பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்   “திருவருணை” ஸ்ரீ கிருஷ்ணா

எங்கள் குடும்பமே சொல்லொணா பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றது. என்ன பரிகாரங்கள் செய்தால் எங்கள் வாழ்க்கை வளமுறும் என்று கூறுங்கள்.

 - குமரவேல், ஈரோடு.

உங்களின் நீண்ட பத்து பக்க கடிதத்தை படித்தேன். உங்கள் வீட்டிலுள்ளோர் நான்கு பேர் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் மற்றும் ராகு - கேது தோஷம் காணப்படுகின்றது. அதனாலேயே பல்வேறு பிரச்னைகளை நீங்கள் சந்தித்து வருகிறீர்கள். மேலும், செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம் பற்றி நீங்கள் அறிய வேண்டியதும் அவசியமாகும். அறிவியல் கூட ஜீன்கள் மூன்று தலைமுறைக்கு ஒருவரின் உருவ அமைப்பையும் குணங்களையும் கடத்துகின்றன என்று கூறுகிறதல்லவா. அதுவேதான் இங்கும் நிகழ்கிறது. முன் தலைமுறையினரின் தவறும் கர்ம வினையாக உங்களிடம் வந்து சேருகிறது.

இன்னொன்று நீங்கள் இந்த குடும்பத்தில் பிறக்க வேண்டுமென்பதிலும் உங்கள் கர்மவினை அடங்கியுள்ளது. யாராலும் கணிக்க முடியாத காலதேவனின் கணிப்பில் இதுவும் ஒன்று. ‘‘அவர் ரொம்ப நல்லவர் ஸார். அவருக்குப்போய் இப்படியொரு வியாதி வந்துடுச்சே’’ என்பதற்கு பின்னால் காலதேவனின் கணக்குகள் இருக்கிறது. முன்னோர் செய்த வினைகளை நாம் அறியாவிட்டாலும் அதன் பாதிப்பு உங்கள் வரை வரத்தான் செய்யும். வரக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்க முடியாது.

இதுமட்டுமல்ல சகோதர, சகோதரிக்கு சேர வேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும்போது  பூமிகாரகனான செவ்வாயின் கோபம் தோஷமாக தாக்குகிறது. அடக்க விலைக்கு விற்காமல் அநியாய விலைக்கு பூமியை விற்கும் போதும் செவ்வாய் தன் தோஷத்தால் வளைக்கிறார். அறிவியலில் வினைபடு பொருள், வினைவிளை பொருள் என்று சொல்வதுபோல செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்தவற்றின் மீது நாம் நியாயமாக நடந்து கொள்ள வெண்டும். அது தவறும்போது அதன் விளைவால் தோஷம்தான் மிஞ்சுகிறது.

 

‘‘செவ்வாய் தோஷம் எவ்வளவு வருடங்கள் இருக்கும்’’ ‘‘உங்கள் உடம்பில் ரத்தம் ஓடும் வரை இருக்கும். ஒரு ஜாதகத்தை கையில் எடுத்துக் கொண்டால் அதில் ராசியிலிருந்தோ அல்லது லக்னத்திலிருந்தோ 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம்.’’

‘‘ஏன், மற்ற இடங்களில் இருக்கும் செவ்வாயைவிட இந்த இடங்களில் இருந்தால் தோஷம் என்கிறார்கள்.’’ எப்போதுமே செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கு அதிபதியான முருகனை வணங்குங்கள். முக்கியமாக பழநி முருகனையும், நெல்லை மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள பண்பொழில் திருமலை குமார சுவாமியையும், திருவாரூருக்கு அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலனையும், வைத்தீஸ்வரன் கோயில் அங்காரகனையும், வைத்தியநாத சுவாமியையும் மறக்காது தரிசியுங்கள்.

அந்தந்த கோயிலுக்குரிய நியதிப்படியான பரிகாரங்களை செய்யுங்கள். இப்போது ராகு - கேதுக்கு வருவோம். கொஞ்சம் யோசித்தால் அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுதான் ராகு. ஆசையே படாதே என்று அழுத்துவதுதான் கேது. இரண்டும் பாம்புதான். ஆனால் ஒன்றிற்கு எதிராகத்தான் இன்னொன்று நகரும். ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா என்றொரு பாடல் உண்டு.

அந்த ஒளிந்து கிடக்கும் எண்பதும்தான் ராகுவாகவும், கேதுவாகவும் வெளிப்படுகிறது. மனம் என்றால் ஆசைப்படுவது என்பது அதன் இயல்பு. அதில் சில சிக்கலான ஆசைகள் தோன்றுவதும் கூட மனதின் இயல்புதான். ஆனால், யோசித்த அல்லது பார்த்த விஷயங்களை தவறான முறையில் அனுபவிக்கத் தொடங்கும்போதுதான் உள்ளிருக்கும் ராகுவும், கேதுவும் தோஷமாக மாறுகிறது.

தவறான எண்ணங்களை, தர்மமில்லாத தீங்கான காரியங்களை செயல்படுத்தினால் ஒருவரின் ஜாதகத்தில் அது மோசமான இடங்களில் அமர்ந்து தோஷமாக தன்னை காட்டிக் கொள்கிறது. அப்போது அங்கு சர்ப்பம் தன் நஞ்சை உமிழத்தான் செய்யும்.  எனவே, திருநாகேஸ்வரம், கீழப் பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குச் சென்று அந்தந்த தலத்திற்குரிய பரிகாரங்களை செய்யுங்கள். நிச்சயம் பெரிய மாற்றத்தை காண்பீர்கள்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் கோயில்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப: palanmagazine@gmail.com. பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக பெயா், பிறந்த ஊர், பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: