×

கல்வி தரும் தலங்கள்

கல்வி ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமானது. கல்வி அறிவு இருந்தால் தான், எதிர்காலத்தில் அந்த மாணவன் தன் கால்களில் சொந்தமாக தன் வாழ்க்கையை பயணிக்க முடியும். ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்விக்காகவே பல கோயில்கள் அமைந்துள்ளன. அதற்காக படிக்காமல் கோயில்களுக்கு மட்டுமே சென்றால் கடவுள் உங்களை காப்பாற்றமாட்டார். பாடம் படிக்க வேண்டும் என்ற பாசிட்டிவிட்டி எண்ணங்களை இந்த ேகாயில்கள் நம்முடைய மனதில் ஒரு தன்னம்பிக்கையினை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட கோயில்கள் மற்றும் வரமளிக்கும் கடவுள்கள் பற்றி இதில் பார்க்கலாம்.

படிப்பு வரம் தரும் பரிமுகன்


பிரளயம் முடிந்தபின் திருமால் தன் நாபிக் கமலத்திலிருந்து நான்முகனைப் படைத்து, அவனுக்கு நான்கு வேதங்களையும் முறையாக உபதேசித்து, புது பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்குமாறு ஆணையிட்டார். ஒரு சமயம் திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளிலிருந்து மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் தோன்றினர். திருமாலிடமிருந்து தோன்றிய ஆணவத்தில், தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். பிரம்மா திருமாலிடம் முறையிட திருமால் குதிரை முகத்துடன் தோன்றி அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு நான்முகனிடம் தந்தார்.

மது, கைடபரால் பொலிவை இழந்த வேதங்கள், பரிமுகக் கடவுளாகிய ஹயக்ரீவரின் மூச்சுக் காற்றால் மீண்டும் புனிதம் பெற்றன. ஆனாலும் அசுரர்களை வீழ்த்திய பின்னும் ஹயக்ரீவர் உக்ரமாக இருக்கவே, அவரை சாந்தப்படுத்த திருமகள் அவரது மடியில் வந்து அமர்ந்தாள். அந்த நிலையில் அவர் லட்சுமிஹயக்ரீவர் என வணங்கப்பட்டார். வேதங்களை மீட்டதால் கல்விக் கடவுளாக வணங்கப்படும் ஹயக்ரீவருக்கு புதுச்சேரியில் ஓர் ஆலயம் உள்ளது. மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்தி அவர் இங்கு அருள் பாலிக்கிறார்.  

கருவறையில், ஹயக்ரீவ மூர்த்தியின் இடது கை தாயாரையும். தாயாரின் வலது கை எம்பிரானையும் அணைத்த வண்ணம் உள்ளன. இவர்களை தரிசனம் செய்தால் தம்பதிகளுக்குள் ஏற்படும் ச்பிரச்னைகள் விலகுகின்றன. மூவரின் கீழே சக்தி வாய்ந்த யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. படிப்பில் மந்தமாக உள்ளவர்களும் பேச்சுத் திறன் குறைபாடு உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து பெருமாளை தரிசித்து குறைகள் நீங்கப் பெறுகின்றனர்.புதுச்சேரி முத்தியால்பேட்டையில், ராமகிருஷ்ணா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

கல்வி வரமருளும் முப்பெருந்தேவியர்


சென்னை-பழைய மாமல்லபுரம் சாலையில், தாழம்பூர் கிருஷ்ணாநகரில் உள்ளது, திரிசக்தி அம்மன் திருக்கோயில். மூன்று கருவறைகளில் ஞான சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி ஆகிய மூன்று சக்திகளும் தனித்தனியாக கொலுவிருந்து, ஒரே கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு. இங்குள்ள மூன்று தேவியரையும் வழிபட கல்வி, செல்வம், மனவலிமை போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். இங்கு திருவருள் புரியும் ஞான சரஸ்வதி நான்கு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள். இடது கீழ் கரத்தில் ஓலைச்சுவடியும் வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும் காட்டி தரிசனம் தருகிறாள்.

இவளைப் போற்றிப் பணிய, படிப்பாற்றல் மேலோங்குகிறது. இவளை அடுத்து கிரியா சக்தியாகத் திகழும் மூகாம்பிகை அமர்ந்துள்ளாள். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இவள், மேலிரு கரங்களில் சங்கு சக்கரமும், கீழ் வல இடக்கரங்களில் சின்முத்திரையும் வரத ஹஸ்தமும் கொண்டிருக்கிறாள். மூகாம்பிகையின் அருட்பார்வை செயல் முடிக்கும் ஆற்றல், மனவலிமையைத் தரும், அச்சத்தை போக்கும். அடுத்து இச்சா சக்தியாகிய லட்சுமி தேவி அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் தாமரை மொட்டுகளைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய மற்றும் வரத ஹஸ்தம் காட்டி புன்னகை தவழப் பொழிகிறாள். பாற்கடலில் பிறந்த பாவையான இவள், கடலைப் போன்றே வற்றாத வளம் தருபவள்.

அன்னையின் அருட்பார்வை செல்வமெல்லாம் தரும். வறுமையை விரட்டும். கல்வியுடன் வீரமும் செல்வமும் வந்து சேரும் என்பதை நிரூபிப்பதுபோல் இந்த மூன்று அன்னையரையும் தரிசிப்போர் சகல மங்களங்களையும் பெறுவது நிச்சயம்.

கல்வி வளம் சிறக்க உதவும் காயத்ரி தேவி கோயமுத்தூர் மாவட்டம், வேடப்பட்டியில் உள்ள ஆலயத்தில் பிரதானமாக கொலுவீற்றிருக்கிறாள் காயத்ரி அம்மன். ஐந்து முகங்களுடன் பத்துக் கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அங்குசம், கபாலம், தாமரை, ஏடு, வரதம், அபயம் என ஏந்தி வெண்தாமரை மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். ஐந்து முகங்களும் ஐந்து நிறங்களைக் கொண்டவை. அவை கல்வி, மனதைக் கட்டுப்படுத்துதல், உயர்ந்த குணங்கள், ஐஸ்வர்யம் தரக்கூடிய வல்லமை, உயர்ந்த ஆன்மிக ஞானம் ஆகிய நற்பலன்களைக் குறிப்பவை. இப்பலன்களைப் பெற இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

படிப்பறிவு தரும் பஸாரா சரஸ்வதி


ஆந்திரபிரதேசம் ஆதிலாபாத்தில் உள்ள பஸாராவில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி ஆலயம் உள்ளது. நமது நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோயில் கருவறையில் ஞானசரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகிறாள். இவள் அருகிலேயே மகாலட்சுமி காட்சி தர, மகாகாளி தனிச் சந்நதியில் ஆலயப் பிராகாரத்தில் வீற்றிருக்கிறாள். மாணவ, மாணவியர்கள் கல்வியை ஆரம்பிக்கும் முன் இங்குள்ள ஞான சரஸ்வதியை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு முப்பெரும் தேவியர் இருப்பினும் பிரதானமாக வணங்கப்படுபவள் ஞான சரஸ்வதி தேவியே!

இவளை வணங்க கல்வியும் ஞானமும் கைகூடுகின்றன. சரஸ்வதி தேவி சிலை மீது எப்போதும் உள்ள மஞ்சள் காப்பே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைச் சிறிதளவு உண்டால் கல்வித் திறன் அதிகரிக்கும். பக்தர்கள் சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து வெண் பட்டு உடுத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர். ஆரம்பக் கல்வி பயிலவிருக்கும் குழந்தைகளை இங்கே அதிக எண்ணிக்கையில் காணலாம். குறிப்பாக சரஸ்வதி பூஜை நாளன்று இந்த ஆலயம் விழாக்கோலம் கொள்கிறது. பக்தர்கள் தேவியையும் அருகே குகையிலுள்ள வியாச பகவானையும் வழிபடுகின்றனர்.

கலைகள் சிறக்க அருளும் கூத்தனூராள்


திருவாரூருக்கு அருகே உள்ளது கூத்தனூர். இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப் புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக ஒரு ஊரை வழங்கினார். எனவே அவரது பெயரால் ‘கூத்தனூர்’ ஆனது. இங்குள்ள சரஸ்வதியை மகாகவி பாரதியார் பலமுறை வந்து வழிபட்டு சென்றுள்ளார். கருவறையில் சரஸ்வதி வெண்ணிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வலது கீழ் கையில் சின்முத்திரையும் இடக்கையில் புத்தகமும் வலது மேல்கையில் அட்சர மாலையும் இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கியிருக்கிறாள். ஜடாமுடியும் கருணைபுரியும் இருவிழிகளோடு மூன்றாவது திருக்கண்ணும் கொண்டு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக் கடவுளான சரஸ்வதியை மனதார வணங்குபவர் இனிமைப் பேச்சு கைவரப் பெறுவர்; கலைகளில் சிறந்து விளங்குவர்.

வித்யா ப்ராப்தி தரும் தட்சிணா மூகாம்பிகை


கேரளம், எர்ணாகுளத்தில் உள்ள வடக்கன்பரவூரில் ஒரு சரஸ்வதி தேவி ஆலயம் உள்ளது. இங்குள்ள தேவி தட்சிண மூகாம்பிகை என்றழைக்கப்படுகிறாள். கர்ப்பகிரகம், ஒரு சிறிய தாமரை குளமாகவும் அதன் நடுவில் சரஸ்வதி அமர்ந்துள்ளது போலவும் அழகாக விளங்குகிறது. தீராத நோய், செயல் தடை உள்ளவர்கள், கோயிலில் தரப்படும் அர்ச்சனை பொருட்களை வாங்கி, பெயர், நட்சத்திரம் சொல்லி பூஜை செய்கிறார்கள்.

பிரசாத தட்டை, கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டுவிடுகிறார்கள். இங்கு தினமும் இரவில் கலைவாணிக்கு மூலிகை கஷாயம் நைவேத்யம் செய்யப்படுகிறது. மறுநாள் காலை இந்த கஷாயத்தை மாணவர்கள் வாங்கி அருந்தினால் ஞாபகசக்தி பெருகி, மந்தபுத்தி விலகி கல்வியறிவு சிறக்கும் என்பது ஐதீகம். வெளியூர் பக்தர்களுக்கு கஷாயத்தை பாட்டிலில் நிரப்பித் தருகிறார்கள். இசையில் தேர்ச்சி பெற விரும்புபவர்களும் சரஸ்வதியை வழிபடலாம்.

கலைமகள் திருவருள் புரியும் கதம்பவனம்

கதம்பவனம், பிச்சாண்டவர் கோவில், திருக்கரம்பனூர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருத்தலம் உத்தமர் கோயில், திருச்சியில் உள்ளது. இங்குள்ள பிரம்மன் சந்நதி குறிப்பிடத்தகுந்தது. படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் உதிக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் புரிந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மர வடிவில் நின்றார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார்.

அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, “நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்’’ என்றார். பிரம்மாவும் பின்பற்றினார். பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச் சந்நதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணைக்கு மாறாக, ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருகிறாள். பிரம்மாவிற்கு தயிர் சாதம், அத்தி இலை படைத்தும் சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருவின் அதிதேவதையானதால் குரு பெயர்ச்சியின் போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

தொகுப்பு: மகி

Tags :
× RELATED சுந்தர வேடம்