வாரும் தூயவியாரே எங்களை விடுவியும்

மனுக்குலத்தின் கீழ்படியாமைகடவுள் தமது மகிழ்ச்சியின் நிறைவாக இந்த உலகைப் படைத்தார். தமது படைப்புகளில் மனிதருக்கு மட்டும் தமது சாயலை அளித்து இந்த உலகில் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்து இயற்கையோடு இசைந்து பொறுப்புடைய வாழ்வு நடத்த அவர்களுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்தார்.மனுக்குலத்தின் இந்த வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. அதற்குக் காரணம் மனுக்குலம் கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிய மறுத்ததாகும். கடவுளுக்கு தங்கள் கீழ்ப்படியாமையை தெரிவித்தது தான் மனுக்குலத்தின் முதல் பாவம் எனப்படுகிறது. இதை மனுக்குலம் கடவுளுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சி (Rebellion)  என இறையிலாளர்கள் வர்ணிக்கின்றனர். கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்த மனுக்குலம் கடவுளல்லாதவைகளுக்கும், கடவுளுக்கு எதிரானவைகளுக்கும் தனது இணக்கத்தைக் காண்பித்தது. இதன் விளைவு மனுக்குலம்

கடவுளின் அருளாட்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தனது விருப்பம் போல் வாழ்க்கையை நடத்தியது. (தொடக்கநூல் 1: 26-31, 2: 16-17, 3:1-7).கடவுளை மறந்த வாழ்வின் நிலைகடவுளை மறந்து, கடவுளை விட்டு விலகிய வாழ்க்கை கரையில்லா ஆறுபோலானது. இதன் விளைவாக இயற்கையோடு முரண்பாடு ஏற்பட்டது. இயற்கை மனிதருக்குத் தனது ஒத்துழையாமையைக் காட்டியது.  கடின உழைப்பே மனுக்குலத்தின் அன்றாட வாழ்க்கையானது. (தொடக்கநூல் 3: 17-19) பற்றாக்குறை மிகுந்த வாழ்க்கை மனுக்குலத்தினிடையே போட்டி, பொறாமை, சுயநலன், பேராசை, வன்முறை, கொலை என்பவற்றை வளர்த்து விட்டது. (தொடக்கநூல் 4: 1-12)

இது கடவுள் மனிதர் எவ்வாறு வாழவேண்டும் என விரும்பிய வாழ்க்கைக்கு எதிரானதாகும். மனித வாழ்வு உறவுகளால் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள், உறவை ஏற்படுத்தினார். (தொடக்கநூல் 2: 1-22) மனுக் குலம் பலுகிப்பெருகி கடவுளின் குடும்பமாக வாழ ஆசியும் வழங்கினார் (தொடக்கநூல் 1: 28). இன்று உலகம் தனி நபர் நலன், குடும்ப நலன், குழு நலன் என முதன்மைப்படுத்தி இயங்குவதால் ஏற்றத்தாழ்வுகள், சமத்துவமின்மை, செல்வங்களைக் குவித்தல், வன்முறை, அடக்குமுறை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இது கடவுள் விரும்பும் உலகம் அல்ல.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு இவ்வுலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அன்பையும், பகிர்தலையும் தீர்வாக வழங்குகிறார் திருவள்ளுவர். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கடவுளின் அளவிடமுடியாத  அன்பாக இவ்வுலகில் வாழ்ந்தார். மனிதர் எவ்வாறு வாழ்வது என்பதையும் வாழ்ந்து காட்டினார். “உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” (மாற்கு 12:31) என்ற இயேசு இன்னும் ஒருபடி மேலே சென்று “உங்கள் பகைவரிடம் அன்புகூறுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் மன்றாடுங்கள்” (மத்தேயு 5:44) என்றார்.

மனிதரிடையே பகைமையை வளர்க்கும் சொத்துக் குவிப்பு, தனி உடைமைப் பொருளாதாரத்தை அறவே வெறுத்த இயேசு பகிர்வு எனும் பொதுவுடைமைப் பொருளாதாரம் சார்ந்த பண்பாட்டை ஊக்கப்படுத்தினார் பரப்பியும் வந்தார். (மத்தேயு 14: 13-21, லூக்கா 12: 13-21) இவ்வுலகில் அன்பிலாதவர்கள்தான் செல்வம், பதவி, அதிகாரம், சுயநலன் எனும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளனர். அன்புடையவர்கள் மற்றும் பிறர் நலன் பேணுகிறவர்களால்தான் உலக மகிழ்ச்சியைக் காப்பாற்றவும், அதிகரிக்கவும் செய்யமுடியும். இதை வலியுறுத்தியே “எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்னும் அறியேன் பராபரனே” என்று தாயுமானவர் கூறுகின்றார்.விடுதலைக்குத் தூயாவியாரின் துணை.

கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், பாவம் செய்து பல்வேறு அடிமைத்தளைகளில் சிக்கி அவதியுறும் மனுக்குலம் விடுதலை பெறுவது எப்படி.? சிறந்த பக்திமானாகிய தூய பவுல் அடிகள் மிகுந்த தன்னடக்கத்துடன், “நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால் அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது” என்கிறார். (உரோமையர் 7: 18-20). நமது மனுக்குலம் கூட அவ்வளவு மோசமானதல்ல. தான் செய்வது தவறு என்று உணர்ந்தாலும் அது பிணக்கப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலிகள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டுகிறது.

இவ்வாறு அடிமைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் இம்மனுக்குலம் விடுதலை பெற எடுக்கும் சுயமுயற்சிகளுக்கு வலுவூட்ட தூயாவியாரின் துணை தேவைப்படுகிறது. ``கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்” (உரோமையர் 8:14) தூய ஆவியை உடையவரின் வாழ்வில், “அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், கனிவு, தன்னடக்கம்” வெளிப்படும். (கலாத்தியர் 5: 22-24) தூய ஆவியாரைக் குறித்து இயேசு கூறுகையில், அவர் உண்மையை வெளிப்படுத்துகிறவர் (யோவான் 14:17) என்றும், “அவர் வந்து பாவ, நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துக்கள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்” (யோவான் 16: 8-11) எனக் கூறியுள்ளார்.

தூய ஆவியார் அடிமைத் தளைகளிலிருந்து விடுதலைபெற அறிவையும், ஆற்றலையும் அருளுகிறார்.  இயேசு என்றாலே விடுதலைதான். பவுல் அடிகளார் கூறும்போது ‘‘இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக்குறிக்கிறது. ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு” (2 கொரிந்தியர் 3:17). என்கிறார். வாரும் தூயாவியாரே எங்களை விடுவியும் ஆமென்.

Related Stories: