×

எப்போதும் துணையிருப்பாள் முப்பந்தல் அம்மன்

நம்ப ஊரு சாமிகள்

ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி


திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சிவன் கோயிலில் பாரம்பரியமாக நடனம் புரிந்து வந்தாள் தேவதாசி சத்தியவாணி என்ற சிவகாமி. இவருக்கு முதலாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திருக்கண்ட நட்டுவன் என பெயரிட்டாள். அடுத்து பிறந்த பெண் குழந்தைக்கு நவக்கியானி என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். நவக்கியானி லட்சுமி கடாட்சம் கொண்டிருந்ததாலும், அவள் பிறந்த பிறகு சத்தியவாணியின் வீட்டில் செல்வம் சேர்ந்ததாலும், நவக்கியானியை லட்சுமி என்றும் அழைத்து வந்தாள். பருவவயதை அடைந்த நவக்கியானியின் முதல் அரங்கேற்றம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நடந்தது. அப்போது சிவாச்சாரியார் புவனபதி என்ற வேலவன், நவக்கியானியின் அழகில் மயங்கினார்.

வேதியர் புவனபதி என்ற வேலவன், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சந்நதி தெருவைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிவுறும் நிலையில் அவரது மனைவி கர்ப்பவதியாகி தனது தாய் வீடான சிதம்பரத்திற்கு சென்றிருந்தாள். புவனபதி திருவாலங்காட்டில் அரசவை சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட வேதியர்களுக்கான இல்லத்தில் தங்கியிருந்து கோயிலுக்கு பூஜை செய்து வந்தார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காஞ்சிபுரத்திலுள்ள தனது இல்லத்திற்கு சென்று வந்தார்.

வேதியர் ஏமாற்றமும், நவக்கியானியின் மனமாற்றமும் மனைவியின் பிரிவால் வந்த ஏக்கத்தாலும், நவக்கியானி மேல் கொண்ட தாக்கத்தாலும் நவக்கியானியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார் வேதியர். ஒவ்வொரு நாளும் பல விதமாக நகைகள் கொண்டு வந்து கொடுத்தும் எந்த பலனும் இல்லாமல் போக, ஒரு நாள் ஆத்திரம் கொண்டு கோபத்தோடு சண்டையிட்டபடி, தேவதாசியின் வீட்டை விட்டு வெளியேறினான் புவனபதி. இதையறிந்த தேவதாசியின் மகன் திருக்கண்ட நட்டுவன், தங்கையிடம் சென்று உன் மீது அன்பு கொண்ட அர்ச்சகர் கோயில் நகைகளையும், அவனது பொன்னும் பொருளையும் தனது தாயிடம் கொடுத்ததையும், அதனால் இன்று அவர் ஆண்டியாகி செல்வது குறித்தும் எடுத்துக் கூறினான்.

உடனே நவக்கியானி வேதியர் கொடுத்த நகைகள் அனைத்தையும் ஒரு துணியில் மூட்டையாக கட்டி அதை எடுத்துக்கொண்டு வழி எங்கும் விசாரித்து விசாரித்து விரைந்து நடந்தாள். மாமா என்ற நவக்கியானியின் குரலுக்கு கோபத்தோடு என்ன என்று கேட்டார், வேதியர். அவர் அருகே சென்று வேப்பமரத்தின் கீழ் அமருங்கள் என்ற கூற, புவனபதியும் மரத்தின் கீழ் அமர்ந்தார். என் தாய் உங்களிடம் வாங்கிய நகைகளை இந்த மூட்டையில் கட்டி கொண்டு வந்திருக்கிறேன். அது மட்டுமல்ல, எதற்காக இவற்றை கொண்டு வந்து என் தாயிடம் கொடுத்து இப்போது ஏமாந்து ஓட்டாண்டியாய் நிற்கிறீர்களோ, அந்த நானே இன்னிலிருந்து உங்களுக்கு சொந்தம்.

மாமா, என் தாய் தாசியாக இருக்கலாம் ஆனால் நான் தர்ம பத்தினி, இனி உங்கள் உத்தமியாக இருப்பேன், கோயில் நகைகளை ஒப்படையுங்கள். இருப்பதை வைத்து ஒழுக்கமான வாழ்வு வாழலாம் என்றாள். தாசி மகள் எப்படி உத்தமியாக இருக்க முடியும். தன்னைப்போல வேறு நபர்களிடமும் பணத்திற்காக இவளது தாய் இவளை... என்று தனது மனதுக்குள் சந்தேகம் கொண்ட புவனபதி, கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு யோசித்தான்.

நவக்கியானி உயிர் நீத்தலும், சபித்தலும் அப்போது, அவன் மடியில் தலை வைத்து நவக்கியானி படுத்தாள். சிறிது நேரத்தில் கண் அயர்ந்து தூங்கி விட்டாள். தூங்கிக் கொண்டிருந்த நவக்கியானியின் தலையின் கீழ் மண்ணை குவித்து வைத்து அதன் மேல் தலையை தூக்கி வைத்தான். அவளும் புவனபதியின் மடியில் தூங்குவதாக நினைத்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போது, அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்து நவக்கியானியின் தலையில் தூக்கி போட்டான். துடிதுடித்து நவக்கியானி இறந்தாள். இறக்கும் தருவாயிலில், ``உன்னை நம்பி வந்த என்னை  கொன்று விட்டாயே பாதகா... உன்னை பழி வாங்கியே தீருவேன்.

நீ என்னை கொன்றதற்கு இந்த கள்ளிச்செடியே சாட்சி’’. என்று கூறி அருகே நின்ற கள்ளிச்செடியை கை கொண்டு இழுத்து தன் உடலருகே நட்டாள். பின்னர் உயிர் நீத்தாள். புவனபதி அந்த நகை மூட்டையுடன் அங்கிருந்து புறப்பட்டான். அந்த வேளை வீட்டில் தனது தங்கை இல்லை என்பது அறிந்த திருக்கண்ட நட்டுவன், தங்கை வந்த வழியே தேடி வந்தான். கானகத்தில் வேப்பமரத்தின் கீழே, நவக்கியானி கொலையுண்டு கிடந்ததையும், அருகே கள்ளிச்செடி நடப்பட்டதையும் கண்டு அழுது புலம்பினான். பின்னர் தனது நாக்கை பிடுங்கி அங்கேயே மாண்டு போனான்.

நகை மூட்டையுடன் நடந்து வந்த வேதியர் புவனபதி, கானகத்தில் இருந்த கிணற்றில் இறங்கி நீர் அருந்தினார். அப்போது அவர் கையிடுக்கில் வைத்திருந்த மூட்டை கிணற்றுக்குள் விழுந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்தபோது, கிணற்றின் கல் இடுக்கில் இருந்த கருநாகம் புவனபதியை தீண்டியது. அடுத்த கனமே வாயில் நுரை தள்ளியபடி கிணற்றில் விழுந்து உயிரை விட்டான் புவனபதி. இன்றும் கள்ளிச்செடி அருகில் நவக்கியானி, முப்பந்தல் அம்மனாக இருந்து ஊர் மக்களை காத்தருள்கிறாள்.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?