×

மழலை வரமருளும் நம்ம ஊரு அம்மன்கள்...

1) முப்பந்தல் இசக்கியம்மன்

ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரிஅகிலத்தையே அடக்கி ஆளும் அந்த அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தியின் அம்சம் தான் இசக்கியம்மன். இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி என்பதாலே இந்த அம்பாளுக்கு இயக்கி என்ற நாமம் உருவாயிற்று. அதுவே இசக்கியானது. இசக்கியம்மனுக்கு கேரளா மற்றும் தமிழகத்திலுள்ள பழையனூர், திருவாலாங்காடு மற்றும் தென் மாவட்டங்களில் கோயில்கள் பல இருந்தாலும், மூலஸ்தானமாக திகழ்வது முப்பந்தல் தான். எல்லா அம்மன் திருமேனிகளைவிட இசக்கியம்மன் தனித்துவம் வாய்ந்தவள்.

காரணம், இந்த அம்மன் தான் இடுப்பில் குழந்தையை வைத்தபடி திருமேனி கொண்டவள். ஆகவே தான் மழலை வரமளிக்கும் அம்மன் திருக்கோயில்களில் முதல் கோயிலாக இசக்கியம்மன் கோயிலை வரிசைப்படுத்துகிறேன்.

பிள்ளைச் செல்வம் வேண்டி இந்த அம்மனை வேண்டுபவர்கள் தொட்டில் பிள்ளை அதாவது மரத்தால் ஆன தொட்டிலும் அதில் இருக்கும்படி குழந்தை பொம்மையையும் (மரத்தால் செய்யப்பட்டது) வாங்கி கோயில் மரத்தில் கட்டினால் நிச்சயம் மறு ஆண்டு மழலை வரம் கிட்டும் என்பது காலகாலமாக தொடரும் பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அடுத்த முப்பந்தல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு வழிபாட்டு முக்கிய தினங்களாகும். பூஜை நேரம் நண்பகல் 1 மணி ஆகும்.

2) பாட்டாங்கரை தில்லை அம்மன்இளையநயினார்குளம்,திருநெல்வேலி

சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு இளையநயினார்குளம் ஊரில் வாழ்ந்து வந்த மாடக்கோனார், மாடத்தி தம்பதியருக்கு மழலை செல்வம் கிட்டவில்லை. மாடக்கோனார் மனைவி மாடத்தியின் அனுமதியோடு இரண்டாவதாக வள்ளியம்மாளை திருமணம் செய்தார். இரு தாரம் மணந்தும் மாடக்கோனாருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கவில்லை. ஒருநாள் கோடங்கி கூறியதற்காக விஜயாபதி சென்று தில்லை அம்மனை வேண்டினார்.

கோயிலுக்குச் சென்று வந்த பிறகு வள்ளியம்மாள் மேல் தில்லை அம்மன் இறங்கி பேசி தனக்கு கோயில் கட்டுமாறு கூறியதன்பேரில், இளையநயினார்குளம் ஊரில் பாட்டாங்குளத்து கரையில் தில்லைக்காளிக்கு கோயில் எழுப்பினார் மாடக்கோனார். இதனால், பாட்டாங்கரை தில்லை என்ற நாமம் அம்பாளுக்கு உருவாயிற்று. கோயில் எழுப்பிய மறு ஆண்டு மாடக்கோனாரின் இரு தாரத்தினரும் குழந்தைகள் பெற்றனர். தில்லை அம்மனை வேண்டி வழிபட்டால் மறு ஆண்டே குழந்தை செல்வம் கிடைக்கிறது.

ஆகவே, இக்கோயில் மூலம் குழந்தை வரம் பெற்றவர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை பணமாக செலுத்தாமல் கோயிலுக்கு சர்க்கரை பொங்கல், சிறப்பு வழிபாடு, கோயில் கொடைவிழா என நடத்துகின்றனர். அதனால், இத்திருக்கோயிலில் ஆண்டுக்கு பலமுறை விழா நடக்கிறது. எப்போதும் விழாக்கோலம் காண்கிறாள் தில்லை அம்மன். மூலஸ்தானத்தில் தில்லை மாகாளி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே அமைந்துள்ளது இளையநயினார்குளம். இந்தக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு பூஜை நடைபெறும்.

3) பன்னம்பாறை மாடத்தி அம்மன்

திருச்செந்தூர், தூத்துக்குடி சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த முருகேச பாண்டியன், முத்துபேச்சியம்மாள் தம்பதிக்கு ஏழு ஆண் குழந்தைகள். தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என இருவரும் குல தெய்வமாம் சுடலைமாடனை நேர்ந்துகொள்ள, மறுவருடமே முத்துபேச்சி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். மாடனின் அருளால் பிறந்ததால், மாடத்தி என்று பெயரிட்டனர். மாடத்தியின் பத்து வயதில் தாய், தந்தையர் மாண்டு போனார்கள். அண்ணன்மார்கள் அரவணைப்பில் வளர்ந்த மாடத்தியை ஒட்டன்புதூர் குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டிக்கு மணமுடித்து கொடுத்தனர். செல்லப்பாண்டி பொருள் ஈட்ட கொழும்பு சென்றார். மாமியாருடன் ஒத்துப்போகாததால் பிறந்த வீட்டுக்கு மகன் மற்றும் மகளுடன் வந்தாள் மாடத்தி.

ஒரு முறை திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த மாசிமாத திருவிழாக்கு தனது குழந்தைகளுடன் சென்ற மாடத்தி அங்கே ராட்டு சுற்றிவிட்டு இறங்கும்போது மகளை பக்கத்தில் நின்ற ஒருவர் எடுத்து மாடத்தியிடம் கொடுக்க, மாடத்தி மகளை வாங்க, இதை பக்கத்து ஊரைச் சேர்ந்த சிலர் பார்த்தனர். மறுநாள் சாத்தான்குளம் அருகேயுள்ள கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பஞ்சாயத்து பேச சென்ற கந்தையா பாண்டியனிடம் இங்க தீர்ப்பு சொல்ல வந்திருக்கியே ‘‘மாசி திருவிழாவில, உன் தங்கச்சி மாடத்தி, எவனோ ஒருத்தன் கூட ஜோடி போட்டு ராட்டினம் ஆடினாளே, அவளுக்கு என்ன தீர்ப்ப சொல்லப்போற?’’ என்று கூற,  உடனே சினம் கொண்ட அண்ணன்மார்கள் முடிவு தங்கையை தோட்டத்திற்கு அழைத்துச் ெசன்று கொலை செய்துவிடுகின்றனர்.
இது சில தினங்களில் ஒருவர் பின் ஒருவராக இரண்டு அண்ணன்கள் பலியாக, மாடத்தியின் ஆத்மாவை சாந்தப்படுத்த மாடத்திக்கு கோயில் எழுப்பி படையலிட்டு பூஜித்து வந்தனர். கோயிலில் நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகிறாள். தன் பிள்ளைகளை விட்டுச் சென்றதால் பிள்ளைகள் மேல் அதிக பாசம் கொண்ட மாடத்தி அம்மன், பிள்ளை வரம் கேட்பவர்களுக்கு உடனே கொடுத்து அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறாள். திருச்செந்தூரிலிருந்து சாத்தான்குளத்திற்கு போகும் வழியில் இருக்கிறது பன்னம்பாறை. இங்கு பகல் 1 மணி, முன் இரவு 8 மணி இரு நேரங்களில் தீபாராதனை நடை பெறுகிறது. செவ்வாய், வெள்ளி இரு தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

4) அருணா லட்சுமி அம்மன்பாவூர்சத்திரம், தென்காசி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது குருசாமிபுரம். இந்த குருசாமிபுரத்தில் வாழ்ந்து வந்த சிவனினைந்தபெருமாள், சண்முகவடிவம்மாள் தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தையில்லை. குலதெய்வத்தின் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தைக்கு அருணா லட்சுமி என பெயரிட்டு வளர்த்து வந்தனர். அருணா லட்சுமியைத் தொடர்ந்து இரண்டு ஆண்குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

சில ஆண்டுகள் கடந்த நிலையில் சிவனினைந்தபெருமாள் இறந்து விட்டார். அருணா லட்சுமியை அவளது 19 வயதில் கல்லூரணி ஊரிலுள்ள முத்துக்குமாரின் மகன் ராமச்சந்திரனுக்கு மணமுடித்து வைத்தனர். மறு வருடம் அருணா லட்சுமி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். பிரசவ கால மூலிகை மருந்துகளை சாப்பிட கொடுக்கையில் தாயுக்கும், மகளுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக 10வது நாளே  கைக்குழந்தையுடன் புருஷன் வீட்டுக்கு புறப்பட்டாள் அருணா.

ஊர் எல்லையில், கல் தடுக்கி கீழே விழுந்தாள். பின்னர் தானே எழுந்த அருணா, தனது கணவர் வீட்டிற்கு சென்று விட்டாள். அங்கு சென்ற நாள் முதல் உடல் நலம் குன்றி, ஒட்டிய முகத்தோடும், மெலிந்த தேகத்தோடும் உருமாறியிருந்த அருணா, தாய் வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறார். மறுநாள் காலை தனது சித்தப்பாமார்களை அழைத்தாள். ‘‘மூனு சித்தப்பாக்களும் வந்திட்டீங்களா, நான் தாய் பேச்ச கேக்காம போனதுக்கான தண்டனைய அனுபவிச்சிட்டேன். ஆளு அரவம் இல்லா இடத்தில வேண்டாத வாதை என்னை அடித்து விட்டது போலும். வரும் செவ்வாய் மதிய பொழுதில் நான் கயிலாசம் போயிருவேன். என் புள்ளையும் கூட்டிட்டுத்தான். என் தங்கச்சி கல்யாணிய என் புருஷனுக்கு கட்டி வைங்க.

என்னை, நம்ம வழக்கப்படி எரிக்க வேண்டாம். அடக்கம் பண்ணுங்க. அந்த இடத்தில எனக்கு நடுகல் வச்சு, எனக்கு பூச பண்ணுங்க. எந்த வாதையும் உங்களயும், நம்ம குடும்பத்தயும் சீண்டாம காவல் காப்பேன். அது மட்டுமல்ல என்னை மதிச்சு யார் என்னை வணங்கினாலும் அவங்களுக்கும், அவங்களை சார்ந்தவங்களுக்கும் காவலாய் இருப்பேன்.’’ என்ற படி ம்ம்…ம்…ம் என்று மூச்சிறைக்க குரல் கொடுத்தவாறு உயிர் மூச்சை நிறுத்திக்கொண்டாள்.

அருணா லட்சுமி கூறியபடியே அவளை அடக்கம் செய்த இடத்தில், நடுகல் நட்டு பூஜை செய்தனர். பின்னர் கையில் குழந்தையுடன் நிற்கும் பெண் ரூபத்தில் சிலை கொடுத்து கோயில் கட்டி கொடை விழா நடத்தி பூஜித்து வந்தனர். கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் அருணா லட்சுமி, மகளுடன் உள்ளார். மாதம்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது. இக்கோயிலில் புத்ரதோஷத்திற்கு தீர்வு கிடைக்கிறது. இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தில் அமைந்துள்ளது.

5) சூலக்கரை நாகம்மன் விருதுநகர்

சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை கிராமத்தில் வாழ்ந்து வந்த முனீஸ்வரன் என்பவர், உறவுக்காரப்பெண்ணான மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். மாரியம்மா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஒரு நாள் காலை நேரத்தில் வயல் வெளிக்கு சென்ற முனீஸ்வரன், அங்கு வரப்பு மேட்டில் நல்ல பாம்பை கண்டார். அந்த பாம்பு அவ்விடம் விட்டு நகர்ந்தது. இருப்பினும் கண்ட பாம்பை அடிக்காமல் விடக்கூடாது என்றெண்ணிய முனீஸ்வரன், தனது பின் இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்து பாம்பின் நடு கண்டத்தில் வெட்டினார். வெட்டுப்பட்ட பாம்பு பாதி உடலோடு புதருக்குள் சென்று பதுங்கியது. மாரியம்மாள் குழந்தை பெற்றாள். அந்த குழந்தை பெண் தலையோடும் பாம்பு உடலோடும் இருந்தது. அப்போதுதான், முனீஸ்வரன் செய்த தவறை மனைவியிடத்தில் கூறினார். குழந்தை பிறந்த நாற்பத்தியோராவது நாள் நாகம் தீண்டி முனீஸ்வரன் இறந்தார். கணவன் இறந்த பின் மாரியம்மா தோட்ட காடுகளுக்கும், வயல்களுக்கும் வேலைக்கு சென்று வந்தாள்.
நாகத்தை பெற்றெடுத்ததால் அவளை நாகத்தின் அம்மா என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் நாகம்மா என பெயராயிற்று. நாகம்மாளின் கணவர் வழி உறவினர்கள் குழந்தை நாகத்தை கதிர் அரிவாளால் துண்டு, துண்டாக நறுக்கி, வறட்சியால் வெடித்து நின்ற வயலில் அந்த வெடிப்பு பகுதியில் துண்டுகளை வைத்து களிமண் கொண்டு அதன் மேல் பூசிவிட்டனர். மூன்றாவது நாள் இரவில் நாகம்மாள் கனவில் தோன்றிய பாம்பு குழந்தை, உறவினர்கள் தன்னை நறுக்கி போட்டதையும், தன்னை புதைத்து வைத்த இடத்தையும் கூறியது. மறுநாள் காலை, கனவில் நாக குழந்தை கூறிய வயல் பகுதிக்கு சென்று நறுக்கி கிடந்த பாம்பு துண்டுகளை எடுத்து கற்றாழை நாரில் கோர்த்து வைத்து, கையில் ஏந்தியபடி ஊர் பெரியோர்கள் கூடியிருந்த ஆலமரத்தடிக்கு வருகிறாள்.

என் பிள்ளையை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கதறி அழுதாள். கூடியிருந்த பெரியோர்கள், பெற்றது பாம்பு பிள்ளை, அதை போய் பிரச்னைன்னு கொண்டு வந்து நிக்கிறியே, போம்மா, இனி எப்படி பிழைக்கலாமுன்னு பாரு’’ என்று பதிலுரைத்து அனுப்பினர். இதனால் மனமுடைந்த நாகம்மாள், ஊர் எல்லையில் உள்ள வீரப்பெருமாள் கோயிலுக்கு வந்து உயிரை மாய்த்தாள். நாகம்மாள் சாபத்தை தொடர்ந்து, ஊரில் பாம்புகள் அட்டகாசம் அதிகரித்தது.

பாம்பு தீண்டி இறப்பு அதிகம் நேர்ந்தது. இதனால் ஊர் வாசிகள் ஒன்று கூடி நாகம்மாவுக்கு சிலை நிறுவி, பூஜை செய்தனர். பிள்ளைக்காக ஏங்கிய இந்த நாகம்மா, பிள்ளை வரம் கேட்டு தன்னிடம் வருபவர்களுக்கு உடனே கொடுத்து மகிழ்கிறாள். இக்கோயில் விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் ரயில்வே கேட் அருகேயுள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் உள்ளது.

6) சிவனம்மாள்அல்லிக்குண்டம்,உசிலம்பட்டி, மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிலுள்ளது அல்லிகுண்டம். இந்த ஊரில் சிவனம்மாள் கோயில் உள்ளது. கண்டமனூர் ஜமீன்தாருக்கு பாதுகாவலனாக இருந்த
நல்லத்தேவனுக்கு வரிவசூல் பணத்தை மதுரைமன்னர் திருமலைநாயக்கருக்கு மாதாமாதம் கட்டிவர வேண்டும். ஒருநாள் பணத்தை செலுத்திவிட்டு குதிரையில் வரும்போது, உரப்பனூரில் வயல்வெளியோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிவனம்மாளைக்கண்ட நல்லதேவன், சிவனம்மாளை குதிரையில் தூக்கிக்கொண்டு கண்டமனூர் சென்று மணமுடித்துக்கொண்டான். ஆண்டுகள் இரண்டு கடந்த நிலையில், கண்டமனூரில் நடைபெற்ற திருவிழாவில் ஜமீனின் தலைமையில் வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

நல்லதேவன் எண்ணெய் தடவிய வழுக்குமரத்தில் ஏறத்துவங்கினான். பலமுறை வழுக்கியும் தொடர்ந்து முயற்சித்து அதன் உச்சியிலுள்ள பொற்காசுகள் முடித்துள்ள துணியை எடுத்தான். அந்த நேரம் கூட்டத்தின் பின்னே இருந்த ஒருவன் ஈட்டியில் விஷம் தடவி நல்லதேவன் முதுகை நோக்கி வீசினான். ஈட்டி பாய்ந்த வேகத்தில் ரத்தம் பீறிட வழுக்குமரத்தின் உச்சியிலிருந்த பொற்காசுகளின் மஞ்சள்துணியை கையில் பிடித்தபடியே கீழே விழுந்தான். விஷம் தடவிய ஈட்டி என்பதால் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்தான்.

இறந்த நல்லதேவன் உடலை எரிக்க ஜமீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சிவனம்மாள், நல்லதேவன் உடம்பில் எரியும் தீ என்னையும் எரிக்கட்டும்’’ என்றாள். இது உடன்கட்டை ஏறுவது. அவ்வளவு சுலபமில்லை. நீ போய் மதுரை மன்னரிடம் சென்று உடன்கட்டை ஏற அனுமதி பெற்று, அதற்கான தீக்கங்குகள் வாங்கி வரவேண்டும், அதுவும் உனது சேலை முந்தானையில் கொண்டு வரவேண்டும் முடியுமா’’ என்றனர்.

சரியெனக்கூறி சிவனம்மாள் சென்றாள். மதுரை மன்னரிடம் அனுமதி பெற்றாள். தீக்கங்குகள் கேட்டாள், சேலை தீப்பற்றுமே என்றனர். ‘‘என் பதிபக்தி உண்மையானால், என் குலசாமி சின்னக்கருப்பன் சக்தி உள்ள தெய்வம்தான் என்பது உண்மையானால் சேலையில் போட்ட தீ கங்கு, என் உடல் மீது பற்றும் வரை படராமலும், அணையாமலும் இருக்கும். போடுங்கள் தீக்கங்கை’’ என்றாள். அரண்மனை ஊழியர் தீக்கங்கை போட, அதை முந்தானையில் வாங்கி கொண்டு வந்தாள். விறகுகள் அடுக்கிவைக்கப்பட்டு அதன் மேல் நல்லதேவனின் உடல் வைக்கப்பட்டிருந்தது. கொண்டுவந்த தீக்கங்குகளை போட்டு விட்டு சிவனம்மாள் உடன் கட்டை ஏறினாள்.

சிவனம்மாள் தீக்கங்குகள் கொண்டுவந்த முந்தானை மட்டும் தீயில் வேகாமல் புத்தம்புதியதாக இருந்தது. அந்த முந்தானையையும், அவர்களது அஸ்தியையும் வைத்து கோயில் கட்டி அப்பகுதியினர் வழிபட்டனர். இந்த கோயிலில் மாசி மாதம் சிவராத்திரியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்பகுதி மக்கள் மழலை வரம் வேண்டி சிவனம்மாளிடம் முறையிட்டாள் மறுக்காமல் மறு ஆண்டு மழலையை தருகிறாள் என்று நம்பிக்கையோடும், பெருமையோடும் கூறுகின்றனர்.

7) கடம்பாக்குடி உலகம்மாள் தொண்டி, ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு மேற்கே கடம்பாக்குடி. அங்கு ஒரு சூலம்தான் உலகம்மாளாக உருவகப்படுத்தப்பட்டு வழிபடப்படுகிறாள். சேதுபதிராஜா வேட்டைக்குச் சென்றுவிட்டு, தென் கடற்கரையோரமாக அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது கடல் அலைகளுக்கிடையே எலுமிச்சை பழம் குத்தப்பட்டு சூலாயுதம் ஒன்று மிதந்து வருவதைக் கண்டார் ராஜா. அதை எடுத்து குலதெய்வத்தை நினைத்து ஊர் எல்லையில் ஊன்றி விட்டு (நட்டு வைத்து விட்டு) பூஜை செய்து விட்டு திரும்பினார்.

குறி சொல்லும் பெண் வந்து குறிசொல்ல, ஏழு மாரியாத்தாக்களில் இவள்தான் மூத்தவள். முதலில் இவளுக்குக் கூழ் ஊற்றிய பிறகுதான் மற்ற அம்மன்களுக்கு கூழ் படைப்பு. ஊருக்குக் கிழக்கே இவள் இருந்தால்தான் வளம் கொழிக்கும் என்று நம்பிய மக்கள், அங்கே பின்நாளில் கோயில் எழுப்பினர். இந்த அம்மன் ஆலயத்தில் குழந்தை வரம் வேண்டி சென்றாள், அங்கே பூசாரி சேலை முந்தானையில் குங்குமம் இட்ட எலுமிச்சம் கனியை கொடுப்பார். மறு ஆண்டு குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

8) ஊரடச்சி அம்மன் குழுமணி, திருச்சி

திருச்சியை அடுத்த குழுமணி கிராமத்தில் காவல் தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறாள் ஊரடச்சி அம்மன். இந்த ஊரின் வடமேற்கில் அமைந்துள்ளது ஊரடச்சியம்மன் கோயில். ஊரை அடைத்து காவல் செய்கின்ற அம்மன் என்றும், தீய சக்திகளை அழித்து மக்களை காப்பாற்றும் தெய்வமாகவும் இருப்பதால் இத்தெய்வத்தின் முடியில் தீ ஜுவாலை வீசுவதாகவும், அதன் காலடியில் மகிஷாசுரன் என்னும் அரக்கனைக்கொன்று உலகத்தை காப்பாற்றிய பராசக்தியின் வடிவம் இது என்றும் மக்கள் கூறுகிறார்கள். அடை காக்கும் கோழி தன் முட்டை களையும், குஞ்சுகளையும் எப்படி காக்குமோ, அதுபோல் இந்த அம்மன் ஊரை அடை காக்கின்ற காரணத்தினால் ஊரடச்சியம்மன் என்று அழைக்கப்படுகின்றாள். பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக விளங்குகிறாள் இந்த ஊரடச்சி அம்மன்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. குழந்தைப் பேறு இல்லாதப் பெண்கள் ஆறு பௌர்ணமி நாட்களில்   அன்னையின் சந்நதிக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட, அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது என்கின்றனர் பக்தர்கள். பின் அவர்கள் தாய்மை அடைந்ததும் மூன்றாவது மாதம் அன்னைக்கு வளைகாப்பு இட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி, பக்தர்கள் தங்கள் நன்றிக்கடனை தெரிவித்துக் கொள்கின்றனர். ஊரடச்சி அம்மன் கோயில் திருச்சி நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கும் குழுமணி கிராமத்தில் அமைந்துள்ளது. குழுமணி ஊர் பஸ் நிறுத்தத்திலிருந்து ½ கி.மீ சென்றால் ஊரடச்சி அம்மன் கோயிலை அடையலாம்.

9) உருப்பிடி அம்மன் குறிஞ்சிப்பாடி, கடலூர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் இருந்து வடக்கே 6 கி.மீ. தூரத்தில் சந்தவெளிப் பேட்டை கிராமம் அமைந்துள்ளது. சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட வீரமுண்டனார், சோழப் பேரரசின் கீழ் செயல்பட்டவர். வீரமுண்டனார் தன்னிடம் கப்பம் வசூலிக்கும் பணியை செய்து வந்த தனது தளபதியாருக்கு தன்னுடைய ஒரே மகளை மணமுடித்து கொடுத்தார்.

இந்த கோட்டைப்பகுதியின் மேற்குப்பகுதி வழியாக ராஜராஜன் பெருவழி, சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இது தற்போது சென்னை - கும்பகோணம் சாலையாகும். இந்த பெருவழியின் குறுக்கே கன்னியாக்கோயில் ஓடை செல்கிறது. இதன் குறுக்கே பாலம் ஒன்றை கட்ட சந்தவெளிப்பேட்டை தலைவனான வெற்றிகளித்த வீரமுண்டனாருக்கு உத்தரவு பிறப்பித்தனர். உடனே பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால், பாலம் உடைந்து போனது. வழிப்போக்கர்கள் பலர் வெள்ளத்தால் இறந்து விட்டனர்.

சோழ மன்னனிடம் இருந்து கடிதம் ஒன்று வீரமுண்டனாருக்கு வந்தது. அதில் தாங்கள் இந்த பாலத்தை வலிமையாக கட்டவேண்டும். அப்படி கட்டவில்லையானால் உமது வருவாய் தலைவர் உரிமை பறிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். நண்பர் ஒருவர் ஆலோசனையின் பேரில் ஒரு மந்திரவாதியை சந்தித்தார். மந்திரவாதி வீரமுண்டனாரிடம் தலைப்பிள்ளை சூலியை பாலத்தின் முன் வைத்து பலி கொடுத்துவிட்டு பாலம் கட்டினால் அது உடையாமல் ஸ்திரத்தன்மையோடு இருக்கும் என்றான். இந்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. வீரமுண்டனாரின் மகளுக்கும் தெரிந்தது. இந்நிலையில் வீரமுண்டனாரின் மகளுக்கு வளைகாப்பு நடந்தது. அன்றிரவு அமாவாசை. தந்தையை அழைத்தாள் மகள். ‘‘அப்பா, இன்றிரவு இடிந்து விழுந்த பாலம் அருகே நம்ம குல தெய்வத்தை நினைத்து நான் பூஜை செய்யப்போகிறேன். உத்தரவிடுங்கள்’’ என்றாள். ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.

நள்ளிரவு நேரம் கண்மாய் அருகே உடைந்த பாலம் பகுதியில் எட்டு வீரர்கள் தீப்பந்தத்துடன் நிற்க பூஜைக்கான படையல்கள் தலை வாழை இலைகள் மீது வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் முன் இருந்து பூஜைகள் செய்தாள் வீரமுண்டனார் மகள். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வீட்டு பெண்கள் ஐந்து பேர் அப்பகுதியில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அர்த்த சாம பொழுதானது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் தான் மறைத்து கொண்டு வந்த உடைவாளை எடுத்து தனது வயிற்றை கீறி, கருவை எடுத்து தன் முன் வைக்கப்பட்டிருந்த இலை மீது வைத்துவிட்டு தன் வயிற்றில் தானே குத்தி குருதி கொப்பளிக்க, உயிரற்ற பொருளாய் அவ்விடம் சாய்ந்தாள் வீரமுண்டனார் மகள்.

அவள் சாகும் முன், தனது தந்தையிடம் உடனே பாலத்தை கட்டவேண்டும். என சத்தியம் வாங்கிய பின்னரே உயிரை விட்டாள். மகளுக்கு கொடுத்த சத்தியத்தின் படி வீரமுண்டனார் அவ்விடத்தில் பாலம் கட்டினார். பாலத்தின் அருகே மகளுக்கும் கோயில் கட்டினார். அந்த பாலம் வலிமைத் தன்மையோடு நிலைபெற்று இருந்தது. உருவம் கொண்டு பிடிக்கப்பட்ட அம்மன் என்பதால் உருப்பிடி அம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். உருப்பிடியம்மன் குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு வேண்டும் அளவு பிள்ளைச்செல்வம் கொடுத்து பெருவாழ்வு அளிக்கிறாள்.

சு.இளம் கலைமாறன்

Tags :
× RELATED பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்..