ஆனந்த வாழ்வருளும் ஆனித் திருமஞ்சன தரிசனம்

ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள். பொதுவாக, ஆலயங்கள் பலவற்றிலும் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். நமக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அவர்கள் ஒருநாளில் ஆறு பூஜை செய்யவதற்கு இணையாக நாம் ஆண்டில் ஆறு அபிஷேகம் நடத்துகிறோம். மற்ற இடங்களை விட சிதம்பரத்தில் விசேஷம் பத்து நாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா நடக்கும்.

 

உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் (5.7.2022) தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். நடராஜ மூர்த்தியே தேரில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருவார். தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம்புரியும் அற்புதக் காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

மங்களம் அருளும் தம்பிரான்

வைதாரையும் வாழ வைப்பவன் சிவபிரான். மங்களம் அருளும் தம்பிரான். எதிர்மறையிலும் நேர்மறையைக் காண்பவன். யாரோ ஒருவர் எவரையோ அழைத்தால், தன்னை அழைத்தானோ என்று எண்ணி வலியச் சென்று அருள் தருபவன். ஒரு பக்தர் சிவபெருமானிடம் மனம் உருகிப் பிரார்த்தித்தார்.‘‘பகவானே! தில்லை என்கிற திருத்தலத்தைக் காண வேண்டும் என்று தவமிருந்தேன். என்னால் இதுவரை முடிந்ததில்லை. அதன் பெருமையை காதால் கேட்டதில்லை. வாயால் பாடியதில்லை. விரதங்களும் நோற்றதில்லை. மகான்களின் திருவடி பணிந்ததில்லை. நல்லோரைப் போற்றியதில்லை!”  என்று சொல்லிக்கொண்டே போக, பகவான் ‘‘கவலைப்படாதே! உனக்கு பேறு நிச்சயம்” என்றாராம். பக்கத்திலிருந்த உமையம்மை ‘‘என்ன சுவாமி....அவர் எதுவும் செய்ததில்லை என்கிறார். நீங்கள் முக்தி என்கிறீர்களே!” என்று கேட்க, சிவபெருமான் சிரித்துக்கொண்டே சொன்னாராம். ‘‘தில்லை என்று ஒரு தரம் சொன்னாலே சிவபதம் தரும் நான், இத்தனை தரம் சொன்ன பின்னும் தராமல் இருப்பேனா?” பக்தன் பாடிய ‘‘இல்லை” பகவான் காதில் ‘‘தில்லை” என்று விழுந்ததாம்! உடனே நல்வாழ்வு தந்தாராம்.

 தரிசனம்

மார்கழியில் திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாளில் மதியப் பொழுதில் நடைபெறும் (நடராஜர் - பகல் வேளையில்தான் தன் கணங்கள் அனைத்தோடும்

வந்திறங்கினார்) ‘‘சித்ஸபா பிரவேசம்” எனும் பொன்னம்பலம் புகும் காட்சியே ஆருத்ரா தரிசனமும், ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் இந்த ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்களில் மிக முக்கியமானது.

ஆறுமுறை திருமஞ்சனம்

ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும். திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின் முழுமையான அருளைப் பெறலாம்.

 மனித உடலே ஆலயம் ; சான்று தில்லைக் கோயில்

மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐந்து பிராகாரங்கள் உள்ளன. மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ளநடராஜர் சந்நதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தின் மேல் தங்கக் கலசங்கள் ஒன்பதும் நவசக்திகளையும், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் 64 கைம்மரங்கள் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21,600 தங்க ஓடுகள் மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கை. 96 ஜன்னல்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும். நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மனித இதயம் உடலின் மத்தியில் இல்லாமல், இடப்புறமாக இருப்பது போல, கருவறையும் கோயிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது.

 ஒரே இடத்தில் இரண்டு ராஜாக்கள்

“கோயில்” என்று பொதுவாகச் சொன்னால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். வைணவத்தில் கோயில் என்றால் திருவரங்கத்தைக் குறிக்கும். சிதம்பரத்தில் நடராஜன். திருவரங்கத்தில் ரங்கராஜன். இவர் நடனம் ஆடுவார். அவர் பள்ளி கொண்டிருப்பார். ஆனால், திருவரங்கத்தில் முடியாதது சிதம்பரத்தில் முடியும். ஆம். ஒரே இடத்தில் நின்று கொண்டு இரண்டு ராஜாக்களையும் தரிசனம் செய்ய முடியும். ஒருவர் நடராஜா. இன்னொருவர் கோவிந்தராஜா. ஆனியில் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்.

நடராஜருக்கு திருமஞ்சனம்.

 ஞாநாகாசம்

சித் + அம்பரம் =சிதம்பரம்; சித் என்பது அறிவு; அம்பரம் என்பது வெட்டவெளி. இந்த இரண்டையும் இணைத்து ஞாநாகாசம் என்னும் பொருளுடன்  சிதம்பரம் என்று வழங்கப்படுகிறது. இதற்குப் பொன்னம்பலம் என்னும் பெயரும் உண்டு. புலிப்பாணி முனிவர் இத்தலத்தில் இறைவனை பூசித்ததால் புலியூர் என்னும் பெயரும் உண்டு. ‘‘பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே” என்பது பாடல். பூலோக கைலாசம் என்றும் இத்தலத்தைச்  சொல்வர்.

  சிதம்பரம்தான் இருதயம்

ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமாய் நின்று நாதாந்த நடனமாடுகிறார், தில்லைக்கூத்தன். ஐந்தெழுத்தின் உருவமாக விளங்குகின்ற அவன் ஐந்தொழிலை உணர்த்துகின்றான். உலகத்தை விராட் புருடன் வடிவமாகக் கொண்டால், திருவாரூர் அதன் மூலாதாரம். திருவானைக்கா கொப்பூழ். திருவண்ணாமலை மணிபூரகம். திருக்காளத்தி கண்டம்; காசி புருவத்தின் மத்தி; சிதம்பரம் தான் இருதயம். இருதயம் இயங்காவிட்டால் எதுவும் இயங்காது. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருவாகவும் அருள்பாலிக்கிறார்.

நடனத்தின் பொருள் என்ன?

தமிழகத்தின் பற்பல கோயில்களுக்குச் சென்று கட்டுரைகளை எழுதியவர் கலைஞானமிக்க திரு.பாஸ்கரத் தொண்டைமான். தில்லைக் கூத்தனின் திருநடனத்தைப் பற்றி எழுதும்பொழுது ஒரு அழகான உதாரணத்தைச் சொல்லுவார். ஒரு மேல்நாட்டு நடன மங்கை நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தினாள். அவளுடைய அபிநயமும், கால்களின் வேகமும், விரல் அசைவு முத்திரைகளும் காண்பவர்களை மயக்கின. அதில் நிறைவாக ஆடிய ஒரு அருமையான நடனம் மிகமிக அற்புதமாக இருந்தது. ஒரு பரம ரசிகருக்கு அந்நடனம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், நடனத்தின் பொருளைப்  புரிந்துகொள்ள முடியவில்லை. குழம்பினார். எப்படியாவது பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். நடனம் முடிந்தவுடன் ஒத்திகை அறைக்குச் சென்று நடனமாடிய பெண்மணியைச்  சந்தித்தார். நடனத்தைப்  பாராட்டினார். கடைசியில் கேட்டுவிட்டார். ‘‘அம்மணி! உங்கள் நடனம் அற்புதமாக இருந்தது. ஆனால், அதன் பொருள் எனக்குப் புரியவில்லை. அதனை கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.” அந்த நடன மங்கை அவரைப்பார்த்துச் சொன்னாளாம். ‘‘பொருளை வாயால் விளக்கிச் சொல்வதாக இருந்தால், நான் அத்தனை சிரமப்பட்டு ஏன் நடனமாடியிருக்கவேண்டும்?”இதே நிலைதான் ஆனந்தக்கூத்தன் அற்புத நடனத்தை

காண்பவர்களுக்கு.

Related Stories: