×

மேன்மையான வாழ்வருளும் தான்தோன்றீஸ்வரர்!

சுந்தர சோழபுரம்

சுந்தரசோழபுரம் என்ற ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நமண சமுத்திரத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை நகருக்கு மேற்கில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 28கி.மீ தொலைவில் அமைந்துள்ள சின்னஞ்சிறிய ஊராகும். சுந்தரசோழபுரம் என்ற பெயர்க் காரணத்தை பார்த்தால், தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் இராஜராஜனின் தந்தையான பொன்மாளிகைத் துஞ்சிய சுந்தரசோழனின் பெயரால் உருவான ஊர் எனக் கருதலாம். அதன் பிறகு கால நீட்சியில் பிற்கால சோழபாண்டியர்களது காலத்தில் அதாவது, கி.பி.12,13ஆம் நூற்றாண்டளவில் தாங்கள் வாழும் இடத்தின் பெயரால், சுந்தர சோழபுரம் ஊரிலிருந்தவர்கள்  சுந்தரசோழபுரத்து நகரத்தார் என்று கல்வெட்டுகளில் கூறப்படுகின்றனர்.  நகரத்தார்கள் ஒரு பகுதியை கோயில்களில் திருப்பணி செய்தல், ஊருணிகள் வெட்டுதல் போன்ற தான தர்மங்களை செய்வது இம்மைக்கு மட்டுமல்லாது மறுமைக்கும் சுகமளிக்கும் என்று நம்பினர். நம்பிக்கையே வாழ்க்கை என்றும் செயல்பட்டனர்.  

சுந்தர சோழபுரத்து சிவன் கோயில், மேலப்பனையூர் அகிலாண்டேஸ்வரி  கோயிலின் அம்பாள், மற்றும் அக்கோயிலுள்ள சுவாமி கோயில் திருநாள் மண்டபம் ஆகியவற்றோடு செவலூர், லெம்பலக்குடி, பேரையூர், மாங்குடி, குளமங்கலம் என சுமார் 15 ஊர்களில் கோயில் திருப்பணிகளும், குடிநீர் ஊருணிகளையும் வெட்டி ஆங்காங்கு கல்வெட்டுகளும் வைத்துள்ளனர். சுந்தர சோழபுரம் சிவன் கோயில் ஊரின் வடக்கில் ஒரு ஊருணியின் மேல்கரையில் கிழக்கு பார்த்த நிலையில் ஒரு  சுற்றுமதிலுக்குள் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் என்ற  அமைப்பில் காணப்படுகிறது. மேற்படி சுந்தர சோழபுரத்தின் ஈசர் தான்தோன்றி  ஈசர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
கோயிலின் கட்டடக் கலையானது உபானம், ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம் பட்டி, வேதிகை, சுவர் போதிகை,  கூரை, யாளிவரி அதற்கு மேல் விமானம் ஆகியவைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

பிரஸ்தரத்தில் கூடுகள் யாளிவரிகள் காணப்படுகின்றன. கருவறையில் தெற்கு, மேற்கு, வடக்கு என்று மூன்று பக்கங்களிலும் மூன்று தேவகோட்டங்களும் அர்த்த மண்டபத்தின்  தெற்கிலும் வடக்கிலும் இரண்டு தேவகோட்டங்களும் உள்ளன. கருவறை தெற்கு  தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். கருவறை பின்புறம் உள்ள தேவகோட்டத்திலும் வடக்கு தேவகோட்டத்திலும் சிலை ஏதுமில்லை. அர்த்த மண்டபம் தெற்கு தேவகோட்டத்தில் நடனக் கோலத்தில் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். அர்த்த மண்டபம் வடக்கு தேவகோட்டத்தில் சிலை இல்லை.  சுவரில் ஆங்காங்கு அரைத்தூண்களும், கருவறை அர்த்த மண்டபம் இணையும் இடத்தில்  கும்பஞ்சரங்களும் காட்சி தருகின்றன.

அரைத்தூண்கள் கால்கள்,  கலசம் குடம் பலகை என்ற அமைப்பு கொண்டவையாக உள்ளன. கருவறை போதிகையின் அமைப்பு பிற்காலச் சோழர்கால பாணியில் உள்ளதால் தான்தோன்றீசர் கோயில், பிற்காலச் சோழர்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம். எல்லாக்  கோயில் களிலும் காணப்படும் பரிவாரதேவதைகள் இக்கோயிலும் காணப்படுகின்றது. கோயிலின் தென் மேற்கு மூலையில் மூலப்பிள்ளையாரும், மூலப்பிள்ளையாருக்கு அடுத்து மகாலட்சுமியும், வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் வள்ளி  தெய்வானையுடன் காட்சி தருகின்றனர்.

கருவறையின் இடது புறத்தில்  சண்டிகேஸ்வரர் சிறிய சந்நதியில் அமர்ந்துள்ளார். சந்திர சூரியருக்கு  மதிலின் கிழக்கு சுவரின், உள்பகுதியில் மாடம் அமைத்து அதில் வைக்கப்பட்டுள்ளனர். பைரவர் தனிச்சந்நதியில், மேற்கு நோக்கி நின்ற  கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாள் சந்நதியானது முன் மண்டபத்தின்  வடக்கில் கருவறை அர்த்த மண்டபத்தோடு தெற்குப் பார்த்த கோயிலாகவும், முன்  மண்டபத்தோடு அம்பாள் கோயிலின் வாயில் இணைக்கப்பட்டு காணப்படுகிறது. சுவாமி  கோயில் கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியாக காணப்படுகிறார்.

கல்வெட்டுச்  செய்தி - சுந்தரசோழபுரத்தில் தான்தோன்றி ஈஸ்வரர் கோயிலிலுள்ள  கல்வெட்டுக்கள் காலத்தால் முற்பட்டது. இரண்டாம் இராஜராஜ சோழனின் 12வது ஆட்சியாண்டு கல்வெட்டாகும். மேற்படி கல்வெட்டு சுந்தர சோழபுரத்து  நகரத்தார்கள் மேற்படி இறைவனுக்கு ஒரு பலமும் கொடுக்க கடவதாக என்று பொருளின்  பெயர் இல்லாமல் கூறுவதால், ஏதோ ஒரு பொருள் மேற்படி இறைவனுக்கு படைப் பதற்கு  கொடுத்ததை தெரிவிக்கிறது. கல்வெட்டு சிதைந்ததாக உள்ளதால் முழுச் செய்தியையும் அறியமுடியவில்லை.

மேற்படி சுந்தரசோழபுரம் சிவன்  கோயிலில், தென்புறம் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் 23வது  ஆட்சியாண்டு கல்வெட்டு தான்தோன்றி ஈஸ்வரர் கோயிலின் மையப்பத்தியில், 18பாவுகற்களை கொடுத்து தட்டோடும் இட்டதை தெரிவிப்பதோடு, சுந்தரசோழ புரம்  `தேசியுகந்த பட்டணம்’ என்ற பெயர் கொண்டதாகவும், ஒல்லையூர் கூற்றத்தை  சேர்ந்த ஊர் என்பதையும் தெரிவிக்கிறது. மேற்படி தான்தோன்றீஸ்வரர் கோயிலின் தென்புறம் சுவரிலுள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியன் 9வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு சுந்தர சோழபுர நகரத்தார்கள் துகவூருடையார் பெண்டுகளில் பிள்ளாண்டாருக்கு, நகரத்தார்கள் பெரிய வயலில் நில விலைப்பிரமாணம் செய்து கொடுத்ததைத் தெரிவிக்கிறது.

தான்தோன்றீஸ்வரர் கோயிலின் முன்பாக  உள்ள ஊருணியிலுள்ள விஜயநகர மன்னன் வேங்கடபதிராயரின் சகாத்தம் 1597ஆம் ஆண்டு கல்வெட்டு சுந்தரசோழபுரம் நகரத்தாரில் கூடலுடையான் இக்கீழை ஊருணியையும், அவ்வூருணி கல்கட்டையும் செய்ததைத் தெரிவிக்கிறது. தான்தோன்றீஸ்வரர் கோயிலின்  சகாத்தம் 1509ம் ஆண்டுக் கல்வெட்டு செவலூர் ஊரார் இரண்டு வயல்களை முப்பது பணத்திற்கு விற்று அப்பணத்தின் வட்டியைக் கொண்டு மேற்படி இறைவனுக்கு அமுது  செய்து தருமாறு கட்டளை இட்டதைத் தெரிவிக்கிறது. சிவன் கோயிலுள்ள சில கல்வெட்டுகள் அக்கோயிலின் திருநிலைக்கால், திருவக்கிரமண்டபம்,  பலகைப்படை, உத்திரங்கள், கர்ப்பக்கிரகத்துதளம் ஆகியவை சுந்தரசோழபுரத்து நகரத்தார்களில் சிலர் செய்தமையைத் தெரிவிக்கிறது.

Tags :
× RELATED சுந்தர வேடம்