×

ஆச்சாரிய பக்தியின் எல்லை?

வைணவத்தில் பெருமாளை முதல் நிலையிலும், பெருமாளை காட்டிக்கொடுத்து, ஆன்மீக உணர்வை ஊட்டும் குருவாகிய ஆச்சாரியனை நிறைவு நிலையிலும் (சரம நிலை) வைத்து வணங்குவது வழக்கம். ஆச்சாரிய அபிமானம் மட்டுமே ஜீவனுக்கு நிறைவு நிலை என்பது வைணவத்தின் அசைக்க முடியாத கோட்பாடு. அந்த அடிப்படை கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சில பெரியவர்கள் வைணவத்தில் உண்டு. அதில் ஒருவர்தான் இராமானுஜரின் சீடரான வடுக நம்பிகள். வடுக நம்பிகள் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில், கர்நாடகாவில் உள்ள சாளக்கிராமம் என்னும் ஊரில் அவதரித்தவர். இவருக்கு இராமானுஜரின் அறிமுகம் எப்படிக் கிடைத்தது என்பதற்கு சுவையான வரலாற்று சம்பவம் உண்டு.

 ஸ்ரீரங்கத்தில் அவர் எழுந்தருளியிருந்த பொழுது, சில பிரச்சனைகள் ஏற்பட்டன. இராமானுஜரின் உயிருக்கு ஆபத்தான அரசியல் சூழல் இருந்தது. அதனால் அவர் திருவரங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேல்நாடு என்று அப்போது சொல்லப்பட்ட கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டை எனப்படும் திருநாராயணபுரம் சென்றார். அக்காலத்தில் அங்கு வேற்று மதம் செல்வாக்கோடு இருந்தது. அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் போன்ற ஊர்களில் இராமானுஜருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. அப்பொழுது அவருடைய பிரதான சீடரான முதலியாண்டானை அங்கிருந்த ஒரு குளத்தில், பகவான் ஸ்ரீமன் நாராயணனை நினைத்துக்கொண்டு,  திருவடி நனைக்கச் சொன்னார்.

அடுத்தநாள் அதில் நீராடிய ஊர்க்காரர்கள் ஏதோ ஒரு புத்துணர்வு தங்கள் உடலில் பிரவேசிப்பதைக் கண்டனர். நேற்றுவரை எதிர்த்த இராமானுஜர் மீது அவர்களை அறியாமலேயே பக்தி பிறந்தது. அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் தான் ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி. இவர் இராமானுஜரிடம் பூண்ட ஆசார்ய பக்தி மிக மிக வித்தியாசமானது. இராமானுஜரிடமிருந்து இவர் வைணவத்தின் உயர் நிலையான ஆச்சாரிய பக்தியைத் தெரிந்து கொண்டார்.

சதாசர்வகாலமும் அவர் தம்முடைய ஆச்சாரியனையே நினைத்துக் கொண்டு ஆச்சார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். பெருமாளுக்கு ஆராதனம் செய்வதை விட, தினமும் இராமானுஜரின் பாதுகைகளுக்கு திருவாராதனம் செய்வர். இவருடைய பக்திக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.ஒரு நாள் ஸ்வாமி இராமானுஜர் வெளியூர் யாத்திரை புறப்பட்டார். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் தம்மை கவனித்துக்கொள்ள வடுக நம்பியிடம் சொன்னார். இராமானுஜர் தினமும் பூஜை செய்யும் பெருமாளை பாதுகாப்பாக எடுத்து வரச் சொன்னார். வடுக நம்பி, இராமானுஜர் தினமும் பூஜை செய்யும் திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் தினமும் பூசித்து வந்த பாதுகைகளையும் சேர்த்து மூட்டை கட்ட, அது கண்டு கோபம் கொண்ட இராமானுஜர், “நம்பீ! என்ன காரியம் செய்தீர்!” என்று உரத்த குரலில் கேட்க, வடுக நம்பி அவருக்கு பதில் சொன்னார்.

 “என்ன சுவாமி, என்ன தவறு செய்தேன்?”
“நீ மூட்டை கட்டி வைத்து இருக்கிறாயே. அதில் அடியேன் பூஜை பெருமாளோடு அடியேன் பாதுகைகளையும் சேர்த்து மூட்டைகட்டி அபச்சாரம் செய்கிறாயே, இது தவறல்லவா? இப்படிச் செய்யலாமா?” என்றார்.தேவரீர் பூஜை செய்யும் பெருமாளோடு அடியேன் பூஜை செய்யும் பெருமாளையும் சேர்த்துத் தானே வைத்திருக்கிறேன் இதில் என்ன தவறு?” என்றார் வடுக நம்பி.
“இரண்டையும் சேர்த்து வைப்பது அபசாரமல்லவா? முதலில் பாதுகைகளை எடு?”

“ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாளுக்கு என்ன குறை? உங்களுக்கு உங்கள் திருவாராதன பெருமாளிடம் இருக்கும் அபிமானத்தை போலத்தான் அடியேனுக்கும் என்னுடைய திருவாராதனப் பெருமாளிடம் இருக்கிறது” என்றாராம்.

இராமானுஜர் எப்பொழுது ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளை தரிசனம் செய்யச் சென்றாலும், வடுக நம்பிகளும் செல்வர். இராமானுஜர் மணிக்கணக்காக, ஸ்ரீரங்கம் கோயில்  ரங்கநாத பெருமாளை கண்கொட்டாமல் பார்க்க, அந்தப் பெருமாளை, அணுவணுவாக ரசிக்கும் ராமானுஜரின் அழகை வடுக நம்பிகள் ரசிப்பார். ஒரு நாள் வடுக நம்பிகளிடம் “இராமானுஜர் பெருமாளின் கண்ணழகைப் பார்த்தாயா?” என்று கேட்க, “பார்த்தேன்.. பார்த்தேன்... ஆனால் நம் ஆச்சாரியனுடைய கண்ணழகைக் கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்காது” என்ற பொருளில்,

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என்
அமுதினை,
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!

என்ற பாசுரத்தைச் சொல்லிஅதில் கடைசி வரியான “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!” என்ற வரியை, மிக அழுத்தமாக இராமானுஜரின் கண்ணழகை உற்றுப் பார்த்துக்கொண்டே சொன்னாராம். இதன் பொருள் என்னவென்றால், என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (ராமானுஜரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது) இராமானுஜர் மிகக்கடுமையாக ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. பல பணிகளுக்கு நடுவிலே அவர் சரியாக உணவு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அவர் உடல்நிலை தளர்ந்தது. அதனால் தினமும் அவருக்கு மஞ்சள் போன்ற மருத்துவ பொருள்களைப் போட்டு, தொண்டைக்கும் உடலுக்கும் இதமான பால் காய்ச்சி தரும்
பணியைச் செய்து வந்தார் வடுக நம்பி.

ஒரு நாள் வடுக நம்பி , திருமடைப்பள்ளியில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது திருவரங்க உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் திருவீதி வலம் வந்து கொண்டிருந்தார். இராமானுஜரின் மடத்து வாசலில் பெருமாள் வீதிவலம் சற்று நேரம் நின்றது. இராமானுஜர் பெருமாளை சீடர்களுடன் சேவித்தார். அப்பொழுது வடுக நம்பி இல்லாததைக் கண்டு, ‘‘வடுக நம்பி, இங்கே வா.. நீயும் பெருமாளை சேவிக்க வேண்டும்” என்று அழைக்க, உள்ளேயிருந்து வடுக நம்பி வெளியே வராமல்,

“அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” குரல் கொடுத்தாராம். அதனால்தான் வைணவத்தில் எல்லையற்ற ஆச்சாரிய அபிமானம் கொண்டவர்களை வடுக நம்பியோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இராமானுஜர் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி, தன்னுடைய சொந்த ஊரான சாளக்கிராமம் வந்து இராமானுஜரின் கொள்கைகளை பலருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார். வழக்கம்போல இராமானுஜரின் பாதுகைகளுக்கு தினமும் ஆராதனை செய்து அவருடைய திருவடி நிலைகளை அடைந்தார். வடுக நம்பி பல நூல்களை எழுதி இருக்கிறார்.

அவர் எழுதிய அத்தனை நூல்களும் பெருமாளைப் பற்றியதல்ல; பெருமாளை தனக்கு காட்டிக்கொடுத்த தன்னுடைய குருவான இராமானுஜரைப் பற்றிய நூல்களே ஆகும். அவர் எழுதிய நூல்களில் “யதிராஜ வைபவம்” மிகச்சிறப்பான நூலாகும். அதில் இராமானுஜரின் பெருமையை மிக அற்புதமாகப் பாடியிருப்பார். இது தவிர அவர் இராமானுஜரைப் பற்றி எழுதிய நூல்கள்:

1. இராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்,
2. இராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி.
 வடுக நம்பியின் தனியன்:-ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே.

பாரதிநாதன்

Tags :
× RELATED சுந்தர வேடம்