கிருஷ்ண ஜெயந்தியை எப்படி கொண்டாடுவது?

19-8-2022

ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி கோகுலாஷ்டமி. தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. வடநாட்டிலும் தென்னாட்டிலும் பல ஆண்டுகளாக குதூகலமாக கொண்டாடப்படும் விழா கிருஷ்ண ஜெயந்தி.

என்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி?

ஆவணி மாதம் சூரிய உதயத்தில் தேய்பிறை அஷ்டமி ரோகிணி நட்சத்திரமும் வருகின்ற நாளை சிலர் கொண்டாடுவார்கள். தேய்பிறை நவமி அல்லது தசமி உடன் இணைந்த மிருகசீரிஷ நட்சத்திர நாளில் சிலர் கொண்டாடுவார்கள். சிலர் மாலை நேரத்தில் ரோகிணியும் அஷ்டமியும் இணைந்து வரும் நாளை கோகுலாஷ்டமி ஆகக் கொண்டாடுவார்கள். ஸ்மார்த்த சம்பிரதாயத்தை (ஆதிசங்கரரை குருவாகக் கொண்டவர்கள்) ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளை கோகுலாஷ்டமி தினமாகக் கொண்டாடுவார்கள்.

பண்டிகைகள், கோயில் உற்சவங்கள், விரதங்கள் போன்ற தினங்களை வாக்கிய பஞ்சாங்கத்தின்படிதான் பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி (ஆவணி 3ஆம் தேதி) வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. அன்று இரவு கிருத்திகை முடிந்து ரோகிணி நட்சத்திரம் வந்துவிடுகிறது அதற்கு அடுத்த நாள் ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என்று வைணவர்களில்  ஒரு பிரிவினர் கொண்டாடுகின்றனர். அவரவர் சம்பிரதாயத்தின் பிரகாரம் எந்த நாளில் கொண்டாட வேண்டுமோ  அந்த நாளில் கொண்டாடலாம். நாட்டில் பெரும்பாலோர் கோகுலாஷ்டமியைத்தான் கிருஷ்ண ஜெயந்தி தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

(19.8.2022) அன்று என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக கிருஷ்ண ஜனனம் அஷ்டமி ரோகிணி நள்ளிரவு வேளையில் நடந்ததால் நள்ளிரவு நேரத்தையே பூஜைக்கான நேரமாக அக்காலத்தில் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனால், இப்பொழுது சூரிய அஸ்தமனம் ஆன பிறகு சந்திரோதய காலத்திலே கொண்டாடலாம். மாலை நேரத்திலே பெரும்பாலோர் கொண்டாடுகின்றனர்.

வழக்கம் போல வீடு முழுக்க நன்கு சுத்தப்படுத்தி வீட்டுவாசலிலும் பூஜை அறையிலும் மாக்கோலம் போட வேண்டும்.

மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும். அன்று வீடு முழுக்க குழந்தை கண்ணனை வரவேற்பது போல் பூஜை அறை வரை கிருஷ்ணர் பாதம் வரைந்து வரவேற்க வேண்டும். நம் வீட்டுக்குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேஷம் போட்டு, பூஜையில் பங்கெடுக்கச்  செய்யலாம். அப்பொழுது எளிமையான ஸ்தோத்திரங்களையும் கண்ணன் பாடல்களையும் பாடலாம். அந்த முழுக்க குதூகலமாக இருக்க வேண்டும். கிருஷ்ணன் என்றாலே ஆனந்தம். ஆனந்தமாக இருந்து எல்லோரையும் ஆனந்தப்படுத்துபவன் என்று பொருள்.

கிருஷ்ண ஜெயந்தியை எப்படிக் கொண்டாடினார்கள்?

கிருஷ்ண ஜெயந்தி என்றால் கிருஷ்ணன் பிறந்த நாள். அதை எப்படிக்  கொண்டாடினார்கள் என்று பாசுரம் பாடுகிறார் பெரியாழ்வார்.

“வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட

கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே”

“ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்

நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்

பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே”

அழகான மாடங்கள் நிறைந்த ஊர் அது.  கண்ணன் திருவாய்ப்பாடியிலே பிறந்து விட்டான் என்ற தகவல் வந்து விட்டது.  ஒருவர் மீது ஒருவர் நறுமண எண்ணெயால் பூசிக்கொண்டார்களாம்.  வண்ண வண்ணச் சுண்ணப் பொடி களை ஒருவர் மீது ஒருவர் வாரித் தூவிக்  கொண்டார்களாம்.இதனால் வீடு   எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானதாம்.

அதில் பலர் வழுக்கி விழ, மற்றவர் சிரிக்க ... மற்றவர் சிரித்துக் கொண்டே வழுக்கி விழ...உற்சாகம் கரைபுரண்டு ஓடியதுஅப்படித்தான்  சிலர் ஓடினார்கள்; சிலர் ஓட்டத்தில் ‘‘சருக்” என்று சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் “ஓய் ஓஓ”-  வித விதமாக உரக்கக் கூவினார்கள்; சிலர் கட்டித்தழுவினார்கள்;

என்னென்ன படைக்க வேண்டும்?

பத்ரம், புஷ்பம், பலம்,தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி

ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்நாமி ப்ரயாத்மன:

பகவான் கீதையில், எப்படிப்  படைத்தால், எதைப் படைத்தால் திருப்தி அடைகிறேன் என்று சொல்லியிருக்கின்றான். ஒரு துளசி இலை, ஒரு புஷ்பம், ஒரு உத்தரணி தீர்த்தம் போதும். அதை பக்தியோடு கொடுத்தால், நான் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறேன் என்பது கண்ணனின் வாக்குமூலம். எதைக் கொடுக்கிறோம் என்பது முக்கியம் அல்ல.

எப்படிக்  கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதால் எந்த பட்சணங்கள் செய்தாலும் அதை முழுமனதோடு அவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தைகள் அதிகம் சாப்பிடும் பட்சணங்களை படைக்க வேண்டும். பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம், வெல்லச்சீடை, உப்புச்சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம்.

அன்று அவசியம் நாவல் பழமும் வெண்ணெயும் வைக்க வேண்டும். சுத்தமாக நீராடி, பூஜை செய்து முடித்துவிட்டு, நிவேதித்த பிரசாதங்களை அருகில் இருக்கக்கூடிய சிறுவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். இந்த கிருஷ்ணஜெயந்தியை பொறுத்தவரை சந்தான கோபால ஹோமம் செய்வது ரொம்ப விசேஷம். குழந்தையில்லாதவர்கள் இந்த ஹோமத்தைச் செய்தால் கண்டிப்பாக கிருஷ்ணரே வந்து பிறப்பார் என்பது நம்பிக்கை. சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும். இந்த மந்திரம் இரண்டு விதமாக உள்ளது.

முதல் மந்திரம்

ஓம் தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே

தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:

பொருள்: தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக்கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.

இரண்டாவது மந்திரம்

தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ

தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்வினம்.

பொருள்: தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே! என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு!

என்ன பலன் தெரியுமா?

1. ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நாசமடையும்.

2. மகா பாவங்கள் நீங்கும்.அஸ்வமேத யாக  பலன் கிடைக்கும்.

 

3.ஆயிரம் காராம்பசுக்கள், ஆயிரக்கணக்கான குதிரைகள், யானைகள் தானம் செய்த பலன் கிடைக்கும்.

4.அளவற்ற ஆபரணங்களை  குருஷேத்திரத்தில் தானம் கொடுத்த பலனும், கோடி கோதானம் செய்த பலனும் கிடைக்கும்.

5. நமது எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும்.

6. மூன்றே முக்கால் நாழிகை கிருஷ்ணனை நினைத்து பூஜை செய்ய பாவங்களெல்லாம் விலகும்.

7. எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ, அது கிருஷ்ண ஜெயந்தி விரதத்தால் கிடைத்துவிடும்.

8. அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் நான்கு வித பலன்கள் கைகூடிவரும்.

தொகுப்பு: விஷ்ணு பிரியா

Related Stories: