நன்மைகளை அள்ளித்தரும் புண்ணிய நதிகள்

இந்த நிலவுலகம் உயிரோடு இருப்பதற்கு காரணம் நதிகள். “நீரின்றி அமையாது  உலகு” என்றார் வள்ளுவப் பெருந்தகை. உலகத்தில் உள்ள அத்தனை நாகரிகங்களும், நதிக்கரையில் தான் தோன்றின. நம்முடைய பாரத தேசத்தைப் பொருத்தவரையில் அதன் ஆன்மிகப் பெருமைக்கும், கலாச்சார சிறப்புக்கும், பண்பாட்டுக்கும் நிலைக்களனாக விளங்குவது, இமயம் முதல் குமரி வரை ஓடும் நதிகள். நன்மைகளை அள்ளித்தரும் அந்தப் புண்ணிய நதிகளைப் பற்றி முப்பது முத்துக்களாக இத்தொகுப்பில் காண்போம்.

1 புண்ணிய நதிகளின் பெருமை

உலகில் புகழ் பெற்ற நதிகள் ஏராளமாக உண்டு. ஐரோப்பாவில் ஓடும் நைல் நதி, இங்கிலாந்தில் ஓடும் தேம்ஸ் நதி, ரஷியாவில் ஓடும் வோல்கா நதி, ஆப்பிரிக்காவில் ஓடும் காங்கோ நதி, கனடாவில் ஓடும் நெல்சன் நதி, சீனாவில் ஓடும் மஞ்சள் நதி, அமெரிக்காவில் ஓடும் அமேசான் நதி, மிஸ்ஸிஸிபி நதி, என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை நதிகளிலும் தண்ணீர் ஓடுகிறது. ஆனால், நமது புண்ணிய தேசமான பாரத தேசத்தில் உள்ள நதிகள் தண்ணீரோடு ஆன்மிகத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், தெய்வீகத்தையும், எண்ணற்ற புராண இதிகாச நிகழ்வுகளையும் சுமந்து செல்கிறது.

2 நதிகளின் மடியினில் திருநாட்கள், பண்டிகைகள்

“ஆறுகள் பூமியின் ரத்தநாளங்கள்” என நீரியல் நிபுணர் மார்க் ஆஞ்செலோ தெரிவித்துள்ளார். நம்மைப் பொறுத்தவரை நதிகளை அன்னையர்களாகவே கருதுகிறோம். நதியின் நீர், தாயின் முலைப்பாலுக்கு நிகர் என்பார் கம்பர். நதிகளுக்கு பெரும்பாலும் பெண்பால் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன. “பிரம்மபுத்திரா” என்ற ஒரு நதிக்குத் தான், பிரம்மனின் புதல்வன் என்று, ஆண்பால் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பார்கள். நம் நாட்டின் திருநாட்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், பெரும்பாலும் நதிகளின் மடியினில்தான் நடைபெறுகின்றன.

3 நதிகள் பிறப்பு வெவ்வேறு இடங்களில்

எல்லா நதிகளும் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகின்றன. கங்கை ஒரு இடத்தில் உற்பத்தியாகிறது. காவேரி இன்னொரு இடத்தில் உற்பத்தியாகிறது. அவைகள் அனைத்தும் வெவ்வேறு பகுதிகளில் பாய்கின்றன. வெவ்வேறு பகுதிகளை வளப்படுத்துகின்றன. ஆனால், அவைகள் கலக்குமிடம் கடல்தான். அந்தக் கடல் வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், ஒரே நீர்தான். எங்கு தோன்றினாலும் நதிகளின் நோக்கம் கடலைச் சென்று அடைவதுதான். இந்த நதிகளின் பயணத்தையும், கடலில் சென்று கலக்கும் நிகழ்வையும் இணைத்து ஆன்மிக அற்புதத்தை விளக்குகின்றார் வள்ளலார்.

4 நதிகள் ஜீவாத்மா, கடல் பரமாத்மா

நதிகள் ஜீவாத்மா. அவைகள் வெவ்வேறு இடங்களில் தோன்றுகின்றன. நதிகள் எப்படி தன்னுடைய பயணத்தில் பலருக்கும் பயன்படுகிறதோ அதைப்போல, நம்முடைய வாழ்வும் பலருக்கும் பயன்பட வேண்டும். நதிகளின் நோக்கம் கடலைச் சென்று அடைவது தான். அதைப்போல, ஜீவாத்மாக்களின் நோக்கம் இறைவனைச் சென்று அடைவது தான். அந்த இறைவன்தான் கடல்.

கடலுக்கு எப்படி கரைகள் இல்லையோ. அதேபோல, இறைவன் எல்லையற்றவனாக, ஆதி அந்தம் இல்லாதவனாக, இருந்திருக்கின்றான். இதை ஒரு அருமையான பாடலில் பாடுகின்றார் வள்ளல்பெருமான்.

5 சமயத் தத்துவங்களும் ஆறுகளும்

இன்னொரு விஷயமும் இந்தப் பாடலில் மிக விளக்கமாகக் கொடுக்கின்றார் வள்ளல் பெருமான். நம்முடைய பாரத நாட்டில் பல்வேறு நதிகள் இருப்பது போலவே, பல்வேறு சமய நெறிகளும் இருக்கின்றன. பல்வேறு சமயங்கள் என்பனஆறுகள் போல. ஆனால், எல்லாச் சமயங்களின் நோக்கமும் கடலாகிய பரம்பொருளை அடைவது தான். அந்தப்  பரம்பொருள் பரந்து, விரிந்து இருக்கின்றான். நதிகளுக்கு நீர் ஆதாரம் கடல் தான். கடலில் உள்ள நீர்தான் ஆவியாகி, மேகமாகி, மழையாகி, நதியாகிறது. அதைப்போல்,  சமயங்கள் எல்லாம் பரம் பொருளாகிய கடவுள் என்கின்ற கடலிலிருந்துதான் தோன்றி நிறைவாக கடவுளையே அடைகின்றன. எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், நதிகளில் நீராடும் பொழுது இந்தப் பாடலையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்

புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்

தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்

தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச்

செங்குமுத மலரவரு மதியே எல்லாம்

செய்யவல்ல கடவுளே தேவதேவே

- (திருவருட்பா 2118)

6 ஐந்து கங்கைகள்

புண்ணிய நதிகளில் நீராடுவது என்பது நம் பாவங்களை நீக்கிக் கொள்ளும் வழிமுறையாகும். இந்தியாவில் எத்தனையோ புண்ணிய நதிகள் இருக்கின்றன. கங்கை, கோதாவரி, நர்மதா, சிந்து, சரஸ்வதி, கோமதி, வாரணாசி, பிரயாகை, துங்கபத்ரா, தண்டகாரண்யம், சித்திரகூடம், அவந்தி, சரயு, ஹரிகிருஷ்ணா, மதுரா, காவேரி, நர்மதா, தாமிரபரணி எனப் பல புண்ணிய நதிகள் உண்டு. அதிலும் குறிப்பாக காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணவேணி கோதாவரி, கங்கை, முதலிய ஐந்தையும் “பஞ்ச கங்கை” என்றே அழைக்கிறார்கள்.

காவிரி, துங்கபத்ரா,

கிருஷ்ணவேணி ச கௌதம,

பாகீரதி ச விக்யாத

பஞ்ச  கங்கா ப்ரகீர்த்திதா

என்பது ஸ்லோகம்

சாஸ்திரங்கள் கங்கை என்றோ, காவேரி என்றோ ஒருமுறை வாயால் சொன்னால் பாவங்கள் தொலைந்து விடுவதாக உறுதிபடக் கூறுகின்றன.

7 நதிகளுக்குஅப்படி என்ன சிறப்பு?

இந்து சமயத்தினர் புராண, இதிகாசங்களோடு தொடர்புடைய ஒன்பது ஆறுகளை மிகப் புனிதமாகக் கருதுவர். இவற்றில், நீராடினால் பாவங்கள் நீங்கி, நற்கதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நதிகளின் பெயர்களை ஒவ்வொரு நாளும் நீராடும் போது உச்சரித்தாலே, நீராடிய பலனை அடைவார்கள். நதிகளுக்கு பெருமை ஏற்பட்டதற்கு காரணம் அதன் கரைகளில் பகவான் எழுந்தருளியிருக்கிறார். பெரும்பாலும், ஒவ்வொரு ஆற்றின் கரையிலும் ஒரு புண்ணியத்தலம் இருக்கும். பல ஞானிகள் இந்த நதிக்கரைகளில் மிகப்பெரிய யாகங்களை நடத்தியிருக்கிறார்கள். அக்காலத்தில், கல்வி நதிக்கரைகளில் பரண் அமைத்து முனிவர்களாலும், ரிஷிகளாலும் கற்பிக்கப்பட்டன. இந்திய புராணங்களில் பெரும்பாலான புராணங்கள், கங்கை நதிக் கரையில் சொல்லப்பட்ட புராணங்கள்தான். பல உபநிடதங்கள் கங்கை நதிக்கரையில்தான் தோன்றின.

8 நதிகளின் பெயர்களை சொல்லி சங்கல்பம்

நமது சாஸ்திரங்களில் புண்ணிய நதிகளில் நீராடி, அதன் கரைகளில் செய்யும் வழிபாடுகளும், தானங்களும், யாகங்களும், பல மடங்கு நன்மை தரும் என்று சொல்லி இருக்கின்றார்கள். இந்தியாவில், புண்ணிய நதிகளை நவநதிகள் என்று சொன்னார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று பார்க்க வேண்டும். நவம் என்பதற்கு ஒன்பது என்பதுடன் புதியது என்பதும் பொருளாகும். வற்றாது நீர் ஓடிக் கொண்டே இருக்கும் நதிகள் எதுவாக இருந்தாலும் நவநதிகள் என்று அழைக்கப்பட்டன. காரணம் ஆற்றில் நீர் தேங்காது. கணந்தோறும் புதிய நீர் வந்து கொண்டே இருக்கும். எனவே தண்ணீர் எப்போதும் புதியது (நவம்) ஆகும். இதையொட்டி ஓடிக்கொண்டே இருக்கும் ஆற்றை நவநதி என்று அழைக்கிறோம். நம் பூசைகளின் ஆரம்பத்தில் செய்யப்படும் சங்கல்பத்தில், இந்த நதிகளின் பெயர்கள் கூறுகிறோம். நாம் மேற்கொள்ளும் பூசையை நதிகளின் கரையில் செய்வதால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலனைத் தருமாறு நதி தேவதைகளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

9 ஏன் புனித நதிகளில் நீராட வேண்டும்?

வழிபாட்டுக்கு இரண்டு தூய்மைகள் அவசியம். ஒன்று புறத்தூய்மை. அது தினசரி நீராடுவதால் கிடைக்கும். அதைத்தான் காலைக்கடன் என்று சொன்னார்கள். இன்னொன்று அகத்தூய்மை. அது நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை முறையாலும், எண்ணங்களாலும் ஏற்படும். வழிபாட்டுக்கு இந்த அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் அவசியம் என்பதால் நீராடிவிட்டு, கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். நதி நீராடல் மிகவும் உத்தமமானது. அதுவும், புஷ்கரம், மாசிமகம் முதலிய சமயத்தில், நதி நீராடல் மிக மிக உத்தமமானச் செயல். புஷ்கரம் என்பது நதிகளின் திருவிழா. ஓடுகின்ற ஆற்று நீரில் குளிப்பது உத்தமம் என்றும், நிலைத்து உள்ள ஏரி, குளம், கிணற்றில் குளிப்பது மத்திமம் என்றும், பாத்திரங்களில் ஊற்றிக் குளிப்பதால் உடல் நிலைக்கு உகந்ததல்ல என்றும் ஸ்நான விதி கூறுகிறது.

10 நீரில் இரண்டு சக்திகள்

நீரில் இரண்டு சக்திகள் இருப்பதாக வேதம் போற்றுகிறது. ஒன்று, அது தாகம் தீர்க்கும். பயிர்களை வளரச் செய்யும். இரண்டாவது, சுத்தம் செய்வது. மறைமுகமாக மேத்யம், யஜனம் என்ற இரண்டு சக்திகளுமுள்ளன. ‘மேத்யம்’ என்பது நதியில் இறங்கி மூன்று முறை மூழ்கி எழுந்தால், பாவங்கள் தீரும். ‘யஜனம்’ என்றால் நீரைத் தெளிப்பதால் பூஜா திரவியங்கள் பரிசுத்தமாகும். நீர் நாராயண சொரூபம். ஆதலால், அவருடைய ஸ்பரிசத்தினால் பாவங்கள் தொலைந்து சுத்தமாகின்றன. நாராயணன் என்றாலே தீர்த்தன்  என்றுதான் பொருள்.

11 கங்கையின் பெருமை

இந்திய நதிகளில் தலையாய நதி கங்கை. கங்கையின் பெருமையை எழுத்தில் வடிக்க முடியாது. பேசியும் முடியாது. கங்கை நதி தோன்றிய இடத்திலிருந்து அமைந்திருக்கும் பலவிதமான புகழ்பெற்ற திருத்தலங்கள், அந்த திருத்தலங்களில் காட்சி தரும் மூர்த்திகள், ஆகியவற்றின் சிறப்பால் கங்கை நதி புனிதத்திலும் புனிதமான நதியாகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், காசி போன்ற முக்கியமான இந்துத் தலங்கள்,கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. கங்கை நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். விஷ்ணுபாதத்தில், கங்கோத்ரியில் உற்பத்தியாகி, பனி சூழ்ந்த இமயமலையில் தொடங்கி, வங்கக்கடலில் கலக்கிறது.

12 கங்கை என்று சொன்னாலே பாபம் போகும்

கங்கையைப் பற்றி எண்ணற்ற கதைகள் உண்டு. வெவ்வேறு புராணங்களில் வெவ்வேறு விதமாகச் சொல்லப்பட்டிருக்கும். எல்லாவற்றிலும் கங்கையின் பெருமை

விரிவாகவே பேசப்பட்டிருக்கும்.

“கங்கை கங்கையென்ற வாசகத் தாலே

கடுவினை களைந்திட கிற்கும்

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற

கண்டமென் னும்கடி நகரே”

என்பது பெரியாழ்வார் பாசுரம்.

இதற்கு உரை எழுதியவர்கள் கங்கையில் நேரடியாக நீராட வேண்டாம். ஏதேனுமொரு குளத்தில் நீராடுபவர்கள், அந்த நீரைக் கங்கையாக நினைத்து, ‘கங்கை, கங்கை’ என்று உச்சரித்தால் உடனே அவர்களுடைய பாபங்களையெல்லாம் ஒழிக்கும்படியான பெருமை பொருந்திய கங்கை என்கிறார். தீபாவளி அன்று நாம் செய்யும் நீராட்டத்தை “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று கேட்பதிலிருந்து கங்கையின்

பெருமையை அறிய முடியும்.

13 கங்கைக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?

கங்கா தேவிக்கு தேவலோகத்தில், மந்தாகினி என்று பெயர். பகீரதன் தவத்திற்கு மகிழ்ந்து பூலோகத்திற்கு வந்தமையால் பாகீரதி என்று பெயர். சைவ சமயத்தில் கங்கா தேவிக்கு கங்கையம்மன், ஜானவி, பூலோக கங்கை, பாதாள கங்கை, திரிபதாகை, தேவிநதி, வரநதி ,உமைசுரநதி, தசமுகைநதி, சிரநதி, தெய்வ நதி, விமலை, பாலகங்கா, நீளகங்கா, காளிகங்கா, பாணகங்கை, போகவதி என்று பல பெயர்கள் உண்டு. கங்கையைச் சிவபெருமானின் மனைவி, முருகனின் வளர்ப்புத் தாயென சைவ சமயம் கூறுகிறது.

மும்மூர்த்திகளின் பெருமையோடு கங்கையின் சிறப்பு இணைக்கப்படுகிறது. விஷ்ணுவின் திருப்பாதத்தில் தோன்றியதாக கங்கை சொல்லப்படுகிறது. பிரம்மனின்கமண்டல நீராகவும் சொல்லப்படுகிறது. சிவபெருமானின் தலைமீது அணிகலனாக கங்கை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால், சிவபெருமானுக்கு கங்காதரன் என்று ஒரு பெயர் உண்டு. மகாபாரதத்தில் கங்கை, வருணனின்மனைவியாகவும், பீஷ்மரின் அன்னையாகவும் சித்தரிக்கப்படுகிறார்.

14 கங்கையின் கதை

தேவலோக நதி அல்லவா கங்கை. அது எப்படி மண்ணுலகிற்கு வந்தது? ஒருமுறை தேவர்கள் பிரம்மனைத் தரிசிக்கச் சென்றனர். அப்பொழுது, வருணதேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில், கங்கையின் மேலாடை விலகியது. அதைக் கண்டு திகைத்த தேவர்கள் அதைக் காணாமல் கீழ் நோக்கினர். வருணனின் இச்செயலினைக் கண்டு பிரம்மா கோபமடைந்தார். அதனால், வருணனைப் பூலோகத்தில் மனிதனாகப் பிறக்கும்படிச் சாபமிட்டார். கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கவும், மனிதனாகப் பிறக்கும் வருணனைத் திருமணம் செய்து கணவனுக்குப் பிடிக்காத செயல்களைச் செய்வாயெனவும் சாபமிட்டார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன், சந்தனு மகாராஜாவாக பிறந்தார். கங்கையைக் கண்ட சந்தனு, அவளின் மீது காதல் கொண்டார். அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார்.

அதற்குக் கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையைச் சந்தனு வடிவிலிருந்த வருணன் ஏற்றார். திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் பிறந்தது. கங்கை அக்குழந்தையை எடுத்துச் சென்று ஆற்றில் போட்டாள். பெற்ற குழந்தையை ஆற்றில் வீசுவது படுபாதகச் செயல் அல்லவா.? சந்தனு, நிபந்தனையின் காரணமாக எதையும் கேட்காமல் இருந்தார். ஆனால், அடுத்தடுத்துப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கங்கை ஆற்றில் வீசினாள். ஏழாவது குழந்தை பிறந்தது ஆற்றில் போடச் சென்ற பொழுது, சந்தனு பொறுக்கமுடியாமல், நீ தாயா? பேயா? பேயாக இருந்தாலும் பிள்ளையை காப்பாற்றும்? ஏன் அவ்வாறு செய்கிறாய் என்று கடுமையாகக் கேட்டார். நிபந்தனைப்படி அவளிடம் இருந்து விலகினாள் கங்கை. அந்தக் குழந்தைகளும் இதைப்போலவே சாபம் பெற்று வந்தவர்கள் என்பதை விளக்கினாள். கங்கையின் சாபம் விலகியது.

15 கங்கா தசரா, ஆரத்தி வழிபாடு

தேவலோக நதியான கங்கா தேவி, பகீரதனின் தவத்தினால் பூலோகத்திற்கு வந்தது வைகாசி மாதத்தின் வளர்பிறை பத்தாம் நாளாகும். இந்நாளை, ‘கங்கா தசரா’ என்ற பெயரில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். கங்கா, தசமி என்றும் அழைக்கின்றனர். கங்கையை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அம்மனாக வழிபடுவதால்  கங்கையம்மன் கோயில்கள் உண்டு. காசி என அழைக்கப்படும் வாரணாசியில், பாயும் கங்கை ஆற்றுக்கு தசவசுவமேத படித்துறையில் நாள்தோறும் மாலை வேளையில் ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வருகின்ற பக்தர்கள் கங்கை ஆர்த்தியைக் காண கங்கைக் கரையில் கூடுகின்றனர். ஆரத்தியை முழுமையாகக் காண்பதற்காகப் பல பக்தர்கள் படகுகளில் அமர்ந்து பார்க்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது நேரத்தில் சுமார் 30 நிமிடங்கள் இந்த கங்கா ஆரத்தி நடக்கின்றது.

16 ஆழ்வார்கள் பாடும் கங்கை

கங்கையின் பெருமையை ஆழ்வார்கள் பல பாசுரங்களால் போற்றுகின்றனர். ஆகாசத்தில் இருந்து நிலவுலகத்தில் பிரவகித்தமையால், எம்பெருமானுடைய துழாய் மலரோடும் சிவபிரானுடைய கொன்றைமலரோடும் கலந்து பசுமை நிறமும் செந்நிறமுமாக விளங்கும் நீர்ப்பெருக்கினால் பெருமை பெற்ற கங்கை.

“இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத்

தாடகமையுடைப் பெருமைக் கங்கை”

என்று இமயமலையின் உச்சியில் பிறந்து, பெரிய கடல் வரைக்கும், இரண்டு கரைகளையும் அகலமாக ஒட்டி ஆரவாரித்து கொண்டு செல்லும் கங்கை என்றும், தண்ணில்  நீராடுபவர்கள் பாவங்களைப் பொறுத்து கொள்வதால், பெருமையுடைய கங்கை என்றும்பாடுகிறார்.

“எழுமையும் கூடி ஈண்டிய பாவம்

இறைப்பொழு தளவினில் எல்லாம்

கழுவிடும் பெருமைக் கங்கை”

அதாவது, ஏழு ஜென்மங்களிலும் சேர்ந்து திரண்ட பாவங்களையெல்லாம் ஒரே ஒரு நொடிக்குள் போக்கிவிடும் கங்கை என்றும் பாடுகிறார்.

17 தாய்ப்பாலைப் போல சரயூ நதி

தசாவதாரங்களில் பூர்ண அவதாரமான இராமாவதாரத்தோடு தொடர்புடையது சரயூ நதி. இந்த நதிக்கரையில்தான் அயோத்தி அமைந்திருக்கிறது. கங்கை, யமுனையின் கலாச்சாரங்களின் சங்கமம் சரயு நதி. கம்பர், சரயு நதி பற்றி மிக அற்புதமாகப் பாடுகின்றார். சூரிய குலத்தில் எத்தனையோ அரசர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்கள் அனுசரித்த ஒழுக்கத்தைப் போலவே, இந்த நதியின் ஒழுக்கமும் இருக்கிறது. அவர்கள் இந்த உலகத்தைக் காப்பாற்றியது போலவே, இந்த நதியும் ஆறுகளாலும் கடலால் சூழப்பட்ட உலகத்து உயிர்களுக்கெல்லாம் தாய்ப்பாலைப் போல பலனளிக்கிறது.

இரவி தன் குலத்துஇரவி தன் குலத்து எண் இல் பல் வேந்தர் தம்

பரவு நல் ஒழுக்கத்தின் படி பூண்டது

சரயு என்பது தாய் முலை அன்னது இவ்

உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிருக்கெல்லாம்”

இன்னும் ஒரு பாடலில், பல்வேறு உடம்புகள் தோறும் சென்று உலாவும் ஒரே உயிர்போல, சரயுவின் வெள்ளம் பரவி நின்றது என்கிறார். அற்புதமான பாடல்;

தாது உகு சோலை தோறும்,

சண்பகக் காடு தோறும்,

போது அவிழ் பொய்கை தோறும்,

புது மணல் தடங்கள் தோறும்,

மாதவி வேலிப் பூக வனம் தோறும்,

வயல்கள் தோறும்,

ஓதிய உடம்பு தோறும், உயிர்

என உலாயது, அன்றே.

18 துளசி ராமாயணம் தந்த நதி

ராமன் விளையாடிய நதி. வாழ்வின் நிறைவில், லட்சுமணனும் ராமனும் இந்த நதியில் இறங்கித் தான் வைகுண்டத்திற்கு சென்றார்கள். பரதன் இங்குள்ள நந்தி கிராமத்தில்தான் 14 ஆண்டுகள் சரயு நதியில் நீராடி தவ வாழ்க்கை வாழ்ந்தான். துளசிதாசரை மறக்க முடியுமா? துளசி சௌரா என்ற இடம் உள்ளது. இங்கு அமர்ந்துதான் துளசிதாசர் ராமசரிதமானசை எழுதினார். சரயுவின் கரையில், 14 பெரிய காட்கள் உள்ளன. குப்த்வார் காட், கைகேயி காட், கௌசல்யா காட், பாப விமோச்சன் காட், லக்ஷ்மன் காட் ஆகியவை மிக முக்கியமானவை. அனுமனின் புகழ்பெற்ற ஹனுமன்கரி கோயில் இங்குள்ளது.

19 யமுனா நதி இங்கே? கண்ணனின் முகம் இங்கே?

இராமரின் சரித்திரம் சரயு நதியோடு தொடர்புடையது என்றால், கண்ணனின் சரித்திரம் யமுனையோடு தொடர்புடையது.

“யமுநாஞ்சாதிகம்பீராம்

நாநாவர்த்தஜஷாகுலாம் -

வஸுதேவோ வஹந் க்ருஷ்ணம்

ஜாநுமாத்ரோதகோயயௌ.”

-  விஷ்ணுபுராண வசனம்

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவ வாழ்வில் ஆழமாக இணைந்தது யமுனை நதி! இது கங்கை நதியின் இரண்டாவது பெரிய கிளை நதியாகும். பாண்டவர்களின் தலை நகரமாக திகழ்ந்த இந்திரபிரஸ்தம் (தற்போது டெல்லி) யமுனை நதியின் கரையிலேதான் அமையப்பெற்றது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது. கங்கையும், யமுனையும் கலக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில், 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது.

இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி, சூரிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறாள். யமுனை நதியில் நீராடினால் ஒருவர் நீண்ட ஆயுளைப்பெறலாம்.

மாயனை மன்னு வடமதுரை

மைந்தனை, தூய பெருநீர்

யமுனைத் துறைவனை

என்று இந்த நதியைப் போற்றுகின்றாள் ஆண்டாள்.

அப்படியென்ன தூய்மை? கண்ணன் திருமதுரையிற் பிறந்தான். வஸுதேவன் கம்ஸனிடத்துள்ள அச்சத்தினால் கண்ணனை திருவாய்ப்பாடியில் ஒளிந்து வளர்க்கக் கருதினான்.  வழியில் யமுனையில் பெருவெள்ளம். கண்ணனை அக்கரையில் சேர்க்க யமுனையாறு தன்னை முழந்தாளளவாக வற்றுவித்துக் கொண்டு பகவானுக்கு செய்த தொண்டை, ஒப்புயர்வற்ற தூய்மையாகக் கருதித் தூய பெருநீர் யமுனை என்றுபோற்றினாள் ஆண்டாள்.

20 கோதாவரி

இராமாயணத்தில் சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்று விடுகின்றான். ராமன் ஒவ்வொரு இடமாக, “மலையே, நீ சீதையைப் பார்த்தாயா?.. மரங்களே நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்கும்போது கோதாவரியையும் கேட்கின்றான். ராவணனுக்கு அஞ்சிய கோதாவரி, எந்தப் பதிலும் பேசாமல் மௌனமாகி விட்டதாம். அது பழி சுமந்த கோதாவரியாக மாறியது. அந்தப் பழி எப்போது மாறியது என்று சொன்னால், சீதாதேவியின் அம்சமான ஆண்டாள், “கோதா” (கோதை) என்று தன் பெயரை வைத்துக் கொண்டதால், கோதாவரியின் பழி மாறி தூய்மை பெற்றதாம். கோதாவரி கரையில் அமைந்த பஸாரில், பிரபல சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. துறவிக் கவிஞர் தியானேஸ்வர் தியானேஸ்வரியை இந்நதிக்கரையில்தான் இயற்றினார். கோதாவரி உருவாகும் தலமான திரியம்பகேஸ்வர் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, கொண்டாடப்படும் நான்கு தலங்களில் இதுவும் ஒன்று.

21 காவிரியின் பெருமை

கவேர மன்னனின் மகள் காவேரி.“கா”என்றால் சோலை. தான் செல்லும் இடமெல்லாம் பசுமையான சோலைகளை  விரித்துச்  செல்வதால் காவிரி என்று பெயர். காவிரியின் தென்கரையிலும் வடகரையிலும்   ஏராளமான சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் உள்ளன. அவைகள்   நாயன்மார்களாலும்  ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற பெருமையை உடையன. பஞ்சபூத தலங்களில், நீர் தலமான திருவானைக்காவல் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது.வைணவத்தின் தலைமை பீடமான திருவரங்கம் காவிரிக் கரையில்தான் உள்ளது. காவிரி கடலில் சேரும் இடத்தில் அமைந்த  பூம்புகார் பண்டைய காலத்தில் ஒரு முக்கிய துறைமுக நகரமாக விளங்கியது.

22 கிருஷ்ணாவும், துங்கபத்ராவும்

கிருஷ்ணாஅற்புதமான நதி .புகழ்பெற்ற  மட்டபல்லி  மகா நரசிம்ம க்ஷேத் திரம் கிருஷ்ணா நதிக்கரையில் தான் அமைந்திருக்கிறது. சைலத்தில் 12 ஜோதிலிங்கங்களில் ஒன்று அமைந்துள்ளது. அமராவதி கரையில் அமைந்துள்ள அமரேஸ்வர ஸ்வாமி கோயில், விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயில் ஆகியவை மற்ற முக்கியமான வழிபாட்டு தலங்கள் ஆகும். புகழ்பெற்ற வீர சைவத்துறவி பசவா அடக்கம் செய்யப்பட்ட இடம் கூடலசங்கமா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு மலபிரபா நதி கிருஷ்ணாவுடன் கலக்கிறது. கிருஷ்ணாவின் கிளைநதியான துங்க பத்திராவின் கரையில்தான் விஜயநகரம் என்னும் மாபெரும் பேரரசு உருவானது. ராகவேந்திரரின் பிருந்தாவனம் மந்த்ராலயம் இதன் கரையில் தான் அமைந்துள்ளது.  இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில்  அமைந்துள்ள ஹம்பி  உலகப் பாரம்பரிய சிறப்புக்கு உரிய நகரம்  ஆகும். புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்தில் உள்ளது.  

23 நர்மதா ஆறு

நர்மதா ஆறு இந்திய துணைக்கண்டத்து பெரிய ஆறுகளில் ஒன்றாகும். குசராத்துக்கும் மத்திய பிரதேசத்திற்கும் உயிர் நாடியாக விளங்குகிறது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். மற்றொரு பெரிய ஆறு தபதி ஆகும். நர்மதா நதியின் மூலத்தில் இருந்து அது கடலில் கடக்கும் இடம் வரை சென்று, மீண்டும் நதிமூலத்திற்கே செல்லும் 2600 கி.மீ தூரம் கொண்ட நர்மதா பாணிக்ரமா என்ற யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.நர்மதா நதிக்கரையில் அமைந்த ஓம்காரேஸ் வரம் எனும் இடத்தில்தான் ஆதிசங்கரர் சன்யாசம் பெற்றார். உலகிலேயே பழமையான குகை ஓவியங்களில் ஒன்றான சுமார் 30,000 ஆண்டுகள் முந்தைய ஓவியங்கள் நர்மதா நதிக்கரையில் உள்ள பீம்பெட்கா குகைகளில் அமைந்துள்ளன.

24 நொய்யல் நதி

கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற நதியாக விளங்கும் நொய்யல் நதி. கைலாய மலை வடக்கே இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் தெற்கே தமிழ்நாட்டில் கோவை அருகே ஒரு கைலாயமலை உண்டு. இதற்கு தட்சிண கயிலாயம் அல்லது தென்கைலாயம் என்று பெயர். வெள்ளியங்கிரி மலைதான்  தென்கைலாயம் .நொய்யல் நதியின் பிறப்பிடமானவெள்ளியங்கிரி மலையில் இப்பொழுது ஆதியோகி சிலை விளங்குகிறது. முன்காலத்தில் இந்த நதிக்கு “காஞ்சி நாடி” என்று ஒரு பெயர். நொய்யல் என்பதற்கு நோயற்ற என்று பொருள். இந்த  நதியில் நீராடி, அல்லது இந்த நதி நீரை அருந்தி, இந்த  நதிக் கரையில் உள்ள திருத் தலங்களை வணங்குவோர்க்கு எந்த நோயும் வராது. இந்த ஆற்றங்கரையில் உள்ள புகழ்பெற்ற திருத்தலம் தான், சிற்ப சாஸ்திரத் திற்கு நிலைக்  களனாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில்.

25 தென்பெண்ணையாறு

தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று.கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) உற்பத்தியாகி, தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஆதி ரங்கம் ,திருக்கோயிலூர் முதலிய தலங்கள் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்த தலங்கள்.

26 கம்பராமாயணத்தில் தென்பெண்ணை

கம்பராமாயணத்தில் கிஷ்கிந்தா படலத்தில் வானரங்கள் சீதையைத் தேடி பெண்ணை ஆற்றங்கரைக்கு வருகிறார்கள். கம்பர்  பெண்ணையாற்றின் சிறப்புக்களை சில பாடல்களால் சொல்கின்றார். நதியில் இறங்கி நீராடும்போது மயில்கள் மகிழ்ச்சியோடு தோகையை விரித்து ஆடின. அந்த நதிகளில் அங்கங்கே தரையைப்  பார்க்கும் வண்ணம் பளிங்கு போன்ற நீர் ஓடியது. பாறைகள் அங்கங்கே இருந்தன. இப்படி வர்ணிக்கும் கம்பர் சீதை ஆகிய பெண்ணைத் தேட பெண்ணைக்கு வந்தனர் என்பதை “பெண்ணை நண்ணினார் - பெண்ணை நாடுவார்” என்ற வரிகளில் நயமாகச்  சொல் கின்றார்.

புள் தை வெம் முலைப் புளினம், ஏய் தடத்து

உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய்,

வண்ண வெண் நகைத் தரள் வாள் முகப்

பெண்ணை நண்ணினார்

-பெண்ணை நாடுவார்

27 வெள்ளாறு

சுவேத நதி என்று அழைக்கப்படும் வெள்ளாறுக்கு நிவா நதி என்ற பெயரும் உண்டு.

செருநீல வேற்கண் மடவார் திறத்துச்

சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்,

அருநீல பாவ மகலப் புகழ்சேர் அமரர்க்கு

மெய்தாத அண்டத்தி ருப்பீர்,

பெருநீர் “நிவா”வுந்தி முத்தங் கொணர்ந்து

எங்கும் வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள,

திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத்

திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

“பெருநீர் நிவாவுந்தி முத்தங் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள” என்ற வரியில் வெள்ளாற்றில் பெருமையை திருமங்கையாழ்வார் அற்புதமாகப்  பேசுகின்றார்.

வெள்ளாறு  தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகி சேலம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு ஊடாக ஓடி பரங்கிப் பேட்டை அருகில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும்  ஆறு.  

ஒரு காலத்தில் சோழர் மற்றும் பாண்டியதேசத்துக்கு இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது. சுவேதா ஆறு, சின்னாறு, ஆணைவாரி ஓடை, மணிமுக்தா ஆறு போன்றவைகள் இதன் துணையாறுகளாகும்.வெள்ளாறும் மணிமுத்தா நதியும்  கூடும் இடத்தில் அமைந்த திருக் கூடலையாற்றூர் , நெறிக்காட்டுநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சுந்தரரால் பாடப்பெற்ற இத்தலத்தில்  சுந்தரருக்கு இறைவன் அந்தணர் வடிவில் வழி காட்டினார். பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டினார் . சித்திரகுப்தருக்கு சன்னதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. இங்குள்ள சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும், மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார்.இக்கோயிலில் நவக்கிரக சந்நதியில்லை.

28 கிருதமாலா ஆறு

மதுரை என்றாலே மீனாட்சி அம்மனும், கூடலழகரும் , சித்திரைத் திருவிழாவும், வைகை ஆறும்  நினைவுக்கு வரும். இங்கு ஓடும் வைகை ஆற்றுக்கு வேகவதி என்று ஒரு பெயர்.  வேகமாக ஓடியதால் வேகவதி. விண்ணுலகத்திலிருந்து இவ்வையத்திற்கு வந்ததால் வையை எனும் பெயர். சைவமும் வைணவமும் தழைத்த தமிழ்  பூமி. சைவர்களுக்கு நோக்கம் கைலாயம். வைணவர்களுக்கு நோக்கம் வைகுண்டம். வைகை என்றும் புனித நதி அவரவர்கள் விரும்பும் வைகுண்டத்தையும்  கைலாயத்தையும்   தரும் ஆற்றல் பெற்றதால் வை கை என்று பெயர் வைத்தார்கள் என்று சுவாரசியமாகச்  சொல்வதுண்டு. ஆறு இரண்டு பிரிவாகப் பிரிந்து மாலைபோல மதுரையைச் சுற்றியதால் “கிருதமாலா” எனும் பெயர் ஏற்பட்டது. இதனைக் கீழ்க்கண்ட புராணப்பாடல் விளக்குகிறது.

“வேகமாதலின் வேகவதி என்றும்மாகம் வாய்ந்ததனால் வையை என்றும்-தார்

ஆகலால் கிருதமலையதாம் என்றும்

நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ”

29 தாமிரபரணி

காவிரி, தென்பெண்ணை, பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை, பொருனை நதி, - என

மேவிய யாறு பலவோடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு

என்று பாரதி, தமிழக ஆறுகளின் சிறப்பை அற்புதமாகப் பாடுகிறார்.

பொருநை என அழைக்கப்படும் தாமிர

பரணி, பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில்(பொதிகை மலை) தோன்றி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற ஊர் வழியாக வருகிறது தாமிரபரணி.

இந்தியாவில் இரண்டு நதிதான் வடக்கிலிருந்து தெற்காக ஓடுகிறது. ஒன்று காசியில் உள்ள கங்கை நதி மற்றொன்று தாமிரபரணி. கங்கையின் பாவத் தினை தாமிரபரணி போக்குவதால் தாமிரபரணியில் எந்த பகுதியில் குளித் தாலும் கங்கையில் குளித்த புண்ணியம் கிட்டும்.

நவ திருப்பதிகள் இதன் கரையில் தான் அமைந்திருக்கின்றன.வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரயூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந் தியாவில் தாமிரபரணி  பிரசித்தி பெற்றது. வியாசர் சுக பிரம்ம ரிஷிக்கு தாமிரப ரணியின் பெருமை குறித்து செய்த  உபதேசமே   தாமிர பரணி மகாத்மியம்.

30 பாலாறு

கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்கம் மலை பாலாற்றின் பிறப்பிடம். பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை, சித்ராவதி, அரக்காவதி, பாப்னாகி என 6 நதிகளின் பிறப்பிடமும் நந்திதுர்கம்தான். அடர்ந்த வனப் பகுதியாக இல்லாமல் சாதாரணமாக பசுமை நிறைந்த மலையாக நந்திதுர்கம் இருப்பது ஆச்சரியம். அடிவாரத்தில் நந்தி சிலைதான் நந்தி துர்கத்துக்கு செல்லும் வழிகாட்டியாக இருக்கிறது.மலை உச்சியின் ஒரு பகுதியில் இருக்கும் யோக நந்தீஸ்வரர் கோயில் 9-ம் நூற்றாண்டில் பாணர்கள் காலத்தில் கட்டியது. 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில், பாலாற்றின் வளமும் அது பாய்ந்தோடிய தொண்டை மண்டலத்தின் செழிப்பையும், விளக்கியுள்ளார்.

‘துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்

பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே

அங்கண் நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள்

பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி’ -

வசிட்டமுனிவனிடமிருக்கும் காமதேனு எனும் பசு  சொரிந்த பாலானாது, நதியாக மாறி ,நந்தி மலையினின்றும் இறங்கி,  முத்துக்களையும் சந்தனம் அகில் ,மணிகளையும் கொணர்ந்து தாமரை மலர்கள் பூத்த குளங்களை நிறைக்குமாறு ஓடி வருவது பாலாறு என்பது இப்பாடலின் பொருள்.. தொண்டைமண்டலம் என்று சொல்லப்படும் செங்கல்பட்டு, காஞ்சி புரம்,சென்னை, வேலூர் மாவட்டத்தின் பல முக்கியமான திருத்தலங்கள் பாலாற்றங்கரையில்தான் அமைந்திருக்கின்றன.

முடிவுரை

இன்னும் பல புண்ணிய நதிகள் பாரதத் திருநாட்டில் உண்டு. அந் நதிகளைப் பற்றி இன்னும் ஏராளமான தகவல்கள் உண்டு. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

எஸ். கோகுலாச்சாரி

Related Stories: