×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

457 (B) ஸுமுகாய நமஹ: (Sumukhaaya namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை - தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)[குறிப்பு: 456-வது திருநாமம் [ஸுவ்ரத:] முதல் 463-வது திருநாமம் [ஜிதக்ரோத:] வரை உள்ள 8 திருநாமங்கள் நர-நாராயண அவதாரங்களைக் குறிப்பதாக ஏற்கனவே ஸ்ரீபராசர பட்டர் விளக்கவுரை வழங்கினார். இனி, அவரே தமது விளக்கவுரையில், 457-வது திருநாமம் [ஸுமுக:] முதல் 463-வது திருநாமம் [ஜிதக்ரோத:] வரை உள்ள 7 திருநாமங்கள், தேவர்களுக்குத் திருமால் அமுதம் தந்த வரலாற்றையும் குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன என்று காட்டி, அதைத் தொடர்ந்து 464-வது திருநாமம் [வீரபாஹு:] முதல் 470-வது திருநாமம் [நைககர்மக்ருத்] வரை உள்ள அடுத்த 7 திருநாமங்களும் கூட அதே அமுதம் கடைந்த வரலாற்றைச் சொல்வதாக விளக்கவுரை வழங்கியுள்ளார். ஆகவே, 457 முதல் 463 வரை உள்ள திருநாமங்கள் நர நாராயண அவதாரங்களையும் குறிக்கும், அமுதம் கடைந்த வரலாற்றையும் குறிக்கும்.]

துர்வாசரின் சாபத்தால் தேவர்கள் தங்கள் செல்வத்தையும், வலிமையையும் இழந்து நின்ற நிலையிலே, தேவர்கள் அனைவரும் திருமாலின் உதவியை நாடினார்கள். அசுரர்களோடு கூட்டணி சேர்ந்து திருப்பாற்கடலைக் கடையும் படி தேவர்களுக்கு அறிவுரை சொன்னார் திருமால். அதன்படி திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. அதன் வீரியத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சிய வேளையில், பரமசிவனின் உதவியை நாடும்படி அவர்களை அறிவுறுத்தினார் திருமால். தேவர்கள் பிரார்த்னைக்கு இணங்கி விஷத்தைக் குடித்துத் தேவர்களைக் காத்தார் சிவபெருமான்.

அதன்பின் பாற்கடல் மீண்டும் கடையப்பட்ட போது, காமதேனு வந்தது. தங்களது அக்னிஹோத்ரத்துக்காக ரிஷிகள் அந்தக் காமதேனுவைப் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து, `உச்சைசிரவஸ்’ என்ற குதிரை, ஐராவதம் என்ற யானை, கௌஸ்துப மணி பாரிஜாத மரம், அப்ஸரஸ் பெண்கள் போன்ற பலரும் திருப்பாற்கடலில் இருந்து தோன்றினார்கள். அமுதில் வரும் பெண்ணமுதாகத் தோன்றிய மகாலட்சுமி, திருமாலையே தனக்குக் கணவனாகத் தேர்ந்தெடுத்து மணம்புரிந்து, அவரது திருமார்பிலே ஏறி அமர்ந்து கொண்டாள். மேலும், தேவ - அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தவாறே, ஓர் அதிசய புருஷன் பாற்கடலில் இருந்து தோன்றினார். அவர்தான் திருமாலின் அவதாரமான தன்வந்தரி. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் தன்வந்தரியின் தோற்றத்தை சுக ப்ரம்மம் 8ஆம் ஸ்கந்தம் 8ஆம் அத்யாயத்தில் வர்ணிக்கிறார்.

*தீர்க்க பீவர தோர்தண்ட: - நீண்ட பருமனான திருத்தோள்கள்
*கம்புக்ரீவ:- சங்கு போன்ற கழுத்து
*அருணேக்ஷண:- தாமரை போல் சிவந்த திருக்கண்கள்
*ச்யாமள: - கருநீல வண்ணத் திருமேனி
*தருண: - இளைஞனின் தோற்றம்
*ஸ்ரக்வீ: - கழுத்திலே அழகிய மாலைகள்
*ஸர்வாபரணபூஷித: - திருமேனியில் அனைத்து வித ஆபரணங்கள்
*பீதவாஸா: - இடுப்பில் பீதாம்பரம் என்னும் மஞ்சள் பட்டாடை
*மஹோரஸ்க: - அகன்ற திருமார்பு
*ஸும்ருஷ்ட மணிகுண்டல: - காதுகளில் தூயரத்தினங்கள் பதித்த குண்டலங்கள்
*ஸ்நிக்த குஞ்சித கேசாந்த: - வழவழப்பான சுருட்டையான கேசம்
*ஸுபக:- பேரழகன்
*ஸிம்ஹவிக்ரம: - சிங்கம் போல் கம்பீரமான நடை

இத்தகைய தோற்றம் கொண்ட அந்தத் தன்வந்தரி பகவான் தனது திருக்கையில் அமுதக் கலசத்தை ஏந்திக் கொண்டு வந்தார். அந்த தேவாமுதத்தைத்தான், எடுத்து தேவர்களுக்குத் திருமால் வழங்கினார். கையில் கொண்டு வந்த அமுதம் எவ்வளவு இனிமையானதோ, அதை விட அந்த அமுதைக் கொண்டு வந்த தன்வந்தரியின் முகம் மிகவும் இனிமையாக இருந்ததாம்.

“ஆனந்தாம்ருத ஸம்பூர்ண வதனேன இந்துகாந்தினா
கலசாக்ருதி ரூபேண கரஸ்தேன விராஜிதம்”

அமுதைப் பொழியும் நிலவை விட அழகிய, ஆனந்தம் தரவல்ல முகத்தோடு விளங்கிக் கையில் உள்ள அமுதைத் தன் முக அழகாகிய அமுதால் வென்றவராக தன்வந்தரி பகவான் விளங்கினார். அவர்தான், ஆயுர்வேத சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தவர். ‘வைத்யோ நாராயணோ ஹரி:’ என்றும் ‘மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன்’ என்றும் போற்றப்படுபவர் அவரே. மருத்துவர்களால் வணங்கப்பட வேண்டிய திருமாலின் வடிவமாக தன்வந்தரி திகழ்கிறார். இப்படி அழகிய முகத்தோடு தன்வந்தரியாகத் தோன்றியதால், திருமால் ‘ஸுமுக:’ அழகிய முகம் படைத்தவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 457வது திருநாமம்.

“ஸுமுகாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்நாளில், எந்நாளும் இனியநாளாக அமையும்படி திருமால் அருள்புரிவார்.


458 (B) ஸூக்ஷ்மாய நமஹ: (Sookshmaaya namaha)

ஒருமுறை திருமாலைத் தரிசிப்பதற்காகக் காரிய வைகுண்ட லோகத்துக்கு நாரதர் சென்றார். நாரதரைப் பார்த்தவாறே, மகாலட்சுமி தனது அறைக்குள்ளே சென்று விட்டாள். இதைக் கண்ட நாரதர், திருமாலிடம், “இறைவா! அடியேன் புலன்களை எல்லாம் வென்றவன். எந்தவித தாழ்ந்த ஆசைகளும் இல்லாதவன்! அப்படியிருக்க என்னைக் கண்டு ஏன் அன்னை விலகி நிற்கவேண்டும்?” என்று கேட்டார்.

அதற்குத் திருமால், “நாரதா! உலகியல் ஆசைகளை வெல்வது மிகவும் உயர்ந்த விஷயமே. ஆனால், உலகியல் ஆசைகளை வென்றவன் என்று கர்வம் கொள்வது தவறாயிற்றே. ஆசையை வென்றவன் என்று கர்வத்தோடு சொல்லிக் கொள்ளும் உன்னை, எனது ஆச்சரிய சக்தியாகிய மாயையால் நான் எப்போது வேண்டுமானாலும் மயக்க முடியும்!” என்றார். “அதெல்லாம் நான் மயங்க மாட்டேன்!” என்று கர்வத்துடன் சொன்னார் நாரதர். “அப்படியா? என்னுடன் வா!” என்று சொன்ன திருமால், நாரதரைத் தன்னோடு கருட வாகனத்தில் அமர்த்தி நர்மதா நதிக்கரைக்கு அழைத்துச் சென்றார். “நாரதா! நீ போய் நர்மதையில் நீராடிவிட்டு வா!” என்றார் திருமால். நாரதரும் நீராடிவிட்டு வெளியே வந்தார்.

வந்து பார்த்தால், நதிக்கரையில் திருமாலையோ கருடனையோ காணவில்லை. நாரதர் தன் நினைவையே மறந்தவர் போல் தெரிந்தார். மேலும், தண்ணீரில் அவரது முகத்தின் பிரதிபலிப்பைப் பார்த்த போது, அது பெண் உருவமாகத் தெரிந்தது. நாராயணனின் மாயையால் இப்போது நாரதர் பெண்ணாக மாறிவிட்டார். தான் நாரதர் என்பதையும் மறந்து விட்டார்.

ஏதும் செய்வதறியாமல் நதிக்கரையில் அவர் நின்றிருக்க, அப்பகுதியை ஆட்சி செய்த மன்னன் தற்செயலாக அங்கே வந்தான். பெண்நாரதரின் வடிவில் மயங்கிய அவன், அவளைத் திருமணம் செய்து கொண்டான். தான்யார் என்ற புரிதலே இல்லாமல் மகாராணியாக வாழ்ந்து வந்தாள் பெண்நாரதர். அவளுக்குப் பன்னிரண்டு மகன்கள் பிறந்தனர். மன்னனும் பெண்நாரதரும் அப்பன்னிரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கித் திருமணமும் செய்து வைத்தார்கள். இந்நிலையில், அடுத்த நாட்டு அரசன் இவர்களின் நாட்டை எதிர்த்துப் போர் புரிய வந்தான். இவர்களின் பன்னிரண்டு மகன்களும் போர் புரியச் சென்று போர்க்களத்தில் மாண்டு போனார்கள்.

புத்திர சோகத்தால் மன்னனும் பெண்நாரதரும் கதறி அழுது கொண்டிருந்த வேளையில், ஒரு முனிவர் அங்கே வந்தார். இருவரையும் நர்மதா நதிக்கரைக்கு அவர் அழைத்துச் சென்றார். பெண்நாரதரைப் பார்த்து, “நீ நதியில் இறங்கி நீராடு!” என்றார். நீராடி விட்டு மேலே எழுந்தவாறே, பழைய தோற்றமும் பழைய நினைவும் நாரதருக்குத் திரும்பியது. நாரதரை வியப்புடன் பார்த்த மன்னனிடம் முனிவர், “மன்னா! நீ உன் மனைவியை எந்த இடத்தில் பார்த்தாயோ அதே இடத்தில் இப்போது பிரிகிறாய். நீ பலப்பல பிறவிகள் எடுத்து விட்டாய். அதில், எத்தனையோ மனைவிகளும் மகன்-மகள்களும் உனக்கு இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நீ வேதனைப் படப்போகிறாயா? நீ இறைவனைக் குறித்துத் தவம் புரிந்து நற்கதி அடைவாயாக!” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார் முனிவர்.

கரை சேர்ந்த நாரதருக்கு முனிவர் திருமாலாக காட்சி அளித்தார். “நாரதா! என் மாயை உன்னை எப்படி மயக்கும் என்பதை உணர்த்தவே உன்னைப் பெண்ணாக்கி இத்தகைய ஒரு லீலையைச் செய்தேன். புலன்களை வென்றால் மட்டும் போதாது. நான் வென்றேன் என்ற கர்வத்தை விடுத்து, இறைவன் அருளால் புலன்கள் வசப்பட்டன என்று சொல்லும் பணிவும் வர வேண்டும். இதை உனக்கு உணர்த்தவே நானும் திருமகளும் சேர்ந்த இந்த லீலையைச் செய்தோம். நீயும் மயங்கி விட்டாய்!” என்றார் திருமால்.

அப்போது நாரதர், “இறைவா நான் என்ற கர்வம் கொள்வதும் அசுரத் தன்மைகளுள் ஒன்று. அசுரத் தன்மை கொண்டவர்கள் உன் மாயையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களால் உன்னை அறிய முடியாது. என் மனதில் அசுரத் தன்மை எழுந்ததால், அடியேனும் உன்னை மறந்தேன், என்னையும் மறந்தேன்!  மன்னித்தருள்க!” என்று வேண்டினார்.

திருமாலும் மன்னித்து அருள்புரிந்தார். பாற்கடல் கடைந்த போதும், அசுரர்களுக்குத் தன் திட்டம் தெரியாதபடி, அவர்களை மயக்கி நல்லவர்களான தேவர்களுக்கு அமுதம் கிட்டும்படிச் செய்தார் அல்லவா திருமால்? அதனால்தான் அவர் ‘ஸூக்ஷ்ம:’ என்று அழைக்கப் படுகிறார். ‘ஸூக்ஷ்ம:’ என்றால் இவ்விடத்தில் அறிய முடியாதவர் என்று பொருள். அசுரர்களால் அறிய முடியாத சிந்தனை கொண்டதால் அமுதம் தந்த திருமால் ‘ஸூக்ஷ்ம:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 458வது திருநாமம்.

“ஸூக்ஷ்மாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், கர்வம் போன்ற தீய குணங்களுக்கு நாம் வசப்படாமல் இருக்க திருமால் அருள்புரிவார்.

459 ஸுகோஷாய நமஹ: (Sughoshaaya namaha)

வைகுண்டத்தில் திருமாலுக்கு அணுக்கத் தொண்டர்களாக இருந்து கைங்கரியம் செய்யும் அடியார்கள் நித்திய சூரிகள் என்று அழைக்கப் படுகிறார்கள். ஒருநாள் அவர்களைத் தன் அருகில் அழைத்த திருமால், “பூமியில் துவாபரயுகம் முடிந்து கலியுகம் வரப்போகிறது. இதுவரையிலான யுகங்களில் நான் பூமியில் அவதாரம் செய்து மக்களைத் திருத்த முயன்றேன். கலியுகத்தில் உள்ளவர்கள் நானே இறங்கிப் போனாலும் திருந்துவார்களா என்று தெரியவில்லை. யானையைக் கொண்டே யானையைப் பிடிப்பது போல், ஜீவாத்மாக்களான உங்களை என் பிரதி நிதிகளாகப் பூமிக்கு அனுப்பி வைத்து உங்களைக் கொண்டு மக்களைத் திருத்தலாம் என்று நானும், திருமகளும் திட்டமிட்டுள்ளோம்!” என்று கூறினார்.

“எம்பெருமானே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கட்டளை இடுங்கள்!” என்று நித்தியசூரிகள் கேட்டார்கள். அதற்குத் திருமால், “நீங்கள் பூமியில் போய் எனது பக்தர்களாக அவதாரம் செய்து பக்தியில் ஆழ்ந்திருந்து என்னைப் பற்றிப் பாடல்கள் பாட வேண்டும். அரிய கடினமான வேதங்களை அறிய முடியாதவர்கள், உங்களது இனிய எளிய தமிழ்ப் பாடல்களால் என்னை எளிதில் உணர்ந்து கொள்வார்கள்! எனவே பூமியில் போய் என்னைப் பற்றி அமுதத் தமிழில் பாடுங்கள்!” என்றார். “அப்படியே செய்கிறோம்!” என்றார்கள் நித்தியசூரிகள்.

முதலில் தன் கையில் உள்ள பாஞ்சஜன்னிய சங்குக்கு அதிபதியான நித்தியசூரியை அழைத்த திருமால், “நீ பூமியில் பொய்கை ஆழ்வாராகப் பிறக்க வேண்டும். சங்கின் நிறம் போல் வெண்மையான தத்துவ குணத்தை உனது பாடல்களால் மக்களுக்கு ஊட்ட வேண்டும்!” என்றார். அடுத்தபடியாகத் தனது கௌமோதகி என்னும் கதாயுதத்திடம், “நீ பூதத்தாழ்வாராகத் தோன்றி, எப்போதும் என் கைப்பாவையாக இருப்பது போல், உயிர்கள் எல்லோரும் என்னையே தஞ்சம் புகுந்து என் கைப்பாவைகளாக இருந்தால், நான் அவர்களைக் காப்பேன் என்பதை உன் பாடல்களால் மக்களுக்கு நீ உணர்த்த வேண்டும்!” என்றார்.

நந்தகம் என்னும் தன் வாளிடம், “நீ பேயாழ்வாராகத் தோன்றி, அறியாமை என்ற இருளை வெட்டி ஞான ஒளியை உன் பாடல்கள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும்!” என்றார். சுதர்சனச் சக்கரத்திடம், “தீய சக்திகளை அழிக்கும் நீ, பூமியில் திருமழிசைப் பிரானாகத் தோன்றித் தவறான கொள்கைகளைக் களைந்து வேத நெறியை நிலைநாட்ட வேண்டும்!” என்றார். தம் படைத்தளபதியான விஷ்வக்சேனரிடம், “நித்தியசூரிகளின் தலைவரான நீங்கள், ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாராக அவதாரம் செய்து சரணாகதி நெறியை உலகுக்கு உணர்த்த வேண்டும்!” என்றார். விஷ்வக்சேனரின் தொண்டரான குமுதனிடம், “நீ நம்மாழ்வாரின் சீடர் மதுரகவிகளாக அவதரித்து, குருபக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டும்!” என்றார்.

தமது கௌஸ்துப மணிக்கு அதிபதியான நித்திய சூரியிடம், “நீ குலசேகரப் பெருமாளாகத் தோன்றி, என் நெஞ்சுக்கினிய பாடல்களைப் பாடவேண்டும்!” என்றார். கருடனைப் பார்த்து, “வேத சொரூபியான நீ, வேதம் வல்ல பெரியாழ்வாராகத் தோன்றி வேத சாரத்தை விவரிக்க வேண்டும்!” என்றார். பூமி தேவியிடம், “நீ கோதைப் பிராட்டியாக அவதரித்து, எனக்குப் பூமாலை மற்றும் பாமாலை சமர்ப்பிப்பதன் மேன்மையைப் பாடவேண்டும்!” என்றார். தனது வைஜயந்தி மாலையிடம், “நீ தொண்டரடிப் பொடி ஆழ்வாராகப் பூமியில் தோன்றி, எனக்கு மாலைகள் சமர்ப்பித்துத் தொண்டு செய்து, பாசுரங்கள் பாட வேண்டும்!” என்றார்.

தன் மார்பில் உள்ள ஸ்ரீவத்சம் என்னும் மறுவுக்கு அதிபதியான நித்திய சூரியிடம், “நீ திருப்பாணாழ்வாராகத் தோன்றி என் இதயத்தில் எப்போதும் குடியிருக்கும் இனிய பாடல்களைப் பாடவேண்டும்!” என்றார். தமது சார்ங்க வில்லிடம், “நீ திருமங்கை ஆழ்வாராகத் தோன்றி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் என் திருக்கோயில்களுக்கெல்லாம் சென்று என்னைப் பாட வேண்டும்!” என்றார். “நித்தியசூரிகளே! பக்தியில் ஆழ்ந்திருக்கும் நீங்கள் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுவீர்கள். நீங்கள் பாடும் தமிழ்ப் பாடல்கள் வடமொழி வேதங்களை விட ஏற்றம் பெற்று விளங்கும். பூமியிலும் சரி, வைகுண்டத்திலும் சரி, வேத கோஷம் என்னைச் சூழ்ந்திருப்பது போல், உங்கள் பாடல்களின் ஒலியும் என்னைச் சூழ்ந்திருக்கும்!” என்று அருள்புரிந்து அவர்களைப் பூமிக்கு அனுப்பி வைத்தார் திருமால்.

இப்படி வடமொழி மற்றும் தமிழ் வேத கோஷங்கள் எப்போதும் திருமாலைச் சூழ்ந்திருப்பதால், அவர் ‘ஸுகோஷ:’ என்று அழைக்கப்படுகிறார். நர நாராயண அவதாரத்திலும் எப்போதும் வேத மந்திரங்கள் அவரைச் சூழ்ந்திருந்து துதித்தன. ‘ஸுகோஷ:’ என்றால் மங்கல வேத ஒலிகளை உடையவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 459வது திருநாமம்.

“ஸுகோஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல இனிய குரல்வளம் ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

460 ஸுகதாய நமஹ: (Sukhadhaaya namaha)

கண்ணன் தனது அவதாரத்தை நிறைவு செய்து கொண்டு, வைகுண்டம் செல்லத் தயாரானான். அப்போது கண்ணனின் நெருங்கிய நண்பரும் பக்தருமான உத்தவர் கண்ணனை அடிபணிந்து, “கண்ணா! உன் திருவடித் தாமரைகளைப் பிரிந்து ஒரு நொடியும் என்னால் வாழ இயலாது. என்னையும் உன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும்!” என்று பிரார்த்தித்தார். அப்போது கண்ணன், “உத்தவா! எனது இருப்பிடமான வைகுண்டத்தை நீ எப்படியும் வந்து அடையத்தான் போகிறாய். ஆனால், அந்த வைகுண்டத்தை அடைவதற்கு பக்தி யோகம், சரணாகதி என்று இரண்டு வித வழிகள் உள்ளன. அவற்றுள் பக்தியோக தியான முறையை உனக்கு விளக்குகிறேன். அதைப் பின்பற்றி நீ என்னை வந்து சேர்வாயாக!” என்றார்.

“கண்ணா! உலகியல் விஷயங்களையே பார்த்து வந்த மனிதர்களான நாங்கள் பக்தியோக தியானத்தில் ஈடுபடுவது சாத்தியமா?” என்று வினயத்துடன் கண்ணனிடம் கேட்டார் உத்தவர். அதற்குக் கண்ணன், “பாஞ்சராத்ர ஆகமம், கீதை போன்ற நூல்களில் நான் விதித்தபடி எனக்குப் பூஜை செய்தல், அர்ச்சனை செய்தல், கோயில் களிலே தொண்டு செய்தல், என் நாமங்களைப் பாடுதல், என் கதைகளைக் கேட்டல், எனது வடிவைத் தியானித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். அவரவருக்கென்று விதிக்கப்பட்ட கடமையைப் பலனில் ஆசையின்றிச் சரியாகச் செய்ய வேண்டும். இதைச் செய்யச் செய்ய மனம் பண்பட்டு பக்தியோக தியானத்தில் ஈடுபடும் ஆற்றல் ஏற்படும்!” என்றார்.

மேலும் கண்ணன், “உத்தவா! கபடமும் கர்வமும் இல்லாமல், வெறுப்பு இல்லாமல், குருவிடம் பக்தி நிறைந்தவனாக, ஜீவாத்ம - பரமாத்மாக்களை அறிவதில் ஆர்வம் கொண்டவனாக, வீண்பேச்சு பேசாதவனாக இருப்பவனுக்கு பக்தியோகம் நன்றாகக் கைகூடும். சூரிய மண்டலத்துக்குள் இருக்கும் என்னை வேத மந்திரங்களாலும், அக்னியில் இருக்கும் என்னை அவிஸ் அர்ப்பணிப்பதாலும், வேதியர்களுக்குள் இருக்கும் என்னை அதிதி பூஜையாலும், பசுவுக்குள் இருக்கும் என்னைப் புல் அளிப்பதன் மூலமாகவும், பக்தனுக்குள் இருக்கும் என்னை உபசாரத்தின் வாயிலாகவும், இதயத்தில் இருக்கும் என்னைத் தியானத்தாலும், வாயுவுக்குள் இருக்கும் என்னை முக்கியப் பிராணனாக எண்ணியும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் என்னைச் சம புத்தியாலும் ஆராதிக்க வேண்டும்.

பக்தியோகத்தில் ஈடுபடுபவன் உலகியல் இன்பங்களையோ, இந்திர லோகத்தையோ, ஆத்ம அனுபவத்தையோ விரும்ப மாட்டான். என்னை அடைவதை மட்டுமே தனது உயரிய குறிக்கோளாகக் கொள்வான். அழகிய முகத்தோடும், நீண்ட அழகிய நான்கு தோள்களோடும், அழகிய கழுத்தோடும், அழகிய கன்னங்களோடும், அழகிய புன்னகையோடும், மகரக் குண்டலங்கள் ஒளிவீசும் காதுகளோடும், பட்டுப் பீதாம்பரத்தோடும், கார்முகில் போன்ற வண்ணத்தோடும், திருமார்பில் ஸ்ரீவத்சம் என்ற மறுவோடும், சங்கு சக்கரம் கதை தாமரை வனமாலை சிலம்பு கௌஸ்துபம் உள்ளிட்ட ஆபரணங்களோடும் திகழும் எனது வடிவத்தை இடைவிடாது தியானித்துக் கொண்டே இருந்தால் அது பக்தியோகம் ஆகும்.

உத்தவா! என்னை அடைய விரும்புகிறாய் அல்லவா? என் ஆணைப்படி நீ பத்ரிநாத்துக்குச் செல். எனது பாத நீரான கங்கா நதியில் நீ நீராடுவாயாக. கங்கையில் நீராடித் தூய்மை அடைந்து, அதன்பின் உலகியல் இரட்டைகளைப் பொருட்படுத்தாமல், மனதையும் புலன்களையும் அடக்கி, நான் சொன்ன முறையில் என்னைத் தியானித்து பக்தியோகத்தில் ஈடுபடுவாயாக. என் ஆணைப்படி பக்தியோகத்தில் ஈடுபடும் நீ, விரைவில் பேரானந்தத்தை அடைவாய்.

உன்னைப் போல் பக்தியோக தியானம் பயில்வோர்க்கு ஆனந்தம் வழங்கவே பத்ரிநாத்தில் நர நாராயணர்களாக நான் அவதாரம் செய்திருக்கிறேன். எனவே என்னைத் தியானித்து பத்ரிநாத்தில் பக்தியோகம் புரியும் நீ விரைவாகப் பேரானந்தமாகிய முக்தியை அடைந்து விடுவாய்!” என்று அருள்புரிந்தான். கண்ணனின் ஆணைப்படி பத்ரிநாத்தை அடைந்த உத்தவரும் அவ்வாறே பக்தி யோகத்தில் ஈடுபட்டுப் பேரானந்தமாகிய வைகுண்டத்தைப் பெற்றார்.

இப்படி பக்தியோக தியானத்தில் ஈடுபடுவோர்க்குப் பேரானந்தம் தருவதால் ‘ஸுகத:’ என்று நர-நாராயண வடிவிலான திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 460வது திருநாமம். ஸுகத என்றால் பேரானந்தத்தை வழங்குபவர் என்று பொருள்.

“ஸுகதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பேரானந்தத்தைத் திருமால் அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Anantan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!