×

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்..

?என்னுடைய பிறந்த தேதி மற்றும் மாதம், வருடம் மட்டுமே எனக்குத் தெரியும். எந்த நேரத்தில் பிறந்திருக்கின்றேன் என்பது தெரியாது. மேலும், என்னை எடுத்து வளர்த்தவர்களுக்கும் அது தெரியாது. எனக்கு இருபத்தாறு வயது ஆகிறது. நான் எந்த தொழில் செய்யலாம்? எதிர்காலம் எப்படியிருக்கும். கூறுங்கள்.  
 - சரவணன், திருநெல்வேலி.

நீங்கள் 16ம் தேதி பிறந்திருக்கிறீர்கள். மூலம் நட்சத்திரம், தனுசு ராசியாகும். செஞ்சிவப்புச் சூரியனான ஒன்று என்ற எண்ணும், குளுமையும் அழகும் நிரம்பிய சுக்கிரனும் இணைந்த அமைப்பைக் காட்டுவதே 16 என்ற எண்ணாகும். இதில் சூரியன் சுக்கிரனை ஆக்ரமித்து ஆட்கொள்கிறது. ஆனால், சுக்கிரன் அழியாமல் கேது என்ற ஏழாம் எண்ணைக் குறிக்கும் ஞானகாரனாக தன்னை வெளிப்படுத்துகிறது. எத்தனை சொத்து, சுகங்கள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி தேடலும், தவிப்புமாக இருப்பீர்கள். பத்து குடம் பாலூற்றி பலமணிநேரம் ஆராதனை செய்வதைவிட, பத்து நிமிடம் ஆத்மார்த்தமாக அமர்ந்து தியானிப்பதே சிறந்தது என்று நினைப்பீர்கள்.ஆத்மகாரகன் என்றழைக்கப்படும் சூரியனான ஒன்றின் ஆற்றலும், காதலுக்கும், காமத்திற்கும், கற்பனைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் சுகபோகமும் இணைந்திருக்கும் அமைப்பில் பிறந்தவர்கள் நீங்கள்.

இது இல்லறத்தோடு ஒட்டிய ஞானத்தை குறிக்கும் ஒரு அம்சமாகும். கோபுரத்தின் உச்சியில் அமர்ந்தாலும் தினமும் காய்கறி கொடுக்கும் தொழிலாளியை மறக்க மாட்டீர்கள். ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்யும்போது அவரின் எதிர்மறையான விஷயங்களைச் சொல்லிவிட்டு, பிறகு இதெல்லாம் சேர்ந்ததுதான் உலகம் என்று ஞானத்தன்மையோடு பேசி முடிப்பீர்கள். பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் தொடான் அதுபோல எதிலும் திருப்தியடைய மாட்டீர்கள். சூரியனும் சுக்கிரனும் இணைந்து இருப்பதால் பெரிய மனிதர்களுக்குரிய ஈர்ப்புத் தன்மை இருக்கும். நிர்வாகத் திறன் இருந்தாலும் எதிலேயும் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பீர்கள். தன்னை முதலில் ஜாக்கிரதைப் படுத்திக்கொண்டு பிறகுதான் வேலையில் இறங்குவீர்கள். திருமணத்தில் தாமதம் ஏற்பட்டு முடிவோருக்கு சற்று நல்ல வாழ்க்கை அமையும். கூட்டுக் குடும்பமாக இருப்பதையே  விரும்புவீர்கள். சம்பளம் தடையில்லாமல் கிடைக்கும் இடமாகப் பார்த்து வேலையில் அமர்வீர்கள். வேலை விஷயத்தில் ரிஸ்க் எடுக்கமாட்டீர்கள். நடுவயதில் 45, 46, வயதுகளில் சுயமாக முதலீடு செய்வீர்கள்.

தனுசுக்கு அதிபதியான குருவையே போராட்ட குரு என்று தனித்துச் சொல்வார்கள். சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்ட ஏகலைவனைப்போல பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் புத்திசாலிகளாகவும் விளங்குவீர்கள். மூலம் நட்சத்திரம்தான் தனுசு ராசியிலேயே மிகவும் சென்ஸிடிவ்வானதாகும். அதேசமயம் சின்சியராகவும் இருப்பீர்கள். அலுவலக வேலை பாதிக்காத அளவுக்கு சொந்த வேலையை அமைத்துக் கொள்வீர்கள். இதுவே வியாபாரமெனில், உரக்கடை, பூச்சி மருந்து, பெட்ரோல், டீசல், அரிசி மண்டி, பருப்பு மண்டி, மெடிக்கல் ஷாப், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஈடுபடுவது சிறந்தது. தன்னைச்சுற்றி நிகழும் அனைத்து சம்பவங்களிலும் தானும் இடம்பிடிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள்.

மற்றவர்களின் அந்தரகங்களை அறிந்து கொள்வதில் அலாதி ஆர்வம் காட்டுவீர்கள்.  1,10,19,9,18,27 போன்ற தேதிகள் உங்களுக்கு ராசியானது.  அரசுத் துறையினர் எனில்  கதர் கைத்தறி துறை, வன விலங்குகள் சரணாலயம், அரசு விதை நெல் ஆராய்ச்சி போன்ற துறையில் வேலைக்கு முயற்சித்தால் நல்லது. உங்களின் வேலை ஸ்தானத்தை பத்தாம் வீட்டிற்கு அதிபதியான கன்னி புதன்தான் நிர்ணயிக்கிறார். எனவே, பொதுவாகவே பெருமாளை வணங்குவது மிகவும் நல்லது. ஆனாலும், திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளையும், தாயார் மகாலட்சுமியையும் வணங்குங்கள். மூலவர் பக்தவத்சலன் நெடிதுயர்ந்து நிற்கிறார். இத்தல தாயாரை எல்லோரும் என்னைப் பெற்ற தாயே எனும் பாவனையில் வணங்குவார்கள். இந்த பக்தவத்சலன் பத்தராவி பெருமாள் என்றும் போற்றப்படுகிறார். இத்தலம் சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் பாதையில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி