×

குறளின் குரல்-பயன்படாத செல்வம்

பயன்படாத செல்வம் குறித்து வள்ளுவர் சிந்தித்திருக்கிறார். அந்தக் கருத்து குறித்துப் பயனுள்ள பத்துக் குறட்பாக்களை அவர் எழுதியுள்ளார்.
(தலைப்பு: நன்றியில் செல்வம்.
அதிகாரம் 101).
 `வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்.’
(குறள் எண் 1001)
பெரும்பொருளைச் சேர்த்துவைத்து அதனை நுகராதவன் இறந்துபோனால் அந்தச் செல்வத்தால் அவனுக்கு என்ன பயன்?

`பொருளானாம் எல்லாமென்று ஈயாது
இவறும்மருளானாம் மாணாப் பிறப்பு.’
(குறள் எண் 1002)
பொருளினால் எல்லாமே உண்டாகும் என்று, அதை எவருக்கும் கொடாமல், அதன் மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும்.
`ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.’
(குறள் எண் 1003)

பொருள் தேடுவதையே விரும்பி புகழை வேண்டாத மாந்தரின் பிறவி நிலத்திற்குச்
சுமையாகும்.
`எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.’
(குறள் எண் 1004)

பிறர்க்கு உதவாமையால் ஒருவராலும் விரும்பப்படாத செல்வந்தன் தன் காலத்திற்குப்பின் எஞ்சிநிற்பதாக எதனைக் கருதுவானோ?
`கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல்.’
(குறள் எண் 1005)
இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக்
கோடி கோடியான செல்வம் இருந்தாலும்,
அதனால் பயன் இல்லை.
`ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான்
தக்கார்க்கொன்றுஈதல் இயல்பிலா தான்.’
(குறள் எண் 1006)

தானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ்செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான்.
`அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று.’
(குறள் எண் 1007)

ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், அழகிய பெண் திருமணம் செய்து கொள்ளாமலே முதுமை அடைந்ததைப் போன்றதாம்.
`நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.’
(குறள் எண் 1008)

வறியவராலே விரும்பி வரப்படாத கருமியின் செல்வம், நடு ஊரில் நிற்கின்ற நச்சுமரமானது
நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றது. அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை,
`அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.’
(குறள் எண் 1009)
 
உறவினரிடம் அன்பு செய்தலை விட்டு, நுகராமல் தன்னையும் வருத்திக்கொண்டு, அறத்தையும் பாராது ஒருவன் தேடிய பெரும் பொருளைப் பிறர்தாம் கொண்டு போவார்கள்.
`சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.’
(குறள் எண் 1010)

கொடுத்துப் புகழ்பெற்ற செல்வர் சிறிது காலம் வறுமை அடைந்தால், அது மேகம் சிறிது காலம் மழை பெய்யாமல் வறண்டிருப்பதைப் போன்றதே, அவர்களின் வறுமை
தற்காலிகமானதுதான்.இப்படிப் பத்துக் குறள்களில் பயனில்லாத செல்வத்தின் தன்மையை விளக்கி எச்சரித்து செல்வத்தைப் பயன்படுத்துங்கள் என்கிறார் வள்ளுவர்.
பணம் வைத்திருப்பதில் தவறில்லை ஆனால், பணத்தின் மீது ஆசை வைத்திருப்பதுதான் தவறு.  பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம். பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று நினைப்பதும் தவறு. பணத்தால் பலவற்றை வாங்க முடியாது என்பதே உண்மை நிலை.

பணத்தின் மூலம் சாப்பாட்டை வாங்கலாம், பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் உடல் நலத்தை வாங்க முடியாது. மெத்தையை வாங்கலாம் உறக்கத்தை வாங்க முடியாது. புத்தகத்தை வாங்கலாம் அறிவை வாங்க முடியாது. நகையை வாங்கலாம் அழகை வாங்க முடியாது. ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது. கூட்டத்தை வாங்கலாம் நண்பர்களை வாங்க முடியாது.

இப்படிப் பணத்தால் வாங்க முடியாத எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன. ஆனால், பணத்தால் வாங்கமுடியாத விஷயங்களால்தான் வாழ்க்கை இனிமையாகிறது. தலையெழு வள்ளல்கள் என்று குமணன், சகரன், சகாரன், செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி), துந்துமாரி, நளன், நிருதி ஆகிய ஏழு மன்னர்கள் சொல்லப்படுகிறார்கள். இடையேழு வள்ளல்கள் என அழைக்கப்படுபவர்கள் அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கண்ணன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியோர். கடையேழு வள்ளல்கள் எனப் பெருமை பெற்றவர்கள் ஆய், அதியன், ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன். இவர்களெல்லாம் செல்வத்தின் பயன் ஈதலே என்றுணர்ந்து வாரி வாரிக் கொடுத்த வள்ளல்கள். மகாபாரதக் கர்ணன் பெரும் வள்ளலாக வாழ்ந்தவன்.

இவ்விதம் வாழ்ந்தவர்களைத்தான், கடந்த கால வரலாறு மதிப்புடன் பதிவு செய்கிறது. காலம் காலமாக அந்த வள்ளல்களின் பெருமைகள் போற்றப்படுகின்றன. அல்லாது, எச்சில் கையால் காக்கை ஓட்டாத கருமிகளை மக்களும் மதிப்பதில்லை. வரலாறும் பதிவு செய்வதில்லை.  

`பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின்  யாரே அனுபவிப்பார்பாவிகாள் அந்தப் பணம்.’
என்று தாம் எழுதிய நல்வழி என்ற நூலில் கேட்கிறார் அவ்வையார்.
 ஆவி போவதற்குள் நம்மிடம் உள்ள பணத்தைத், தானதர்மங்களில் செலவிட வேண்டும்

என்ற கருத்தைச் சொல்லும் வெண்பா இது. `பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும், பணம் பாதாளம் வரை பாயும், பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ என்பன போன்ற பழமொழிகள் தமிழில் நிறைய உண்டு. தமிழ்த் திரைப்படங்கள் பல பணத்தின் நிலையாமை குறித்துப் பேசுகின்றன. பணம் படுத்தும் பாட்டைச் சித்திரித்துப் பல திரைப்படங்கள் வந்துள்ளன. பணமா பாசமா, பணம் படைத்தவன், பணக்காரக் குடும்பம், பணத்துக்காக, காசேதான் கடவுளடா, பணக்காரப் பிள்ளை, கை நிறையக் காசு, பணம் பத்தும் செய்யும், பணத்தோட்டம் போன்ற படங்கள் அவற்றில் சில.

 `சூது கவ்வும்’ திரைப்படத்தில் `காசு பணம் துட்டு மணி மணி’ என்று கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும் மனிதர்களைப் பற்றித்தான் பேசுகிறது. தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் வாழும் செல்வர்களின் செல்வத்தால் யாருக்கு என்ன பயன்? அவர்களுக்கே கூடப் பயனில்லையே?
சக்கரம் என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலொன்று, பயன்படாத செல்வம் எது என்பதை அழகாக விவரிக்கிறது.

`காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்

வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன்
முடிப்பான்

அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும்
பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு’

“பணம்” என்றே தலைப்புக் கொண்ட  திரைப்படத்தில் `எங்கே தேடுவேன்’
என்ற பாடல் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிப் பெரும்புகழ் பெற்ற பாடல். அந்தப் பாடல் இதோ;
`எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?

கஞ்சன் கையிலே சிக்கிக்கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும்
செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன்?
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?

பொன் நகையாய்ப் பெண் மேல்
தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?

இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன்?
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?

சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி
விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து
போனாயோ?
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே
தேடுவேன்?

இதுபோலவே `மனமுள்ள மறுதாரம்’ என்ற பழைய திரைப்படத்தில்
சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் ஒலிக்கும்
பாடல் பயனில்லாத செல்வத்தின் தன்மைகளைக்
கணீரென்று பட்டியலிடுகிறது;
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை இதை
எண்ணிடாது சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை?
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை

இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை
கனிரசமாம் மதுவருந்தி
களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே
கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின்
வாய்மொழியே இன்பம் - அவள்

இதழ் சிந்தும் புன்னகையே
அளவில்லாத இன்பம்..
மாடி மனை கோடி பணம்
வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்கு
தருவதல்ல இன்பம்

மழலை மொழி வாயமுதம்
வழங்கும் பிள்ளைச் செல்வம்
உன் மார் மீது உதைப்பதிலே
கிடைப்பதுதான் இன்பம்..
`பணத்தோட்டம்’ திரைப்படத்தில் வரும்
கண்ணதாசன் பாடலும் பயனில்லாத செல்வம் எப்படிப் பட்டதென்றும்,

பணத்தாசை எத்தகையதென்றும் பேசுகிறது.
`மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி
சங்கத்தால் பிறந்த இனம்

சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி - முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி
ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி - முத்தம்மா

கட்டையிலும் வேகாதடி
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி - முத்தம்மா
இயற்கைக் குணம் மாறாதடி!”

பெரும் செல்வந்தனாக இருந்த கணவன் கருமியாகவும் இருந்ததைப் பார்த்து வருந்தினாள் அவன் மனைவி. எவ்வளவோ முயன்றும் அவளால் அவனைத் திருத்த இயலவில்லை,
வாழ்நாள் முழுவதும் தன் செல்வத்தைத் தானும் அனுபவிக்காமலும் பிறர்க்கும் கொடுக்காமலும் இருந்த அவன், இறக்கும்போது மனைவியிடம் விந்தையான ஒரு வேண்டுகோள் வைத்தான். தான் சம்பாதித்த செல்வம் முழுவதையும் தன்னுடன் சமாதியில் வைத்துப் புதைத்துவிட வேண்டும் என வாக்குறுதி வாங்கிக்கொண்டான்.

யோசனையில் ஆழ்ந்த மனைவி சரியென்று சம்மதித்தாள். அவன் இறந்த பிறகு அவள் என்ன செய்தாள் தெரியுமா? தேவைப்பட்டால் அவன் எடுத்துக் கொள்ளட்டும் என,  வங்கியிலிருந்த அத்தனை பணத்திற்கும், அவன் பெயரில் ஒரு காசோலை எடுத்து அந்தக் காசோலையை அவன் சட்டைப் பைக்குள் வைத்துப் புதைத்துவிட்டாள்!ஏழைகளுக்குக் கொடுப்பதற்காகவே பணம் இறைவனால் நமக்கு அருளப்படுகிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டு வாழ்ந்தால், வாழ்க்கை பயனுள்ளதாகும். தானும் அனுபவிக்காது பிறருக்கும் கொடுக்கப்படாத பயனில்லாத செல்வத்தால் வாழ்க்கை பாழாகும். செல்வம் குறித்த வள்ளுவரின் உயர்ந்த கருத்துகளை எல்லோரும் பின்பற்றி நடக்கும்போது சமுதாயம் தானே மேலோங்கும்.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?