ஐவேளைத் தொழுதால்!

இறைத்தூதர் அவர்கள் விண்ணேற்றம் சென்றபோது இறைவனால் கடமையாக்கப்பட்ட ஒரு வழிபாடுதான் ஐவேளைத் தொழுகை. முதலில் இறைவன் ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். அந்தக் கட்டளையைப் பெற்றுக் கொண்டு நபிகளார் திரும்பி வந்தபோது வானுலகில் இறைத்தூதர் மூஸா குறுக்கிட்டு, “இறைவன் என்ன சொன்னான்?” என்று கேட்டார். “ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளான்” என்று நபிகளார் பதில் கூறினார்.உடனே மூஸா அவர்கள், “இது மிகவும் அதிகம். உம் சமுதாயத்தினர் ஐம்பது வேளைத் தொழ மாட்டார்கள். இறைவனிடம் திரும்பச் சென்று  தொழுகையின் எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லுங்கள்” என்றார்.

இறைத்தூதர் அவர்களும் திரும்பச் சென்று இறைவனிடம் முறையிட இறைவன் நாற்பது வேளைத் தொழுகையைக் கடமையாக்கினான்.“இதுவும் அதிகம்தான். இன்னும் குறைக்கச் சொல்லுங்கள்” என்று மூஸா நபி வற்புறுத்த, நபிகளார் மீண்டும் இறைவனிடம் திரும்பிச் சென்று முறையிட்டார். இறைவன் முப்பது வேளைத் தொழுகையைக் கடமையாக்கினான். இன்னும் குறைக்கும்படி மூஸா நபி வலியுறுத்த, இப்படியே ஒவ்வொரு முறையும் சென்று நபிகளார் இறைவனிடம் முறையிட, இறைவன் இறுதியாக ஐந்து வேளைத் தொழுகையைக் கட்டாயக் கடமை ஆக்கிய பிறகு ஒரு நற்செய்தியையும் அறிவித்தான்.

“யார் நாள்தோறும் ஐவேளைத் தொழுகையை முறையாக நிறைவேற்றுகிறாரோ அவருக்கு ஐம்பது வேளை தொழுத நன்மைகளை அருள்வேன்.”

நபிகளார் மகிழ்ச்சியுடன் ஐவேளைத் தொழுகைக்கான கட்டளையுடன் பூமிக்குத் திரும்பினார்.இஸ்லாமிய வாழ்வியலின் மற்ற கடமைகள் எல்லாம் பூமியில்தான் கடமையாக்கப்பட்டன. ஆனால், தொழுகை மட்டும் அண்ணலாரின் விண்ணேற்றத்தின்போது வானத்தில் வைத்துக் கடமையாக்கப்பட்டது.

மனிதன் எங்கிருந்தாலும் சரி, போர்முனையில் இருந்தாலும் சரி, மருத்துவமனையில் இருந்தாலும் சரி, தொழிற்சாலையில், பயணத்தில், பணிமனையில் என எந்த இடத்தில் இருந்தாலும் சரி தொழுகையை விட்டுவிட அனுமதி இல்லை.மறதி அல்லது தூக்கத்தினால் தொழுகை நேரம் தவறிவிட்டாலும் நினைவு வந்தவுடன் அல்லது தூக்கம் கலைந்தவுடன் உடனே தொழுதுவிட வேண்டும்.அந்த அளவுக்கு மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ள வழிபாடுதான் தொழுகை.

- சிராஜுல்ஹஸன்

Related Stories: