குழந்தைகளை எப்படி வளர்ப்பது? சொல்லித் தருகின்றார் பெரியாழ்வார்...

தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று பிரபந்தம். தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும் என்று சதுரகராதி கூறுகிறது. சாதகம், பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம், அகப்பொருட்கோவை, ஐந்திணைச் செய்யுள், வருக்கக் கோவை, மும்மணிக்கோவை, அங்கமாலை, அட்டமங்கலம், அனுராகமாலை, இரட்டைமணிமாலை, இணைமணிமாலை, நவமணி மாலை, நான்மணிமாலை, நாமமாலை, பல்சந்த மாலை, பன்மணிமாலை, மணி மாலை, புகழ்ச்சிமாலை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழ்மொழியின் மிகப்பெரிய இலக்கியச் சிறப்பு இது. பிரபந்த வகைகளில் ஒன்று பிள்ளைத்தமிழ் இலக்கியம். தமிழிலே குழந்தையை தெய்வமாகவும், தெய்வங்களை குழந்தையாகவும் பார்க்கும் மரபு உண்டு. “குழவி மருங்கினும் கிழவது ஆகும்” (தொல்காப்பியம் புறத்திணையியல் 24) என்ற பாட்டில், கடவுளைக் குழந்தை வடிவமாக்கிப் பாடும் மரபும் உண்டு எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.இதில், ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல், இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தை, பத்துப் பருவங்களாகப் பிரித்து பாடுவார்கள். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது மரபு.

ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை, பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை என்பன குறித்தும் வரையறைகள் உண்டு. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, ஆகியவற்றைப் பொதுவாகக் கொண்டு இறுதியிலுள்ள மூன்று பருவங்களுக்கு ஈடாகச் சிற்றில் இழைத்தல், சிறு சோறாக்கல், குழமகன், ஊசல், காமவேள்நோன்பு முதலியவற்றுள் எவையேனும் மூன்றைப் பெற்று வரும். ஆயினும் பெரும்பாலும் நீராடல் அல்லது கழங்கு, அம்மானை, ஊசல் எனும் பருவங்களே

அதிகம் இடம் பெறுகின்றன.

இதனை;“சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி

மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய

அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே

பம்புசிறு தேரோடும் பத்து”

என்ற வெண்பாப் பாட்டியல் நூற்பாவாலும் (பாடல் 7) அறியலாம்.

பிள்ளைத்தமிழ், ஓன்றாம் திங்கள் முதல் பாமாலைகளால் தொடுக்கப்படும். ஒவ்வொரு இரண்டு மாதங்களிலும் குழந்தையின் வளர்ச்சியும், இந்த வளர்ச்சிக்கேற்ற செயல்பாடுகளும், விளையாட்டுகளும் அமையும். 3ஆம் திங்கள்: காப்பு, 5ஆம் திங்கள்: செங்கீரை, 7ஆம் திங்கள்: தாலாட்டு, 9ஆம் திங்கள்: சப்பாணி, 11ஆம் திங்கள்: முத்தம், 13ஆம் திங்கள்: வருகை, 15ஆம் திங்கள்: அம்புலி, 17ஆம் திங்கள்: சிற்றில் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது), நீராடல் (பெண்பால் பிள்ளைத் தமிழுக்குரியது), 19ஆம் திங்கள்: சிறுபறை (ஆண்பால் பிள்ளைத் தமிழுக் குரியது), அம்மானை (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது), 21ஆம் திங்கள்: சிறுதேர் (ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரியது), ஊசல் (பெண்பால் பிள்ளைத் தமிழுக்குரியது)

இதில், பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவரது பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதல் ஐந்து திருமொழிகளாக அமைந்துள்ளன. அவற்றில், 474 பாசுரங்கள் உள்ளன. இவற்றில், இவர் கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்துப் பாடிய பாடல்களும் உள்ளன. பாட்டியல் இலக்கண நூல்கள் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கண நெறியை வகுப்பதற்கு முன்னர் தோன்றிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் இவை என்பது தமிழ் அறிஞர்கள் முடிபு.

பெரியாழ்வார் பிள்ளைத் தமிழுக்கு என்ன சிறப்பு என்றால், இன்றைக்கு எல்லா திருமால் ஆலயங்களிலும், இந்தப் பிள்ளைத் தமிழின் பல பாசுரங்கள் பாடப்படுவதுண்டு. எந்தெந்த காலங்களில் இந்த பாசுரங்கள் எல்லாம் கோயில்களில் ஓதப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.அதுவுமின்றி வைணவ இல்ல நிகழ்ச்சிகளிலும், பல பாசுரங்கள், அந்தந்த சந்தர்ப்பங்களில் ஓதப்பட்டு வருகின்றன. எனவே இலக்கியம் என்ற நிலையைத் தாண்டி வாழ்வியலிலும், சமய வழிபாட்டு முறைகளிலும், சடங்குகளிலும் ஓதப்பட்டு வருவதால் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களை விட அதிகவழக்கத்தில் (usage) உள்ளது.

பெரியாழ்வார் ஒரு குழந்தையின் வளர்ச்சியோடு, குழந்தையை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை, ஒரு குழந்தை மருத்துவர் போலச் சொல்லித் தருகின்றார்.

என்னவெல்லாம் செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?

எதை யெல்லாம் குழந்தையிடம் சொல்லலாம்? எதை எல்லாம் சொல்லக்கூடாது? என்பதை, தானே ஒரு தாயாக மாறி, (யசோதை பாவனையில்), பிள்ளைத்தமிழ் பாடிக் கொடுக்கிறார்.

 கண்ணனை ஒரு குழந்தையாகப் பாவித்து, இந்தப் பாடல்களைப் பாடுகின்ற பொழுது, நம்முடைய எண்ணம் முழுக்க, அந்த பக்தியே ஒரு குழந்தை வடிவத்தில் நிறைந்திருக்கும். அதை, அப்படியே நம்முடைய குழந்தை களிடத்தில் செலுத்தும் பொழுது, குழந்தைகளும் தெய்வ குணங்களைப் பெற்று தீர்க்கமாக வாழும். பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ் ஒரு பக்தி இலக்கியம் என்பதையும் தாண்டி, குழந்தை வளர்ப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஓர் உளவியல் மற்றும் மருத்துவ நூல் என்றும் சொல்லலாம்.

ஒரு குழந்தையின் பிறந்தநாளை எப்படி மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று கண்ணன் பிறந்த நாளை கொண்டாடும் குதூகலத்தோடு, இந்தப் பிள்ளைத் தமிழை ஆரம்பிக்கிறார். அதில்

சின்னஞ் சிறு குழந்தையான கண்ணனை எப்படி நீராட்ட வேண்டும் என்பதை தாய்மார்களுக்கு சொல்லித்தருகின்றார்.Tiffany Field, PhD, director of the Touch Research Institute at the University of Miami School of Medicine. சொல்லும் குறிப்பு இது. Using your entire hand, gently massage each leg, putting light pressure on her thighs. Flex your baby’s legs and knees, which will softly push her thighs against her body.

இதைத்தான் பெரியாழ்வார் தனது பாசுரங்களில் சொல்கிறார். சிறு குழந்தையை குளிப்பாட்டும்போது, அதன் காது, மூக்கு, கை, கால்கள், விரல்கள் எல்லாவற்றையும் மென்மையாக இழுத்து, அப்படியும் இப்படியும் ஆட்டி நீவி (massage) விடுவார்கள். அந்தக் குழந்தையின் உறுப்புக்கள் அதனால் நல்ல வளர்ச்சியை அடையும். இன்றைய ஆங்கில விஞ்ஞான மருத்துவம் சொல்லும் உண்மை இது.

It may help ease your baby’s tummy troubles and teething pains, boost his muscle development, calm him when he’s fussy, and soothe him to sleep. But the advantages don’t stop there: All that stroking and touching make it easier for you to bond with your newborn. What’s more, giving your baby a massage can help you find your own inner Zen, too. இதமான, அதிக குளிர்ச்சியும், அதிக உஷ்ணமும் இல்லாது விளாவிய நீரில், மஞ்சள் போன்ற மருத்துவப் பொருள்கள் கலந்து, நீராட்டுவார்கள். யசோதை, தன் கால்களில் கண்ணனை கவிழ்த்து போட்டுக்கொண்டாள். பரப் பிரம்மத்தையே சர்வ சாதாரணமாக தன் காலில் போட்டுகொண்டாள் என லீலா சுகர் வியந்து போகிறார். அவன் யசோதை காலைப் பிடித்துக்கொண்டு, உயிரே போய்விடுவது போலக் கதறினான். இந்த அழுகையையும் பெரியாழ்வார் பதிவு செய்யத் தவறவில்லை.

ஒரு குழந்தை, “கீச் கீச்” என்று (high pitch) அழுதால், அந்தத் தெரு முழுக்கக் கேட்கும். ஆனால், கண்ணன் அழுத அழுகை விண் முழுக்க கேட்டதாம். அப்படி பிரம்மத்தையே அழவைத்தது யசோதையின் தாய்மை.“விண்ணெல்லாம் கேட்க அழுத்திட்டாய், உன் வாயிலிருந்து அதனை நான் நோக்கி” என்பது பாசுர வரி. எந்தத் தெய்வத்தின் திருவடியைப் பிடிப்பதற்கும், தொடுவதற்கும், சரண் அடைவதற்கும், கோடிக்கணக்கான வருஷங்கள், ரிஷிகள் தவம் இருக்கிறார்களோ, அந்தத் திருவடியை உடைய கண்ணன், தான் தாயாக பாவித்த, ஏழை எளிய ஆயர் குலப் பெண்ணான யசோதையின் திருவடியைப் பிடித்துக் கொண்டு கதறினான் என்ற காட்சியை மனதில் கொண்டு வந்து பாருங்கள்.

அந்தக் கண்ணனிடம் நம் முழு மனமும் கரைந்து விடும். அந்தப் பாடல் அக்காலத்தில் தாய்மார்கள் செய்யும் ஒரு செயலையும் சொல்லுகின்றது. குழந்தையின் வாயைத் திறக்கச் செய்து மஞ்சளால் (மஞ்சள் கிருமி நாசினி) நாக்கில் வெண்மையான அழுக்கு சேராமலும் வழித்து எடுப்பார்களாம்.Dip a gauze - or cloth - covered finger into the warm water. Gently open your baby’s mouth, and then lightly rub their tongue in a circular motion using the cloth or gauze. Softly rub your finger over your baby’s gums and on the inside of their cheeks, too.

அது அப்படியே இன்றைக்கும் அனுஷ்டானத்தில் இருக்கிறது. நீங்கள் பெருமாள் கோயில் திருமஞ்சனக் காலத்தில் இதைப் பார்க்கலாம். தர்ப்பைப் புல்லால், அர்ச்சகர் தீர்த்தத்தைக் கொண்டு, பெருமாள் திருவாயில், நாக்கை வழிப்பது போல், பாவனை செய்வதை நாம் அனுபவிக்க முடியும்.இப்பொழுது அப்படி எல்லாம் குழந்தையைக் குளிப்பாட்டுகிறார்களா என்று தெரியவில்லை. அன்றைய நமது குழந்தை வளர்ப்புக் கலையை நமக்குச் சொல்லித் தரும் பாசுரம் இது.

கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்

பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்

ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட

வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே.

இந்தப் பாசுரத்தில் நாக்கை வழிக்க, கண்ணனின் வாயைத் திறக்கச் செய்த யசோதை, அந்த வாய்க்குள் சகல உலகங்களையும், கண்டு, இவன்“ஆயர் புத்திரன் அல்ல அரும்  பெரும் தெய்வம்” என்பதைக் கண்டுகொண்டாள் என்பது பக்தியின் வெளிப்பாடு.ஒரு குழந்தையை தெய்வமாகப் பார்க்கக் கூடிய ஒரு நிலை. அதனால்தான் குழந்தைக்கு வேடம் போடுகின்ற பொழுது, பெரும்பாலும் கண்ணனாகவே வேடம் இடுவார்கள். எல்லாக் குழந்தைக்கும் கண்ணன் வேடம் பொருத்தமாக இருக்கும். எல்லாக் குழந்தையும் கண்ணன் தானே. பெண் குழந்தையாக இருந்தால், ஆண்டாளாக வேடம் போடுவார்கள். ஆனால் இதே பாசுரத்தில்,

1) சிறு குழந்தையின் கையை காலை குளிப் பாட்டும்போது நிமிர்த்தி விடவேண்டும்.

2) மஞ்சள் போன்ற மருத்துவப் பொருள்கள் கலந்த நீரில் நீராட்ட வேண்டும்.

 3) நாக்கில் பித்த கப அழுக்கு சேராமல் வழித்துவிட வேண்டும் என்றெல்லாம் குழந்தை வளர்ப்புக் கலையை சொல்லித் தருகிறார். அதற்காகவாவது இந்தப் பாசுரத்தைப் படிக்க வேண்டாமா?

அடுத்து குழந்தையை உத்தாரணம் செய்தல் பற்றி சில விஷயங்களைச் சொல்லுகின்றார் பெரியாழ்வார். உத்தாரணம் என்பது குழந்தையைத் தூக்கி நிறுத்துகை. உத்தரணம் உத்தரி (தூக்கி நிறுத்து) + அணம் = உத்தரணம் = உத்தாரணம். அதுவரை குழந்தையை அறைக்குள்ளே வைத்திருப்பார்கள். பன்னிரண்டாம் நாள் குழந்தையை வெளியே கொண்டு வருவார்கள். இந்த மரபுச்செய்தியை ஒரு பாசுரத்தில் நமக்கு அளிக்கிறார் பெரியாழ்வார்.

(பிறந்த பத்தாம் நாளிலாவது, பன்னிரண்டாம் நாளிலாவது, வேறு நல்ல நாளி லாவது நாமகரணம் (பெயர் சூட்டு விழா) செய்யும்படி ஸ்மிருதி கூறுகின்றது) பன்னிரண்டாம் நாளே  நல்ல நாளாக அமைந்து விட்டால் அன்றே பெயர் சூட்டு விழா நடத்தி விடலாம்.

பத்து நாளும் கடந்த இரண்டாம்நாள்

எத்திசையும் “சயமரம்” கோடித்து,

மத்த மாமலை தாங்கிய மைந்தனை

உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.

அந்த நாள் அந்த குடும்பத்திற்கு மகிழ்ச்சிக்குரிய கொண்டாட்ட நாள். குழந்தை பிறந்த 12ஆம் நாள் தான் பெயர் சூட்டு விழா நடத்தும் தினம் என்று தெரிவிக்கிறார் பெரியாழ்வார். அன்றைக்கு முதல்முறையாக குழந்தையின் உறவினர்கள் எல்லாம், குழந்தையை ஆளாளுக்கு தங்கள் கைகளில் ஏந்திக் கொஞ்சுவார்கள். அதுவரை பெற்ற தாய் அல்லது அந்த தாயையும் குழந்தையையும் கவனிக்கும் தாதி (சமயத்தில் பாட்டி) ஆகிய இருவர் கைகளை விட்டு, வேறு யார் கைகளுக்கும் அந்தக் குழந்தை சென்று இருக்காது.

பெயர் சூட்டி, தொட்டிலிட்டுதான் உறவினர் கைகளில், கொஞ்சவும், ஆசீர்வதிக்கவும் கொடுப்பார்கள். இதற்கான பெயர் சூட்டு விழா தினத்தில் வீட்டை நன்கு அலங்கரிப்பார்கள். கொடி மரம் கட்டுவார்கள். அந்தக் கொடி மரம் என்பது வெற்றிமரம் (ஜயஸ்தம்பம்) என்ற பொருளில் இருக்கிறது.

அப்படியானால் என்ன பொருள்?

பிறந்த குழந்தை எதிர்காலத்தில் நல்ல முறையில் வளர்ந்து, பல வெற்றிகளை காணும் இந்தக் குழந்தையின் வாழ்க்கையே, அவரைச் சார்ந்தவர்களுக்கும், சமூகத்திற்கும் வெற்றித் திருநாளாக அமையும் என்பதன் அடையாளமாகதான் வீடுகளில் கொடி மரம் நட்டு, இந்த பெயர் சூட்டுவிழாவைக் கொண்டாடு வார்கள் என்கிற குறிப்பை நாம் கவனத்தில் கொண்டால், இனி நம் வீட்டுக்குழந்தையின் பெயர் சூட்டு விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதும் தெரியவரும். அடுத்து, குழந்தையைத் தொட்டிலிடும் பொழுது என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

 

(மீதி அடுத்த இதழில்)

எஸ்.ஆர்.சுதர்சன்

Related Stories: