×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

435. மஹாதனாய நமஹ: (Mahaadhanaaya namaha)
சண்டன்-மர்க்கன் என்னும் அசுர குருமார்களின் பாடசாலையில் பயின்று வந்த பிரகலாதன், அங்குள்ள அசுரப் பிள்ளைகளுக்கும் பக்தியைப் போதித்தான். “அன்பர்களே! அருமை நண்பர்களே! இந்தக் குருமார்கள் பணத்துக்காகத் தவறான பாடத்தை நமக்குச் சொல்லித் தருகிறார்கள். நான் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது உண்மையைச் சொல்கிறேன்! கேளுங்கள்! இந்த உலகில் சுகமாக இருப்பவை எல்லாம் காலப்போக்கில் துக்கமாக மாறும். துக்கமாக இருப்பவை சில நேரங்களில் சுகமாகவும் மாறும். ஆனால், நிலையான ஆனந்தத்தைத் தரவல்லவன் இறைவன் ஒருவனே! நீங்கள் இந்த உடல்கள் அல்லர். உள்ளே உறையும் ஜீவாத்மாக்கள் நீங்கள். உலகியல் ஆசைகளை விடுங்கள் பரமனின் பாதங்களை நாடுங்கள்! பகவானின் திருவுள்ளம் உகந்துவிட்டால், உலகில் வேறு என்ன தான் கிடைக்காது?” என்றெல்லாம் நல்வார்த்தைகள் சொன்னான் பிரகலாதன்.

பிரகலாதன் சொல்வது நியாயமாக அந்தப் பிள்ளைகள் மனதில் பட்டாலும், இரணியனுக்கு அஞ்சிய அவர்கள், பிரகலாதன் போதித்த விஷயங்களைக் குருமார்களிடம் கூறிவிட்டார்கள். இரணியன் காதுக்கு இச்செய்தி போனவாறே, விஷம் கொடுத்துப் பிரகலாதனைக் கொன்றுவிடச் சொன்னான் இரணியன். ஆனால், நாராயண நாமங்களைத் துணையாகக் கொண்ட பிரகலாதனை விஷம் எதுவும் செய்யவில்லை.

இதைக் கவனித்த குருமார்களான சண்டனும் மர்க்கனும் பிரகலாதனை அழைத்து, “நீ ஏன் இப்படி உன் தந்தையின் கருத்துக்கு மாறாகச் செயல்படுகிறாய்? உன் தந்தைதான் சர்வேஸ்வரன். உலகைக் காப்பவர் அவரே! தேவர்களாலோ, தெய்வத்தாலோ அவருக்கு ஆகவேண்டியது ஏதுமில்லை. நீ திருமாலைப் புகழ்ந்து பேசுவதை நிறுத்து. உன் தந்தையின் புகழ் பாடு. உன் தந்தைக்குப் பின் நீ தானே தெய்வமாக எல்லோராலும் போற்றப்படப் போகிறாய்? தந்தைதான் சிறந்த குரு. அவர் சொல்வதைக் கேள். உனது குருவான எங்கள் பேச்சையும் நீ மீறக்கூடாது!” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.

ஆனால் பிரகலாதனோ, “குருமார்களே! தந்தையை வணங்க வேண்டும், குருவின் சொல்லைக் கேட்கவேண்டும் என்பவை சாமானிய தருமங்கள். அவற்றை அவசியம் அடியேனும் பின்பற்றுகிறேன். ஆனால், இறைவன் விசேஷ தருமம் ஆவான். அந்த விசேஷ தருமமான இறைவனுக்கு முரணாகச் சாமானிய தருமங்கள் இருக்குமாயின், விசேஷ தருமத்தையே கைக்கொள்ள வேண்டும் என்பது மரபு. தந்தை என்ற முறையில் நான் அவரை இன்றளவும் வணங்குகிறேன். ஆனால், அதைக் கடந்து அவரையே முழுமுதல் கடவுள் என்று அவர் சொல்லிக்கொள்வதை அடியேனால் ஏற்கமுடியாது. குரு என்ற முறையில் நீங்கள் சொல்வதை நான் கேட்டு நடப்பேன். ஆனால், மூலமான வேதத்துக்கு முரணாக நீங்கள் பேசலாமா என்று நீங்களும் சற்றே சிந்தித்துப் பாருங்கள்!” என்றான்.

இதைக் கேட்ட சண்டனும் மர்க்கனும், “திருமால் திருமால் என்று இவ்வளவு பேசுகிறாயே! திருமாலை வணங்குவதால் என்ன பலன்?” என்று கேட்டார்கள். அதற்குப் பிரகலாதன்,
“தர்ம அர்த்த காம மோக்ஷாச்ச புருஷார்த்தா உதாஹ்ருதா:
சதுஷ்டயம் இதம் யஸ்மாத் தஸ்மாத் ச கிம் இதம் வ்ருதா
மரீசிமிச்ரை: தக்ஷேண ததைவ அன்யை: அனந்தத:
தர்ம: ப்ராப்த: ததா சான்யை: அர்த்த: காம: ததாபரை:”

“என்ன பலன் என்றா கேட்கிறீர்கள்? அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையுமே தன்னை அண்டிவரும் அடியார்களுக்குப் பரிபூரணமாக வழங்க வல்லவர் திருமால். மரீசி போன்ற முனிவர்கள் திருமாலைப் பிரார்த்தித்துத் தருமத்தைப் பெற்றார்கள், அதாவது, அறவழியிலான வாழ்க்கையை வாழும் பாக்கியத்தைப் பெற்றார்கள். குபேரன் போன்றோர் திருமாலைப் பிரார்த்தித்து மிக உயர்ந்த செல்வத்தைப் பெற்றார்கள். தேவர்கள், திருமாலின் அருளால் தேவலோக ராஜ்ஜியத்தையும் இன்பத்தையும் பெற்றார்கள். மிகச்சிறந்த ஞானியரும் யோகியரும் திருமாலைத் தியானித்து வீடுபேறாகிய முக்தியை பெறுகிறார்கள்.

திருமாலிடம் இல்லாத செல்வங்களே இல்லை. செல்வம் என்றால் நீங்கள் நினைக்கும் பணம், பொருள் என்று மட்டும் பொருள் இல்லை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஷார்த்தங்கள் அனைத்தையுமே செல்வம் என்ற சொல் குறிக்கும். இந்த அனைத்துச் செல்வங்களையுமே நிறைவாகக்கொண்டவர் திருமால். அதை நாடி வரும் அடியார்களுக்கு அவற்றை வாரி வழங்குபவர் அவர்!” என்று விளக்கினான்.

இப்படி வறுமையில் வாடும் அடியார்களுக்கு அருள்வதற்குரிய எல்லையில்லாத செல்வத்தைக் கொண்டிருப்பதால், திருமால் ‘மஹாதன’ என்று அழைக்கப்படுகிறார். ‘மஹாதன’ என்றால் அளவில்லாத செல்வம் கொண்டவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 435-வது திருநாமம்.
“மஹாதனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நற்செல்வத்தைத் திருமால் அருள்வார்.

436. அநிர்விண்ணாய நமஹ:
(Anirvinnaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை - திருமாலின் சிம்சுமார வடிவம்)[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால் பகுதியில் தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் ஸ்ரீவிஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]

“உடைமைக்கு ஒரு முழுக்கு என்றால் உடையவனுக்கு ஒன்பது முழுக்கு!” என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழி உண்டு. இதன் பொருள் என்ன?
ஒரு வீட்டில் மருமகள் கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போனாள். அப்போது, வாளி கயிற்றில் இருந்து நழுவிக் கிணற்றில் விழுந்து விட்டது. அதைக் கண்ட மாமியார், “நீ வாளியை எடுக்காமல் வீட்டுக்குள் வரக்கூடாது!” என்று சொல்லி விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்க் கிணற்றடியில்
அமர்ந்திருந்தாள் மருமகள்.

அவளது கணவர், அச்சமயம் அங்கே வந்தார். மனைவியின் சோகத்துக்கான காரணத்தை அறிந்துகொண்ட அவர், “நீ வருந்தாதே! நான் கிணற்றில் இறங்கி வாளியை எடுத்துத் தருகிறேன்!” என்றார். கிணற்றில் இறங்கிய கணவர் முதலில் ஒரு முழுக்கு போட்டுத் தேடினார். அப்போது வாளி கிடைக்கவில்லை, முன்பு கிணற்றில் விழுந்த பழைய சொம்புதான் கிடைத்தது.அடுத்து முழுக்கு போட்டார். அப்போதும் வாளி கிடைக்கவில்லை. முன்பு கிணற்றில் விழுந்திருந்த பழைய பெட்டி ஒன்று கிடைத்தது. அடுத்த முழுக்கு போட்டபோது கிணற்றில் விழுந்த பழைய பூட்டு ஒன்று கிடைத்தது. இப்படி ஒன்பது முழுக்குகள் போட்ட பின் தான், அவர் தேடிய வாளி கிடைத்தது. இந்தக் கதையைச் சற்றே கவனித்துப் பாருங்களேன். உடைமையாகிய வாளி ஒருமுறை தான் கிணற்றில் மூழ்கியது. ஆனால், அதை மீட்பதற்காக மூழ்கிய அதன் உடையவர், ஒன்பதுமுறை முழுக்குப் போட வேண்டி இருந்தது அல்லவா? இதன் அடிப் படையிலேயே உடைமைக்கு ஒரு முழுக்கு என்றால், உடையவனுக்கு ஒன்பது முழுக்கு என்ற பழமொழி ஏற்பட்டது.

இது அப்படியே இறைவனுக்கும் பொருந்தும். இறைவனின் உடைமைகள்தான் ஜீவாத்மாக்களாகிய நாம் அனைவரும். கிணறுதான் பிறவி என்னும் பெருங்கடல். உடையவன் இறைவன். இறைவனின் உடைமைகளாகிய நாம், பிறவி என்னும் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கிறோம். நம்மை மீட்பதற்காக இறைவன் இந்தப் பூமியிலே அவதாரங்களை  செய்கிறார்.
இதில், உடைமையான ஜீவாத்மா ஒருமுறை தான் பிறவிக் கிணற்றில் சிக்கிக்கொண்டது. ஆனால், உடையவனான இறைவனோ  ஜீவாத்மா என்னும் சொத்தை மீட்பதற்காக, இந்த உலகில் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறான்.

“மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கல்கியும்ஆனான்…”என்று திருமங்கை ஆழ்வார் பாடியதற்கேற்றபடி ஒவ்வோர் அவதாரமாக, மீண்டும் மீண்டும் இங்கே பிறந்துகொண்டே இருக்கிறார். அதில் இறைவன் களைப்படைவதே இல்லை. மேலும், இறைவன் உலகைப் படைப்பதும் கூட, நாம் எல்லோரும் இறைவனை அடைய வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கில்தான். ஆனால், நாமோ இறைவனை நாடாது உலகியல் இன்பங்களையே நாடுகிறோம். இறைவன் அவதரித்து வந்து திருத்த முற்படும் போதும் கூட, நம்மில் பெரும்பாலானோர் அவன்பால் மனம் செலுத்துவதில்லை.

ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல், நம்மைக் காக்கும் முயற்சியில் தளர்ச்சி இன்றித் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே வருகிறான் இறைவன். இப்படி மனத்தளர்ச்சி இல்லாமல் உலகையும் உயிர்களையும் காத்து வருவதால், திருமால் ‘அநிர்விண்ண’ என்று அழைக்கப்படுகிறார். இதற்குச் சான்றாகத் தான், விண்வெளியில் சிம்சுமாரச் சக்கர வடிவில் திருமால் எழுந்தருளியிருந்து உலகையும் உயிர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்துக் காப்பாற்றிக் கொண்டு, அவர்கள் உயர்வதற்கான வழியைக் காட்டிக்கொண்டே வருகிறார்.
இப்படி சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து கொண்டு, தளர்ச்சி இல்லாமல் செயல்பட்டுக் கொண்டே இருப்பதால் ‘அநிர்விண்ண’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘அநிர்விண்ண:’ என்றால் தளராமல் செயல்புரிபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 436-வது திருநாமம்.“அநிர்விண்ணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் மனத்தளர்ச்சி ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.

437. ஸ்தவிஷ்டாய நமஹ:
(Sthavishtaaya namaha)
துருவனின் வரலாற்றை அறியாதவர்கள் இருக்க முடியாது. உத்தானபாதன் என்ற மன்னனின் முதல் மனைவி சுநீதியின் மகனாகப் பிறந்தான் துருவன். ஐந்து வயது சிறுவனான அவன், தன் தந்தையின் மடியில் அமர வேண்டும் என்று ஆசையோடு சென்றான். ஆனால், உத்தானபாதனனின் இரண்டாவது மனைவியான சுருசி அவனைத் தடுத்து, “என் வயிற்றில் பிறந்த மகனுக்கு மட்டுமே இவரது மடியில் அமரும் உரிமை உண்டு. முதல் மனைவியின் மகனாகப் பிறந்த உனக்கு அந்த உரிமை இல்லை!” என்று கூறிவிட்டாள். தந்தையின் மடியில் அமரும் பாக்கியம் கிட்டவில்லையே என்று மிகவும் வருந்திய துருவன், திருமாலைக் குறித்துத் தவம்புரியக் காட்டுக்குச் சென்றான்.

(விஷ்ணு புராணத்தின் அடிப்படையில்) சப்த ரிஷிகள் என்ற ஏழு முனிவர்களின் உபதேசங்களைப் பெற்ற துருவன், அவர்கள் காட்டிய வழியில் மதுவனம் என்னும் இடத்தில் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தான்.வலக்காலை உயர்த்தி இடக்காலை ஊன்றி ஒற்றைக்காலில் அவன் தவம்புரிந்தபோது, பூமியே இடப்புறமாகச் சாய்ந்து விட்டது. பின் இடக்காலை உயர்த்தி வலக்காலை ஊன்றி அவன் தவம் புரிந்த போது, பூமியே வலப்புறமாகச் சாய்ந்தது. அவனது தவத்தைக் கலைக்க முற்பட்ட தேவர்கள், தங்கள் முயற்சியில் தோல்வியைத் தழுவினார்கள்.
அவனது தவத்துக்கு உகந்த திருமால் அவனுக்குக் காட்சி அளித்து, “உத்தானபாதன் பெற்றெடுத்த உத்தமனே! உனக்கு மங்கலம் உண்டாகுக! பேரருளாளன் என்று பெயர் பெற்ற நான் உனக்கு வரங்களை அருள வந்திருக்கிறேன்!” என்று சொன்னார். திருமாலின் குரலைக் கேட்ட துருவன் கண் திறந்து திருமாலைத் தரிசித்தான்.

முதலில், திருமாலின் கிரீடத்தைத் தரிசித்தான். அந்தக் கிரீடம், திருமால் மிகவும் உயர்ந்தவர் என்பதற்கு அடையாளமாக அவரது தலையில் திகழ்வதை உணர்ந்துகொண்டான். அந்தப் புரிதலோடு துருவன், “இறைவா! தந்தையின் மடி என்ற பதவி எனக்கு மறுக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய பதவி ஒன்றை அடையவேண்டும் எனக்கருதித் தவம்புரியத் தொடங்கினேன். உன்னைத் தரிசித்தவாறே உன்னை விட உயர்ந்தது உலகினில் வேறேதும் இல்லை என உணர்ந்தேன்! உன்னைத் துதிப்பதற்குத் தேவையான ஞானத்தை நீ கொடு! இதுவே நான் கேட்கும்  வரம்!” என்றான். திருமால் தனது சங்கின் நுனியால் துருவனின் கன்னத்தை வருடினார்.

அடுத்த நொடியே திவ்ய ஞானம் பெற்ற துருவன், திருமாலைத் துதிக்கத் தொடங்கினான். “உலகையும் உயிர்களையும் உடலாகக் கொண்டு அவர்களுக்கு உள்ளே உயிராக உறைபவனே நீயே மிகவும் உயர்ந்தவன்’’!

“ப்ருஹத்வாத் ப்ரஹ்மணத்வாத் ச யத்ரூபம் ப்ரஹ்மஸம்ஜ்ஞிதம்
தஸ்மை நமஸ்தே ஸர்வாத்மன் யோகிசிந்த்ய அவிகாரிணே”

உனது சொரூபத்தாலும் சரி, குணங்களாலும் சரி, நீ மிக உயர்ந்தவனாக விளங்குகிறாய். `ப்ரஹ்ம’ என்றால் மிகப்பெரிய என்று பொருள். மிகப்பெரியவனாக இருப்பதால் நீ ப்ரஹ்மம் எனப்படுகிறாய். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாக் காலங்களிலும் இருக்கும் அனைத்தையும் இயக்குபவன் நீயே!” என்று துதி செய்தான் துருவன்.
அவனது துதியைக் கேட்டு உகந்த திருமால், “இப்போது உலகில் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்ற தெளிவு உனக்கு ஏற்பட்டு விட்டது. நீ உன் அரண்மனைக்குத் திரும்பிப் போய் ஆட்சி புரிந்துவிட்டு, நான் அளிக்கும் மிக உயர்ந்த பதவியான துருவப் பதவியை அலங்கரிப்பாயாக. விண்வெளியில் சிம்சுமாரச் சக்கரம் என்ற நட்சத்திரக் கூட்ட வடிவில் நான் உள்ளேன். அந்த சிம்சுமாரச் சக்கரத்தின் வால் பகுதியில் உள்ள துருவ நட்சத்திரமாக மிக உயர்ந்த ஸ்தானத்தில் நீ திகழ்வாயாக!” என்று அருள்புரிந்தார்.

துருவனுக்குத் திருமால் உணர்த்தியபடி, உலகில் பெரியவை என நாம் நினைக்கும் அனைத்துப் பொருட்களை விடவும் பெரியவர் திருமால். தான் பெரியவன் என்பதற்கு ஒரு சான்றாகவே சிம்சுமாரச் சக்கரம் என்னும் மிகப்பெரிய வடிவோடு திருமால் விண்வெளியில் திகழ்கிறார். இப்படிப் பேருருவம் கொண்டிருப்பதால், ‘ஸ்தவிஷ்ட’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
‘ஸ்தவிஷ்ட’ என்றால் பேருருவம் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 437-வது திருநாமம்.“ஸ்தவிஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பெரிய பதவிகள் கிட்டும்படி திருமால் அருள்புரிவார்.

438. புவே நமஹ: (Bhuvey namaha)
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, சௌகந்திகா என்னும் அதிசய மலரைப் பற்றிக் கேள்விப் பட்டாள் திரௌபதி. அந்த மலரைப் பற்றிய செய்திகளைப் பீமனிடம் கூறித் தனக்காக அம்மலரைப் பறித்து வருமாறு கேட்டுக் கொண்டாள் திரௌபதி. “திரௌபதி! கவலைப் படாதே! எனது வலிமையைப் பற்றி நன்றாக அறிவாய் அல்லவா? எனது வலிமையால் அந்த மலரை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்!” என்று முழங்கி விட்டு, சௌகந்திகா மலரைத் தேடிச் சென்றான் பீமன். காட்டுப்பாதையில் பீமன் நடந்து சென்றபோது வழியில் ஒரு வயதான குரங்கு படுத்திருந்தது.

“ஏ குரங்கே! வழி விடு!” என்று கருவத்துடன் சொன்னான் பீமன். அந்தக் குரங்கோ, “நான் மிகவும் களைப்போடு இருக்கிறேன்! நீ வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்!” என்று தழுதழுத்த குரலில் கூறியது.“ஏ குரங்கே! நீ வயதான குரங்கு போல் தெரிகிறாய். உன்னைத் தாண்டிச் செல்வது அவமரியாதை. எனக்கு நீ வழி விடுவதே முறை. வழி விடு!” என்றான் பீமன்.
“சரி, நீயே என் வாலைத் தள்ளி வைத்து விட்டுச் செல்!” என்று சொன்னது குரங்கு. குரங்கின் வாலை இரு கைகளாலும் பிடித்து நகர்த்தப் பார்த்தான் பீமன். ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனால் குரங்கின் வாலை அசைக்கக் கூட முடியவில்லை. அப்போது கருவம் குறையப்பெற்ற பீமன், பணிவோடு, “நீங்கள் யார்?” என்று குரங்கிடம் கேட்டான்.
“நீ யார்?” என்று அக்குரங்கு கேட்டது.

“நான் பீமன். வாயு தேவனின் அருளால் குந்தி தேவிக்குப் பிறந்த மகன்!” என்று சொன்னான் பீமன். “நான் உனது அண்ணன்!” என்றது குரங்கு. என்ன என்று பீமன் கேட்க, “ஆம்! வாயு தேவனின் அருளால் அஞ்ஜனா தேவிக்குப் பிறந்த ஆஞ்ஜநேயன் நான். நீ எனக்குத் தம்பி ஆவாய்!” என்று சொல்லித் தனது சுயரூபத்தைக் காட்டினார் அனுமான்.

பீமனது செருக்கு மொத்தமாக அடங்கி விட்டது. அனுமான் பீமனிடம், “நீ மலர் பறிக்கச் சென்ற பாதை தேவர்கள் பயணிக்கும் பாதை. அதில், பல ஆபத்துகள் உள்ளன. நான் கூறும் வழியில் செல்!” என்று சொல்லி அவரே பீமனைச் சௌகந்திகா மலர் இருக்கும் குளத்துக்கு அழைத்துச் சென்று மலர்களைப் பறித்துக் கொடுத்தார். மேலும், “பீமா! நீ போர்க்களத்தில் சிங்கம் போல் முழங்கும்போது, என் குரலும் உன் குரலோடு சேர்ந்து கொள்ளும். நமது ஒலி பாண்டவ சேனைக்குப் பலத்தையும் கௌரவ சேனைக்குப் பயத்தையும் கொடுக்கும். அர்ஜுனனின் தேர்க்கொடியிலும் நான் இருந்து உங்களுக்கு ஜெயத்தைத் தருவேன்!” என்று சொல்லிச் சௌகந்திகா மலர்களைப் பீமனுக்கு வழங்கினார் அனுமான்.

தான் பலசாலி என்றும், தன் பலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று கருதிய பீமனிடம், “நீ பலசாலி என்று நினைப்பது எவ்வளவு தவறோ, அதே அளவு நான் பலசாலி என்று நினைப்பதும் தவறு. நம் இருவருக்கும் உள்ளே இருந்து கொண்டு நம்மைத் தாங்கிச் சக்தி அளிப்பவர் திருமால். இதை நீ மனதில் வைத்துக் கொள்!” என்று அறிவுரை சொல்லி அனுப்பினார் அனுமான்.

இவ்வரலாற்றை பாலகவி சுந்தரராஜன் சுவாமி ஹநூமத் பஞ்சாசத்தில்,
“புஷ்பம் ஸௌகந்திகாக்யம் ஹிமகிரிவிபினே க்ருஷ்ணயா ப்ரார்த்திதம் யத்
ப்ராத்ரே பீமாய தஸ்மை ததவசயக்ருதே: காம்யயா ப்ராம்யதே ப்ராக் |
ஸந்தர்ச்யானுக்ரஹம் யோ வ்யதரதபஹரன் ஸ்கந்தயோரஸ்ய கந்தம்
கந்தம் ஸம்ஸாரபந்தப்ரதமபஹரதாத் கந்தவாஹாத்மஜோ ந: ||”
என்று வர்ணித்துள்ளார்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநறையூர் என்ற திவ்ய தேசத்தில் சௌகந்திகா அனுமார், தனிக்கோயில் கொண்டு காட்சி தருகிறார். கையில் சௌகந்திகா மலரை ஏந்திய வடிவில் காட்சி தரும் அந்த அனுமனைத் தரிசிக்கும் போதெல்லாம், “நாம் பெரியவர் அல்லர்! உள்ளிருந்து நம்மைத் தாங்கும் இறைவனே பெரியவன்!” என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

அனைவரையும் தாங்குபவன் என்பதற்குச் சான்றாகத் திருமால் சிம்சுமாரச் சக்கர வடிவில் விண்வெளியில் காட்சி தருகிறார். எந்த துருவ ஸ்தானம் நட்சத்திரங்கள், கிரகங்கள் உள்ளிட்டவற்றைத் தாங்குகிறதோ, அந்த துருவ ஸ்தானத்தைத் தனது வால்பகுதியில் கொண்ட சிம்சுமாரச் சக்கர வடிவில் திருமால் விளங்கி, அனைவரையும், அனைத்தையும் தாங்குபவர் என்பதை உணர்த்துகிறார். ‘பூ’ (Bhoohu) என்றால் தாங்குபவர். அனைத்தையும், அனைவரையும் தாங்குவதால் திருமால் ‘பூ’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 438-வது திருநாமம்.
“புவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிக் காத்தருள்கிறார்.

439. தர்ம யூபாய நமஹ: (Dharma Yoopaaya namaha)

ஆயர்பாடியில் கண்ணன் எழுந்தருளியிருந்த சமயத்தில், சரத் காலம், இலையுதிர் காலம் வந்தது. அப்போது ஒருநாள், மாலை சந்திரோதயம் ஆனவாறே, கண்ணன் ஒரு மரத்தடியில் நின்றபடிப் புல்லாங்குழல் ஊதத் தொடங்கினான். அந்தக் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் அத்தனை பேரும், தங்களது பணிகளை எல்லாம் மறந்துவிட்டுக் கண்ணனை நாடிச் சென்றார்கள்.
இக்காட்சியை, ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுக முனிவர் அழகாக வர்ணிக்கிறார்.

சில கோபிகைகள் வீட்டில் பால் கறந்துகொண்டிருந்தார்கள். சிலர் அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். (திருமணம் ஆன) சில கோபிகைகள் தங்கள் கணவன்மார்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சிலர் குழந்தைகளுக்குப் பால் ஊட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் நீராடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கண்களுக்கு மையிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் மாமியார் மானாருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள்.

கண்ணனின் குழலோசையைக் கேட்டவாறே அத்தனை பேரும் கண்ணன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வந்துவிட்டார்கள். சிலரின் வீட்டில் உள்ள பெரியவர்கள் தடுத்தும் கூட அவர்கள் கேட்கவில்லை. அவர்களைக் கண்ட கண்ணன், “வருக! வருக! என வரவேற்று மாலைப் பொழுதில் வீட்டை விட்டுவிட்டு என்னைத் தேடி வந்து விட்டீர்களே! வீட்டில் உள்ளவர்கள் உங்களைத் தேட மாட்டார்களா? திரும்பச் செல்லுங்கள்! சென்று உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்! உங்கள் கடமையைச் செய்யுங்கள்! குடும்பத்தைப் பேணுவதுதானே உங்களுக்கு மிகச்சிறந்த தருமம்? அதை விட்டு விட்டு எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்?” என்று கேட்டான்.

அதைக் கேட்டுக் கண்ணீர் விட்ட கோபிகைகள், “கண்ணா! நீ வீட்டுக்குத் திரும்பச் சென்று எங்கள் குடும்பத்தைப் பேணுவதே எங்களுக்குத் தருமம் என்று உபதேசம் செய்கிறாய். ஆனால் உண்மையில் எங்கள் குடும்பத்தில் உள்ள கணவர், மற்ற உறவினர்கள் என அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக உறைந்திருப்பவன் நீ தானே? அவர்களுக்கு நாங்கள் பணிவிடை செய்தலாகிய தர்மத்தைப் பின்பற்றினாலும் அதற்கு உகந்து அருள்புரிபவன் நீ தானே? காதைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல், அவர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களுக்குள் இருக்கும் உன்னை மகிழ்விப்பதற்குப் பதிலாக நேரடியாகவே உனக்கு நாங்கள் பணிவிடை செய்து விடுகிறோம்! உன் திருவடிகளால் எங்களைத் தீண்டி உன் திருக்கரங்களை எங்கள் மேல் வைத்து எங்களது சாபத்தைத் தணித்து அருள்புரிய வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள்.

கோபிகைகளின் மிக உயர்ந்த பக்தி நிலையையும் அவர்கள் தன்மீது கொண்ட உலகியலுக்கு அப்பாற்பட்ட தெய்வீகக் காதலையும் புரிந்து கொண்ட கண்ணன், குரவைக் கூத்து என்ற நாட்டியத்தை அவர்களோடு ஆடி அவர்களுக்கு அருள்புரிந்தான். (ஆழ்ந்த வேதாந்தக் கருத்துகளை உணர்த்தும் இக்குரவைக் கூத்தை நாம் உலகியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறாகும்.) இரவு முழுவதும் கண்ணனோடு குரவைக் கூத்தாடிய கோபிகைகள், காலையில் வீடு திரும்பினார்கள். அவர்களை வீட்டில் யாராவது சேர்ப்பார்களா? இரவு எங்கே சென்றாய் உள்ளிட்ட கேள்விக் கணைகளைக் குடும்ப உறுப்பினர்கள் தொடுத்திருப்பார்களே! எதுவுமே இல்லை. அவர்கள் வீடு திரும்பியவாறே, எப்போதும் போல், தங்களது இயல்பான
நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்களாம்.

அதெப்படி சாத்தியம்?

கண்ணனை நாடிக் கோபிகைகள் சென்றவாறே, அத்தனை பேரின் வடிவங்களையும் கண்ணனே எடுத்துக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைக் கண்ணனே செய்து முடித்து விட்டான். அதனால் கோபிகைகள் வீட்டில் இல்லை என்ற உணர்வு எந்த வீட்டில் உள்ள யாருக்குமே
ஏற்படவில்லை.

உலகியல் கண்ணோட்டத்தில் பார்ப்போருக்குத் தருமத்தை மீறிக் கோபிகைகள், கண்ணனை நாடிச் சென்று விட்டார்கள் எனத் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்றால் தருமத்துக்கெல்லாம் அதிபதியான, ‘க்ருஷ்ணம் தர்மம் ஸநாதனம்’ என்று போற்றப்படும் விசேஷ
தர்மமான கண்ணனையே நாடிச் சென்றுள்ளார்கள் அப்பெண்கள். விசேஷ தர்மமாகிய கண்ணனைப் பற்றி விட்டதால், அவர்கள் செய்ய வேண்டிய சாமானிய தர்மங்களை தானே
நடந்தேறி விட்டன.

ஆக, திருமால் தருமமே வடிவெடுத்தவராகத் திகழ்கிறார். அவரை மகிழ்விப்பதே அனைத்து வித தருமங்களின் நோக்காக உள்ளது. இதற்குச் சான்றாக சிம்சுமாரச் சக்கர வடிவில் இருக்கும் திருமால் தருமத்தையே தனது தலையாகக் கொண்டிருக்கிறார். அதனால் ‘தர்மயூப’ என்று அழைக்கப்படுகிறார். ‘தர்மயூப’ என்றால் தர்மத்தோடு கூடியிருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 439-வது திருநாமம்.“தர்மயூபாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் என்றும் அறவழியில் இருந்து வழுவாதிருக்கத் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

படம் : மேப்ஸ்

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!