பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

? என்னுடைய கணவருக்கு சமீப காலமாக பல கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எங்களுக்கு மகளும், மகனும் உள்ளனர். நிறைய கடன்களும் உள்ளன. வியாபாரம் தொய்வு ஏற்படுமோ என்கின்ற பயமும் அதிகமாகிறது. எதிர்காலம் குறித்து மிகவும் கவலையாக உள்ளது. பதில் கூறுங்கள்?

 - மகாலட்சுமி, சென்னை.

உங்கள் கணவரின் நட்சத்திரம் உத்திரம். கன்னி ராசி. கடக லக்னத்தில் பிறந்திருக்கிறார். ஆறாம் இடத்திற்குரியவராக குரு வருவதால் உபதேசமாகவும் அறிவுரையாகவும்  கூறுபவராக குரு இருக்கிறார். இவருக்கு ஆறாம் வீடு என்றழைக்கப்படும் கடன், வழக்கு, எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியாக தனுசு குரு வருகிறார். இவரிடம் வித்தை கற்றவரே இவருக்கு எதிராக  வருவார். அலுவலகத்தில் எல்லா விஷயங்களிலும் எதிர்ப்பு காட்டிக்  கொண்டிருக்கக் கூடாது. எனவே, இனி கெட்ட பழக்க வழக்கங்களுக்கு போகக் கூடாது  என்றால், ‘‘இவரு யாரு எனக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு’’ என்கிற மனோநிலையை  வெளிப்படுத்துவார். வீட்டில் குழந்தைகள் பாதிக்காத வண்ணம் நடந்து கொள்ளச் சொல்லுங்கள். தினமும் ஏதேனும் பூஜை முறையை கையில் எடுத்துக் கொள்ள சொல்லுங்கள். தினமும் சண்டையாகப் போட்டுக் கொண்டிருந்தாலும் ஒருகாலும் அவர் மாற மாட்டார். அதனால், இன்னும் பிரச்னை அதிகமாகும். குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள். மேலும், விடுமுறையில் அல்லது அவ்வப்போது வெளியூருக்கு பயணம் செல்வது மனோநிலையை மாற்றும். இப்போது அவருக்கு ஆறாம் அதிபதியின் தசையும் நடைபெறுவதால் சிறு சிறு நோய்கள் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லும்.

இதே குருவே தந்தையார் ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கும் அதிபதியாக வருகிறார். குரு ஒரு நல்ல வீட்டிற்கும் கெட்ட வீட்டிற்கும் உரியவராக வருவதால் எதிரிகள் உருவாக ஆரம்பித்தவுடன்தான் உங்களின் வளர்ச்சியும் அசுரத்தனமாக இருக்கும். இவரை யார் களத்தில் எதிர்த்தாலும் அவர்களின் பலவீனத்தை வைத்து அவர்களை அடித்து வீழ்த்துவார்கள். ஆறாம் இடத்திற்கு அதிபதியாக குரு வருகிறார். ‘‘எவ்வளவு வந்தாலும் கையில தங்க மாட்டேங்குது. சரியான ஓட்டை கையா இருக்குப்பா” என்பார்கள். பொதுக் காரியங்கள், அனாதை ஆசிரமங்கள், ஏழைகளுக்கு உங்கள் பணம் சென்றால் நல்லது. ஏனெனில், ஆறாம் இடத்திற்கு குரு அதிபதியாக வருவதால் இப்படி நல்லவிதமாக செலவு செய்வதே பரிகாரமாகவும் மாறிவிடும். கல்லீரல், பல், கால் வலி என்று அடிக்கடி வந்து நீங்கிக் கொண்டேயிருக்கும்.

இவரின் எதிரி ஸ்தானத்திற்கு உரியவராக தனகாரகனான குருவே வருவதால் பணம் கொடுக்கல் வாங்கலால்தான் எல்லா பிரச்னையும் வரும். கேட்டுக் கெட்டது உறவு. கேளாமல் கெட்டது கடன் என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும். இவர் நகைக் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. தங்கம் வாங்கும்போதும் அதை விற்கும் போதும் கவனத்தோடு இருக்க வேண்டும். யாரேனும் பழைய நகைகளை வைத்துக் கொண்டு பணத்தை தாருங்கள் என்றால் ஒப்புக் கொள்ளாதீர்கள். ஏனெனில், போலீஸ், கேஸ் என்று போகும். பெரிய தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைத்தால் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். ‘‘நான் எல்லாத்தையும் அவருக்கு சொல்லி கொடுத்திருக்கேன். அவரு எல்லாத்தையும் பார்த்துப்பாரு’‘ என்றுஒருபோதும் எண்ணக் கூடாது. வாழ்க்கைத் துணையின் தலையீடு இல்லாமல் எதுவும் நடக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருங்கள்.

சில கெட்ட பழக்கங்கள், கடன் மற்றும்எதிரிகள் சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்க இவர் காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் ஆலயத்திற்கு சென்று தரிசிக்கச் சொல்லுங்கள். நீங்கள் சென்னையில் இருக்கும் பட்சத்தில் மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ சென்று தரிசனம் செய்து வரச் செய்யுங்கள். இத்தலத்தில் எட்டு புஜங்களிலும் ஆயுதங்களோடு பெருமாள் சேவை சாதிக்கிறார். இவரை எண்புயக்கரத்தான் என்று அழைப்பர். மேலும் இத்தலத்தில் அருளும் புஷ்பவல்லித் தாயாரையும் தரிசித்து வாருங்கள்.இத்தலம் சின்ன காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அருகேயே உள்ளது.

Related Stories: