×

பைரவ தரிசனம்!

அஷ்டமி திதியன்று சிவாலயங்களில் உள்ள பைரவரை வழிபட ஐஸ்வர்யம், சுகம், பொன் பொருளையும் தருவார். அஷ்டமி திதியன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்று விரதமிருந்து ஒருவேளை உணவு மட்டும் உண்டு பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, எண்ணியன எல்லாம் ஈடேறும்.

பைரவரின் 64 மூர்த்தங்களில் அஷ்ட பைரவர்கள் முக்கியமாக தேவியருடன் வணங்கப்படுகின்றனர். அஸிதாங்க பைரவர் பிராம்ஹியுடன் ருரு பைரவர் மாகேஸ்வரியுடனும் சண்ட பைரவர் கௌமாரியுடனும் குரோத பைரவர் வைஷ்ணவியுடனும் உன்மத்த பைரவர் வாராஹியுடனும் கபால பைரவர் இந்திராணியுடனும் பீஷண பைரவர் சாமுண்டாவுடனும் சம்ஹார பைரவர் சண்டிகா தேவியுடனும் அருள்கின்றனர்.

 பைரவமூர்த்தி பல்வேறு ஆலயங்களில் பரிபூரணமாக அருள்கிறார். ஈரோட்டுக்கு வடக்கே 34 கி.மீ. தொலைவில் அந்தியூர் செல்லீஸ்வரர் ஆலயத்தில் பைரவர் ஐம்பொன் சிலாரூபமாகக் காணப்படுகிறார்.
 புதுக்கோட்டை-திருமயம் சாலையில் உள்ள தபசுமலையில், மலைமேல் சொர்ணபைரவரும் மலையடிவாரத்தில் கௌசிக சித்தர் ஆஸ்ரமத்தில் ஐம்பொன் வடிவ பைரவரும் அருள்கின்றனர்.
 கும்பகோணம்-கஞ்சனூர் சாலையில், திருலோக்கி செல்லும் பாதையில் உள்ள கீழ்ச்சூரியமூலை சூர்யகோடீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பைரவமூர்த்திக்கு தீபாராதனை காட்டும் போது பைரவர் கழுத்தில் மெல்லியதான சிவப்பு நிற ஒளியை தரிசிக்கலாம்.
 கரூர் மாவட்டம் முசிறிக்கு அருகில் உள்ள தாத்தையங்கார்பேட்டை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 5 திருமுகங்கள், 10 கரங்கள் கொண்ட பைரவர் அருளாட்சி புரிகிறார்.
 மயிலாடுதுறை-சிதம்பரம் பாதையில் உள்ள சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் ஆலய 3ம் பிராகாரத்தில் அஷ்டபைரவர் சந்நதி கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று மட்டும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை இச்சந்நதி திறந்திருக்கும். கருவறை விமானத்தில் சட்டைநாதர் எனும் பெயருடன் பைரவர் தரிசனமளிக்கிறார். படிக்கட்டுகளில் ஏறி அவரை தினமும் தரிசிக்கலாம்.
 சேலம் ஆத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது சின்ன சேலம். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபைரவர்களுக்கு தனித் தனி சந்நதிகள் உண்டு. இவர்களில் கபால பைரவர் ஆலய கோபுரத்தில் எழுந்தருளியுள்ளதும் பீஷண பைரவர் பலி பீட உருவில் உள்ளதும் அதிசயமான அமைப்பாகக் கருதப்படுகிறது.
 திருக்குவளை-வேதாரண்யம் பாதையில் உள்ள திருவாய்மூரிலும் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம்.
 தென்காசியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள குற்றாலம் சித்திர சபையில் உள்ள வடக்குப் பிராகார சுவரில் அஷ்டபைரவர்கள் சித்திர ரூபமாக தரிசனம் தருகிறார்கள்.
 நாகப்பட்டினத்தில் உள்ள கட்டுமலை மீது சட்டையப்பர் எனப்படும் பைரவர் ஆலயம் உள்ளது. இங்கு அமுதவல்லி தேவியுடன், பைரவரை தரிசிக்கலாம்.
 சென்னை - நாகலாபுரம் தடத்தில் ராமகிரி கூட்டுச்சாலையிலிருந்து 1 கி.மீ.தொலைவில் உள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் சக்தி வாய்ந்த பைரவர் தனி சந்நதியில் வீற்றருள்புரிகிறார். அவரது நான்கு கோஷ்டங்களிலும் நான்கு பைரவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

 சென்னை - திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 7 பைரவ மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
 கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில்5 பைரவர்களை தரிசிக்கலாம்.
 கும்பகோணம்-திருமங்கலம் பாதையில் உள்ள திருவிசநல்லூர் சிவலோகநாதர் ஆலயத்தில் 4 பைரவர்கள் சதுர்காலபைரவர்கள் என்று போற்றி வணங்கப்படுகின்றனர்.
 மேல்மருவத்தூர்-செங்கல்பட்டு சாலையில் உள்ள மதுராந்தகம் திருவெண்காடுடைய மகாதேவர் ஆலயத்தில் நான்கு பைரவர்களை தரிசிக்கலாம்.
 நாகை மாவட்டம் திட்டச்சேரி-திருமருகல் சாலையில் திருப்புகலூருக்கு 5 கி.மீ. கிழக்கில் சீயாத்தமங்கை வன்மீகநாதர் ஆலயத்தில் 2 சிறிய பைரவர்களும் 4 அடி உயரமுள்ள காலபைரவரும் கொலுவிருக்கின்றனர். சித்திரை மாத அஷ்டமி நாளில் இத்தலத்தில் வாகன பூஜை நடைபெறுகிறது.
திருவிடைமருதூர், பரசலூர், சேந்தமங்கலம், திருத்துறைப்பூண்டி, திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் ஆலயம், காளஹஸ்தி, திருவையாறு, கண்டியூர் ஆகிய தலங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு பைரவ மூர்த்திகளை தரிசிக்கலாம்.
 மதுரை-காரைக்குடி பாதையில் 63 கி.மீ. தொலைவில் திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில், கையில் இடியை ஏந்தி, சம்மணமிட்ட நிலையில் உள்ள பைரவரை தரிசிக்கலாம். வாஞ்சியம், திருப்புகலூர் தலங்களிலும் இந்த யோகபைரவ வடிவைக் காணலாம்.
 திருக்கண்டேச்வரம் நடன பாதேஸ்வரர் ஆலயத்திலும், புல்வயல் விஸ்வநாதர் ஆலயத்திலும் 6 கரங்கள் கொண்ட பைரவமூர்த்தி தரிசனம் தருகிறார்.
 திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திலும், தஞ்சை பெரிய கோயிலிலும் 8 கரங்களுடன் பைரவர் அருள்கிறார்.
 திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய கிழக்கு கோபுரத்தைக் கடந்தவுடன் 7 அடி உயரமுள்ள பைரவரை தரிசிக்கலாம்.
 நாகப்பட்டினம் காயாரோகணர், சேந்தமங்கலம் ஆபத்சகாயேஸ்வரர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆகிய தலங்களில் 10 கரங்களுடன் பைரவரை தரிசிக்கலாம். இதில் நாகப்பட்டினம் காயாரோகணர் ஆலயத்தில் நாய் வாகனத்திற்குப் பதிலாக சிங்கம் வாகனமாக இருக்கிறது.
 பழநி சாதுசுவாமிகள் மடத்தில் 8 அடி உயரமுள்ள விஜயபைரவ மூர்த்தி எழில் தோற்றம் காட்டுகிறார்.
 விருதுநகர், சாத்தூர் ஏழாயிரம் பண்ணை சாலையில் ஓ.மேட்டுப்பட்டியிலும், தகட்டூரிலும், க்ஷேத்திரபாலபுரத்திலும், மதுரை கீழ ஆவணிமூல வீதியிலும், வைரவன் கோயிலிலும், காஞ்சிபுரம் ஐயங்கார்குளம் அருகே அழிபடைதாங்கி எனும் மோட்டூரிலும் பைரவர் தனிக்கோயில் கொண்டுள்ளார். இதில் அழிபடைதாங்கியில் உள்ள மண்ணை எவ்வளவு எடுக்கிறோமோ அவ்வளவு நெல்லை அதில் கொட்ட வேண்டும். பிறகு எடுத்துச் செல்லும் மணலை நம் நிலத்தில் தூவ, கட்டட வேலை தடையின்றி நடக்கும் என்கிறார்கள். காரைக்குடியில் உள்ள இலுப்பைக்குடியிலும், மாத்தூரிலும், சாக்கோட்டையிலும் பைரவர் இரு நாய்களுடன் அருள்கிறார்.
 cசிதம்பரத்தில் அருளும் ஸ்வர்ணா கர்ஷணபைரவர் முன் தில்லைவாழ் தீட்சிதர்கள் ஸ்வர்ணகாலபைரவம் எனும் பைரவர் துதியை அறுபத்து நான்காயிரம் முறை ஜபித்து, வைத்துவிட்டுச் செல்லும் செப்புத் தகட்டை பைரவர் பொன்தகடாக மாற்றி, அவர்களுக்கு வளமான வாழ்வைத் தந்தருளியதாக வரலாறு கூறுகிறது.
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், அனைத்து காரியங்களிலும் வெற்றி, சந்தான பாக்கியம், வழக்குகளில் வெற்றி, திருமணத்தடை, கல்வித் தடை நீக்கம், இழந்த பொருட்கள் திரும்பக் கிடைத்தல் போன்றவை பைரவர் அருளால் கிட்டும்.

Tags : Bhairava Darshan ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?