×

வாகீஸ்வரன் எனும் வேள்வியின் தலைவன்

சிவபெருமானின் திருவடிவங்கள் பலவாகும். அவற்றை சிவமூர்த்தங்கள் எனக் குறிப்பர். நாளும் செய்யப்பெறுகின்ற வேள்விகளின்போது ஆகம விற்பன்னர்களால் வேள்விக் குண்டத்தின் முன்பாக ஆவாகணம் செய்யப்பெறுகின்ற ஒரு மூர்த்தியின் திருவடிவம், சிலை வடிவில் போற்றப் பெற்றமை காலப்போக்கில் மறைந்தமையால் அத்திருவுருவத்தினைப் பலரும் அறிந்திலர். வாகீஸ்வரர் எனச் சிவபெருமானையும், வாகீஸ்வரி என உமா பரமேஸ்வரியையும் குறிக்கும் அத்திருவடிவங்கள் பற்றி இனிக் காண்போம்.

திருநாவுக்கரசு பெருமானார் நின்ற
திருத்தாண்டகப் பதிகத்தில்,
இரு நிலனாய்த் தீ ஆகி நீரும் ஆகி
இயமானனாய் எறியும்
காற்றும் ஆகி

அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி
ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகிஎன்றும்,
ஆவாகி ஆவின் ஐந்தும் ஆகி
அறிவாகி அழல் ஆகி அவியும் ஆகி
நாவாகி நாவுக் கோர் உரையும் ஆகி
நாதனாய் வேதத்தின்
உள்ளோன் ஆகி”
என்றும்,

திருஞானசம்பந்தர் திருச்சிரபுரத்துப்
பதிகத்தில்,
பாரும் நீரோடு பல்கதிர்
இரவியும் பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார்என்றும் சிவபெருமானைப் போற்றியுள்ளார்.

இப்பதிகப் பாடல்கள் வாயிலாக வேள்விகள் அனைத்திற்கும் எஜமானன் சிவன்தான் என்பதறிகிறோம். பிரபஞ்ச சாரசார சங்கிரஹம் எனும் சுவடி நூல் ஹோமம் செய்யும் முறைகளையும், விதிகளையும் பற்றி விரிவாகக் கூறுகின்றது. இதில் பரமேஸ்வரனையும், பரமேஸ்வரியையும் வாகீஸ்வரராகவும், வாகீஸ்வரியாகவும் ஆவாகித்து வாகீஸ்வரன் வாகீஸ்வரி திருவருளால் அக்னி பிறந்து, அந்த அக்னிக்கு நாமகரணம் சூட்டிப் பின்பே வேள்விக் குண்டத்தில் தீ மூட்டப்பட வேண்டும் என்றும், அத்தீயின் நாக்குகள் ஏழாகப் பெருகும்போது பூரணாகுதி செய்யப்பட வேண்டும் என்றும் விவரிக்கின்றது.

அஜிதாகமம் எனும் நூல் வாகீஸ்வரன் வாகீஸ்வரி ஆகியோரை ஆவாஹனம் செய்யும் முறையையும், தியான சுலோகங்களையும் கூறுகின்றது. காரணாகமும் வாகீஸ்வரன் வாகீஸ்வரி பற்றிய சுலோகங்களைக் கூறி அப்பெருமான்தான் அனைத்து வேள்விகளுக்கும் தலைவன் என உரைக்கின்றது. எனவே, நாவுக்கரசர் கூறும் இயமானனும், ஞானசம்பந்தர் உரைக்கும் வேள்வியின் தலைவனும் ஆகிய சிவபெருமானின் திருவடிவமும் வாகீச மூர்த்தி என்பதை வேத ஆகமங்கள் வழி உறுதி செய்ய முடிகின்றது.

தமிழ்நாட்டிலேயே சோழமண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும்தான் வாகீச மூர்த்தியின் திருவடிவங்களை மிகுதியாக நாம் காண முடிகின்றது.தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகேயுள்ள கண்டியூர், வீரசிங்கம்பேட்டை, செங்கமேடு, நாலுசாமி மேடு என்ற பகுதிகள் இரண்டாம் நந்திவர்மபல்லவன் காலத்தில் (கி.பி. 730 - 795) `நந்திபுரத்து ஆயிரத்தளி’ என்ற பெயரால் அழைக்கப்பெற்றது. அப்பகுதியில்தான் வாகீச மூர்த்தியின் வழிபாட்டுநெறி ஒருகாலத்தில் உச்சம் பெற்றுத் திகழ்ந்திருந்துள்ளது. இவ்வூர்களிலும், செந்தலை, தஞ்சையின் கரந்தை போன்ற இடங்களிலும் தற்போது வாகீச மூர்த்தியின் கற்சிற்பங்கள் இடம்பெற்றுத் திகழ்கின்றன. தஞ்சைப் பகுதியிலிருந்து எடுத்துச் செல்லப்பெற்ற மூன்று வாகீஸ்வரர் திருமேனிகள் ஆல்பிரட் நாக்ஸ் கலைக்கூடம், பப்பலோ அமெரிக்கா, மியூசியம் ஆப் பைன் ஆர்ட்ஸ், பாஸ்டன் அமெரிக்கா மற்றும் பம்பாயில் உள்ள தனியார் கலைக்கூடம் ஒன்றிலும் உள்ளன.

தனித்தன்மை வாய்ந்த வாகீச வடிவங்கள் சுமார் 5½ அடி உயரத்தில் தாமரை மலராகிய பீடத்தில் சுகாசன கோலத்தில் அமர்ந்தாராகக் காணப்பெறுகின்றன. வலக்காலைத் தொங்கவிட்டு இடக்காலை பத்ம பீடத்தின் மேல் மடிந்த நிலையில் அமர்ந்துள்ள பெருமானாருக்கு நான்கு திருமுகங்களும், சடாமுடியும் உள்ளன. ஒவ்வொரு முகத்திலும் ஒரு காதில் மகரக்
குழையும், ஒரு காதில் பத்ர குண்டலமும் இடம் பெற்றுள்ளன. இவைதான் சதுர்முகனாகிய பிரம்மனின் வடிவத்திலிருந்து வேறுபட்டவர் என்பதை நமக்குக் காட்டிடும் சான்றுகளாகும். ஒவ்வொரு முகத்திலும் நெற்றிக்கண் திகழும். எழில்மிகு கழுத்தணிகளோடு மூன்று மணிச்சரங்கள் உடைய புரிநூல் மார்பை அலங்கரிக்க உதரபந்தம் வயிற்றுக்கு மேற்பகுதியில் இடம்பெற்றிருக்க புஜங்களில் கேயூரமும், கைகளில் காப்புகளும், காலில் கழல்களும் திகழ்கின்றன.

நான்கு திருக்கரங்களுடன் திகழும் இப்பெருமானின் வலமேற்கரம் திரிசூலம் தாங்கும் பாவனையில் சில சிற்பங்களிலும் சிலவற்றில் திரிசூலமும் இடம்பெற்றிருக்க, இடமேற்கரம் அக்கமாலை ஏந்தியும், வலமுன் கரத்தில் காம்புடன் கூடிய தாமரை மொட்டும், இட முன்கரம் தொடைமேல் இருத்தியவாறு சுவடி பிடிக்கும் பாவனையிலும் காணப்பெறும். இவ்வடிவமே சதுரானன் எனப்பெறும் சதாசிவ மூர்த்தத்தின் ஒரு கோல நிலையாகும். சிவபெருமான் தாமரை மலர்மேல் அமர்ந்தவாறு ஒரு கரத்தில் தாமரை மொட்டு ஏந்திய நிலையில் திகழும் இந்த அரிய மூர்த்தத்தினை “தாமரைச் சைவன்” என்று அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாகீசர் போன்றே நான்கு தலைகளுடன் தாமரை மொட்டு ஏந்திய வராக வாகீஸ்வரி சிற்பங்கள் காணப்பெறும்.

தஞ்சைப் பகுதியில் இருந்த பல வாகீஸ்வரி திருமேனிகள் காலப்போக்கில் சிதைந்து காணப்பெறுகின்றன. சிதம்பரம் எனப்பெறும் தில்லைக் காளி கோயிலில் நான்கு திருமுகங்களோடு உள்ள மிக அரிய வாகீஸ்வரியின் திருவடிவம் காணப்பெறுகின்றது. தாமரைப் பீடத்தின்மேல் ஒரு காலை மடித்து, ஒரு காலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ள இத்தேவிக்கு நான்கு கரங்கள் உள்ளன. வல பின்கரத்தில் அக்கமணி மாலையும் முன்கரத்தில் கபாலமும் உள்ளன. இடப் பின்கரத்தில் திரிசூலமும், முன்கரத்தில் தாமரை மொட்டும் உள்ளன. மிக எழில் வாய்ந்த திருமேனி இதுவாகும்.

புவம்வளி கனல்புனல் புவிகலையுரை மறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை யவைதம,
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழுநிலனினில் நிலை பெறுவரே
எனத் திருஞானசம்பந்தர் திருச்சிவபுரத்துப் பதிகத்தில் பாடும்போது
“பதும நன்மலரது மருவிய சிவனாராக” வாகீசமூர்த்தியைக் குறிப்பிடுகின்றார்.

நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள்
வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் சிவபெருமான் கொண்ட உமையொரு பாகன், தட்சிணாமூர்த்தி, ஆடல்வல்லான், கஜசம்ஹாரமூர்த்தி, வீணாதாரர், வாகீஸ்வரர், கங்காதாரர் என்ற பல்வேறு வடிவுகளைக் காட்டித் திருக்கழிப்பாலை ஈசனைப் பாடுகின்றார்.

குண்டரொடு பிரித்தெனையாட்கொண்டார் போலும்
குடமூக்கிலிடமாகக் கொண்டார் போலும்
புண்டரீக புதுமலரா தனத்தார் போலும்

புள்ளரசை கொன்றுயிர் பின்கொடுத்தார் போலும்
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்
வியன் வீழிமிழலை நகருடையார் போலும்
எனத் திருவீழிமிழலைப் பதிகத்திலும்,

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்
தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்

என்று திருவலஞ்சுழி - திருக்கொட்டையூர் கோட்டீச்சரத்துப் பதிகத்திலும், அப்பர் சுவாமிகள் வாகீச சிவனாரைக் குறிப்பிடுகின்றார். மேலும், திருவிடைமருதூரில் மருதவாணரைப் போற்றிப் பரவும்போது,

தெரிவாய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும்
பதம் அஞ்சும் கதி அஞ்சும்
செப்பினாரும்
எரியாய தாமரை மேல்
இயங்கினாரும்
இடை மருது மேவிய ஈசனாரே

என்று குறிப்பிட்டுத் தாமரை மேல் அமர்ந்து இயங்கிய திறம் செப்பியுள்ளார். திருவாசகத்தின் குலாப்பத்தில் மணிவாசகப் பெருமானார் சிவபெருமானை தாமரைச்செல்வன் என வாகீச சிவனாரைக் குறிப்பிட்டுள்ளார். வேள்வியின் தலைவனாகிய வாகீச மூர்த்தியையும், அப்பெருமானது தேவியான வாகீஸ்வரியையும் எந்த தெய்வத்திற்குச் செய்யப்பெறுகின்ற வேள்வி என்றாலும் அங்கே அவர்களை ஆவாகித்துப் போற்றுவது நம் ஆகம மரபாகும்.

முதுமுனைவர் குடவாயில்
பாலசுப்ரமணியன்

Tags : Vakiswaran ,Velvi ,
× RELATED திருக்குறளில் வேள்வி!