வாசுதேவன் நிகழ்த்திய லீலைகள்

1.பூதனா மோட்சம்

“உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்” என்று நம்மாழ்வார் பாடியபடி விஷப்பாலைக் கொடுத்துக் கண்ணனை அழிக்க வந்த பூதனையின் விஷப்பாலோடு சேர்த்து அவளது உயிரையும் உண்டு பூதனையை வதைத்தான் கண்ணன். இந்த லீலை நமக்கு உணர்த்தும் தத்துவம் என்ன?

பூதனை என்பவள்தான் அவித்யை எனப்படும் அறியாமை. நம் கர்மவினைகளின் விளைவாக வந்த அந்த அறியாமை நம் ஞானத்தை மழுங்கச்செய்து பிறவிப்பிணியில் நம்மை அழுத்துகிறது. அவளது இரண்டு மார்பகங்கள் தான் நான் என்னும் அஹங்காரமும், எனது என்னும் மமகாரமும் ஆகும்.

அறியாமையிலிருந்து தோன்றும் அஹங்காரமும் மமகாரமும் விஷம் போன்றவையாகும்.இதிலிருந்து வெளிவர என்ன வழி என்றால், கண்ணனின் திருவடிகளை நாம் சரணடைந்தோமாகில், அவன் பூதனையின் இரண்டு மார்பகங்களையும் உறிஞ்சியது போல், நம்முடைய அஹங்கார மமகாரங்களை முழுமையாக உறிஞ்சி எடுத்து, அந்தப் பூதனையை அழித்தது போல் நமது அறியாமையையும் அழித்து நமக்குப் பேரின்ப வாழ்வாகிய முக்தியை அருளுவான்.

2. சகடாசுர வதம்

கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரன் என்னும் அசுரன், மாட்டுவண்டிச் சக்கர வடிவில் வந்து தொட்டிலில் கிடக்கும் கண்ணன் மேல் பாய்ந்து கண்ணனை அழிக்கத் திட்டமிட்டான். ஆனால், “பொன்றச் சகடம் உதைத்தாய்” என்று ஆண்டாள் பாடியபடி, தன் திருவடிகளால் உதைத்து அந்தச் சகடாசுரனைச் சம்ஹாரம் செய்தான் கண்ணன். இது உணர்த்தும் தத்துவம் என்ன?

சகடாசுரனின் வடிவமான மாட்டுவண்டிச் சக்கரம் என்பது நமது பிறவிச் சுழற்சியாகிய சக்கரத்தைக் குறிக்கிறது. சக்கரம் சுழல்வது போல், “புனரபி ஜனனம் புனரபி மரணம்” என்று இந்தப் பிறப்பு இறப்பு சுழற்சியில் நாம் உழல்கிறோம். கண்ணனின் திருவடிகளை நாம் சரணடைந்தால், அந்தச் சக்கரத்தை உடைத்து நொறுக்கியது போல், நம் பிறவிச் சுழற்சியாகிய சக்கரத்தையும் உடைத்து நமக்குப் பேரின்பப் பெருவாழ்வை அருளுவான்.

3. வெண்ணெய் திருடிய லீலை

வெண்ணெய் என்பது நம் உள்ளத்தைக் குறிக்கிறது. பானை அந்த நம் உடலைக் குறிக்கிறது. நம் உடலாகிய பானையிலிருந்து உள்ளமாகிய வெண்ணெயைக் கண்ணன் திருடும் அழகைத் திருப்பாணாழ்வார் வெகு அழகாக,

“கொண்டல் வண்ணனைக் கோவலனாய்

வெண்ணெய்

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணி அரங்கன் என்

அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”

என்று பாடினார். “அன்று ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்து வெண்ணெய் திருடியவன் இன்று அரங்கனாகத் திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கிறான். அங்கே ஆயர்பாடியில் பானை இருந்தது, வெண்ணெயைக் காணவில்லை. இங்கே அரங்கத்தில் என் உடல் இருக்கிறது, உள்ளத்தைக் காணவில்லை. ஏனெனில் பானையிலிருந்து வெண்ணெயைத் திருடினாற்போல், என் உடலிலிருந்து உள்ளத்தை இந்த அரங்கன் கொள்ளைகொண்டு விட்டான்!” என்று இப்பாசுரத்தில் தெரிவிக்கிறார் திருப்பாணாழ்வார்.

வெண்ணெயைப் போல் வெண்மையான, தூய மனத்துடன் வாழும் அன்பர்களின் மனங்களைக் கவர்ந்து செல்லும் உள்ளம் கவர் கள்வனாகக் கண்ணன் விளங்குவதை இதன்மூலம் அறியமுடிகிறது. ஆனால், வெண்ணெயோ, நம் உடலோ, மனமோ, உயிரோ இவை அனைத்துமே அவனது சொத்துதானே? அவன் சொத்தை அவன் எடுத்துக் கொள்வதை ஏன் திருட்டு என்று சொல்ல வேண்டும்? வெண்ணெயைத் திருடியதாலோ, மோர், பாலைத் திருடியதாலோ, நம் மனங்களையும் ஆத்மாக்களையும் திருடியதாலோ, அவனைத் திருடன் என்று குறிப்பிடுவதில்லை. வேறு எதைத் திருடினான் அந்தக் கண்ணன்? வாதிராஜர் விடைகூறுகிறார்:

“ஸ்வபக்த புஞ்ஜார்ஜிதம் பாப வ்ருந்தம் திவானிசம் சோஹரதி ஸ்ம பால:”

“கண்ணன் வெண்ணெய் திருடிய கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்களின் பாபங்களைக் கண்ணன் திருடிச் சென்று விடுகிறான். நாம் செய்த பாபங்கள் அனைத்துமே நம் சொத்துதானே? நம் சொத்தாகிய பாபங்களை அவன் திருடிச் செல்வதால் தான் அவனைத் திருடன் என்று குறிப்பிடுகிறோம்!” என்று இந்த ஸ்லோகத்தில் வாதிராஜர் தெரிவிக்கிறார்.

4. ருக்மிணி திருக்கல்யாணம்

பீஷ்மக ராஜாவின் மகளான ருக்மிணி கண்ணனையே மணந்து கொள்ள விரும்பினாள். ஆனால் அவளது ஐந்து உடன்பிறந்த சகோதரர்களான ருக்மி, ருக்மரதன், ருக்மகேசன், ருக்மபாகு, ருக்மமாலி ஆகியோர் அவளை சிசுபாலனுக்கு மணம் முடிக்கத் திட்டமிட்டார்கள். அப்போது ருக்மிணி ஓர் அந்தணரிடம் ஒரு காதல் கடிதத்தைக் கொடுத்து, அதைத் துவாரகையில் இருக்கும் கண்ணனிடம் சென்று கொடுக்கும்படிச் சொன்னாள். அவரும் கடிதத்தைக் கண்ணனிடம் சேர்த்தவாறே, கண்ணன் வந்து அவளது சகோதரர்களை வீழ்த்தி ருக்மிணியை மணந்து கொண்டான்.

இதில் ருக்மிணி தான் ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா, சிசுபாலன் உலகியல் வாழ்வு. ஜீவாத்மாவுக்கு உடன்பிறந்தவர்கள் ஐவர் உள்ளார்கள், அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். ருக்மிணியாகிய ஜீவாத்மா பரமாத்மாவை அடைய விரும்பினாலும், உடன்பிறந்த ஐம்புலன்களும் சிசுபாலனாகிய உலகியல் வாழ்வில் ஜீவாத்மாவைத் தள்ளுகிறார்கள்.

அப்போது ருக்மிணிக்காக ஓர் அந்தணர் கண்ணனிடம் தூது சென்றது போல், ஜீவாத்மாவின் குரு ஜீவாத்மாவுக்காக இறைவனிடம் தூது பேசி இறையருளைப் பெற்றுத் தருகிறார். ருக்மிணியின் உடன்பிறந்தவர்களை வென்று அவளை மணந்துகொண்டது போல், இந்தப் புலன்களை வீழ்த்தி ஜீவாத்மாவை இறைவன் மீட்டுச் செல்கிறார்.

இதுபோல்தான் செய்த ஒவ்வொரு லீலையிலும் எத்தனையோ வேதாந்தக் கருத்துகளை நமக்கு விளக்கினான் கண்ணன். அந்தக் கண்ணன் அவதரித்த நாளான இந்த ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாளில் நம் அனைவரின் இல்லங்களிலும் கண்ணனின் திருவருளும் சாந்நித்தியமும் நிறையட்டும்.

5. உரலுடன் கட்டுண்ட லீலை

கண்ணனை யசோதை உரலோடு கட்டிய போது, அவளது கட்டுக்குக் கட்டுப்பட்டுக் கட்டுண்டு நின்றான் கண்ணன். துரியோதனாதியர் கண்ணனைக் கட்ட எண்ணிய போது, விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் வென்ற கண்ணன் ஒரு ஆய்ச்சியின் கயிற்றுக்குக் கட்டுப்பட என்ன காரணம்? அன்புதான். ஆணவத்துக்கு இறைவன் கட்டுப்பட மாட்டான், பக்தனின் அன்புக்குக் கட்டுப்படுவான் என்பதையே இது காட்டுகிறது.

6. மருத மரங்களைச் சாய்த்த லீலை

உரலுடன் கட்டுண்டிருந்த கண்ணன், உரலையும் இழுத்துக் கொண்டு தவழ்ந்து செல்லத் தொடங்கினான். அப்போது வழியில் நின்ற இரட்டை மருத மரங்களுக்கு நடுவே கண்ணன் சென்றான். அவனுடன் கட்டப்பட்டிருந்த உரல் அந்த மரங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டது. கண்ணன் வேகமாக இழுத்தபோது, இரண்டு மரங்களும் முறிந்து கீழே விழுந்தன. அம்மரங்களின் வடிவில் இருந்த குபேரனின் மகன்களான நளகூபரன், மணிக்கிரீவன் இருவரும் சாப விமோசனம் பெற்றுக் கண்ணனைத் துதித்து விட்டு தேவலோகம் சென்றார்கள்.

இந்த இரட்டை மருத மரங்கள் நம் மனத்திலுள்ள காமம், கோபம் என்னும் இரட்டைத் தீயகுணங்களைக் குறிக்கின்றன. நாம் எவ்வளவு முயன்றாலும், காமத்தையும் கோபத்தையும் நம் மனங்களிலிருந்து அகற்றுவது கடினம். ஆனால் கண்ணனை நம் மனத்தின் நடுவே கொண்டு வந்து வைத்து விட்டால், அதாவது இந்த இரட்டை மரங்களான காம கோபங்களுக்கு நடுவில் கண்ணன் வந்து விட்டால் இரண்டும் தானே முறிந்து விழுந்து விடும் என்பதில் ஐயமில்லை.

7. காளிய நர்த்தனம்

காளிய நாகம் என்பது நமது மனத்தைக் குறிக்கிறது. ஏனெனில் பாம்பு போல் நெளிந்து வளைந்து அலைபாய்ந்துகொண்டே இருக்கும் இயல்பு நம் மனத்துக்கு உண்டு. நாம் எவ்வளவு முயன்றாலும் அதைக் கட்டுப்படுத்துவது கடினம். மேலும், காளியன் விஷத்தைக் கக்கி யமுனை நதியை அசுத்தமாக்கியது போல், மனமானது தீய எண்ணங்களைக் கக்கிப் பிறரையும் அசுத்தமாக்கிவிடும். இந்த மனத்தை வசப்படுத்த என்ன வழி?

கண்ணனை நாம் நம் மனத்தில்கொண்டு வந்து நிறுத்தினோமாகில், காளியன் தலையில் கால் வைத்து நாட்டியமாடி அதை எப்படி அடக்கினானோ, அதேபோல் நம் மனமாகிய காளியனையும் அவனே அடக்கி அதை வசப்படுத்தி விடுவான்.

8. கோவர்த்தன கிரிதாரி

ஆயர்கள் இந்திரனுக்காகச் செய்யும் விழாவைத் தடுத்த கண்ணன், இந்திரனுக்குப் பதிலாகக் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்யும்படி அறிவுறுத்தினான். அதை ஏற்று ஆயர்களும் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்ய, அதனால் கோபம் கொண்ட இந்திரன், ஆயர்பாடியில் கனமழையைப் பொழிந்தான். அப்போது கண்ணன் கோவர்த்தன மலையையே குடையாகத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் அம்மழையிலிருந்து காத்தருளினான்.

இதன் தத்துவம் என்னவென்றால், இவ்வுலக வாழ்க்கையில், ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று விதமான தாபங்கள் கல்மழை போல் நம்மை வந்து தாக்குகின்றன. நம் உடல் ரீதியாக நமக்கு வரும் உபாதைகளுக்கு ஆத்யாத்மிகம் என்று பெயர். இயற்கைச் சீற்றங்களால் வரும் இடையூறுகளுக்கு ஆதிதைவிகம் என்று பெயர். பிற உயிரினங்களால் நமக்கு உண்டாகும் தீங்குகளுக்கு ஆதிபௌதிகம் என்று பெயர்.

இவற்றிலிருந்து மீள என்ன வழி? அன்று ஆயர்கள் கண்ணனைச் சரணடைந்தது போல், நாமும் கண்ணனைச் சரணடைந்தோமானால், குன்றைப் போல் உயர்ந்த தனது கல்யாண குணங்களையே குடையாகப் பிடித்து ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் எனப்படும் தாபத்ரய மழையிலிருந்து அவன் நம்மைக் காத்தருள்வான்.

9. ராச லீலை

சரத் காலத்தில், மாலை வேளையில், சந்திரோதயத்துக்குப் பின், ஒரு செண்பகமரத்தின் அடிவாரத்தில் அமர்ந்தபடி கண்ணன் குழலூதத் தொடங்கினான். அதைக் கேட்டு அவனிடம் ஓடி வந்த கோபிகை களோடு சேர்ந்து இரவு முழுவதும் பிருந்தாவனத்தில் குரவைக்கூத்து என்று சொல்லப்படும் ராசலீலையைச் செய்தருளினான் கண்ணன். கோபிகைகளும் மெய்ம்மறந்து கண்ணனோடு ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.

இதன் மூலமாக ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள முக்கியமானஉறவான மனைவி-கணவன் உறவைக் கண்ணன் உணர்த்தினான். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே சொல்லப்பட்ட ஒன்பது உறவுகளுள் இதுவும் ஒன்றாகும்.

1. மகன் - தந்தை

2. காப்பாற்றப்படுபவர் - காப்பவர்

3. தொண்டு செய்பவர் - தொண்டுகளைப் பெறுபவர்

4. மனைவி - கணவர்

5. அறிபவர் - அறியப்படுபவர்

6. தொண்டன் - எஜமானன்

7. தாங்கப்படுபவர் - தாங்குபவர்

8. உடல் - உயிர்

9. மகிழ்விப்பவர் - மகிழ்பவர்

இந்த ஒன்பது உறவுகளுள் ஒன்றான மனைவி-கணவன் என்னும் உறவை ராசலீலையால் உணர்த்தினான் கண்ணன்.

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: