வரூதினி ஏகாதசியில் கிருஷ்ண தரிசனம்

மூலவர் கோபிநாதராகவும் உற்சவர் கிருஷ்ணராகவும் தாயார் கோபம்மாளாகவும் அருளும் ஆலயம், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் உள்ளது. மரங்கள் மற்றும் கால்நடைகளைக் காப்பதில் இந்த கண்ணன் நிகரற்றவன்.

சென்னை நங்கநல்லூரில் உள்ளது உத்தரகுருவாயூரப்பன் ஆலயம். இங்கு கிருஷ்ண ஜெயந்தியன்று இரவு பன்னிரெண்டு மணிக்கு முதலில் மகாமாயாவிற்கு பூஜைசெய்து பின் அடுத்த நிமிடம் கண்ணனுக்கு தீபாராதனை செய்து பூஜை செய்யப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரில் டாக்டர் ரங்கா சாலையில் ஆலயம் கொண்டுள்ளான் கண்ணன். தங்கத்தை உரசிப் பார்க்கும் கல்லால் ஆனவன் இந்த கண்ணன். ஆலயத்தின் சார்பில் பல்வேறு தர்மகாரியங்கள் நடைபெறுகின்றன. கிருஷ்ண ஜயந்தியின்போது ஆலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

வேணுகோபாலன், பார்த்தசாரதி, செம்பொன்ரங்க பெருமாள் ஆகிய பெயர்களுடன், பத்மாவதி, ஆண்டாளுடன் கண்ணன் அருளும் கோயில், திருவண்ணாமலையில் உள்ள செங்கம் எனும் ஊரில் உள்ளது.  தன் பரம பக்தனான ஏழை ஒருவனுக்கு புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.

மதனகோபாலசுவாமி எனும் பெயருடன் பாமா-ருக்மிணியுடன், மதுரையில் கண்ணன் அருள்பாலிக்கிறான். ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன் பெரியாழ்வாருடன் வந்து இந்த மதனகோபாலரை தரிசனம் செய்து விட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

காஞ்சிபுரத்திலேயே திருப்பாடகம் எனும் தலத்தில் பாண்டவதூதர் எனும் திருநாமத்தோடு கிருஷ்ணர் அருள்கிறார். ருக்மணி, சத்யபாமாவோடு சேவை சாதிக்கிறார். ஜெனமேஜெய மகராஜாவுக்கும் ஹரித முனிவருக்கும் இங்கே கிருஷ்ணனின் காட்சி கிடைத்தது.

ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்த கண்ணன் ராஜகோபாலனாக செங்கமலவல்லி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப்பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட காணிக்கைகளை இத்தலத்தில் சேர்க்கலாம் என்பது மரபு.

கண்ணன் தான் இருக்க காவளம் போன்ற பூம்பொழிலை தேடினான். இந்தக் காவளம்பாடியிலேயே நின்று விட்டான். அதனால் திருக்காவளம்பாடி என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. மூலவராக கோபாலகிருஷ்ணனாக (ராஜகோபாலன்), ருக்மணி - சத்யபாமாவோடு கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். சீர்காழி - பூம்புகார் பாதையில் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது வேணுகோபாலன் ஆலயம். கண்ணன், ருக்மிணி&சத்யபாமாவுடன் அருளும் கோயில். வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று பெருமாளுக்கு கண் திறப்பு மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன.

தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித தோற்றத்தில் பாண்டுரங்கனையும் ருக்மாயியையும் அலங்கரிக்கின்றனர். ஆலயம் முழுவதும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணனின் திருவிளையாடல்களை தஞ்சாவூர் ஓவியங்களாகவும் ம்யூரல் சிற்பங்களாகவும் தரிசிக்கலாம்.

பரமக்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இளையான்குடியில் உள்ள கோயிலின் மூலவரும் வேணுகோபாலன்தான். புல்லாங்குழல் நாத ஆறுதலாக

பக்தர்களின் எல்லா கவலைகளையும் கலைத்து நிம்மதியைத் தருபவர் இவர்.

மதுரை அருப்புக்கோட்டை பாதையில் 25 கி.மீ. தொலைவில் கம்பிக்குடி பிரிவிலிருந்து 4 கி.மீ. தொலைவில் கம்பிக்குடி ஸ்ரீவேணுகோபாலசுவாமி கோயில் அமைந்துள்ளது. நோயினால் துன்புறும் குழந்தைகளை இந்த வேணுகோபாலன், தெய்வீக மருத்துவனாகக் காக்கிறான்.

Related Stories: