×

ஆனைக்காரப் பெருமானுக்கு அழகிய மாடக்கோயில்

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் “தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மீன்களே” என்று பாடுபவர் அதே பாசுரத்தின் மற்றொரு பாடலில்,
இருங்கிலங்கு திருமொழிவாய் என் தோளீசற்க்கு
எழில்மாடம் எழுபது செய்து உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மீன்களே

என்றும் கூறியுள்ளார். எட்டு தோள்களையுடைய சிவபெருமானுக்கு எழுபது மாடக் கோயில்களை கோச்செங்கணான் செய்வித்தான் என்று திருமங்கை ஆழ்வாரே செப்பியுள்ளார். திருநாவுக்கரசு பெருமானார் தம் தேவாரப் பனுவலில் செங்கணான் செய்த மாடக்கோயில்களாக எழுபதோடு எட்டு என 78 கோயில்களைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இருவர் கூற்றுகளையும் ஒப்பிட்டு நோக்கும்போது காவிரியின் இருமருங்கும் எழுபது சிவாலயங்களையும் எட்டு வைணவ ஆலயங்களையும் மாடக் கோயில்களாகச் செங்கணான் கட்டுவித்தான் என்பது அறிகிறோம்.

திருநறையூர் மணிமாடம், திருநாங்கூர் மணிமாடம், திருவழுந்தூர் மணிமாடம், திருப்பேர் நகர் (கோயிலடி) போன்று எட்டு வைணவக் கோயில்கள் செங்கணானால் கட்டப்பெற்றவையாகும். குடவாயில், திருநல்லூர், ஆவூர், அம்பல், நன்னிலம், திருப்பெருவேளூர், கீழ்வேளூர் போன்றவை எழுபது மாடக் கோயில்களான சிவாலயங்களுள் சிலவாகும். மாடக்
கோயில்கள் என்பவை மிக உயரமான மேடை மீது, பல படிகள் வழி ஏறிச் செல்லுமாறு அமைந்தவையே ஆகும். இவைகளை யானை ஏறாத கோயில்கள் என்பர்.
திருவானைக்காகோயில் செங்கட் சோழனால் கட்டப்பெற்றதெனினும் அது மாடக் கோயிலன்று. வெண்ணாவல்கீழ் நீர்த்திரளாகப் பெருமான் விளங்க எடுக்கப்பெற்றதால் அது மாடமன்று. சேக்கிழார் பெருமான்,ஞானச்சார்வாம் வெண்ணாவலுடனே கூட நலஞ்சிறக்கப்பானற்களத்துத் தம் பெருமான் அமருங்கோயில் பணிசமைத்தார்
என்பார்.

அத்தகு பெருமையுடைய திருவானைக்கா எனும் திருத்தலத்திற்குக் கிழக்காக காவிரியின் தென்கரையில் முதற் மாடக்கோயில்களாக விளங்குபவை கஜாரண்யம் எனும் அரங்கநாதபுரம் சிவாலயமும், காவிரியின் வடகரையில் திருப்பேர்நகர் எனும் கோயிலடி விஷ்ணு ஆலயமும் ஆகும். சோழர்கால கல்வெட்டுகளைத் தொகுத்து நோக்கும்போது பாண்டிய குலாசனி வளநாட்டு எயில் நாட்டில் ஆட்டுப்பள்ளி நியமம், நியமத்து ஆயிரத்தளி, சந்திரலேகை (செந்தலை), கடம்பூர், கழனிவாயில், மேல்களத்தூர், கள்ளிக்குடி, கொவ்வைமங்கலம், குசக்குடி, குனில்குடி, கூத்தமங்கலம், புகையுனிக்குடி, புறையார்சேரி, ராஜகேசரிபுரம் (இளங்காடு), இராஜேந்திரசோழ சதுர்வேதிமங்கலம், திருப்பேர், வாதராயமங்கலம் எனும் ஊர்களின் பட்டியல் காணப்பெறுகின்றது. இவற்றில் பல ஊர்களின் பெயர்கள் தற்போது மாற்றம் பெற்றுவிட்டன.

நியமத்து ஐராவதீஸ்வரர் கோயிலில் காணப்பெறும் இராஜேந்திர சோழனின் 7ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் (கி.பி. 1019) நியமத்துக் கோயிலில் உள்ள சண்டீசபெருமானுக்காக எயில் நாட்டில் உள்ள ஆனைக்காரப்பெருமானுக்குச் சொந்தமான தேவதான ஊரான வாதராயமங்கலம் எனும் ஊரிலிருந்து நிலம் அளிக்கப்பெற்றது குறிக்கப்பெற்றுள்ளது.

எனவே, எயில் நாட்டில் ஆனைக்காரப்பெருமான் என்ற பெயரில் ஒரு பெருங்கோயில் இராஜேந்திர சோழன் காலத்தில் வழிபாட்டில் இருந்தமையை அறிகிறோம். அந்த ஆனைக்காரப்பெருமான் திருக்கோயில்தான் தற்போது அரங்கநாதபுரத்தில் உள்ள கஜாரண்யேஸ்வரர் திருக்கோயில் எனும் மாடக்கோயிலாகும். கஜ ஆரோகண பெருமான் என்பதே கஜா ஆரண்யப்பெருமான் எனக் காலப்போக்கில் மருவிவிட்டது. இந்திரனுடைய யானைக்கு ஐராவதம் என்று பெயர். அந்த யானை பூஜித்துப் பேறுபெற்ற தலம்தான் ஆட்டுப்பள்ளி நியமம் எனும் நியமத்து ஐராவதீஸ்வரர் கோயிலாகும். ஆனால், சிவபெருமானின் வாகனமான யானைக்கு ஐராவணம் என்று பெயர்.

ஐராவணம் எனும் அந்த யானை தாங்குமாறு அமைந்த கோயில்தான் அரங்கநாதபுரத்து கஜாரண்யேஸ்வரர் திருக்கோயிலாகும். இக்கோயில் கருங்கற் திருப்பணியாக இல்லாமல் கோச்செங்கசோழன் காலத்திலிருந்தே செம்புறாங்கல் மற்றும் செங்கற் கட்டுமானமுடைய மாடக்கோயிலாகவே விளங்குகின்றது. கிழக்கு நோக்கி இம்மாடக்கோயில் அமைந்து அதன் வடபாரிசத்தில் கோயிலின் தீர்த்தக்குளமான வஜ்ரதீர்த்தம் அமைந்துள்ளது.

இயற்கையும் பசுமையும் சூழ்ந்த ரமணீயமான சூழலில் இம்மாடக்கோயில் காட்சி தருகின்றது. மேற்கு வாயிலே பிரதான வாயிலாகத் தற்காலத்தில் திகழ்கின்றது. உட்பிரகாரத்தில் எழில்கொஞ்சும் திருமாடம் காட்சி நல்குகின்றது. தென்புறப் படிக்கட்டுகள் வழி மேலே சென்றால் மூலவர் ஸ்ரீவிமானம் கிழக்கு நோக்கியும், அம்மன் ஆலயம் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. முன்புறம் மகாமண்டபம் இடம்பெற்றுள்ளது. திருமாடத்தை மேலேயே வலம் வரும்போது ஆலமர்செல்வரான தட்சிணாமூர்த்தியையும் வடபுறம் துர்க்கையையும் தரிசிக்கலாம்.

மாடக்கோயிலின் மூலவர் சுயம்பு மூர்த்தி மிகத்தொன்மையான வடிவம், கஜாரண்யேஸ்வரர் என்ற வடமொழி திருநாமத்தையும், சோழர் கல்வெட்டுப்படி ஆனைக்காரப்பெருமான் என்ற தமிழ்ப் பெயரினையும் பெற்றவர். திருக்காமக்கோட்டத்தில் சோழர்கால அம்பிகையின் திருவுருவம் ஒன்றும் பிற்காலத் திருமேனி ஒன்றும் வழிபாட்டில் உள்ளன. தேவியின் திருநாமம் காமாட்சி என்பதாகும். தல மரமாக வில்வமும், தல தீர்த்தமாக வஜ்ஜிர தீர்த்தமும் அதனுள் இந்திரகூபம் என்ற கிணறும் விளங்குகின்றன.

மாடக்கோயிலை வழிபட்டு கீழே வந்து திருச்சுற்றை வலம் வரும்போது கிழக்கு திசையில் காணப்பெறுவது சிவபெருமானின் களிறு ஆகும். யானையின் முன் கால்களும் தலையும் வெளியே காணப்பெறுகின்றன. யானையின் உடல் மாடக்கோயிலினுள் மறைந்தவாறு அம்மாடத்தைத் தாங்கி நிற்கிறது. ஐராவணமே இங்கு கோயிலைத் தாங்கி நிற்பதால்தான் பெருமானின் திருநாமம் யானைக்காரப் பெருமான் என்பதாக உள்ளது. ஐராவணத்தை வணங்கியவாறு திருச்சுற்றின் தென்திசை வரும்போது மேலே உள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே தல விருட்சமான ஒரு மேடையும், காஞ்சி மகா பெரியவரின் படமும் உள்ளன. இக்கோயிலுக்கு ஒருமுறை வந்த காஞ்சிப் பெரியவர் அந்த இடத்தில் யோகத்தில் அமர்ந்திருந்த காரணத்தால் அதன் நினைவாக இந்த மேடையை அமைத்துள்ளனர்.

நிருதி திக்கில் திருக்கோயிலின் கணபதியாரின் ஆலயம் உள்ளது. அங்கு மூலவராக உள்ள கணபதியார் திருமேனி முற்கால பல்லவர் காலத் திருமேனி (1500 ஆண்டு பழமை) ஆகும். கணபதிப் பெருமானின் சிரசில் உள்ள தாமரைப்பூவின் நடுவண் சிறிய சிவலிங்க உருவம் இடம்பெற்றுள்ளது. மூத்த பிள்ளையார் மிக ஒய்யாரமாக நான்கு திருக்கரங்களுடன் இடக்காலை மடித்தும் வலக்காலைக் குத்திட்டும் அமர்ந்துள்ளார். வலப்பின்கரம் ஒடித்த தந்தமும், வலமுன்கரம் மாதுளையும் இடப்பின்கரம் நெற்குஞ்சமும் தாங்க இடமுன்கரம் காலின்மீது இருத்தப்பெற்றுள்ளது. மார்பில் மிக தடித்த யக்ஞோபவிதம் எனும் புரிநூல் உள்ளது. அதில் மூன்று அலங்கார வேலைப்பாடுகள் உள்ளன. இடுப்பில் உதரபந்தம் உள்ளது. பெருமான் ஒருபுறம் சற்று சாய்ந்தவராக மிக ஒய்யாரமாகக் காட்சி தருகின்றார். பல்லவர் கலையின் உச்ச வெளிப்பாட்டை இத்திருமேனியில் நாம் காணலாம்.

திருச்சுற்றின் மேற்குத் திசையில் வள்ளி தேவசேனா சமேதரராக காட்சி தரும் சுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. அதனை அடுத்து கஜலெட்சுமி இரண்டானைகளுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் சுற்றுக்கோயில் உள்ளது. வடபுறத் திருச்சுற்றில் தெற்கு நோக்கியவாறு சண்டீசர் ஆலயம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. இங்கு திகழும் சண்டீசரும் கணபதியார் போன்றே பல்லவர்காலத் திருமேனியாகக் காட்சி நல்குகிறார். ஜடாபாரம், காதுகளில் குழை, கழுத்தில் அணிகலன், தடித்த பருமனான புரிநூல், வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டவாறு சுகாசனத்தில் இரு கரங்களுடன் அமர்ந்துள்ளார். இடக்கையை தொடைமீது இருத்தியும், வலக்கையில் மழுப்படை (கோடாலி)யை ஏந்தியும் உள்ளார். இடுப்பாடை அழகுக்கு அழகூட்டுகின்றது. இப்பரிவார தெய்வமும் இவ்வாலயத்தின் தொன்மைக்குச் சான்றாய்த் திகழ்கின்றது.

அரங்கநாதபுரத்தில் உள்ள விஷ்ணு ஆலயம் லட்சுமிநாராயணப் பெருமானுக்காக எடுக்கப்பெற்றதாகும். தொடைமீது மகாலட்சுமியை அமர்த்திய கோலத்தில் பெருமான் காட்சி நல்குகின்றார். பெருமானுக்கு முன்பான ருக்மணி சத்தியபாமா சமேதரரான நர்த்தனகிருஷ்ணன் உள்ளார். பெருமானுக்கு பின்புறம் அழகிய மரம் கிளைகளுடன் உள்ளது. பத்ரபீடத்தில் பெருமானின் தூக்கிய திருவடிகளுக்குக் கீழாக நாராயண தீர்த்தரின் திருவுருவம் சிறிய அளவில் காணப்பெறுகின்றது. நாராயண தீர்த்தர் வாழ்ந்த வரகூர் அரங்கநாதபுரத்திற்கு அருகமைந்த திருவூரே.

வெண்ணாற்றிலிருந்து பிரியும் பிள்ளை வாய்க்காலின் வடகரையில் உள்ள பாலவிநாயகர் கோயிலில் மிகப் பழமையான முக்குடை பகவான் எனும் மகாவீரரின் சிற்பத்தை இவ்வூர் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பத்மாசனத்தில் அமர்ந்துள்ள மகாவீரர் மடிமீது திருக்கரங்களை வைத்தவாறு யோகநிலையில் காணப்பெறுகின்றார். தலைக்கு மேலே ஒன்றின்மீது ஒன்றாக மூன்று குடைகள் உள்ளன. அழகிய திருமேனி. சோழர் காலத்தில் சமயப் பொறையுடன் இவ்வூர் திகழ்ந்துள்ளது. அரங்கநாதபுரம் எனும் இவ்வூர்ப்பெயர் விஜயநகர அரசு காலத்தில் ஏற்பட்டதாகும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Tags : Lord Anaikara ,
× RELATED தீராத குடும்ப கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு..!!