என்ற குறிப்பு கி.பி. 16ஆம் நூற்றாண்டு முதல் காணும் கல்வெட்டுகளில் காணப்பெறுகின்றன.

பண்டு சிவாச்சாரியார்கள், தேவரடியார் பெண்கள், இசைவாணர்கள் எனப் பலரும் தேவாரம் பாடும் பணியை மேற்கொண்டு இருந்துள்ளனர். தஞ்சைப் பெரிய கோயிலுக்கென இராஜராஜ சோழன் 48 பிடாரர்களையும், கொட்டி மத்தளம் வாசிப்பார் ஒருவரையும், உடுக்கை வாசிப்பார் ஒருவரையும் நியமித்ததை அக்கோயிலில் உள்ள கல்வெட்டுச் சாசனம் எடுத்துரைக்கின்றது. அதுபோன்றே தாராசுரம் சிவாலயத்தில் 108 ஓதுவார்கள் பணிபுரிந்துள்ளனர்.

அவர்கள் அனைவர்தம் உருவச்சிற்பங்களை வடபுறத் திருச்சுற்று மாளிகைச் சுவரில் இடம்பெறச் செய்ததோடு, அவர்கள்தம் ஊர், இயற்பெயர், தீட்சைப் பெயர் ஆகியவற்றையும் அவரவர் உருவத்திற்கு மேலாக இரண்டாம் இராஜராஜ சோழன் பொறிக்கச் செய்துள்ளான். தீட்சை நாமங்களைப் பொறுத்தவரை சத்யசிவர், ஞானசிவர், தர்மசிவர், வைராக்கியசிவர், சூட்சம சிவர், ஆனந்தசிவர், ஹிருதய சிவர், ஈசான சிவர், தத்புருஷ சிவர், சதாசிவர், அகோரசிவர், வாகீசசிவர், அஸ்த்ர சிவர், ருத்ர சிவர், மூர்த்திசிவர், கண்ட சிவர் என்ற பெயர்களே மீண்டும் மீண்டும் காணப்பெறுகின்றன.

திருஞானசம்பந்தர் தலப்பயணம் செய்தபோது அவருடன் பிரியாமல் உடன் சென்று அவர்தம் திருப்பதிகப் பாடல்களை மிடற்றிசையால் பண் வகுத்துப் பாடியும், யாழில் வாசித்தும் அரிய பணி செய்தவர்கள் மதங்க சூளாமணியாரும், அவர்தம் கணவர் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஆவர். தேவாரம் பாடும் மரபில் இவர்களையே முதல் ஓதுவார்கள் என நாம் கொள்ளலாம். மதங்க சூளாமணியார் கைத்தாளம் தட்டியவாறு தேவாரம் பாட அருகமர்ந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர் சகோட யாழினை இசைக்கும் அரிய காட்சிச் சிற்பம் ஒன்று தாராசுரம் திருக்கோயிலில் உள்ளது.

முதல் ஆதித்தசோழன் காலத்தில் தஞ்சைக்கு அருகேயுள்ள திருப்பழனம் கோயிலில் கண்ணிழந்த அடிகள்மார் 12 பேரும், அவர்களுக்கு உதவிட கண் காட்டிகள் இருவரும் எனப் பதினான்கு பேரை நியமனம் செய்து அவர்களுக்கு ஊதியமும் இன்னபிற வருவாய்களும் கிடைக்க சோழப் பேரரசன் ஆணையிட்டுள்ளது கல்வெட்டாகப் பதிவு பெற்றுள்ளது. கண்ணிழந்த பன்னிருவர் தேவாரம் பாட நியமனம் பெற்றது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

இரண்டாம் குலோத்துங்க சோழன் திருவாமாத்தூர் அழகியநாதர் திருக்கோயிலில் கண்ணிழந்த 16 பேர்களையும் அவர்களுக்குக் கண்காட்டுவார் இருவரையும் திருப்பதிகம் பாடுவதற்கென்று நியமனம் செய்து அவர்கள் பணிக்கென 12 வேலி நிலமும் அளித்துள்ளான். தேவாரம் பாடும் அவர்களுக்கு ஊதியம், உறைவிடம், ஆடை ஆகிய அனைத்தும் அளித்தான். திருப்பழனம் போன்று, திருவாமாத்தூரிலும் கண்ணிழந்தவர்களுக்கு உதவிட “கண்காட்டுவார்” என்பவர்களை நியமனம் செய்ததோடு மதிப்புறு பணியான தேவாரம் பாடும் பணியும் தந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

முஷ்ணம் (திருமுட்டம்) எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் மானக்கஞ்சாறர் என்பார் தேவாரம் பாடும் பணி செய்து வந்தார்.

அவர் தேவாரம் பாடும்போதே ஒருநாள் இறந்துபோனார். தெய்வீகப் பணியில் அவர் இறந்துபட்டமையால் அவ்வூர் சிவாலய இராஜகோபுர வாயிலில் அவர் தாளம் தட்டியவாறு தேவாரம் பாடும் கோலத்தில் உருவச்சிலையை அமைத்துள்ளதோடு, மேலாக “இத்திருக்கோயிலில் திருப்பதியம் விண்ணப்பம் செய்து விடைகொண்ட மானக்கஞ்சாறர்” என்ற கல்வெட்டுப் பொறிப்பையும் அங்கு இடம்பெறச் செய்துள்ளனர்.

திருஎறும்பியூர் (திருவரம்பூர்) திருக்கோயிலில் மூன்று சந்திப் பொழுதிலும் தேவாரம் பாடவேண்டும் எனப் பராந்தக சோழனின் உயர் அலுவலர் செம்பியன் வேதி வேளார் என்பார் விரும்பினார். அதுவும் தான் பாடுவதாகவே இருக்க வேண்டும் என்பது அவர்தம் பெரு விருப்பம். அதற்கென அவ்வூரில் ஒரு குறிப்பிட்ட நிலத்தை விலை கொடுத்து வாங்கினார். அதுவும் அந்நிலம் இரண்டு ஊரார் சொந்தம் கொண்டாடியதாகும். அவர்களிடமிருந்த பிணக்கைத் தவிர்ப்பதற்கே அந்நிலத்தை வாங்கி அதனை நான்கு ஓதுவார்களிடம் கொடுத்து அக்கோயிலில் தேவாரம் பாட ஏற்பாடு செய்தார். அச்செய்தியைக் கல்வெட்டாகவும் பொறித்தார்.

அதனைக் கூறும் கல்லெழுத்து வரிகளை இனிக் காண்போம். “இன்னிலமும் கண்ட சதுர்வேதி மங்கலத்தாரும் திருஎறும்பியூராரும் தங்களில் சீமா விவாதமாய்க் கிடந்த நிலம் இவ்விரண்டு திறத்தாரிடையும் நான் விலைகொண்ட நிலமுங்கொண்டு இவ்வாழ்வாரை நான் பாடித் திருப்பதியம் மூன்று சந்தியும் உடுக்கையும் தானமுங்கொண்டு நால்வர் அடிகள்மார் திருப்பதியம் பாடுவதாக சந்திராதித்தவல் செய்து கொடுத்தேன் செம்பியன் வேதிவேளானேன். இது பன்மாகேஸ்வரரக்ஷை” என்பதே அச்சாசன வரிகளாகும்.

இதனை ஆழ்ந்து நோக்கும்போது செம்பியன் வேதி வேளார் என்ற சோழனின் உயர்நிலை அதிகாரி தானே தேவாரம் பாடுவதாகப் பாவித்தே தனக்குப் பதிலாக நான்கு ஓதுவார்களை நியமித்தமையை அறிகிறோம். ஓதுவார்கள் என்பார் எவ்வளவு உயர்வாக மதிக்கப்பெற்றனர் என்பதை இது நன்கு விளக்குகிறது.இதுபோன்றே அனபாயன் என அழைக்கப்பெறும் இரண்டாம் குலோத்துங்க சோழன், திருமறைக்காட்டுக் கோயிலில் ஓதுவார்களை நியமித்து அவர்களைக் குறிப்பிடும்போது, “நம் திருப்பதிகம் பாடுவார்” எனக் கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பது அவர்கள்தம் மாண்பினைச் சுட்டுவதாகும்.

Related Stories: