சிற்பமும் சிறப்பும்-மதங்கீஸ்வரர் ஆலயம்

காலம்: ராஜசிம்ம பல்லவனால்(பொ.யு.690-725)  துவக்கப்பட்டு இரண்டாம் நந்திவர்மனால்(731-796 CE) கட்டி முடிக்கப்பட்டது.ஆலயம்:மதங்கீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் (பேருந்து நிலையம் அருகில்).

ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த சிறிய, ஆனால் அழகு மிகுந்த ஆலயம், இன்று கால ஓட்டத்தில் சிதைந்திருந்தாலும் மயக்கும் எழிலுடன் ஈர்க்கிறது.காஞ்சிபுராணம் தல வரலாற்றில், மதங்கி முனிவர் லிங்கம் நிறுவி வழிபட்டதாக கூறப்படுகிறது.

ஆலயக்கட்டுமானத்தின் நான்கு முனைகளிலிலும் பாயும் சிம்மத்தின் மீது அமர்ந்திருக்கும் வீரன் சிற்பம் உள்ளது. முன் மண்டபத்தில் அழகிய சிம்மத்தூண்கள் வரவேற்கின்றன.முக மண்டபத்தின் உட்புற சுவர்களில் ராவண அனுக்கிரஹ மூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, கங்காதரர், ஊர்த்துவதாண்டவமூர்த்தி புடைப்புச்சிற்பங்களாக காட்சி தருகின்றனர்.

கருவறையின் இருபுறமும்  கொம்புகள், பெரிய காதுகளுடன் பல்லவர் பாணி துவாரபாலகர்கள் காத்து நிற்கின்றனர்.

கருவறையின் உள்ளே 16 பட்டைகளுடன் அமைந்த சிவலிங்கம் உள்ளது. லிங்கத்தின் பின்புற சுவற்றில் இறைவன் சோமஸ்கந்த மூர்த்தியாக அழகுடன் வடிக்கப்

பட்டுள்ளார்.ஆலய வெளிப்புற சுவர்களில் யோக நிலையில் அமர்ந்த சிவ பெருமான்,  நடனமிடும் சிவன், பிரம்மா, திருமால், துர்க்கை, சண்டேஸ்வர அனுகிரஹ  மூர்த்தி என பல்வேறு சிற்பங்கள்  அலங்கரிக்கின்றன.  பல சிற்பங்கள் சிதைந்து அடையாளங்காண இயலாத  நிலையில் உள்ளன.இந்திய தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மது ஜெகதீஷ்

Related Stories: