×

இந்த வார விசேஷங்கள்

8-8-2022 - திங்கள்  கலிய நாயனார் குருபூஜை

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் கலியநாயனார் என்பவர். சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் நாயன்மார்களில் ஒருவர். தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே எண்ணெய் எடுக்கும் வணிகர் மரபிலே தோன்றியவர். சிவநெறியே தவ நெறியாகக் கொண்டவர். திருவொற்றியூர்த் திருக்கோயிலில் தினமும் தாம், செக்கில் ஆடிய எண்ணெய் கொண்டு திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையைப் புலப்படுத்தத் திருவுளங்கொண்டான் சிவபெருமான்.

மிகவும் செல்வந்தரான இவருடைய செல்வத்தைக் குறைத்து வறுமை நிலையை உண்டாக்கினான். எல்லாம் நன்றாக இருக்கும் பொழுது பக்தி செலுத்துவது என்பது வேறு; எத்தனைத் துன்பங்களும் வறுமையும் சூழ்ந்த போதும் பக்தி செலுத்துவது என்பது வேறு. கலியநாயனார் தன் வறுமையை நினைத்து கலங்கவில்லை.

எல்லாம் சிவன் அருள் என்று எண்ணி தனது உறவினர்களிடம் உதவி கேட்டு விளக்கெரித்தார். அது சில காலம் மட்டுமே நடந்தது. எண்ணெய் தருவார் கொடாமையால் கூலிக்குச் செக்காட்டி அக்கூலி கொண்டு விளக்கெரித்தார். ஒரு கட்டத்தில் அந்தக் கூலியும் கிடைக்கவில்லை. தாம் வசித்த வீடு முதலிய பொருட்களை விற்று விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகரெங்கும் விலைகூறினார். வாங்குவாரில்லாமையால் மனம் தளர்ந்தார்.
திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்தார்.

“இன்று விளக்கேற்ற எண்ணெய் இல்லையே... நான் என் செய்வேன்? திருவிளக்குப் பணி தடைப்படின் நிச்சயம் இறந்துவிடுவேன்” எனத் துணிந்தார். எண்ணெய்க்கு ஈடாக தமது ரத்தத்தையே சொரிந்து விளக்கு ஏற்றுவதற்கு முனைந்தார். சோதனையின் இறுதி நிலை இது. இவரது மன உறுதியைக் கண்ட ஒற்றியூர்ப் பெருமானது அருட்கரம் இவரது செயலைத் தடுத்து நிறுத்தியது. உமையம்மையோடு சிவபெருமான் விடைமீது தோன்றி அருளினார். சிவநெறியில் மன உறுதி கொண்ட கலிய நாயனாரின் குருபூஜை இன்று. ஆடி கேட்டை.

8-8-2022 - திங்கள்  கோட்புலி நாயனார் குருபூஜை

கோட்புலிநாயனார் சோழநாட்டிலே திருநாட்டியத்தான்குடியில் வேளாளர் மரபில் தோன்றினார். சோழ சேனாதிபதியாக வேலை செய்து வந்தார். பகை நாடுகளைப் போரில் வென்று புகழுடன் விளங்கினார். இதன் காரணமாக அரசாங்கத்தில் உயர் செல்வாக்குப் பெற்றவராக இருந்தார். அரசன் பல பரிசில்களை அவ்வப்போது இவருக்கு வழங்கினான். மிகப் பெரிய செல்வந்தராக விளங்கிய இவர், சிவனடியார்களுக்கு அமுது வழங்கும் பணியை பலகாலம் செய்துவந்தார்.

சிவன் கோயிலில் திருவமுதுபடி பெருகச் செய்யும் திருப்பணியும் இவர் பணி ஆகியது. அப்பொழுது அரசன் ஒரு போருக்காக இவரை அழைத்தான்.
தாம் திரும்பி வரும் வரையில் சிவனுக்கமுது படிக்காகும் நெல்லினைக் கூடுகட்டி வைத்து தம் சுற்றத்தாரை நோக்கி ‘இறைவர்க்கு அமுது படிவைத்துள்ள இந்நெல்லை யாரும் எடுத்தல் கூடாது. திருவிரையாக்கலி என்னும் ஆணை’ எனத் தனித்தனியே ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சென்றார். சில நாளிலே கடும் பஞ்சம் வந்தது. பசியால் வருந்திய சுற்றத்தார்கள் அரிசி மணி இல்லாது தவித்தனர்.

அப்பொழுது சிவனுக்கு அமுது செய்ய விட்டு சேர்ந்திருந்த நெல் கோட்டை ஞாபகம் வந்தது. இறைவனுக்குரிய அந்த நெல்லை உபயோகித்து, பின்னால் திரும்ப தந்துவிடலாம் என்று நினைத்து அந்த நெல்மணிகளை செலவழித்தனர். போர் நல்லபடியாக முடிந்தது. ஊர் திரும்பிய நாயனார் தம்முடைய உறவினர்கள் செய்த செயலை எண்ணி கோபம் கொண்டார். அவர்களை தண்டிக்க நினைத்தார். தம்முடைய குலத்தார் அத்தனை நபர்களையும் தண்டித்தார். அப்போது இறைவர் வெளிப்பட்டார்.

தம்முடைய அருட் கருணையினால் தண்டிக்கப்பட்ட அத்தனை நபர்களையும் உய்வடையச் செய்தார். இவரது கொள்கை இதுதான். சிவச்சொத்தை யாரும் வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. பஞ்சம் வந்து உயிர் துறக்கும் நிலை நேர்ந்த இடத்தும், அதை சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்திக் கொள்வதுபிழை. சிவத்துரோகம்.

இச்சிவத்துரோகம் இழைத்தவர்களைக் கொன்றழித்தால்கூட பாதக மாகாது. ``அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்” - என்று இவருடைய பெருமையை சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில் பாராட்டுவார். கோட்புலியார் குருபூசைநாள்: ஆடி கேட்டை.

8-8-2022 - திங்கள்  சந்தான விருத்தி தரும் ஏகாதசி

ஏகாதசி விரதத்தால் கிடைக்காத நற்பலன் எதுவுமில்லை. செல்வம், கல்வி, ஆயுள், ஆரோக்கியம், இழந்ததைப் பெறுதல், பதவி என ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் ஏகாதசி விரதத்தால் கிடைக்கும். சிலருக்கு மற்ற செல்வங்கள் இருந்தாலும் புத்திர விருத்தி இருக்காது. அப்படி சந்தான விருத்தி இல்லாதவர்கள், அக்குறை தீர, இருக்கவேண்டிய ஏகாதசி விரதம் ஒன்று உண்டு. அது ஆவணி மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசி விரதம் (8.8.2022).

ஒருவருக்கு வெகு நாட்கள் குழந்தை இல்லை. அதன் காரணத்தை ஒரு முனிவரிடம் கேட்டான். அந்த முனிவர் சொன்னார்; ‘‘அன்பனே! போன ஜென்மத்தில் வணிகராக இருந்தாய். பணத்தைத் தவிர வேறு நோக்கம் இல்லாதவனாக இருந்தாய். சுயநலமிக்க நீ ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தாய். ஒரு நாள் மதியம் ஒரு குளக்கரையை அடைந்தாய். அப்பொழுது மிகுந்த தாகத்தோடு ஒரு பசுவும் கன்றும் குளத்தில் நீர் அருந்திக் கொண்டிருந்தன. அப்பொழுதுதான் பசு வாயை நீரில் வைத்திருந்தது.

உடனே நீ அங்கு ஓடிச்சென்று ஒரு பெரிய குச்சியால் அவைகளை அடித்து விரட்டிவிட்டாய். அந்த பாவமானது இப்பிறவியில் உன்னைப் பற்றி நிற்கிறது.
இப்படி முனிவர் சொன்னவுடன் அவன் கேட்டான். ‘‘அப்படியானால் இதற்கு என்ன பிராயச்சித்தம்? எதைச் செய்தால் குறை தீரும்?” முனிவர் சொன்னார், ‘‘வருகின்ற ஏகாதசி ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி. இம்மாதிரி பிள்ளையில்லா குறை இருப்பவர்களுக்கு இந்த ஏகாதசி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏகாதசியை முறைப்படி விரதமிருந்து, பகவான் மகாவிஷ்ணுவை வணங்கினால், நிச்சயம் அவர்களுக்குக் குறை தீரும்” என்றார்.

உடனே, ஏகாதசி விரதத்தை மிகுந்த நம்பிக்கையோடும் தூய்மையோடும் அந்த ஆசிரமத்திலேயே முனிவர் சொன்ன முறைப்படி துவங்கினான். அடுத்த சில மாதங்களில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த ஏகாதசி விரதம் பாரம்பரியமாக மூன்று நாட்கள் நீடிக்கும். தசமி திதி இரவில் தொடங்கி, ஏகாதசி திதியில் தொடர்ந்து துவாதசி திதியில் காலையில் முடிவடையும்.

பக்தர்கள் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்து ஏகாதசி திதியில் அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். இருப்பினும், சில பக்தர்கள் துவாதசி திதியில் விரதம் இருக்கும் வரை ஏகாதசி திதியில் இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். அந்த சமயத்தில் நாள் முழுவதும் விஷ்ணு பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். அடுத்த நாள் நிறைய காய்கறிகள் கூட்டு சேர்த்து செய்த உணவை படைத்து, மற்றவர்க்கும் அளித்து (துவாதசி பாரணை), சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள். அன்று வயதானவர்களுக்கு உணவு தானம் செய்யலாம். அப்படிப்பட்ட ஏகாதசியை நாமும் கடைப்பிடித்து ஆழ்வார்கள் பாசுரம் பாடி பலன் பெறுவோம்.

9-8-2022 - செவ்வாய்  ருண விமோசன பிரதோஷம்

நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அதில் கடன், நோய், எதிரி தொல்லைகளைத் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பிரதோஷ விரதம் முக்கியமானது. இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். விஷத்தின் வீரியத்தினால் மயக்கமடைந்திருந்த சிவபெருமான், திரயோதசி நாளில் மாலை வேளையில் கண்விழித்தார். சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

பிரதோஷ காலங்களில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவபூஜை செய்ய வேண்டும். மாலையில் கோயிலுக்குச் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக் கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும் நிவர்த்தியாகும்.

10-8-2022 - புதன்  ஆளவந்தார் சாற்றுமுறை

நாதமுனிகளுக்கு பிறகு வைணவத்தை வளர்த்த ஆசாரியர்களின் முக்கியமானவர் ஆளவந்தார். அவருடைய அவதார தினம் ஆடி உத்திராடம்.
சகல திருமால் திருத்தலங்களிலும், வைணவர்களின் இல்லங்களிலும் ஆளவந்தார் சாற்றுமுறை மிகச் சிறப்பாக நடைபெறும். அவர் அவதரித்த காட்டுமன்னார் கோயிலில் பத்து நாள் உற்சவமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

12-8-2022 - வெள்ளி  ஆடி கடை வெள்ளி

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் அம்பாளை ஆராதியுங்கள். ஐந்துமுகம் கொண்ட விளக்கேற்றுங்கள். நெய்விளக்கேற்றுங்கள். மா விளக்கு போடுங்கள். அம்பாளுக்கு உகந்த செந்நிற மலர்களை சாத்துங்கள். குடும்பமாக எல்லோரும் அமர்ந்து, பூஜித்து வணங்குங்கள். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட் முதலான மங்கலப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது நல்லது.

கணவரின் ஆயுள் பெருகும். தடைப்பட்ட மங்கல சுபகாரியங்கள் அனைத்தும் தங்கு தடையில்லாமல் விரைவில் நிகழும். வீட்டில் தரித்திர நிலை மாறி, சகல ஐஸ்வரியங்களும் பெருகும். லலிதா சகஸ்ர நாமம் பாராயணம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பால் பாயசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள்.

12-8-2022 - வெள்ளி  பௌர்ணமி -  திருப்பதியில் கருட சேவை

கருடன், ஏழு மலைகளை வைகுண்டத்தில் இருந்து பகவானுக்காக பெயர்த்து எடுத்து திருப்பதியில் வைத்தார். அங்கு பெருமாள், ‘‘மந்திபாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்று கொண்டிருக்கிறான்.’’ வேதமாகிய கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டான் “ஓடும் புள்ளேறி” என்றும், “பரவையேறும் பரமபுருஷா” என்றும் ஆழ்வார்கள் இந்த கருட சேவையைப் போற்றுகின்றனர்.

இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும், கருடவாகனத்தில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். கருட வாகன சேவை முன்னிட்டு சர்வ அலங்கார திருக்கோலத்தில் உற்சவர் மலையப்பசுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைவார். கருட வாகனத்தில் மாடவீதிகளில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

தொகுப்பு: சங்கர்

Tags :
× RELATED சுந்தர வேடம்