நீரால் விளக்கிட்ட நமிநந்தியடிகள்

திருக்கோயில்களின் தீர்த்தக்குளங்கள் அனைத்தும் சிவகங்கை என்றே போற்றப் பெறுபவையாகும். திருவெண்காட்டுக் கோயில் வளாகத்தில் உள்ள முக்குளங்களில் நீராடினால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு அப்பேறு கிட்டும் என்பது திருஞானசம்பந்தரின் வாக்காகும். அதுபோன்றே திருவாரூர் கமலாலய திருக்குளத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரான தண்டியடிகள் அக்குளத்து நீரில் மூழ்கி கண் பார்வை பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆற்றிலிட்ட பொன்னை ஆரூர் குளத்தில் மூழ்கி அங்கிருந்து எடுத்த அதிசயமும் நிகழ்ந்துள்ளது. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு அதே திருக்குளத்து நீரால் நமிநந்தியடிகள் ஆரூர் கோயிலில் விளக்கெரித்த அற்புதமும் அங்கு நிகழ்ந்துள்ளது. திருநாவுக்கரசர் அந்நிகழ்வினை.

ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நமிநந்தி

நீரால் விளக்கிட்டமை நீள்

நாடறியுமன்றே

 - எனத் தம் தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சோழநாட்டில் ஏமப்பேரூரில் அந்தணர் குலத்தில் பிறந்த நமிநந்தியடிகள் திருவாரூர் பெருமான்மீது மிகுந்த பற்றுடைய சீலராக வாழ்ந்தார். ஒருநாள் ஆரூர் அரநெறிப் பெருமான் முன்பு திருவிளக்கு ஏற்ற வேண்டுமென திருவுளங்கொண்டார். தம்மூர்க்குச் சென்று நெய் கொண்டுவராத நிலையில் ஆரூரில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று நெய் வேண்டினார். அங்கிருந்தவர்கள் நமிநந்தியடிகளை நோக்கி “கையிலே ஒளிவிட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவருக்கு விளக்கு தேவையற்றது. நெய் தர இயலாது. விளக்கெரிக்க வேண்டுமாயின் குளத்து நீரை முகந்து எரிப்பீராக” என்று ஏளனம் செய்தனர். அது கேட்டுப் பொறாத நமிநந்தியடிகள் அரநெறிப்பெருமான் திருமுன் சென்று கீழே வீழ்ந்து வணங்கினார். அப்போது “நமிநந்தியே நின் கவலையை மாற்றுக. திருக்குளத்து நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக” என்ற அசரீரி வாக்கு கேட்டது.

அதுகேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், உடன் கமலாலய குளத்திற்குச் சென்று நீரை முகந்து கொண்டு வந்து விளக்கில் திரியிட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். விடியுமளவும் திருவிளக்குகள் நீராலேயே எரிந்தன. இந்த அதிசயம் கண்டு அனைவரும் வியந்தனர். நமிநந்தியடிகள் நீரால் விளக்கெரித்த திருக்கோயில் திருவாரூர் தியாகேசர் கோயில் வளாகத்தின் உள்ளேயே உள்ள மற்றொரு ஆலயமாகும். கமலாலயம் எனப்பெறும் ஆரூர் கோயிலின் திருமூலட்டானம் (புற்றிடங்கொண்டார் திருக்கோயில்) தனியாகப் பாடல் பெற்ற மற்றொரு தேவாரத் தலமாகும். நமிநந்தியடிகள் விளக்கெரித்த ஆலயத்தினை அரநெறி என்றும் அசலேசம் என்றும் குறிப்பிடுவர். திருமூலட்டநாதர் கோயிலின் சோமாஸ்கந்தமூர்த்திதான் தியாகேசர் எனப் போற்றப் பெறுகின்றார்.

அவரே இக்கோயிலின் பிரதான தெய்வம். தில்லைக் கோயிலுக்கு சபாநாயகர் எனும் ஆடல்வல்லான் எவ்வாறு பிரதான தெய்வமோ, அதுபோன்று ஆரூர் கமலாலயத்திற்கு தியாகராஜரே மூலமூர்த்தி. அந்த தியாகேசமூர்த்தி நமிநந்தி அடிகளுக்கு மீண்டும் ஓர் அற்புதத்தைக் காட்டி ஆட்கொண்டார். சோழமன்னர் ஆரூர் பெருமானுக்கு நிவந்தம் பல அளித்துப் பங்குனி உத்திரப் பெருவிழாவைச் சிறப்புறச் செய்தற்கு நமிநந்தியடிகள் உறுதுணையாய் விளங்கினார்.

திருவாரூர் பெருமான், திருவிழா நாட்களில் ஒருநாள் மணலி என்ற ஊருக்கு திருவுலா எழுந்தருளினார். எல்லா மக்களும் அங்கு கூடி இறைவனை வணங்கிச் சென்றனர். நமிநந்தி அடிகளும் அவர்களுடன் சென்று ஆரூர் பெருமானின் திருவோலக்கம் கண்டு மகிழ்ந்தார். இறைவன், மீண்டும் ஆரூர் கோயில் வருவதற்கு மாலை நேரமாயிற்று. நமிநந்தியடிகள் தம்மூர் ஏமப் பேரூர் செல்வதற்கு நள்ளிரவாயிற்று. சென்றவர் வீட்டினுள்ளே புகாமல் புறக்கடையில் படுத்து உறங்கலானார்.

அந்நிலையில், அவர் மனைவி வந்து அவரை துயிலெழுப்பி வீட்டினுள்ளே எழுந்தருளி சிவார்ச்சனையும், தீவார்த்தனையும் முடித்துக்கொண்டு உறங்கலாம் என்றார். அதை கேட்ட நமிநந்தியடிகள், இன்றைய தினம் ஆரூர் பெருமான் மணலிக்கு எழுந்தருளியபோது தானும் உடன் சேவித்துச் சென்றேன். பல இடங்களுக்கும் சென்றதாலும் பலரைத் தீண்டியதாலும் தூய்மைக் குறைவாகவுள்ளேன். நீராடிய பின்னரே வீட்டிற்குள் வருதல் வேண்டும். குளிப்பதற்கு நீர் கொண்டுவா என்றார். மனைவியாரும் நீர் எடுக்க முனைந்தார்.

இதற்கிடையில், நமிநந்தியடிகளுக்கு சிறிது உறக்கம் வந்தது. அப்போது வீதிவிடங்கப் பெருமானாகிய ஆரூர் பெருமான் கனவில் தோன்றி “அன்பனே திருவாரூரில் பிறந்தார்கள் எல்லோரும் நம்முடைய கணங்கள் அதை நீ காண்பாய்” என்று சொல்லி மறைந்தருளினார். உறக்கம் நீங்கி விழித்தெழுந்த நமிநந்தியடிகள், தாம் முன்பு மடியாக இருக்கிறோம் என்று நினைத்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடி வீட்டினுள்ளே சென்று சிவபூஜையை முடித்து மனைவியார்க்கு நிகழ்ந்ததைச் சொன்னார். பொழுது விடிந்தபின் திருவாரூர் சென்றார். அப்போது திருவாரூர் பிறந்த அனைத்து உயிர்களும் சிவசொரூபம் பெற்றவைகளாக தோன்றக் கண்டார். தான் செய்த பிழையினைப் பொறுத்தருள ஆரூர் பெருமானை இறைஞ்சி வேண்டினார். இந்நிகழ்வுகளால் அடிகளார் தெளிந்த சிவஞானம் பெற்றார்.

பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தைக் காட்சி வடிவில் காட்டுவதற்கென்றே படைக்கப்பெற்ற திருக்கோயில் தாராசுரம் சிவாலயமாகும். அங்கு நீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள் வரலாறும், நமிநந்தியடிகள் கண்ட திருவாரூர் பிறந்தார் அனைவர்தம் காட்சியும் சிற்றுருவச் சிற்பக் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. முதல் காட்சியில் திருவாரூர் அரநெறி எனும் கோயிலும் அதற்கு முன்பு திருவாரூர் தீர்த்தக் குளமும் உள்ளன. குளத்தில் தாமரை, பறவை, மீன் போன்ற அனைத்தும் காணப்பெறுகின்றன. நமிநந்தியடிகள் கையில் ஒரு சொம்பினை ஏந்தி குளத்து நீரை முகர்வது முதற்காட்சியாக உள்ளது. அவ்வாறு முகந்த நீரை எடுத்துச் சென்று கோயில் முன் உள்ள விளக்கு தம்பத்தில் உள்ள விளக்குகளில் வார்த்து விளக்குகளை ஏற்றுவது இரண்டாம் காட்சியாக உள்ளது. இக்காட்சிக்கு மேலாக சோழர்கால எழுத்துப் பொறிப்பாக “நமிநந்தியடிகள்” என்ற கல்வெட்டு உள்ளது.

இதே கோயிலில், தொகை அடியார்கள் வரலாறு காட்டும் சிற்பங்கள் வரிசையில் “திருவாரூர் பிறந்தார்கள்” என்ற கல்வெட்டுப் பொறிப்பும் அதற்குக் கீழாக ஒரு காட்சித் தொகுப்பும் உள்ளது. ஒருபுறம் திருவாரூர் கோயில் திகழ்கின்றது. அதற்கு எதிரே ஒரே வரிசையில் நால்வர் அமர்ந்துள்ளனர். அவர்களுக்குப் பின்புறத்தில் ஒரு மரமும், பசுவொன்றும் காணப்பெறுகின்றன. மரத்தில் அணில், பறவைகள் ஆகியவை உள்ளன. இறைவன் முன் எல்லா பிரிவு மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் என அனைத்து உயிர்களும் சமமானவையே என்பதை இக்காட்சி புலப்படுத்துவதோடு, திருவாரூரில் பிறந்த அனைத்தும் சிவசாரூபம் பெற்றவையே என்பதையும் புலப்படுத்துகின்றது.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related Stories: