கடல் எப்போதும் சேறாகாது!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 27 (பகவத் கீதை உரை)

பொறுமை கடலினும் பெரிது என்பார்கள். அப்படியென்றால் என்ன? எவ்வளவுதான் மகா பெரிய சமுத்திரமானாலும், அது அமைதியாக இருக்கிறது. அவ்வப்போது காற்று அதை, சுருட்டிச் சென்று கரையோர அலையாகத் தள்ளினாலும், அது தன் இயல்புக்குத் திரும்பி விடுகிறது. இந்தக் கரையோர அலைத் தோற்றத்தை வைத்து அதனுடைய முழு சுபாவத்தையும் எடை போட்டுவிட முடியாது. கரையிலிருந்து உள்ளே சென்றால், அதன் அமைதி நம்மை வியக்க வைக்கும். ஆழ்கடலினுள்ளே எரிமலையும் இருக்கும் என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பிலிருந்து கடல் எந்த அளவுக்குப் பொறுமை காக்கிறது என்பது புரியும். கட்டுமரத்திலிருந்து பிரமாண்ட கப்பல்வரை பயணிப்பதற்கு சிறந்ததோர் வழியாக அமைந்திருக்கும் கடல், பரிபூரணமானது. இந்தக் கடலை ஞானியுடன் ஒப்பிடுகிறார் கிருஷ்ணன்;

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்

ஸமுத்ரமாபஹ ப்ரவிசந்தி யத்வத்

தத்வத்காமா யம் ப்ரவிசந்தி ஸர்வே

ஸ சாந்திமாப்னோதி ந காமகாமீ (2:70)

‘‘மிகப் பெரிய பரப்பாக நிறைந்திருக்கும் ஒரு கடல், நிலைத்த தன்மையைப் பெற்றது. அதனிடம் எல்லா ஆறுகளும் சென்று சங்கமமாகின்றன. ஆனாலும் கடல் அமைதியாகவே இருக்கிறது. இந்தக் கடலைப் போன்றவன்தான் ஞானியும். உலகில் இச்சைகள், பொறாமை, காம உணர்வுகள் அனைத்துமே அவனுக்குள் சென்றாலும், அவன் சலனப்படுவதில்லை. அவனால் அமைதி காக்க முடிகிறது. ஆனால் ஆசை உள்ளவனால் அப்படி அமைதிகாக்க இயலாது.’’ ஆழ்கடல் அமைதியானது.

கடற்கரையோரமாக அதன் அலைகள் ஆர்ப்பரித்துப் புரண்டு வந்தாலும், உடனே ஒரு குற்ற உணர்வுடன் அவை பின்வாங்கி அமைதிக் கடலுடன் சேர்ந்துவிடுகின்றன. ஒவ்வொரு அலையையும் ஒவ்வொரு உணர்வாகக் கொண்டோமானால், அந்த ஒவ்வொரு அலையும் அப்படிப் பின்வாங்கி அடங்கிவிடுவதிலிருந்து கடலின் தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கென ஒரு விஸ்தீரணத்தைக்கொண்டு பரந்து கிடக்கிறது கடல்.

அதனுள் எல்லா நதிகளும் சென்று சங்கமிக்கின்றன. தன்னை நாடியே அனைத்து நதிகளும் வரவேண்டும் என்பது இயற்கை நிகழ்வாகவே இருந்தாலும், அதற்காகச் சற்றும் ஆணவம் கொள்ளாதிருக்கிறது கடல். நதிகள் வந்து சேர்ந்துவிட்டதால் அது தன் பரப்பை விஸ்தரிப்பதில்லை. அதேபோல, நதிகள் தன்னை வந்து சேராவிட்டாலும் அதற்காக கடல் வறண்டு போய்விடுவதும் கிடையாது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஊரெங்கும் புரண்டு வந்து, தனக்கென தனி பாதை வகுத்துக்கொண்டு ஓடோடி வரும் நதி, கடலில் சங்கமித்தபின் அடையாளம் காணாமல் போய்விடுகிறது.

அதுவரை அது இனிப்பான நீரை வழங்கிக்கொண்டிருந்தாலும், கடலுடன் கலந்துவிட்ட பிறகு அந்த நீரும் உப்பாகவே மாறிவிடுகிறது! அதாவது, கடல் தன்னுடன் எந்த நீர் கலந்தாலும், அது நதி நீராகவோ, சாக்கடை நீராகவோ எதுவானாலும் சரி, கலப்பவை எல்லாம் கடல் நீரின் தன்மைக்கு மாறிவிடுகின்றனவே தவிர, கடல் மாறுவதில்லை! அதன் எந்தப் பகுதி நீரும் உப்புத் தன்மை கொண்டதாகவே  ஒரே மாதிரியானதாகவே  இருக்கிறது! கடலின் இந்தத் தன்மையை மாற்ற அதை ஒட்டுமொத்தமாகக் கலக்கிப் பார்த்தாலும், அந்த முயற்சி தோல்விதான் காணும். என்றைக்கேனும், எங்கேனும் கடல் சேறு அல்லது கலங்கிச் சேறான கடல் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா? புராண காலத்தில் தேவர்களும், அசுரர்களும் கடலைக் கலக்கிக் கடைந்தபோதுகூட அது சேறாகவில்லை; மாறாக அமிர்தம் போன்ற அரிய பொருட்களைத்தான் வாரி வழங்கியிருக்கிறது! இந்தக் கடல் போன்றவன்தான் ஞானி!

தன்னிடம் வந்து சேரும் நதிகளை மட்டும் உள்வாங்கிக் கொள்வதில்லை இந்தக் கடல். சிலசமயம் சுனாமி போல தானே பொங்கியெழுந்து ஊருக்குள் பாய்ந்து அந்த ஊரையே கபளீகரம் செய்யும் ஆற்றலும் கொண்டது. ஆனாலும், அப்படி தான் எதை உள்வாங்கிக்கொண்டாலும், அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டாமலேயே இருக்கிறது கடல். மலைகளும், காடுகளும், கோயில்களும், ஊர்களும் இன்னும் எத்தனையையோ விழுங்கியிருக்கிறது கடல்.

ஏன், கிருஷ்ணன் வாழ்ந்த துவாரகையையே கடல் கொண்டுவிட்டதே! இன்றைய ஆராய்ச்சி அதை நிரூபிக்கிறதே! ஆனால், சாதாரண ஊரையும், பகவானின் துவாரகாபுரியையும் தனக்குள் கொண்டுவிட்டாலும், மேற்பரப்பில் இந்தக் கடல்தான் எத்தனை அமைதியாக இருக்கிறது! தனக்குள்ளே எத்தனையோ பொக்கிஷங்களை அடக்கிக்கொண்டிருந்தாலும், அது அடக்கத்துடனேயே திகழும் கடலின் தன்மை போலவே ஒரு ஞானியும் திகழ்கிறான். ஒரு திரைப்படத்தில் அருவி வீழ்வது போல காட்சி வருகிறது. ஆனால் அதனால் திரை நனைந்தா போகிறது? அதேபோல, தீப்பிடிக்கும் காட்சி ஒன்றும் வருகிறது, அதனால் திரை கருகியா போகிறது? திரை தன் மீது விழும் காட்சிகளைத் தாங்கி பார்வையாளர்களுக்குத் தருகிறது. காட்சி தன் மீது விழுமுன்னரும், காட்சி முடிந்த பின்னரும் அது எப்படி நிர்ச்சலனமாக இருக்கிறதோ, அதே மாதிரி இருப்பவன்தான் ஞானி.

விஹாய காமான் யஹ ஸர்வான் புமாம்ஸ்சரதி நிஸ்ப்ருஹ

நிர்மமோ நிரஹங்காரஹ ஸ சாந்திமதிகச்சதி (2:71)

‘‘ஆசையை முற்றிலும் அழித்தவனாக, எந்தப் பற்றும் அற்றவனாக, செருக்கு, மமதை இல்லாதவனாக வாழும் ஒருவன் மனத்தளவில் பெருத்த நிம்மதி கொண்டவனாகத் திகழ்கிறான். அவன் வாழ்வில் சாந்தி நிலவுகிறது.’’ ஆசை ஏன் ஏற்படுகிறது? தேவை அதிகரிக்கும்போது தானாக ஆசை பெருகுகிறது. தேவை அதிகரிப்பானேன்? தனக்காக இல்லாவிட்டாலும், தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்காக அந்தத் தேவை அதிகரிக்கிறது. இப்படித் தன்னை சார்ந்திருப்பவர்களுக்கான கூடுதல் தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது, அந்த வசதிகளை தானும் அனுபவிக்கும் ஆசை, நாமே அறியாமல் நமக்குள் துளிர்விடுகிறது.

‘இது போதும்’ என்ற மனோநிலை ஏற்பட்டுவிட்டால், ஆசை ஏமாற்றமடைந்து அழிந்தோடிப் போகிறது. இதில் வேதனை என்னவென்றால், இந்த ஆசை பொறாமைக்கும் வித்திடுகிறது. பொறாமை, பொய் சொல்லத் தூண்டுகிறது, பகை வளர்க்கச் சொல்கிறது, திருடவும், கொலை செய்யவும்கூட வைக்கிறது. ஆக, அடிப்படையில் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டால், அடுத்தடுத்த தீயகுணங்களுக்குப் பாதை அமைக்காமலிருக்க முடியும். அப்படி நேர்வழி, நல்வழியில் பயணித்தோமென்றால் அந்த பயணத்தில் பயம் இருக்காது, கலக்கம் இருக்காது, நிம்மதி மட்டும் நிலைத்திருக்கும். ஆசை உந்த, தேவைக்கும் அதிகமான வசதிகளுடன் ஒருவன் வாழ்வானானால் அவனுக்குள் மமதை தானாகக் குடிகொள்ளும். தான் அனுபவிக்கும் வசதிகள் பிறர் கண்களில் பொறாமை ஒளியை பிரதிபலிக்கிறதா என்று வக்கிரமாக அவன் நோக்குவான்.

இந்தக் குரூர சந்தோஷத்தில் சுகம் காணும் அவன், பிறர் தனக்குச் சமமாகவோ அல்லது கூடுதலாகவோ வசதிகளை அனுபவிப்பதைத் தாங்கிக்கொள்ள மாட்டான். அந்த வசதிகளை அனுபவிக்க அவர்கள் தகுதியில்லாதவர்கள், தான் மட்டுமே தகுதியானவன் என்று தவறாக மதிப்பீடு கொள்வான். ஆனால் ஒரு ஞானிக்கு இந்த சிக்கல் இல்லை. அவன் தன் தேவைகளைக் குறைத்துக் கொள்ளத் தெரிந்தவன். அத்தியாவசிய அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறை இருந்தாலும்கூட அவன் அனுசரித்துக்கொண்டு போய்விடுவான். அந்தக் குறையை நிறை செய்துகொள்ள அவன் முயற்சிக்க மாட்டான்.

‘அவன் இந்தப் பிறவியைக் கடந்தாக வேண்டுமே! அதற்காக சரீரத்தில் கொஞ்சமாவது பலத்துடன் அவன் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அந்த பலம் இயற்கையான சரீர சம்பந்தப்பட்ட செயல்களை மேற்கொள்ள அவனுக்குத் தேவைப்படுவது. அதேசமயம் இந்த பலத்தை வைத்து அவன் உலகியல் ஆசாபாசங்களைத் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ள மாட்டான் அல்லது அவற்றினால் ஈர்க்கப்பட மாட்டான். அந்த பலத்தை, குறைந்தபட்ச அவசியம் எதுவோ அதற்கு மட்டுமே அவன் பயன்படுத்திக்கொள்வான்,’ என்பார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். ‘உடம்பிலிருந்து தலை வெட்டப்பட்ட பிறகு சிறிது நேரம்வரை உயிர் இருப்பதைக் காண்பிக்க ஆட்டின் உடல் அசைந்து கொண்டிருக்கிறது. அதேபோல, பரிபூரண நிலையடைந்த ஞானியின் அகங்காரம் அழிவுண்ட போதிலும், சரீர சம்பந்தப்பட்ட அலுவல்களை கவனிக்க அவ்வகங்காரத்தின் சக்தி கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. ஆனால், அவனைத் திரும்பவும் உலகத்தோடு இணைக்கக்கூடிய பலம் அதனிடம் இல்லை’ என்பது அவர் வாக்கு.

ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதிஹி பார்த்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி

ஸ்தித்வா ஸ்யாமந்தகாலேபி ப்ரஹ்மநிர் வாணம்ருச்சதி (2:72)

‘‘அர்ஜுனா, ஆசைகளை அறவே அகற்றி, எதிலும் பற்றற்று, எந்த கட்டத்திலும் அகங்காரம் கொள்ளாததாகிய இந்தத் தன்மையானது பிரம்மத்தில் நிலைபெறக் கூடியதாகும். இந்தத் தன்மையை அடைபவனுக்கு மோகம் என்ற உணர்வே இருப்பதில்லை. தன்னுடைய இறுதி காலத்தில்தான் ஒருவன் இந்தத் தன்மையை அடைகிறான் என்றாலும், அவன் பிரம்ம நிர்வாணம் என்ற மிக உயர்ந்த நிலையை எட்டுவான்.’’ கிருஷ்ணன், அர்ஜுனனிடம் ‘பிரம்ம நிர்வாணம்’ என்று குறிப்பிடுகிறாரே, அப்படி என்றால் என்ன? அது தன் உடலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத நிலை. அகமும், புறமும் எந்த உணர்வாலுமோ, எந்த உடையாலுமோ மூடப்படாத, அவ்வாறு மூடப்படாததைப் பற்றிய எண்ணமே இல்லாத நிர்ச்சலன நிலை.

கனவு, நினவு என்ற இரு நிலைப்பாட்டில் ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை இயங்குகிறது. கனவில் தோன்றும் காட்சிகள், தூக்கம் கலைந்தபின் தாமும் கலைந்து விடுகின்றன. நிஜம் போலவே தோன்றும் அத்தகைய சில காட்சிகள் துயிலெழுந்தபின் மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள முடியாதபடி மறந்து போய்விடவும் செய்கின்றன! ஆக, கனவுக் காட்சிகளை ஒரு பொருட்டாகக் கருத முடியாது.

ஆனாலும், அந்தக் காட்சிகள் தவிர்க்கப்பட முடியாதவையாகவே இருக்கின்றன! நனவில் நம்முடைய ஐம்புலன்களும் பங்குகொள்ளும் பல காட்சிகள் அரங்கேறுகின்றன. அப்படி ஒரு காட்சி நடந்தது என்பதற்குச் சாட்சியமாக அந்தப் புலன்கள் அமைகின்றன. மறந்துபோன கனவுக் காட்சிகளும், நினைவிலிருக்கும் நனவுக் காட்சிகளும் ஞானியைப் பொறுத்தவரை ஒன்றுதான்! எப்படிக் கனவுக் காட்சிகள் மறந்துபோய் விடுகின்றனவோ, அதேபோல அவன் நனவுக் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதவனாக இருக்கிறான். இப்படி கனவுக்கும், நனவுக்கும் மேற்பட்ட நிலையை ஒரு ஞானியால் எட்ட முடிகிறது. அந்த நிலைதான் பிரம்ம நிர்வாண நிலை.

சராசரி மனிதன் கனவில் தோன்றும் இனிய காட்சிகளால் சந்தோஷமடைவதும், துயரக் காட்சிகளால் துக்கமடைவதும் உண்டு. சிலபேர் தூக்கத்திலேயே சிரிப்பதும், சிலவேளைகளில் அழுவதுமாக இருப்பார்கள். இதே, சராசரி மனிதன் நனவுலகில் தனக்கு ஏற்படும் சந்தோஷ சம்பவங்களால் துள்ளி குதிக்கிறான். துயர சம்பவங்களால் துவண்டு நலிந்து விடுகிறான். ஆனால், ஞானியோ கனவுக் காட்சிகள் எப்படி தூக்கத்தோடயே போய்விடுகிறதோ அதேபோல, நினவுச் சம்பவங்களையும் மாயையின் பிம்பங்களாகவே கருதுகிறான்.

இவனுடைய ஒன்றுகுவித்த இலக்கு பரம்பொருள்தான். ஒரு தாய்க்குத் தன் குழந்தைதான் பிரதானம். அதற்காக அவள் தன் சுகங்களை, ஏன் தன்னுடைய அன்றாடப் பணிகளைக்கூட ஒதுக்கி வைக்கிறாள். அவளது ஒரே நோக்கு தன் குழந்தையின் நலன்தான். அவளுடைய அக்கறை, முழுமையான கண்காணிப்பு, உடல் திறன் எல்லாவற்றையும் அந்தக் குழந்தையின் மேம்பாட்டுக்கே அர்ப்பணிப்பாள். அவளைப் போன்றவன்தான் ஞானியும். அவன் பரம்பொருள் ஒன்றிலேயே லயித்திருக்கிறான். வேறெதிலும் அவனுக்கு நாட்டமில்லை. (‘ஸாங்கிய யோகம்' என்ற இரண்டாம் அத்தியாயம் நிறைவு பெறுகிறது. அடுத்த இதழிலிருந்து ‘கர்ம யோகம்' என்ற மூன்றாம் (அத்தியாயம் தொடரும்.)

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

Related Stories: