×

அறிந்த தலம் அறியாத தகவல்கள் :திருப்போரூர்

தாரகன் எனும் அசுரனுடன் முருகப்பெருமான் போர் புரிந்த ஊர் இது. அதன் காரணமாக போர்+ஊர்,போரூர் என அழைக்கப்படுகிறது.யுத்தம் செய்ததால் ‘யுத்த புரி’ என்றும்;சமர் செய்ததால் சமராபுரி என்றும் அழைக்கப்படும்.

தீமைகளை நீக்கும் தலம்

தாரகன் எனும் அசுரன் வரங்கள் பல பெற்றவன். (இவன் சூரபத்மனுடைய சகோதரனான  தாரகன் அல்ல. இவன் வேறு) தேவர்கள், முனிவர்கள் என நல்லவர் அனைவருக்கும் துயரம் விளைவித்தான். அவன் தன் பிள்ளைகளிடம், “நான் தவத் தினால் தான், பெருமை பெற்றேன். நீங்களும் தவம் செய்து பெருமை பெறுங்கள்!”என்றான்.

அவர்களும் தவம் செய்யச் சென்றார்கள். அதை அறிந்த தேவர்களும் முனிவர்களும் நடுங்கினார்கள்; அவர்களின் துயர் தீர்ப்பதற்காக, முருகப்பெருமான் தாரகனுடன் பத்து நாட்கள் போர் புரிந்து, அவனை சங்காரம் செய்தார். அந்தத் தாரகனை சங்காரம் செய்த திருத்தலம் இது. பகைவரால் விளையக்கூடிய துயர் தீர்த்து அருள் புரியும் திருத்தலம் இது.

பத்து நாட்கள் ஏன்?

முருகப்பெருமான் நினைத்திருந்தால், ஒரு விநாடியில் தாரகனை சங்காரம் செய்திருக்கலாம். அப்படி இருக்க, பத்து நாட்கள் போர் செய்ய வேண்டுமா? காரணம்?  தீமைகள் மிகவும் பலம் வாய்ந்தவை. அவற்றை அழிப்பது மிக மிகக் கடினம். அதை நமக்கு உணர்த்தி எச்சரிக்கவே, தாரகனுடன் பத்து நாட்கள் போரிட்டார். முருகப்பெருமான். தாரகனுடன் போர்புரிந்து அவனை சங்காரம் செய்ததால் ‘போரூர்’ எனப் பெயர் பெற்றது. தாரகனின் இருப்பிடமாக இருந்தது, செங்கற்பட்டிற்கு அருகே உள்ள ‘கூவம்’ எனும் ஊர்.

பிரணவ மலை

மந்திர ஸித்தி பெற: பிரணவ வடிவான ஓங்கார புருஷன், முருகப் பெருமானை நோக்கித் தவம்செய்த திருத்தலம் இது. தவம் செய்த ஓங்கார புருஷனுக்கு, சுயம்புவான இவ்வாலய மூலவரில் இருந்து முருகப்பெருமான் வெளிப்பட்டு அருள் புரிந்தார்; “பிரணவமே! நீ இங்கேயே நமது பின் பக்கத்தில்,நம்மைச் சூழ்ந்து மலை வடிவாக இரு!மலை வடிவாயிருக்கும் நீ,

‘பிரணவசைலம்’ என அழைக்கப் படுவாய்!  உன் மீது  உள்ள அன்பால், பிரணவ சைலம் என்னும் அந்த மலை மீது, அம்பிகையை இடப் பாகம் கொண்ட ஈசனும் யாமும், இடைவிடாமல் இருப்போம்! “என்றார். மேலும்,” ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகை அன்று, தேவர்கள் சூழ, மலை வடிவாயிருக்கும் உன் உச்சியில், விநாயகருடன் பார்வதி அன்னை பாகராகிய சிவபெருமானை, யாமே அடியவர்களுக்காகப் பூஜை செய்வோம்!

நீ உண்டாக்கிய தீர்த்தமும் உன் பெயரால் அழைக்கப்படுவதுமான பிரணவ தீர்த்தத்தில் நீராடி, இந்த மலையைப் பக்தியுடன் வலம் வருபவர்க்கு விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். மறுபிறவி இருக்காது” என்றும் கூறி அருள் புரிந்தார் முருகப்பெருமான். பிரணவ புருஷனும் தன் வேண்டு கோள் நிறைவேறியது கண்டு, மலை வடிவாக மாறினார். பிரணவ சைலம் என்னும் அந்த மலை, ஆலயத்தின் மேற்குப்பக்கம் உள்ளது.

மந்திர ஸித்தி பெற விரும்புபவர்கள், இம்மலை மீது அமர்ந்து மந்திர ஜபம் செய்தால், மந்திரம் சித்தியாகும். இவ்வாறு பலர் ஜபம் செய்வதை இன்றும் காணலாம். இம்மலை மேல் ஏறி ஒருமுறை வலம் வரும்போதே, அங்கே தெய்வ சான்னித்தியத்தை உணரலாம். திருமகளே பூஜை செய்ததால், இம்மலை பர்வதம்’ எனவும் அழைக்கப்படும்.

சிவபெருமான் வாக்கு

அம்பிகைக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று, அதிகாலையில் எழுந்து பிரணவ தீர்த்தத்தில் நீராடி, சிவன் - பார்வதி - விநாயகர் - முருகன் ஆகியோருக்கு இருப்பிட மான ஓங்கார வடிவான இம்மலையை, பக்தியுடன் மூன்று முறை கள் வலம் வருபவர்கள் பாவங்கள் நீங்கி, செல்வங்கள் அனைத்தையும் அடைவார்கள். அவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்த பலன் உண்டாகும். முடிவில் கைலையை அடைவார்கள் - என சிவபெருமான் இம்மலையின் மகிமையைப் பற்றிக்
கூறியிருக்கிறார்.

ரிஷிகள் சொன்ன பெருங்கடல் தத்துவம்

காசிபர், பராசரர், விசுவாமித்திரர், புலத்தியர், வாமதேவர், வசிஷ்டர், கௌதமர், கர்க்கர் முதலான ரிஷிகள் எல்லாம் விபூதி- ருத்திராட்சம் அணிந்து பொறி-புலன்களை வென்றவர்கள்.அவர்கள் அனைவரும் கூடி, பிறவிப் பெருங்கடலின் துயரங்களைப் பற்றிப்பேசி, அவற்றில் இருந்து விடுபட வழிகள்-வழிபாடுகள் பற்றிப்பேசிக்கொண்டிருந்தார்கள்; முருகனை வழிபடுவதே சாலச் சிறந்தது என முடிவுசெய்தார்கள்.

அவர்கள் பேச்சின் சாராம்சம்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்- என்னும் வள்ளுவரின் திருக்குறளுக்கு விளக்கம்போல இருந்தது அவர்கள் பேச்சு. பெருங்கடல் ஒன்றில் என்னவெல்லாம் இருக்குமோ, அவையெல்லாம் பிறவிப் பெருங்கடலில் இருப்பதாக விவரித்தார்கள்.

பிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில், தெளிவின்மை என்னும் நீர் நிறைந்துள்ளது. அதில் ஆசை என்னும் அலைகள் அடித்துக்கொண்டிருக்கின்றன. காம-குரோதங்கள் என்னும் முதலைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

அகங்காரம் என்னும் சிறு குன்றுகள் மேடு பள்ளங்களாக இருக்கின்றன. பழைய வாசனை என்னும் புல்-பூண்டுகள் உள்ளன. சுற்றுதல் என்னும் நீர்ச்சுழி சுழற்றி அடிக்கிறது. ஆசை என்னும் முத்துச் சிப்பிகள் நிறைந்து, பொய்யாகிய நீர் நுரைகள் பெருக்கெடுக்கின்றன. விருப்பம் என்னும் நீரோட்டத்தில், அறியாமை என்பது ஆழமாக இருக்கிறது. தப்பிக்கும் வழிவகை என்னும் நீச்சல் தெரியவில்லை.

உடம்போ, துக்கம் என்னும் பொந்துகளும் குகைகளும் கொண்டதாக இருக்கிறது. நோய் என்னும் வெள்ளம், அடிக்கடிப் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆ ஏற வேண்டிய கரை என்று நாம் தீர்மானிப்பதோ, சத்தற்றதாக இருக்கிறது. இந்தப் பிறவிப் பெருங்கடல், கண்களுக்கு எதிரில் தெரியும் கடலினை விடப் பெரிதாக இருக்கிறது. இதில் இருந்து தப்பிக் கரை ஏற வேண்டுமானால், முருகப்பெருமானின் திருவடிகள் என்னும் தோணியைத் தவிர வேறு வழியில்லை.

என்பதே அந்த முனிவர்கள் பேச்சின் சாராம்சம். அப்போது அங்குவந்த சூத பௌராணிகரிடம், அந்த முனிவர்கள், தங்கள் மனதில் உள்ளதைச் சொல்லி, வழிகாட்டும்படி
வேண்டினார்கள்.

அகத்தியருக்கு ஆறுமுகன் உபதேசித்த தலம்

அகத்தியர் ஆறுமுகப்பெருமானை வணங்கி, பிரணவ உபதேசம் செய்து அருளும் படி வேண்டினார். அப்போது முருகப்பெருமான், திருப்போரூரின் மகிமைகளை விரிவாகச் சொல்லி, “திருப்போரூருக்கு வா! உபதேசம் செய்கிறேன்” என்றார். முருகப்பெருமான் சொன்ன தகவல்களில் ஒரு சில: “எக்காலமும் நீங்காமல் நான் எழுந்தருளியிருக்கும் தலம் திருப்போரூர். அது பாவம் என்னும் காட்டை எரிக்கும் நெருப்பாக இருக்கிறது;  சோகம் என்னும் இருட்டை நீக்கும் சூரிய மண்டலமாக இருக்கிறது; பிறப்பு-இறப்பு என்னும் விஷப்புல் பூண்டுகளை அடியோடு வெட்டிச் சாய்க்கும் கோடாலி; ரிஷிகளாலும் முனிவர்களாலும் பூசிக்கப்பட்ட தலம்: திருப்போரூர்.

அங்கே நம் ஆலயத்தின் தெற்காக, நீராடு பவர்களின் பிரம்மகத்தி முதலான கொடும் பாவங்களையும் நீக்கக் கூடிய வள்ளையார் ஓடை என்னும் சரவணப்பொய்கை உள்ளது. விசேஷமான தீர்த்தம் அது. அதற்கு வடதிசையில் வேப்பமரத்து அடியில், விநாயகர் வீற்றிருக்கிறார். தம்மை வந்து தரிசிப்பவர்களின் இடையூறுகளை எல்லாம் நீக்கி அவர்களின் விருப்பங் களையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவர் அந்த விநாயகர். அப்படிப்பட்ட மகிமை பொருந்திய திருப் போரூரில் போய்த் தவம் செய்! உன் எண்ணம் பலிக்கும்“என்றார். அதன்படியே அகத்தியர் செய்து,முருகப்பெருமானிடமிருந்து திருவடி தீட்சையும் ஞான உபதேசமும்பெற்ற திருத்தலம் இது.

 வள்ளி தெய்வவானை சமேதராக இங்கே எழுந்தருளியிருக் கும் முருகப்பெருமான் ‘ சுயம்பு மூர்த்தி’ மிகவும் அபூர்வமானது.
  இதற்கு முன் ஆறு முறைகள் சிதிலமடைந்திருந்த இத்திருக் கோவிலை, சிதம்பர சுவாமிகள் அன்னை மதுரை மீனாட்சியின் உத்தரவுப்படி, இப்போதைய நிலையில் கட்டினார். நேருக்கு நேராக முருகனைத் தரிசித்து, முருகப்பெருமான் காட்டிய வழிகாட்டுதலின் படியே ஆலயத்தை அமைத்தார்.
 சக்கரங்கள் இரண்டு: சிதம்பர சுவாமிகளால் உருவாக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட இரண்டு சக்கரங்கள் இங்கு உண்டு. ஒன்று, மூலவரின் இடப்பக்கமாக வெளியே ஒரு சந்நிதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை, சிவபெருமான்-சக்தி, சண்டேசுவரர், அஷ்டதிக்குப் பாலகர்கள் என்னும் எண் திசைப் பாலகர்கள், பைரவர் ஆகியோரின் பீஜாட்சர மந்திரங்கள் உள்ளன. வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத சக்கரம் இது. 48-நாட்கள் இந்த  சக்கரத்தைத் தரிசித்து வழிபட்டால், நினைத்த காரியம் நடக்கும். மற்றொரு சக்கரம் கருவறையில்,  ‘தீர்த்த சக்கரம்’ என்னும் பெயரில் உள்ளது.
 அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது. திருபோரூர் எனும் இத்தலம் சென்னை- மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.

Tags : Thiruporur ,
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...