×

தெள்ளிய சிங்கமே! தேவாதி தேவனே!

நரசிம்ம ஜெயந்தி மே மாதம் 14ம் தேதி வருகிறது. ஸ்ரீ வைஷ்ணவ நரசிம்ம ஜெயந்தி மே 15ம் தேதி எல்லா திருமால் ஆலயங்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்தந்த கோயில் வழக்கப்படி கொண்டாடப்படும் இந்த நரசிம்ம ஜெயந்தியின் சிறப்பையும், ஸ்ரீநரசிம்மப் பெருமாளின் சிறப்பையும் “முப்பது முத்துக்களாக” நம்முடைய வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.

1. நான்காவது அவதாரம்

பகவான் ஸ்ரீமன் நாராயணன் இந்த உலகை காக்க எடுத்த அவதாரங்கள் பல. அதில் மிகவும் சிறப்புடைய அவதாரம் நரசிம்ம அவதாரம். தசாவதாரங்களில் இது நான்காவது அவதாரம். இந்த அவதாரங்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில், அமைந்த வியப்பையும் நாம் காண்கிறோம். முதல் முதலில் நீர்வாழ் உயிரினங்கள் தான் தோன்றின.  உலகம் வாழ்வதற்குத் தகுதியானதாக இருப்பதற்கு நீர் அவசியம். “நீர் இன்றி அமையாது உலகு” அல்லவா. நீரில் வாழும் உயிரினமான மீன் (மச்ச) அவதாரத்தை எடுத்தார். அடுத்து, நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய கூர்ம அவதாரத்தை எடுத்தார். மூன்றாவதாக வராக அவதாரத்தை எடுத்த ஸ்ரீமன் நாராயணன், அடுத்த நிலையாக மனித அவதாரத்தை எடுப்பதன் முன்னம், மனித உடலும் சிங்க முகமும் இணைந்த நரசிம்ம அவதாரத்தை எடுத்தார்.

2. ஆழ்வார்கள் வழங்கிய திருநாமங்கள்

நரமும், சிங்கமும் கலந்த நிலைதான் நரசிங்கம். “நரம்” என்பது மனிதன். அதாவது மனித உருவம். இந்த உருவத்தோடு சிங்க உருவம் கலந்த ஒரு திருவுருவம் தான் நரசிம்மரின் திருவுருவம். ஆழ்வார்கள் நரசிங்கம் என்று அழைப்பதை விட, “சிங்கபிரான்” என்று அழைப்பதில் இனிமை காண்கிறார்கள். என் சிங்கபிரான் என்றும், சிங்கம் என்றும், அழகியவா என்றும், அரிவுருவன் என்றும், சிங்கவேள் என்றும், செங்கண் ஆளி என்றும் தெள்ளிய சிங்கம் என்றும் பலபடியாக ஆழ்வார்கள் புகழ்கிறார்கள்.

3. சிங்காசனத்தின் பெருமை

நரசிம்மன் அமர்ந்த ஆசனத்தை சிங்காசனம், (சிம்மாசனம்) என்று அழைக்கும் மரபு உண்டு. அவதாரங்களில் உயர்ந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். பதவி அல்லது ஆசனங்களில் உயர்ந்தது சிம்மாசனம். “கோப்புடைய சீரிய சிங்காசனத்திலிருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்” என்று ஆண்டாள் இந்த சிங்காசனத்தின் பெருமையைப் பாடுகிறாள். இதன் பொருள் என்ன என்றால், சிங்காசனத்தில் பகவான் அமர்ந்து இருக்கும் பொழுது, நம்முடைய வேண்டுதலை விரைந்து நிறைவேற்றுவான். அல்லது நரசிம்மப் பெருமாளிடம் நாம் கோரிக்கை வைத்தால் மிக விரைவாக நிறைவேற்றித் தருவான்.

4. நாளை என்ற பேச்சு நரசிம்மனிடத்தில் இல்லை

அவசரமாக, நொடி நேரத்தில் எடுத்த அவதாரம் இது, என்று சொல்வார்கள். எல்லா அவதாரங்களையும் நன்கு திட்டமிட்டு எடுத்த எம்பிரான், இந்த அவதாரத்தை, எந்தவித முன்னேற்பாடும் இல்லாத நிலையில் எடுத்தான் என்பார்கள். நரசிம்ம அவதாரத்தின் இன்னொரு சிறப்பு என்ன என்று சொன்னால், அவரிடம் வைக்கப்படும் எந்த கோரிக்கையும், எப்படி அவர் உடனடியாக அவதாரமெடுத்து, பிரகலாதனுடைய துன்பத்தைத் தீர்த்தாரோ அதைப்போலவே நொடி நேரத்தில் துன்பத்தைத் தீர்ப்பான். எனவே மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறவர்கள், உடனடித் தீர்வுக்காக, ஸ்ரீநரசிம்மருக்கு பானகம் வைத்து, நெய் தீபம் ஏற்றி, பிரார்த்தனை செய்வார்கள். “நாளை என்ற பேச்சு நரசிம்மனிடத்தில் இல்லை” என்பது பக்தர்களின் நம்பிக்கை.

5. ஏன் இப்போது பகவான்அவதாரம் எடுக்கவில்லை?

ஒரு முறை ஒரு ஆன்மீகப் பேச்சாளர் நரசிங்கனின் பெருமையைப் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார், ‘‘ஐயா, நரசிங்க அவதாரத்தை பகவான் எடுத்து இரணியனை அழித்தான் என்று உருக்கமாகச் சொல்வது சரி. அதைப்போலவே ராம அவதாரம் எடுத்து ராவணனை அழித்தார். வராக அவதாரம் எடுத்து  இரண்யாட்சனை அழித்தார் என்றெல்லாம் சொல்வது சரி. அவர்கள் எல்லாம் கொடுமையாளர்கள். இன்று நாட்டின் எத்தனையோ இரணியன்கள் இருக்கிறார்களே, ஏன் பகவான் அவதாரம் எடுக்கவில்லை? பகவானுக்கு கொடுமை செய்யும் இரணியர்களை  அழிப்பதில் ஆர்வமில்லையா? எதனால் அவன் இன்னும் அவதாரம் செய்யாமல் இருக்கிறான்?

6. நரசிம்ம அவதாரத்திற்கு யார் காரணம்?

இந்த கேள்விக்கு அந்த ஆன்மீகப் பேச்சாளர் மிக அழகாக விடை சொன்னார். “நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.  இரணியர்களும் , இராவணர்களும் நிறைந்த உலகில் ஒரு பிரகலாதன் இல்லையே.... இரணியனை அழிப்பது மட்டும்தான் இறைவன் நோக்கம் என்றால், அதை இறைவன் அமர்ந்த இடத்திலிருந்து, சங்கல்ப மாத்திரத்தில் முடித்திருக்க முடியும். ஆனால்,  பிரகலாதனுக்கு அருள் செய்ய வேண்டும் என்பதற்காகவே இறைவன் அவதாரம் எடுத்தான். பிரகலாதனைப்போல சஞ்சலம் இல்லாத, விசுவாசமிக்க, நம்பிக்கையுள்ளவர்கள் தோன்றுகின்ற பொழுது, நிச்சயமாக இறைவன் அவதாரம் எடுப்பார்” என்றார். நரசிம்ம அவதாரத்திற்கு காரணம் இரணியன்  அல்ல. பரம பக்தனான   பிரகலாதன்தான் காரணம்.

7. ஆழ்வாரும் அசுரனும்

ஒருவன் எந்தக்  குலத்தில் தோன்றினாலும், அவன் அசுரன் ஆவதோ, ஆழ்வார் ஆவதோ, அவரவர்கள் நடத்தையிலும் வாழ்க்கையிலும் தான் இருக்கிறது. உயர்ந்த குலம் என்று சொல்லப்படுகின்ற குலத்தில் பிறப்பதால் மட்டுமே, ஒருவன் உயர்ந்தவன் ஆகிவிட முடியாது. அதைப்போலவே அசுர குலத்தில் அல்லது  அரக்க குலத்தில் பிறந்ததால் ஒருவன் அசுரனோ அரக்கனோ ஆகிவிடமாட்டான். இந்திரனுடைய மகனாக தேவர் குலத்தில் பிறந்தவன் ஜெயந்தன். அவன் காக்கை வடிவம் எடுத்து சீதையின் உடலை காம இச்சையோடு தீண்டி பிரம்மாஸ்திரத்தால்  கண் இழந்தான்.

“சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை
முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய அனைத்து
உலகும் திரிந்து ஓடி
வித்தகனே! இராமாவோ!  நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்
ஓர் அடையாளம்’’
என்று இந்த நிகழ்ச்சியை பெரியாழ்வார் பாடுகிறார். தேவ குலத்தில் பிறந்த ஜயந்தனுக்கு “காகாசுரன்” என்று பெயர். ஆனால் அசுர குலத்தில் பிறந்த பிரகலாதனுக்கு “பிரகலாத ஆழ்வார்” என்று பெயர்.

8. குருவை விஞ்சிய சீடன்

பரம பாகவதர்கள் தினமும் அதிகாலை எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஒரு ஸ்லோகம் உண்டு. பரம மங்கலத்தையும், புண்ணியத்தையும், பரம பாகவதர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும் ஸ்லோகம் இது.
ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸ (அ)ம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான் |
ருக்மாங்கத (அ)ர்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான்
ஸ்மராமி ||

இந்தச் ஸ்லோகத்தில் முதல் பெயராக வருவது பிரகலாதனின் பெயர். அதற்கடுத்துதான், பிரகலாதனுக்கு கர்ப்பத்தில் இருக்கும் பொழுது அஷ்டாக்ஷரம் என்று சொல்லக்கூடிய எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்த நாரதர் பெயர் வருகிறது. பிரகலாதனின் அபாரமான பக்தியைக்  கருத்தில் கொண்டே,  “குருவை மிஞ்சிய சீடனாக”, பிரகலாதனின் பெயர் முதலில் வரும்படியாக பெரியோர்கள் இந்த ஸ்லோகத்தைச் செய்திருக்கிறார்கள். நரசிம்ம அவதாரத்திற்குக்  காரணமான, பிரகலாதனின் பெருமையை, பக்தியை, இந்தச்  ஸ்லோகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

9. நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர்

மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா?  பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?  வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா?  உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா? இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர்.

10. நரசிம்மரைப் பற்றிய  நூல்கள்

நரசிம்மரைப் பற்றிய குறிப்பு இல்லாத புராண நூல்கள் குறைவு. பாகவத புராணம், அக்னி புராணம், பிரம்மாண்ட புராணம், வாயு புராணம், ஹரிவம்சம், பிரம்ம புராணம், விஷ்ணு புராணம், கூர்ம புராணம், மச்ச புராணம், பத்ம புராணம், சிவ புராணம், லிங்க புராணம், ஸ்கந்த புராணம்,  என பல புராணங்களில் நரசிம்மரைப் பற்றிய குறிப்புகள் நிறைய உண்டு. மகாபாரதத்திலும் நரசிம்மரைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

11. இரணிய வதைப்படலம்

கம்ப ராமாயணத்தில் வீடணன் தன்னுடைய அண்ணனான இராவணனுக்கு ஸ்ரீநரசிம்மரைப் பற்றிய பெருமையைச் சொல்வதாக  கம்பர் தனிப் படலத்தையே இணைத்திருக்கிறார். கம்பராமாயணத்தில் மிகச்சிறந்த படலமாக அந்தப்  படலம் விளங்குகிறது. “இரணிய வதைப் படலம்” என்று அந்த படலத்திற்கு பெயர். கம்பராமாயணத்தைப்  பேசுபவர்கள், இந்த படலத்தின் பாடல்களை மேற்கோள் காட்டாமல் பேசுவது கிடையாது. வைணவத் தத்துவத்தையும், நரசிங்கரின் பிரபாவத்தையும் அதி அற்புதமாக அமைத்திருப்பார்.

அதில் ஒரு முக்கியமான பாடல் இது. நரசிம்மர் எங்கும் இருப்பவர். அவர் இல்லாத இடமே இல்லை என்பதைக் காட்டுகிறது. அவர் தோன்றிய இடம் தூண். ஆனால் அவர் எங்கும் இருப்பவர்.கண்ணுக்கு தெரியாமல் நிலத்தடியில் தண்ணீர் இருந்தாலும், துளை (bore) போட்ட இடத்தில் தானே விசையோடு தண்ணீர் வெளியே வருகிறது. துளை போட்டவன் இரணியன். சீரிய சிங்கமாகி வெளிப்பட்டவர் நரசிம்மர்.

இனி கம்பன் பாட்டு.
சாணினும் உளன்; ஓர் தன்மை, அணு
வினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்” என்றான்; “நன்று” எனக் கனகன் சொன்னான்.

12. அழகிய சிங்கர்

வைணவத் திருத்தலங்கள் 108. அதில் இரண்டு திருத்தலங்கள் நரசிம்ம அவதாரத்திற்கு உரியவை. ஒன்று அகோபிலம். அகோபிலத்தை சிங்கவேள் குன்றம் என்று அழைப்பார்கள். இங்கு எல்லா மூர்த்திகளும் நரசிங்க மூர்த்திகள் தான். அகோபில நரசிம்மர், வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர்,பாவன நரசிம்மர், காரஞ்ச நரசிம்மர், சக்கர வட நரசிம்மன், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா  நரசிம்மன் என்றும் 9 நரசிம்மர் கோயில்கள் இருப்பதால் இதற்கு நவ நரசிம்ம திருப்பதி என்று பெயர். வைணவத்தின் மிக முக்கியமான திருமடங்களில் ஒன்று இந்த ஊரின் பெயரில்தான் அழைக்கப்படுகிறது. அகோபில மடம் என்று பெயர். அதன் பீடாதிபதிகளுக்கு“அழகியசிங்கர்” என்றே திருநாமம்.

13. தாதா நரசிம்மர்

தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள்.சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.“ஸந்தாத்ரே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.

14. விரைவாய் பலன் தரும் நரசிம்மர்

தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற நரசிம்ம க்ஷேத்திரம் சோளிங்கர். சோளசிங்கபுரம் என்றும் சொல்லுவார்கள். அரக்கோணம் அருகே இந்த க்ஷேத்திரம் இருக்கிறது. கீழே உற்சவருக்கு ஒரு கோயிலும் மலைமேல் மூலவருக்கு ஒரு கோயிலும் உண்டு .இதுதவிர சிறிய மலை மேல் ஆஞ்சநேயர் கோயிலும் உண்டு.பெரிய  மலைமீது உள்ள கோயிலில் யோகநரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார்.

இவ்வூருக்கு அழகான தமிழில் ‘‘திருக்கடிகை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கடிது என்றால் விரைந்து என்றும் பொருள் உண்டு. ‘‘மிக உடையான்றாள் சேர்தல் கடிதினிதே” (இனி. நாற்.) என்ற பாடலை விரைவாய் என்ற பொருளுக்கு சான்றாகச்  சொல்லலாம். கடிகை என்றால் நாழிகை என்றும்  பொருள். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களைக்  குறிக்கும். 24 நிமிடங்கள் இந்தப் பெருமானை ஆராதித்தால், அல்லது திருத்தலத்தைச்  சேவித்தால் அவர்களுக்கு அத்தனை நலன்களும் கிடைக்கும். அதாவது குறைந்த நேரத்திலேயே பலன்களை இங்குள்ள நரசிம்மர் விரைவாக (கடிது, கடிகையில்) அளிப்பார்.  

15. அக்காரக் கனி

இங்குள்ள நரசிம்மருக்கு அழகான தமிழ்ப்  பெயரை  ஆழ்வார் சூட்டியிருக்கிறார். அந்தப் பெயர்தான் அக்காரக்கனி. அக்காரம் என்றால் வெல்லம் என்று பொருள். அந்த வெல்லமே ஒரு மரமாக மாறி, அதில் கனிகள் உருவாகி  பழுத்தால்,அப்பழங்கள், அதாவது சர்க்கரை விதையால் முளைத்த பழங்கள்,  எத்தனைச்  சுவை இருக்குமோ , அத்தனை இனிமை கொண்டவன் இத்தலத்து எம்பெருமான்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே  
 - என்பது திருமங்கையாழ்வார் பாசுரம்.

சப்தரிஷிகளும், வாமதேவர் எனும் முனிவரும் பிரகலாதனுக்காக பெருமாள் காட்டிய அந்த நரசிம்ம அவதாரத்தை, ஒரு நாழிகை மட்டும் தவமிருந்து, இங்கு கண்டனர். விசுவாமித்திர மகரிஷி 24 நிமிடம் இங்கே தவமிருந்து பிரம்மரிஷி பட்டம் பெற்றார். மிக எளிதில், விரைவில் பலன் தருபவன் நரசிம்மன்.

16. நரசிம்மருக்கு அத்தனை ஏற்றம் ஏன்?

நரசிம்ம அவதாரத்தையும் மற்ற அவதாரங்களையும் இணைத்து ஒரு அழகான உவமை கூறினார், பராசரபட்டர். பால் சுவையுடையது. அதிலே தனி இனிமை, தித்திப்பு உண்டு. சர்க்கரை சுவையுடையது. அதிலும் இனிப்பு, சுவை  உண்டு. ஆனால், பாலும் சர்க்கரையும் இணைந்தால் அது இன்னும் இனிமையாகவும் புதுமையாகவும் இருக்கும் அல்லவா. அதைப்போலத்தான் மற்ற அவதாரங்களிலும் சுவையானது, நரசிம்ம அவதாரம் என்பர் பராசரபட்டர்.

திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண் ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை. ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்தவர்கள்  வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று  நரசிம்ம தத்துவத்தை விளக்கினார்.

17. நரசிம்மர் கதை

நரசிம்மர் கதையை தினம் ஒரு முறையாவது படிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எத்தனை முறை படித்தாலும் திகட்டாத கதை அது.
சத் யுகத்தில் காசியப முனிவருக்கும் திதிக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு, இரணியாக்சன் என்ற இரு அசுர குழந்தைகள்  பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள் சமூகத்துக்குச் சவாலாக விளங்குகின்றன. இரணியன் இரணியாட்சன் இருவரும் மிகுந்த வரபலம் பெற்று, அதன் விளைவாக கொடுமையான காரியங்களைச் செய்து பலருக்கும் தொல்லைகள் தந்தனர்.

18. மெய்ஞ்ஞானம் பெற்ற பிரகலாதன்

பூமியை கடலுக்குள் ஒளித்து வைத்து உலகத்தை செயலற்றதாக ஆக்கிய இரணியாட்சனை,  வராக அவதாரத்தில் விஷ்ணு   அழித்து, உலகை மீட்டார். இதனால் கோபம் கொண்ட  இரணியன், விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடி தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு பல கொடுமைகள்  புரிய ஆரம்பித்தான்.

அவனை அடக்க யாராலும் முடியவில்லை.தேவர்கள் அஞ்சினர். இரணியகசிபு அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்தான். அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி, தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு விஷ்ணுவின் பெருமைகளை புகட்டி, ஸ்ரீமன் நாராயணனின் எட்டெழுத்து மந்திர உபதேசத்தை அழுத்தமாகச் செய்தார். அது பிரகலாதன் மனதில் ஆழமாகப் பதிந்தது. கர்ப்பத்திலேயே மெய்ஞானம் கிடைத்தது.

19. பக்தியின் உறுதி பிரஹலாதன்

பிரகலாதன்  கல்வி பயிலத்  தொடங்கினான்.  அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன்தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன்  ஸ்ரீமன் நாராயணன் தான் கடவுள் என்று சொல்ல, பிரச்சினை ஆரம்பித்தது. இரணியன் பிரகலாதனை தன் வசப்படுத்த பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன், மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான்.

ஆனால், பிரகலாதனைக் கொல்ல முடியவில்லை. மறைபொருளாய் நின்ற மாதவன், பிரகலாதனின் ஒவ்வொரு ஆபத்திலும் அவனை காப்பாற்றியே வந்தார்.ஆணவத்தில் கொதித்த இரணியன், உன் கடவுள் எங்கே  என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் எங்கும் இருப்பார்; எதிலும் இருப்பார்; ஏன் தூணிலும் இருப்பார்; எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

இரணியன் ஒரு தூணைக் காட்டி, “இந்த தூணில் உள்ளாரா?” என்று கேட்க, பிரகலாதனோ, ‘‘ஏன், உடைத்துத்தான்   பாருங்களேன்”   என்று உறுதியுடன் கூறினான்.
இந்த நம்பிக்கையும் உறுதியும்தான் பிரகலாதன்.இரணியன் அந்தத் தூணை உடைக்க, பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

20. ஏன் இரணியன் வரங்கள் பலிக்கவில்லை?

இத்தனை வரங்கள் வாங்கி இருந்தும், ஏன் இரணியன் தோல்வி அடைந்தான் என்பதைச்  சிந்திக்க வேண்டும். எத்தனை முன்னெச்சரிக்கையோடு இருந்தாலும், இந்த பிரபஞ்சத்தின் நிறைவு நிலை சக்தியான ‘‘இறை சக்தியின்” முன்னால்,தாம்  சிறு துளி தான் என்பதை உணர்வதே அறிவு. அதனால்தான் இறைவனை ஆழ்வார் பாடும்பொழுது ‘‘உயர் வற உயர்நலம் உடையவன்” என்று பாடினார்.

“நீ எத்தனை உயர்ந்தவனாக இருந்தாலும், வலிமையானவனாக இருந்தாலும், உன்னை விட உயர்ந்தவன், வலிமையானவன் இறைவன்” என்பது தான் இதன் பொருள். அது தான் நரசிம்ம அவதாரத்தில் வெளிப்படுகிறது. புத்திசாலித்தனமாக வரம் வாங்கிவிட்டால் அது தன்னைக் காப்பாற்றிவிடும் என்று இரணியன் போட்ட தப்புக் கணக்கு தான் அவன் அழிவுக்குக் காரணம். அவனிடத்தில் வரத்தின் பலம் இருந்தது. ஆனால் அறிவு பலம் இல்லை. ஒருவனுக்கு இறுதியில் நன்மையைச் செய்து காப்பாற்றுவதுதான் அறிவு.

“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு” என்பார் வள்ளுவர். இரணியனுடைய படிப்பும், சாமர்த்தியமும், வரங்களும், அவனைத் தீயநெறியில் தள்ளியதே  தவிர, உண்மையான அறிவு நிலையில் தள்ள வில்லை.எனவே அவன் வரங்கள் அவனையே ஏமாற்றி அவனை அழித்தது.

21. பிறரை அழிக்க வாங்கிய வரங்களை பழுதாக்கியவன் நரசிம்மன்

ஒருவன் வாழ்க்கையில் கஷ்டப்படலாம். மிகுந்த முயற்சி செய்யலாம். அதற்கான உயர்ந்த நிலையை அடையலாம். அது தவறல்ல. அப்படி உயர்ந்தநிலையை அடைந்தவன்தான் இரணியன். அவன் முறையாக தவம் செய்துதான் அத்தனை வரங்களையும்  வாங்கினான். ஆனால், அந்த வரங்களின்  நோக்கம், அவன் மகிழ்ச்சியாக இருப்பது மட்டும் அல்ல; அவனுக்கு எதிரானவர்கள், அவருடைய ஆணவத்திற்கு எதிரானவர்கள், அவனை ஏற்றுக் கொள்ளாதவர்கள், அனைவரும் துன்பப்பட வேண்டும் என்பதுதான் அவனுடைய வரத்தின் நோக்கம்.

ஒருவன், தன்னுடைய முயற்சியினால் உயர்ந்த நிலையை அடைந்தாலும் கூட, அந்த உயர்ந்த நிலை மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்றால், தெய்வமானது அவனுடைய வரங்களை அழிக்கும். ஒரு நிலையில் அவனையும் அழிக்கும் என்பதுதான் இரணியன் வரலாறு காட்டுவது. அவன் வாங்கிய வரங்கள் எப்படியெல்லாம் அவருக்கு எதிராக மாறின என்பதும், அவனை கைவிட்டன என்பதும், தான் நரசிம்ம அவதாரத்தின் ரகசியம்.

22. நடக்கவே முடியாத விஷயங்களை நடத்தியவர்

“நடக்கவே முடியாது. உலகத்தில் இப்படி ஒரு விஷயம் கிடையாது”  என்று இரணியன் நம்பிய விஷயங்களையெல்லாம் நரசிம்ம பெருமாள் உடைத்தார்.சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்.பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்.தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார்.

வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்.
நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், வெட்டினாலும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம். தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார்.

23. கோபமும் கருணையும்

கோபம் என்பது தனிக்குணம். கருணை என்பது தனிக்குணம். இவை இரண்டும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இருப்பது வியப்புக்குரிய விஷயம். அந்த வியப்புக்குரிய விஷயம் நரசிம்மனிடம் இருந்ததாக பராசரபட்டர் என்கின்ற வைணவ ஆச்சாரியர் ஆச்சரியமாக எடுத்துரைக்கிறார். சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அது போல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்துகொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார். இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!

அவருடைய ஒப்பிட முடியாத ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்கும் தோற்றத்தை இந்த சுலோகம் வர்ணிக்கிறது. இதை தினமும் பாராயணம் செய்ய, நரசிம்மன் பேரருள்
கிடைக்கும்.

ஜ்யோதீம் ஷ்யர் கேந்து நட்சத்திர
ஜ்வல நாதீந்  அநுக்ரமாத்  
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம்   நமாம்யஹம்

பரம பாகவதனான பிரகலாதனின் துன்பங்களுக்குக் காரணமான இரணி யன் முடிந்துபோன பின்பும், வெகு நாழிகை வரையில், நரசிம்மரின் சீற்றம் அப்படியே இருந்ததாம். தன்னை நம்பிய பக்தர்களின் பகைவர்கள் மீது நரசிம்மர் கொண்ட  அளவு கடந்த சீற்றமே, உலகட்கெல்லாம்  தஞ்சமென்று மற்ற பல பக்தர்களுக்குக் காட்டுவதற்காகவாம் என்று  இந்த கோபத்துக்கு
பெரியவாச்சான் பிள்ளை  விளக்கம் அளித்தார்.

24. எத்தனை வடிவங்கள்?

நரசிம்மரின் பெயர்களும் வடிவங்களும் பலப்பல. உக்ர நரசிம்மர், குரோத நரசிம்மர், வீர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், கோப  நரசிம்மர், யோக நரசிம்மர், அகோர நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்று ஒன்பது முக்கிய வடிவங்களை, “நவநரசிம்ம வடிவங்கள்” என்று சொல்வார்கள். நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். எட்டுத் திசைகளிலும் புகழ் கிடைக்கும். அவரை எப்படிப் பாட வேண்டும் என்பதை ஆழ்வார்
ஒரு பாசுரத்தில் காட்டுகின்றார்.

கூடா இரணியனைக்  கூர்உகிரால் மார்வுஇடந்த,
ஓடா அடல்அரியை உம்பரார் கோமானை,
தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,
ஆர்வத்தால் -
பாடாதார் பாட்டுஎன்றும் பாட்டுஅல்ல
கேட்டாமே.
“வாயார அவரைப் பாடாத பாட்டு பாட்டே  அல்ல” என்பது ஆழ்வார் திரு உள்ளம். எனவே, தினசரி நரசிம்மரின் பெருமைகளைப்  பாட வேண்டும். அவருடைய மந்திரத்தை
ஓத வேண்டும்.

25. சயன நரசிம்மர்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல்பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோக நரசிம்மருக்கே. அவர் எப்போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக்கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்குகள் இல்லை.நரசிம்மருக்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிக பக்தர்களால் விரும்பப்படுகிறது. தாம்பரம் - செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம்.

கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில், திருவக் கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு
சிம்ம முகம் இல்லை.

26. அடித்த கை பிடித்த பெருமாள்’

நரசிம்மர் வழிபாடு மிக மிக எளிமையானது.அவரை வழிபடும் போது ‘‘ஸ்ரீநரசிம்ஹாய நம:’’ என்று சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட்டாலே சகல  வித்தையும் சாஸ்வதமாகும்.. ‘‘அடித்த கை பிடித்த பெருமாள்’’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.நரசிம்மரை ‘‘ம்ருத்யுவே ஸ்வாகா” என்று கூறி வழிபட்டால் மரணபயம் நீங்கும்.

 விழுப்புரம் பக்கத்தில் அந்திலி கிராமத்தில் கருடனுக்குக் காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்ம மூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார். இப்படி பலப்பல நரசிம்ம தலங்கள் உண்டு.

27. அழகியான் இவன்தான்

திருமழிசைப்பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் யார் அழகான பெருமாள் என்ற கேள்வியை எழுப்பி பதில் சொல்லுகிறார்.மத்ஸ்ய, கூர்ம, வராஹ, அவதாரங்கள்மிருக வடிவங்களில் இருந்தமையால் போட்டியில் சேர்த்துக்கொள்ளவில்லை நரசிம்மருக்கு முகம் சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருந்ததால் அவரை சேர்த்துக் கொண்டார். நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களை ஆராய்ந்தார்.

அதில் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு குறையைச் சொல்லித் தள்ளினார்.மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய காலால் மூவுலகையும் அளந்தவர் என வாமன அவதாரத்தையும், எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பவர் என்பதால் பரசுராமரையும், பலராமன், கண்ணன் இருவரும் ஒரே நேரத்தில் உள்ள அவதாரங்கள்  என்பதால் பலராமரையும் விலக்கினார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால், அவரையும்  விலக்கினார்.

இறுதியாக, நரசிம்மன், ராமன், கண்ணன், மூவரையும் ஆராய்ந்தார். மூவரையும் பார்த்த திருமழிசைப்பிரான், ‘‘நரசிம்மர்தான் அழகு!” என்று ஒரே போடாகப்  போட்டார்.
ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான அவதாரம். ஆனால் மிகவும் தாமதமாகவே அவதார நோக்கம் நிறைவேறியது. அவனும் கஷ்டப்பட்டு, சீதையைப் பிரிந்து, நம்பிய முனிவர்களும் துன்பப்பட்டு கடைசியில்தான் ராவணனை வதம் செய்தான். கண்ணனும் அப்படியே. ஆனால், ஒரு பக்தனின் வாக்கை காப்பாற்றுவதற்காக, ஒரே நிமிடத்தில் தூணைப் பிளந்து அவசரமாகத் தோன்றியவர் நரசிம்மமூர்த்தி.

ஆபத்தைப் போக்கிய அவர்தான் பக்தர்களின் கண்களுக்கு அழகாகத் தெரிவான். எனவே ஆபத்பாந்தவனாக நரசிம்மரை அழகு என்றார்.
இதை விளக்கும் நான்முகன் திருவந்தாதி  இருபத்திரண்டாவது பாசுரம் இது

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும்
தன்மையனேமீனாய் உயிரளிக்கும் வித்து.
எனவே, அவதாரங்களில் நரசிம்மர் மட்டும் ‘அழகிய சிங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். அத்தகைய அழகனாக விளங்குவதால், நரசிம்மருக்கு ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.

28. நரசிம்மரின் மடியில் லட்சுமி

சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள். மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி இறையும் அகலகில்லேன் என்று திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் மடியில் அமர்ந்திருக்க ஒரே காரணம்தான். ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது.மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்? அதனால் தான்,ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.

29. நரசிம்மரின் கர்ஜனை

நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் (ஜ்வாலா) ஒளிப்பிழம்பு என்று பொருள் .நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக் குள்ளே இருக்கிறது.அவனுடைய கர்ஜனை பரம மங்களங்களைத்  தரும் என்பதால், ஆண்டாள் ‘‘சீரிய சிங்கம், அறிவுற்று, தீ விழித்து, எப்பாடும் பேர்ந்து உதறி, மூரி, நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டு” என்று பாடினாள்.

இதிலே ‘‘முழங்கி” என்ற பதத்திற்கு சிம்ம கர்ஜனை என்று பெயர். இரண்யகசிபுவை வதம் செய்தபோது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை ஏழு  உலகங்களையும் அதிரச் செய்து அச்சத்தில் இருந்த சாதுக்களுக்கு அபயத்தையும் (பயமின்மை), இரணியன் போன்ற விரோதிகளுக்கு அபாயத்தையும் தந்ததாம்.

30. எங்கும் இருப்பவன் நரசிம்மன்

 மகாலட்சுமிக்கு “பத்ரா” என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது. எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை
யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே
- என்று இந்த  நிலையை விளக்கினார் நம்மாழ்வார்.

இப்பாசுரத்தின் பொருள் நரசிம்மருக்கே  பொருந்தும். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.எல்லா இடத்திலும் இருப்பான். நரசிம்மரின் பெருமையை அவ்வளவு எளிதாகச்  சொல்லிவிட முடியாது. இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அவர் சிறப்பை முழுமையாகவும் சொல்லிவிடமுடியாது. ஆயினும் இந்த நரசிம்ம ஜெயந்தியை ஒட்டி அவரைப் பற்றிய சில செய்திகளை, நாம் இந்த தொகுப்பில் படித்தோம்.

எந்த ஆபத்தையும் தீர்க்கக்கூடிய, எல்லா மங்களங்களையும் தரக்கூடிய,  நரசிம்ம மூர்த்தியின் திருப்பாதங்களை, இந்த ஜெயந்தி நாளன்று, மாலை வீட்டில் விளக்கேற்றி, வெல்லப் பானகம் நிவேதனம் செய்து போற்றி வணங்குவோம்.நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரின் மகா மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் 108 முறை உச்சரிக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நீங்கா துன்பங்களும் நீங்கும் என்பதுதான் நம்பிக்கை.

நரசிம்மரின் மகாமந்திரம் இதோ...
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
 ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.

நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரின் மகா மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் 108 முறை உச்சரிக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் நீங்கா துன்பங்களும் நீங்கும் என்பது தான் நம்பிக்கை.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
 ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

எஸ். கோகுலாச்சாரி

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?