×

அறிந்த தலம் அறியாத தகவல்கள்

 முக்தித் தலங்களில் ஒன்று, முக்தித் தலங்களான அயோத்தியா, வடமதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகாபுரி எனும் ஏழு தலங்களில், தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே தலம் `காஞ்சி’.

 கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் எனும் மூவரும் அன்னை காமாட்சியைப் பாடியிருக்கிறார்கள்.

 அன்னை காமாட்சியை வேண்டி சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா
சாஸ்திரிகள் பாடிய தமிழ்க் கீர்த்தனை,
தருணம் ஈதம்மா என்னை ரட்சிக்க
கருணாநிதியான காமாட்சி ரட்சிக்க
அனுதினமும் எந்தன் நாக்கில் உன் நாமம்
அதுவலால் மற்றொன்றும் இல்லை
என் நேமம்மனக்கவலை தீர்க்க மறு தெய்வம்
உன்னைப்பார்க்கஎனக்கு உண்டோ உனக்கேற்க
இரங்கி உன் கண் பார்க்க.....(தருணம் ஈதம்மா)

 காஞ்சி காமாட்சி தன்னிடம் இருந்து இரு காமாட்சிகளைத் தோற்றுவித்தார். 1. தபஸ் காமாட்சி. (காமாட்சியின் வலது பக்கத்தில்) 2. ஹேம காமாட்சி எனப்படும் பங்காரு காமாட்சி.

 காமாட்சியும் ஐந்தும்; அன்னை காமாட்சிக்கும் ஐந்திற்கும் பல விதமான தொடர்புகள் உண்டு. அவற்றில் ஒரு சில, பஞ்ச ஆயுதங்கள்: ஐம்புலன்களை வசப்படுத்த `பஞ்ச 5’ ஆயுதங்களை ஏந்தி உள்ளார். நான்கு திருக்கரங்களுடன் அன்னை காமாட்சியாகத் தோன்றுவதற்கு முன்னால், ஐந்து வயது பாவையாக அவதரித்தார்.

ஐந்து காமாட்சிகள்: மூல காமாட்சி, தபஸ் காமாட்சி, ஹேமபங்காரு காமாட்சி, பிலம் காமாட்சி, ஸ்ரீசக்கர காமாட்சி.
மூல காமாட்சியின் ஐந்து திரு நாமங்கள்: திரிபுரை, ராஜ ராஜேஸ்வரி, மகா காமேச
வல்லபை, காமாட்சி, காமகோடி.
தபஸ் காமாட்சியின் ஐந்து திருநாமங்கள்: தபஸ்வினீ, கனசியாமா, சர்வ சைவ ஆலயேஸ்வரீ, காமாட்சி, காளி.
ஹேம காமாட்சி எனப்படும் பங்காரு காமாட்சியின் ஐந்து திருநாமங்கள்: சுவர்ணாங்கீ, சுக ஹஸ்தை, சூதலிங்க வல்லபை, காமாட்சி, தர்ம தேவி. (மேற்சொன்ன மூன்றிலும் `காமாட்சி’ எனும் திருநாமம் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க வேண்டும்)
காமாட்சி இருக்கும் அந்த இடத்தின் ஐந்து திருநாமங்கள்: ஸ்ரீபுரம், பத்ம நாபகம், ஜீவன் முக்தி புரம், காம கோட்டம், பஞ்ச பாண
நிகேதனம்.
பஞ்சமி தேவி: காமாட்சிக்குப் `பஞ்சமி தேவி’ என்ற திருநாமம் உண்டு. அப்படிப்பட்ட பஞ்சமி தேவிக்கு 1976ல் பஞ்சமியிலேயே கும்பாபி
ஷேகம் நடந்தது. அதுவும் `வசந்த
பஞ்சமி’ யில் நடந்தது.

 ஆறும் காமாட்சியினிடத்தில் ஆறும்: இங்கே அன்னை காமாட்சியின் சந்நதிக்கு முன் அமைந்துள்ள, ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரரின் சந்நதிக்கு மேல் அமைந்துள்ள ஆதிசங்கரரின் கீழே, ஆறு சீடர்கள் இருப்பார்கள். மற்ற இடங் களிலும், படங்களிலும் நான்கு சீடர்களுடன் காட்சி தரும் ஸ்ரீ ஆதிசங்கரர், இங்கு மட்டும் ஆறு சீடர்களுடன் காட்சி அளிக்கிறார். விநாயகர், முருகன், சூரியன், திருமால், சிவபெருமான், பராசக்தி ஆகியோரின் அறுவகை வழிபாடுகளை,
ஸ்ரீஆதிசங்கரரின் அருளைப் பாடி பரப்பிய கிரிஜாகுமாரர், ஹஸ்தாமலகர், திவாகரர்,
லட்சுமணர், பரமத காலானலர், திரிபுரா குமாரர் என்பவர்களே அந்த ஆறு சீடர்கள்.

 மன்னர்களும் மாதாவும்: காமாட்சி ஆலயத்தில் தர்மசாஸ்தா கோயில் கொண்டிருப்பார். இவருடைய அருள்பெற்று திக்விஜயயாத்திரை செய்து, வெற்றி பெற்ற மன்னர் கரிகாற்சோழர். அவர் திக்விஜய யாத்திரைக்குப் புறப்படும் முன், இங்கே அன்னை காமாட்சியின் அருள் வேண்டி வந்தார். அப்போது அவர் அகக் காதில், “இங்கே ஆலயத்தில் சந்நதி கொண்டுள்ள தர்மசாஸ்தாவின் கைச்செண்டினைப் பெற்றுச் செல்! நீ போகும் இடமெலாம் வெற்றித் திருமகள் தாண்டவமாடுவாள்” என்று கூறி அருள் புரிந்தார் அன்னை.

அதன்படியே கரிகாற்சோழர், தர்மசாஸ்தா சந்நதி வந்து விழுந்து வணங்கினார். அப்போது தர்மசாஸ்தா விக்கிரகத்தின் கையில் இருந்து, ஆசி வழங்குவதைப்போல் செண்டு கீழே விழுந்தது. அதைக் கைக்கொண்டு திக்விஜய யாத்திரைக்குப் புறப்பட்ட கரிகாற்சோழர், இமயமலை வரை சென்று இமயத்தில் புலிக்கொடி நாட்டினார். இச்செய்தியை சிலப்பதிகார மேற்கோள் பாடலாக அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்,

கச்சி வளைக்கைச்சி காமகோட்டம் காவல்
மெச்சி இனிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் திகிரி திரித்த செண்டு - என்பதே அப்பாடல்.

 துர்வாசர் வகுத்துத் தந்த `சிந்தாமணி தந்திரம்’ என்ற ஆராதனை முறைப்படியே, இங்கு அன்னை காமாட்சிக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
 மற்ற ஆலயங்களில் இருப்பதைப் போல, அன்னை காமாட்சி ஆலயத்திலும் `துவஜஸ்தம்பம்’ எனப்படும் கொடிமரம் உண்டு. ஆனால், இங்கே அதிகப்படியான கொடி மரம் ஒன்று உண்டு. விசேஷமானது அது. யாராலும் அழிக்க முடியாத பந்தகாசுரன் என்பவனை அழித்த அன்னை காமாட்சியின் ஆணைப்படி, தேவர்கள் பந்தகாசுரனின் உடலைப் புதைத்து, அதன் மேல் ஒரு ஜெயஸ்தம்பம் எனும் தர்மஸ்தம்பம் நாட்டினார்கள். இதுவே அதிகப்படியான கொடிமரம். கருவறைக்குள் நுழையும் முன் அதிகப்படியாக இருப்பதே இந்தக் கொடிமரம். காமமும், காமத்தின் மறு வடிவான கோபமும் புதைக்கப்பட்ட இடம் இதுவே. நம் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் காமமும் கோபமும் நீங்க, இங்கிருந்து வேண்டுவது வழக்கம்.

 காஞ்சிபுரத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும், தீர்த்த விசேஷம் உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ஏழு தீர்த்தங்கள் உள்ளன. இவைகளில் சுக்கிரவார (வெள்ளிக்கிழமை) தீர்த்தமாக உள்ளது. அன்னை காமாட்சியின் ஆலயத்தில் உள்ள பஞ்ச கங்கை தான்; இதை உலகாணி தீர்த்தம் என்றும் கூறுவார்கள். இந்தத் தீர்த்தக் கரையில் ஆணும் பெண்ணுமாக இரு பூதங்கள் காவல் காப்பதைக் காணலாம். அதையடுத்துக் கீழ்ப்பகுதியில், இரு மாடங்கள் கொண்ட மூன்று நிலை மண்டபம் இருப்பதைப் பார்க்கலாம். அதன் வரலாறும் அந்த இரு பூதங்களின் வரலாறும்; அசுரகுணம் கொண்ட ஆண்-பெண் பூதங்களை அடக்க, அவர்களைக் கீழேதள்ளி அவர்களின் மீது திருவடியை வைத்து அழுத்தி நின்றார். பூதங்கள் அடங்கவில்லை.

மறுபடியும் அவர்களைக் கீழேதள்ளி, அவர்களின் மீது சப்பணம் இட்டு அமர்ந்தார் மகாவிஷ்ணு. அப்போதும் பூதங்கள் அடங்க வில்லை. முடிவாக, அவர்களைக் கீழே தள்ளிய பகவான், தம் திருமேனி முழுதும் அவர்களின் மீது படும்படியாக அவர்களின் மீது சயனம் கொண்டுவிட்டார்.அலையாழி அறிதுயிலும் மாயனல்லவா? பகவானின் திருமேனி முழுதும் பட்டதும் பூதங்களின் கொட்டம் அடங்கி, மன்னி்ப்பு வேண்டின. குளக்கரையில் உள்ள இரு பூதங்களும்; அதன்கீழ்ப்பகுதியில் உள்ள மூன்று மாடங்களில் பகவானின் நின்ற, அமர்ந்த, சயனித்த திருக்கோலங்களில் தரிசனம் தரும் மகாவிஷ்ணுவும், இவ்வரலாற்றை விவரிக்கின்றன. வெள்ளிக்கிழமை அன்று இத்திருக்குளத்தில் மூழ்குவோரின் பாவங்கள் எல்லாம் தீரும் என்பது சிவபெருமான் வாக்கு.

 காமாட்சியின் இருப்பிடம்: பந்தகாசுரனை சங்காரம் செய்த அன்னை காமாட்சியின் அருளாணைப்படியே அமைக்கப்பட்டது. அன்னை காமாட்சி, ஸ்ரீ சக்கரம், பிலாகாசம் உள்ள கர்ப்பக்கிரகம் எனும் கருவறை, அர்த்த மண்டபம் எனும் அனைத்தும், காயத்ரி மண்டபத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. அற்புதமான அந்த அமைப்பின் விவரங்கள்: முன் சொன்ன `ஜய’ஸ்தம்பத்தில் இருந்து பிலாகாசத்திற்கு வாசல் அமைத்தார்கள். காயத்ரி கதிர்கள் பரவிய எல்லைக்குள், அதன் 24 அட்சரங்களுக்கும், எழுத்துக்களுக்கும், 24 தூண்களை எடுத்து, காயத்ரி மண்டபமாக ஆக்கினார்கள். வேதங்களையே இந்த மண்டபத்தின் சுவர்களாக எழுப்பினார்கள். இவ்வாறு வேதங்கள், வேத சாரமான காயத்ரி என்பவைகளால் ஆன கோயில் இது.

 சக்திகள் அனைவரும்: இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி, லட்சுமி, அரூப லட்சுமி, சியாமளா, வாராகி, அன்னபூரணி, அர்த்தநாரி, ஆகிய சக்திகள் அனைவரும் இருக்கிறார்கள். பராசக்தியின் அம்சங்கள் அனைத்தையும் தரிசிக்க, இக்கோயில் ஒன்றே போதும். மந்திரசக்தி, மந்திர ஸித்தி, மழலைச் செல்வம், கல்வி, கலைகள், செல்வம், ஆரோக்கியம், கவிபாடும் ஆற்றல் என அனைத்தையும் அருளும் அன்னை காமாட்சியை வணங்குவோம்! நல்லவைகளுடன் இணங்குவோம்!

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?