குழந்தை கடத்தல் கும்பலை அம்பலப்படுத்தும் படம்

தெருவில் விளையாடிய குழந்தை கடத்தல், மருத்துவமனையிலிருந்து குழந்தை கடத்தல், வீட்டுக்குள் நுழைந்து குழந்தை கடத்தல் என பல்வேறு சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறுகிறது. அதற்கான ஆதாரங்களும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகிறது. இந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது ‘அவதார வேட்டை’ படம்.  இதுபற்றி தயாரிப்பாளரும், இயக்குனருமான ஸ்டார் குஞ்சுமோன் கூறியதாவது: குழந்தை திருட்டு என்பது பொதுவாக பேசப்பட்டாலும் அந்த கும்பல் இதற்காக தீட்டும் திட்டம் பல்வேறு யுக்திகளுடன் அமைந்திருக்கிறது.

இதுவரை நடந்த குழந்தை கடத்தல் சம்பவங்களை ஆராய்ந்தபோது இந்த உண்மை தெரியவந்தது. ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள். ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை அறிவதற்காக வித்தியாசமான குறியீடுகளை கையாண்டு கடத்துகிறார்கள்.

அந்த கும்பலை துப்பறிந்து ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை மையமாக வைத்து இதன் கதை உருவாகியிருக்கிறது.வி.ஆர்.விநாயக் ஹீரோ. மீரா நாயர் ஹீரோயின். ராதாரவி, சீனிவாசன், ரியாஸ்கான், சோனா, மகாநதி சங்கர் நடிக்கின்றனர். ஏ.காசி விஷ்வா ஒளிப்பதிவு. மைக்கேல் இசை. பொள்ளாச்சி, ஊட்டி, உடுமலைப் பேட்டை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. இவ்வாறு இயக்குனர் கூறினார்.

× RELATED சென்னையில் கடத்தல் கும்பலிடம் இருந்து 20 கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது