×

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே

“மா” என்ற சொல்லால் உமையுடன் உடனான சிவபெருமானையும் இணைத்து மாமரத்தின் கீழ் காஞ்சியில் எழுந்தருளி இருக்கும் காமாட்சியையே சொல்கிறார் என்பதை “ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு”-57 “பாசாங்குசமும் கரும்பு வில்லும் அங்கை சேர்த்தாளை”- (நூற்பயன்) என்ற அந்தாதி வரிகளால் நன்கு உணரலாம். மேலும், ஸ்ரீசக்ரத்தின் மேலேதான் உமையம்மை எழுந்தருளியிருக்கிறாள். ``மா’’ என்ற சொல்லால் உலாத்திருமேனியாகிய பாலாம்பிகையையும், கல் திருமேனியாகிய அபிராமியையும் அரூபமாய் அமைந்திருக்கிற காமாட்சிக்கான யந்திரத்தையும் குறிப்பிடுகிறார். இது உமையம்மையின் அருவ, உருவ, அருவுருவ திருமேனியையும் குறித்தது.

மலர்

சக்தி உபாசகர்கள் மூன்று வகையில் உமையம்மையை வழிபடுகிறார்கள். ஒன்று உடலுக்குள் உமையம்மை இருப்பதாக தியானிப்பது, உடலுக்கு வெளியே இருப்பதாக தியானிப்பது, மற்றொன்று உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் தியானிப்பது, இம்மூன்றையும் மலர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். மாந்திரீகம், யோகம், பூஜை என்ற மூன்றையும் மலர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடுகிறார். உடலின் உள் (உள்ளத்தின் உள்) மூலாதாரம், சுவாதிஸ்டானம் போன்ற ஆறு ஆதாரங்களில் உமையம்மையை 51 எழுத்துக்களாக தாமரை மலர் வடிவில் தியானித்து மலரச்செய்வதையே ``மலர்’’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இதை ``கஞ்சமோ என்தன் நெஞ்சகமோ’’-20 என்பதனால் நன்கு அறியலாம்.

இது உபாசனை கலைச்சொல். மலர் என்றால் பதுமை என்பது பொருள். வெளியில் பதுமையை வைத்து வழிபடுவது ஒருவகை பூஜை. மேலும், மலர் என்பதற்கு பூ என்பது பொருள். இந்த இடத்தில், மலர் இதழ்களை தன்னகத்தே கொண்ட ஸ்ரீசக்ர வடிவத்தை குறிப்பிடுகிறார். உமையம்மையை தாமரை வடிவத்தில் வழிபடுவதும் உண்டு. இதைப் பலிபீடம் என்பர். உள்ளும் வெளியுமாகிய பூசனையை யோகம் என்பர். யோகத்தில் மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தும், வெளியில் விட்டும், உள்ளேயிருத்தியும், பயிற்சி செய்வர். அந்த பயிற்சியில் எழுத்துக்களை எண்ணி நாவசையாமல் மனதினால் உச்சரித்து உமையம்மையை மந்திர வடிவில் தியானிப்பர். இந்த மூன்றையும் இணைத்து பனி-மா-மலர் என்கிறார்.

இதில் ``பனி’’ என்பது பிந்து என்கிற வட சொல்லின் பொருளில் பயன்படுத்துகிறார். ஸ்ரீசக்ரத்தில் பிந்து (பனித்துளி) வடிவில் எழுந்தருளியிருக்கக்கூடிய காமேஷ்வரி காமேஷ்வரனை உருவமாக மனதில் எண்ணி சோடஷாக்ஷரியை 5,6,4 என்கின்ற மாத்திரை அளவாக பிரித்து மூச்சுப்பயிற்சி செய்வதற்குரிய மந்திரத்தையே “பனிமா மலர்” என்று மூவகை பூசை
முறைகளையும் குறிப்பிடுகிறார்.

பாதம்

``பாதம்’’ என்ற சொல்லால் இங்கு பாதச் சிறப்பையே சூட்டுகிறார். அபிராமி, பாலாம்பிகா சமேத காலசம்ஹார மூர்த்தி, ஸ்ரீசக்ரத்தில் எழுந்தருளியுள்ள காமேஸ்வரி காமேஸ்வர் இம் மூவருடைய பாதத்தையே பாதம் என்கிறார்கள். அதை இணைத்தே “பனி மா மலர்ப் பாதம்” என்கிறார்கள். இந்த மூவர் பாதத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதை ஒவ்வொன்றாய் இனிக் காண்போம். அபிராமியினுடைய பாதம் இப்பூவுலக வாழ்வில் மிக உயர்ந்த அரசபோகத்தை தரும் ஆற்றலுடையது. பூவுலகத்தில் மானுடர்களில் அரசனைவிட உயர்ந்த ஆற்றலும் அனுபவமும் வேறு யாருக்கும் இல்லை. அதனாலேயே ராஜயோகம் என்பர். இது இன்றும் வழக்கில் உள்ளது. மிகுந்த இன்பத்தை தரக்கூடிய பண்புடையது.

இதை “ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு”-(39) என்று அபிராமியின் பாதச்சிறப்பை கூறுகிறார். திருக்கடையூரை பொறுத்தவரை காலசம்ஹார மூர்த்தியினுடைய பாதமானது மரணத்தை தடுத்து இளமையை அளித்து என்றும், வாழக்கூடிய பண்பினை தரக்கூடியது. இன்றும் திருக்கடையூரில் 60ஆம் கல்யாணம் நடைபெறுவதைக் கொண்டு அறியலாம். இத்தகைய சிறப்பையே பனிமாமலர் பாதம் என்கிறார். “ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே”- (19) யந்திர வடிவில் உள்ள காமேஷ்வரி உடனாய காமேஷ்வரன் என்ற இருவரின் பாதத்தையே “பனிமாமலர் பாதம்” என்கிறார்கள். இவ்விருவரின் பாதமானது உபாசகனுக்கு ஞானத்தைத் தரும்.

வைக்க

இப்பதத்தால் தீட்சையையே குறிப்பிடுகிறார். குருவோ தெய்வமோ சீடனின் தலைமேல் பாதம் வைத்து சீடனுக்கு ஞானத்தை அளிப்பதற்கு செய்யும் செயல்பாடே தீட்சை. அந்த தீட்சையை பெறுவதற்காகவே அபிராமிபட்டர் இறைவனிடம் வேண்டுகிறார். தீட்சை என்பது மந்திரத்தை பெறும் செயலின் பெயர் என்றாலும் சரீர பாவத்தை கெடுத்து ஆத்ம பாவத்தை அளித்து இறை அருளை சீடன் அனுபவிக்கச் செய்யும் செயலாகும். ஒரு விளக்கிலிருந்து இன்னும் ஒரு விளக்கை ஏற்றுவது போல ஏற்றிய இடத்தில் சுடர் குறையாது ஏற்றப்பட்ட விளக்கிற்கு சுடரின்
பண்பு எந்த விதத்திலும் குறைவடையாது முழுவதுமாய் வருவது போல, குருவினிடத்தில் சிறப்பாகவும் தெய்வத்தினிடம்   இயல்பாகவும் உள்ள தெய்வீக அருள்சக்தியானது சீடனுள் பதியும் இதையே அபிராமிபட்டர்;
     
“புதுப் பூங்குவனைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி
நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து
தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி
நம் சென்னியின் மேல் பத்மபாதம்
பதித்திடவே” - 41
 
என்பதிலிருந்து “பனிமா மலர் பாதம்
வைக்க” என்று குறிப்பிடுகிறார்.
“மாலினும் தேவர் வணங்க நின்றோர்”

“மால்” என்றால் மகாவிஷ்ணு “தேவர்” என்றால் பிரம்மா முதலானவர்கள். “வணங்க” என்றால் வழிபாடு செய்து “நின்றோன்” எங்கு பார்த்தாலும் பரவி மறைந்திருக்கும் சிவபெருமான், சிற்றுருவாய் வெளிப்பட்டு நிற்றலையே “நின்றோன்” என்று சிவபெருமானையும் அவருடன் இணைபிரியாமல் நிற்கும் உமையம்மையையும் குறிப்பிட்டார்.சைவத்தை பொறுத்தவரை இறைவனருளால் இயம்பப்பட்டு வழிபாட்டுமுறையை விளக்கி கூறுவது ஆகமங்களே. அந்த ஆகமங்களில் வழிபாட்டைப் பற்றிய “தசாங்கம்” என்ற பத்துவிதமான பகுதிகள் விளக்கப்படுகிறது. பூசையை தசாங்கம் அறிந்து செய்ய வேண்டும் என்கிறது ஆகமம்.

அவையாவன 1.) குரு - (சமயக்குரவர்), 2.) யத்னம் - (முயற்சி), 3.) தேவதா -( அணங்கு), 4.) ரூபம் - (வடிவம்), 5.) மந்திரம் - (மறை, அட்ஷரம்) 6.) காலம் - (பொழுது),
7.) பத்ததி - (செய்முறை), 8.) திரவ்யம் - (பொருள்) 9.) பிரயோஜனம் - (பயன்), 10.) அனுகிரஹம் - (அருள்). அதை விளங்கிக் கொள்வது இப்பாடலின் செறிவை நாம் உணர உதவும். ஒவ்வொரு வழிபாடும் எந்த தேவதையால் சொல்லப்பட்டதோ அல்லது அங்கீகரிக்கப்பட்டதோ அந்த வழிபாட்டிற்கு அவர்களே அதிதேவதை எனப்படுவர். அதாவது, சைவத்தில் சதாசிவம், சாக்கத்தில் உமையம்மை என்றவாறு அறிந்து கொள்ளவேண்டும். இந்த தேவதைக்கு அடுத்தாக தேவதை சொல்லி கேட்டவர்களே முதல் குருவாக அங்கீகரிக்கத் தக்கவர்கள். அந்த வகையில் உமையம்மை உபதேசிக்க முதலில் கேட்டு அதை நடைமுறைபடுத்தி அனுபவசாத்தியப்படுத்தியவர் ``மால்’’ என்று அழைக்கப்படும் “மகாவிஷ்ணுவே” அவருக்குரிய இந்த சிறப்பை எடுத்துக் காட்டவே “மாலினும்” என்ற வார்த்தையை குறிப்பிட்டார்.

தன் முயற்சியால் இறைவன் மீது அன்பும், குருவின் மீது மதிப்பும், சாத்திரம் சார்ந்த அறிவும் தேவதைக்கு அமைக்கப்பட்ட இறைதிருமேனி பிரதிமையை குறித்த செயல்பாடும், இடை
விடாது செய்யும் ஜபம் எனும் செயலும் தன் முயற்சியால் மனம், வாக்கு, காயம், அறிவினாலும் செய்யதக்கது. உமையம்மையின் வடிவமானது கேட்கப்படும் வரத்திற்கு தக்கவாறு ஆகமங்
களில் நாற்பத்திமூன்று மூர்த்தங்களுக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. நாற்பத்திநாலாவதாக சிவபெருமானுடன் இணைந்த ஒரே உருவமாக திகழ்வதையே பட்டர் இங்கு பைரவி பஞ்சமி பாசாங்குசை (77) நாயகி, நான்முகி, நாராயணி, (50) என்ற பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களால் நன்கு அறியலாம்.

ஒவ்வொரு பெயருக்கும் உரிய வடிவங்கள் சிற்ப சாத்திரத்தில் குறிப்பிடப்படுள்ளபடி கரங்கள், அமர்தல், நிற்றல், போன்ற நிலை அணியும் அணிகலன், கையில் தரிக்கும் ஆயுதம், கருவி, மலர், வண்ணம், ஆற்றல், குணம், போன்றவைகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்ஷரத்தையே (எழுத்துக்கள்) ஓர் எழுத்து ஈர் எழுத்து என்ற எழுத்துக்களை இணைத்து தொடர்ந்து உச்சரிக்க வேண்டிய எழுத்துகள் எத்தனை, அதற்குரிய அதிதேவதை, யந்திரத்திரத்தில் எழுத வேண்டிய முறை, உடல் உறுப்புக்களாகத் தியானிக்க வேண்டிய எழுத்து இவைகளைப் பற்றி மிக விரிவாக சாத்திரங்கள் கூறுகிறது. குறுக்காக, நெடுக்காக, பிரணவம், கீலகம், சக்தி, என்று பல்வேறு கலைச்சொற்கள் உள்ளன.

இவற்றை முற்றிலும் உணர்ந்து உச்சரித்து பயன் பெறுவதையே ``மந்திரப் பிரயோகம்’’ என்கின்றனர். “மன்னியது உன் திருமந்திரம்” - (6) என்பதனால் அறியலாம். இறைவனை வழிபடுவதற்குச் சிறப்பான காலங்கள் உண்டு. மனிதனின் உடல் சார்ந்து குழந்தைப் பருவம், பால பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம். உள்ளம் சார்ந்த காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் போன்ற தீயகுணங்கள் நீங்கிய காலம் அறிவு சார்ந்த சாத்திரங்களின் விருப்பமும், நற்குணங்களின் தோற்றமும், புறக்காலத்தினால் வரும் மாற்றமும் காலம் எனப்படுகிறது. தேவதைகளை உபாசனை செய்வதற்குரிய காலம் அறிந்து வணங்க வேண்டும் என்பதை அது வெவ்வேறு பலன்களை தருவதை கொண்டு உணரப்படுகின்றது. இதையே பட்டர் “யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த சேமம்”(73) என்பதனால் அறியலாம்.

பூசனை பொருள்கள் பூசனைக்குரிய
பிரதிமை, அவற்றைக் குறித்து செய்ய வேண்டிய

செயல்கள் என்பதைத் தெளிவாக அறிய வேண்டும். உதாரணமாக, பாலை அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனத்தை பூச வேண்டும். வேட்டியைக் கட்ட வேண்டும். எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிவிக்கும் ஆகம நூல்களின் வழி மனம், வாக்கு, காயத்தை கட்டுப்படுத்தி ஞான சாத்திரங்களின் வழி செயல்படுவதையே பூசனை என்கிறார்கள்.

இதையே “பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே”(6) என்கிறார் பட்டர். பூஜை பொருட்கள் சந்தனம், கற்பூரம், மலர், நீர், மந்திரம், உணவுப்பொருள் இவற்றைப் பயன்படுத்தி பூசனை செய்வது, எந்த சுவாமிக்கு எந்த மலர், எந்த வண்ணம் பிடிக்கும் பிடிக்காது என்பதை அறிந்து பூசனை செய்வது, இதை “தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்” - காப்பு என்பதனால் அபிராமிக்கு என்ன மலர் பிடிக்கும் என்பதைச் சூட்டுகிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags : Abirami Andadi ,Shakti ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...