ஆனியின் திருமஞ்சனம்

ஆனி திருமஞ்சனம் என்றால்  இறைவனை நீராட்டுதல் என்ற பொருள் ஆகும்  எல்லா தெய்வ மூர்த்திகளுக்கும் சிறப்பான நாள் எது! சிவபெருமான், பெருமாள், முருகன் அருள்பாலிக்கும் நன்னாள். இறைவனை நீராட்டுதற்கே திருமஞ்சனம் என்று பெயர்., அலங்காரப் பிரியரான பெருமாள் புனித நீராடலேற்றலையும் திருமஞ்சனமெனக் கூறுவதுண்டு. அனைத்து வைணவத் தலங்களிலும் இது மிகவும் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது. அபிஷேகப் பிரியரான சிவனுக்கும் மிகவும் ஏற்புடைய நாள்.

பொதுவாக தட்சிணாயணம் (ஆடி- மார்கழி), உத்தராயணம் (தை-ஆனி) என இரண்டு அயண காலங்களுக்கும் தெய்வமூர்த்திகளின் சிலா ரூபங்களுக்கும் நெருங்கிய ஆன்மீக தெய்வீகத் தொடர்பம்சங்கள் பல உண்டு  என்று  கூறலாம். சூரிய, சந்திர கோள்கள் ஓட்டங்களுக்கேற்ப கோயில்களின் விமானங்கள் மூலம் கருவறைக்குள் தெய்வீகக் கதிர்களின் வீச்சுகள் அமையும். அதேபோல் பூமிக்கடியில் உள்ள நீரோட்டங்களும், ஒளி நீரோட்டங்களும் அந்தந்த அயண கதிகளுக்கேற்ப அவை  மாறுபடும். அபிஷேக நீர், கோமுக (அபிஷேக நீர் வரும் வழி) நீர், பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களும் சுயம்புத் திருமேனியிலோ, உற்சவ விக்ரஹங்களிலோ பட்டு பூமியை அடையும் போது  பூமியின் கீழுள்ள நீரோட்டங்களும், அலை, கதிர், ஒளி, ஒலியோட்டங்களும் அவற்றைப் பெற்றுப் பிரதட்சிணம் வருகையில் நம் பாதங்கள் மூலமாக நம் தேகத்தில் சேர்க்கின்றன.

ஆனி மாதம் உத்தராயணக் கடைக்காலமும் தட்சிணாயணத்தின் முதற்காலமும் சேரும் உத்தம மாதம். இரு அயண கதிகளின் கூட்டுக்கதிர்களைச் சுமந்து வருவதே ஆனி மாதம். உண்மையில் சூர்யப் பாதையில் மாற்றம் ஓரளவு ஆனியிலேயே ஏற்பட்டு விடுவதால் ஆனி மாதத்தில் இறை நீராட்டினால் ஏற்படும் தெய்வீக விளைவுகள் அற்புதசக்தி வாய்ந்தவை யாகும். ஏனெனில் பூமியினடியில் உள்ள அனைத்து வகை ஓட்டங்களும் பூரித்து நிற்கும் காலமே ஆனிமாதம். இவ்வோட்டங்கள் மாறுபடக் காரணமே தட்சிணாயண, உத்தராயணக் கலப்புக் கதிர் வீச்சுக்களாகும். இவ்வற்புத “பூரேகை” ஓட்டங்களைக் கலைத்தலாகாது என்பதினால்தான் “ஆனி அடிபோடாதே” என்ற முதுமொழி அதாவது “ஆனியில் அஸ்திவாரம் போடாதே!” என்ற பொருளில் ஏற்பட்டுள்ளது. இவ்வரிய “பூரேகைகளின்” சக்தியை நாம் பெற வேண்டுமானால் ...

*கால் விரல்களில் அடிக்கால் பாதத்தில் மருதாணியிட்டு இயன்ற அளவு, சக்தியுள்ள வரை கிரிவலம், பாதயாத்திரை, அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

*அவரவர் ஊரில் உள்ள சிவன், பெருமாள், பிள்ளையார், ஐயனார் என அனைத்துத் தெய்வ மூர்த்திகளுக்கும் ஆனித் திருமஞ்சனம் (இறைவனை நீராட்டுதல்) தனை குளத்துப்பிள்ளையார், தெருக்கோடிப் பிள்ளையார், முச்சந்திப் பிள்ளையார் என பல குடங்களில் புனித நீர் கொண்டு வந்து  அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்தல் வேண்டும்.

*பல கோயில்களின் வெளிப் பிரஹாரங்களில் பல லிங்க மூர்த்திகள், பாவைச் சிற்பங்கள், பேச்சாயி அம்மன், பிரம்மா, லிங்கோத்பவர், சண்டேச்வரர், சூரியன், சந்திரன், பைரவர், நாயன்மார்கள், நால்வர், காளி, ஐயனார் துவஜஸ்தம்ப விநாயகர் போன்ற மூர்த்திகளைச் சரிவரப் பராமரிப்பதே இல்லை. தக்க ஆலயப் பெரியோர்களின் அனுமதியுடன் ஆனித் திருமஞ்சனத்தன்று தவறாமல் அனைத்து மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்தல் ஆனியில் கிடைக்கும் பெரும் பேறாகும்.

*ஆனித் திருமஞ்சனத்தின் மகிமையால் ஏற்படும் “பூரேகைகளின்” மகத்தான தெய்வீக சக்தி அய்யர்மலை, பழநி, குன்றக்குடி, திருநீர் மலை, திருப்பதி போன்ற மலைத் தலங்களில் பல்கிப் பெருகுகின்றது.

*குறிப்பாக திருச்சி குளித்தலை அருகில் உள்ள அய்யர்மலையில் ரத்ன கிரீஸ்வரருக்குக் காவிரி தீர்த்தமே அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனித் திருமஞ்சனத்தன்று இம்மலைவாழ் ஈஸ்வரனுக்கு, தக்க ஆலயப் பெரியோர்களின் அனுமதியுடன் கடினமான மலைப் படிகளில் ஏறி, காவிரி நீரை அளிக்கும் அரிய திருப்பணியைச் செய்திடில் அரிய அனுக்ரஹங்களை எளிதில் பெற்றிடலாம்.

பல முறை முயன்றும் சரிவராத நல்ல காரியங்கள் கைகூட இது பெரிதும் உதவும். மலைத் தலங்களில் “தீயசக்திகளின் ஆகாய மிதப்பு” குறைவு என்பதாலும், மலைக்கோயிற் கருவறை விமானங்கள் நட்சத்திர, கிரஹ, சூரிய, சந்திர மண்டலப் பாதைகளுக்கு (தடங்கல்களின்றி) அருகாமையிலிருப்பதாலும் ஆனித் திருமஞ்சன “பூரேகை” சக்திகள் இங்கு அதிகமாக  பொழிகின்றன.

*ஆனித் திருமஞ்சன மகிமை சொல்லில் அடங்காதது, விரிக்கின் வியாச பாரதமாய்ப் பெருகும். ஆனித் திருமஞ்சனத்தில் உற்பவிக்கும் “பூரேகை” தெய்வீக சக்தியினை கோமுக நீர், விபூதி, மஞ்சள், குங்குமப் பிரசாதம் மட்டுமின்றி தீப, தூபங்களின் தரிசனம், முகர்தல், தொட்டு ஏற்றுதல், ஸ்பரிசித்தல் மூலமாகவும் பெற்றிடலாம். நந்தி தீபம், சூர்ய தீபம், நாகதீபம், மயூரதீபம், பஞ்சதீபம், மகாதீபம் என்ற பல வகையான தீபங்களில் ஒரு குண்டுச் செம்பில் காட்டப்படும் “தீபமே” பூரேகை சக்திகளை ஒளிப் பிழம்பில் ஏற்று நமக்கு அளிக்கின்றது. எனவே ஆனி திருமஞ்சனத்து அன்று  தீபாராதனை காட்டுகையில் கண்களை மூடிக் கொண்டு நில்லாது “தீபத்தை நன்கு (கண்ணாடியைக் கழற்றிவிட்டு) உற்றுநோக்கி தரிசிக்க வேண்டும்.  

*ஆனித்திருமஞ்சனத்தின் தரிசனம்  தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex) அகற்றி மனோதிடத்தை வளர்க்கும்.

*தாய் தந்தையரை மதியாது, அவர்கட்கு இழைத்த கொடுமைகளின் சாபங்களிலிருந்து காக்கும்.

 ஆனால் அவர்களிடம் தக்க மன்னிப்பைப் பெறுதல் வேண்டும் அல்லது இனியேனும் அவர்கட்கு முறையான தர்ப்பண பூஜை செய்தல் வேண்டும். கடினமாக உழைத்தும் பலன் தரா திட்டங்கள், வியாபார முறைகள் நன்கு நிறைவேறும்.

குடந்தை நடேசன்

Related Stories: