நினைத்ததை முடிப்பவள் நீலி

நம்ப ஊரு சாமிகள்

பழையனூர், திருவாலங்காடு

திருவாலங்காடு வனத்தில் வேதியர் புவனபதியால் கொலை செய்யப்பட்ட நவக்கியானி மற்றும் தற்கொலை செய்து கொண்ட அவரது அண்ணன் திருக்கண்ட நட்டுவன் இருவரது ஆவிகளும் கயிலாயம் சென்றது. நவக்கியானி சிவனிடம் முறையிட்டாள். எனக்கு மறுபிறவி வேண்டும். அப்பிறவியில்  முற்பிறவியில் நடந்த அனைத்தும் நினைவில் நிற்க வேண்டும். என்னை கொலை செய்தவனை பழி வாங்க வேண்டும் என்றுரைத்தாள் அதற்கு சிவன் சரி, அப்படியே ஆகட்டும்.

ஆனால் அவனுக்கு முற்பிறவி நினைவுகள் இருக்காது. காரணம் அவன் மானிடன். நீ தெய்வப்பிறவி. நீ எடுத்திருப்பது அவதாரம் என்றுரைத்தார் சிவன். மறுபிறவி எடுத்தனர் நவக்கியானியும், திருக்கண்ட நட்டுவனும்.

சோழ வம்சத்தில் நீலி பிறத்தல்

சோழ மன்னர் வம்சத்தை சேர்ந்த சிற்றரசன் ஒருவருக்கு குழந்தைகளாக நவக்கியானியும், திருக்கண்ட நட்டுவனும் பிறக்கின்றனர். சோழ மன்னன் தனது குலதெய்வமான ஆலங்காட்டு சிவனின் பெயரை தன் மக்களுக்கு சூட்டினார். மூத்தவனுக்கு நீலன் என்று பெயரிட்டு மகளுக்கு நீலவேணி என பெயரிட்டு நீலாவதி என்றும் நீலம்மை என்றும் நீலி என்றும் அழைத்து வந்தனர். வேதியர் புவனபதி காவிரி பூம்பட்டினத்தில் நாகேந்திரன் என்பவருக்கு மகனாக பிறந்தார். நாகேந்திரன், தனது மகனுக்கு ஆனந்தன் என பெயரிட்டு வளர்த்து வந்தார்.

நீலனும், நீலியும் அரண்மனையில் வளர்ந்து வந்தனர். பருவம் 12 ஆனது அர்த்த சாமத்தில் நீலனும், நீலியும் ஆட்டு மந்தைகளுக்கு சென்று துள்ளு மரிகளை (ஆட்டுக்குட்டி) கொன்று விளையாடுவதுமாக சேட்டைகள் செய்து வந்தனர். இதனால், ஆடுகளை மேய்ப்பவர்கள் மன்னனிடம் முறையிட்டனர். மன்னன் உத்தரவின் பேரில், தலையாரிகள் இரண்டு நபர்கள், ஆட்டு மந்தைகளில் மறைந்து இருந்து பார்த்தபோது நள்ளிரவு நேரம் மன்னனின் குழந்தைகள் ஆட்டு மந்தைக்குள் புகுந்து ஆரவாரம் செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து மன்னன், குழந்தைகளை உடனே நாடு கடத்தும்படி உத்தரவிட்டான். காவலர்கள் குழந்தைகளை கோணிப்பையில் கட்டிக்கொண்டு வந்தனர். பழையனூர் சுடுகாடு அருகே வரும் போது, குழந்தைகள் காவலர்களிடம் அழுது முறையிட்டனர். அவர்களும் இரக்கம் கொண்டு, குழந்தைகளை அவ்விடமே விட்டுச்சென்றனர். அந்த பகுதியில் தேக்கும், புளியமரமும் நிற்க, அம்மரத்திலேயே நீலனும், நீலியும் தங்கலாயினர். நாட்கள் நகர்ந்தது.

நீலியின் கோபத்துக்கு காரணம்

பழையனூர் என்னும் இடம், இங்கு 70 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேளாண்மை செய்து வந்தனர். ஊரில் உள்ள சபை கூடத்திற்கு வாசல் நிலை அமைப்பதற்காக, பழையனூர் காட்டில் நின்ற தேக்கு மற்றும் புளிய மரத்தை வெட்ட வருகின்றனர். அந்நேரம் நீலி கானகம் சென்றிருந்தாள். நீலன் மரக்கிளையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மரத்தை வெட்டும் முன்பு பூஜை செய்த போது மரத்தில் நீலன் இருப்பதை அறிகின்றனர்.

உடனே மந்திரவாதி செப்புக்குடத்தை எடுத்தான், நீலனை அதனுள் அடைத்தான். ஏரிக்கரைக்கு கொண்டு சென்று மண்ணில் புதைத்து விட்டான். மரத்தை வெட்டி எடுத்துச் சென்றனர். நீலி வந்தபோது மரத்தை காணவில்லை, தனது ஞானத்தால் நடந்ததை அறிந்தாள். அவர்களை பழிவாங்க நினைத்தாள். இதனிடையே அகவை 16ஆன ஆனந்தனுக்கு, மாமன் மகளை மணமுடித்து வைத்தார் நாகேந்திரன்.

மண முடித்தவன் தமது குல வழக்கப்படி தொழில் செய்ய வேண்டும் என்று கூறிய அவனது தந்தை, சிறு தொகையை முதலீடாக கொடுத்து துணி வணிகம் செய்யும் பொருட்டு அனுப்பினார். மகன் வெளியூர் சென்று சம்பாதிக்கபோகிறான் என்பதால் அவனுக்கு தகடு வாங்கி கட்டுங்க, காத்து கருப்பு அண்டாது என்று மனைவியின் எச்சரிக்கைக்கு பின், மந்திரவாதியை அழைத்து வந்து குறிபார்த்தார். அப்போது மந்திரவாதி கூறினான்.

 

உங்கள் மகனை வட திசை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வட திசை சென்றால் திரும்பி வருவார் என்று உத்தேசமில்லை என்றார். உடனே என்ன வார்த்தை பேசுற, அதுக்கு மாற்று வழிய சொல்லு என்று சினம் கொண்டார் நாகேந்திரன். மாகாளியின் நாமம் சொல்லி மந்திரித்த கத்தி, இதை இடுப்பில் சொருகிக்கொள் எந்த பேயும் உன்னை அண்டாது என்று கூறி கத்தியைக் கொடுத்தான் மந்திரவாதி. ‘‘முன் ஜென்ம பகையாக கன்னி ஒருத்தி உன்னை துரத்துகிறாள். எனவே கன்னியர் எவரிடத்தும் பேசாதே, மனம் மயங்காதே’’ என்றுரைத்தான். ஆகட்டும் என்று ஆனந்தன், வணிகம் செய்ய புறப்பட்டான்.

 

பழையனூரில் ஆனந்தன் வணிகனும், நீலியும்

திருவாலங்காடு திருவிழாவில் வணிகம் செய்ய திருவாலங்காடு புறப்பட்டான் ஆனந்தன், பழையனூர் எல்லையில் இருந்து ஊருக்குள் நடந்து வரும்போது அழகு மிளிரும் கன்னிப்பெண் ரூபத்தில் வந்த நீலி, ஆனந்தனிடம் பேசினாள், ‘‘ வெற்றிலை போடனும், கொஞ்சம் சுண்ணாம்பு தாரேரா’’ எனக்கு அந்த பழக்கம் இல்லை என்றுரைத்தான் ஆனந்தன், நீலி விடவில்லை, பின் தொடர்ந்து நடந்து வந்தாள்.

முன் ஜென்மத்தில் அவள் கொலையுண்ட இடம் வந்தது. நீலிக்கு ஞாபகம் வரவே, ஆங்காரமும் வந்தது. அவனை கொல்ல நெருங்கினாள். அப்போது, ஆனந்தனின் இடுப்பில் இருந்த மந்திரக்கத்தியின் சக்தி அவளை தடுத்தது. தனது சினத்தை அடக்கிக் கொண்டாள். அங்கு இருந்த கள்ளி செடியின் ஒரு கொப்பை பிடுங்கி தன் இடுப்பில் வைத்தாள். அது பெண் குழந்தையாக மாறியது.

அந்தி மாலை நேரம் ஆனது. தெரு முனையில் அரச மரத்து மேட்டில் ஊரார்கள் 10க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்க, அவர்களிடம் சென்றான் ஆனந்தன், ஐயா இந்த பெண் என்னை பின் தொடர்கிறாள். இன்றிரவு உங்கள் ஊரில் தங்க இடம் கொடுத்தால், விடிந்ததும் வியாபாரம் பார்த்துவிட்டு சென்று விடுகிறேன் என்றான். ஊர்க்காரர்கள் நீலியை பார்த்து, ‘‘யார் நீ? என்று கேட்க, ஓ.. வென கண்ணீர் விட்டு அழுதபடி, ‘‘இவர் எனது கணவர், என்னோடு வாழ்ந்து ஒரு குழந்தையை தந்து விட்டு, தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய பார்க்கிறார்’’ என்று கூறினாள்.

‘‘இல்லை.. இல்லை.. இது பொய்’’ என்றான் ஆனந்தன், ஊர் தலைவர்களில் ஒருவர், சரி அந்த குழந்தையை இடுப்பில் இருந்து இறக்கி விடும்மா, அது என்ன சொல்லுதுன்னு கேட்போம்’’ என்றார். நீலியும் இடுப்பில் இருந்த தனது குழந்தையை இறக்கி விட்டாள். அந்த குழந்தையும், ஆனந்தனை பார்த்து, அப்பா... என்றபடி அவர் அருகே சென்றது. உடனே ஊர்க்காரர்கள் என்னப்பா, நீ இப்படி பண்ற, குழந்தையும், தெய்வமும் ஒண்ணு என்று ஆனந்தனை திட்டினார்கள்.

(இதன் தொடர்ச்சி அடுத்த இதழில்...)

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related Stories: