கல்யாண வைபோகமே!

கோவிந்தா கோவிந்தா   என்ற நாமத்திற்கு உரியவர் ஏழுமலையான். பக்தர்களால் அன்போடு ேகாவிந்தா என்று போற்றப்படும் திருமலை திருப்பதி சீனிவாச பெருமாளின் கல்யாண உற்சவம் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி சென்னை தீவுத்திடலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த அரிய நிகழ்வு 14 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் சேகர்ரெட்டி, இருவரின் தலைமையில் இத்திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், அன்னமாச்சார்யா கலைக் குழுவினர் மற்றும் இதரத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் இந்த திருக்கல்யாணம் இனிதே வெகு விமர்சையாக நடைபெற்றது.

சென்னையில் `14 ஆண்டுகளுக்கு பிறகு 33 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் 1.5 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா நோயின் பாதிப்பினால் மக்களால் திருமலை செல்ல முடியாமலும் திருமாலை தரிசிக்க முடியாமல் இருந்தனர். அவர்களின் எண்ணத்தை அறிந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீனிவாச கல்யாண உற்சவத்தை பக்தர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் வகையில் பெரிய அளவில் நடந்தேறியது. திருமணத்தை கண்குளிர பார்க்க வந்த பக்தர்களில் வயதானவர்கள் அனைவரும் சவுகரியமாக அமரும் வண்ணம் நாற்காலிகளும் மற்றவர்களுக்கு தரைவிரிப்புகள் என ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும், ஸ்ரீவாரி உற்சவத்தில்  அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் சிலைகள் சாய்வு தளத்தில் வைக்கப்பட்டு நடுவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. திருக்கல்யாணத்தை காண வந்த அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு, ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பழம் மற்றும் ஒரு கோவிந்த நாமாவளி கையேடு வழங்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளுர் ஆலோசனைக் குழுவின் தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.

பக்தர்கள் கல்யாண உற்சவத்தை மனமகிழ கண்டு இல்லம் திரும்பும் போது அனைவரின் மனதும் ஸ்ரீனிவாச நாமமான கோவிந்தா.... வேங்கடரமனா... என் உள்ளம் குளிர்ந்து பாடியது தீவுத்திடல் பகுதி முழுவதும் ஒலித்தது என்றால் ஐயமில்லை.உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா நோய் பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

குடந்தை நடேசன்

Related Stories: