வெள்ளத்தில் வந்த வெள்ளமாரி

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அக்ரஹாரத்தின் நிர்வாக கமிட்டிக்கு தலைவராக இருந்தார் அரிகிருஷ்ணன். அக்ரஹாரத்தில் நல்ல பெயரோடும், புகழோடும் திகழ்ந்த அரிகிருஷ்ணனுக்கும், அவரது மனைவி அனந்தாயிக்கும் ஒரே ஒரு கவலை, எல்லா பாக்யத்தையும் கொடுத்த பகவான் நமக்கு ஒரு பிள்ளையை கொடுக்கவில்லையே என்ற வேதனைதான் அது. ஆண்டுகள் சில கடந்த நிலையில் கோயில் கோயிலாக சென்று மனமுருகி வழிபட்டதன் பலனாக அனந்தாயி கர்ப்பமுற்றாள்.

ஏரலில் இருந்து மருத்துவச்சியை வரவழைத்து, உடன் தங்க வைத்து நல்ல முறையில் கவனித்து கொண்டார். அனந்தாயி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு பெயர் சூட்டும் வைபவத்தை அக்ரஹாரமே வியக்கும் வண்ணம் நடத்தி, தனது தாயின் பெயரான கிருஷ்ணம்மாள் என்ற பெயரை மகளுக்கு சூட்டினார் அரிகிருஷ்ணன். நெல்லை சீமை ஜோதிடர் சுப்ரமணி அய்யங்காரிடம் சென்று மகளுக்கு ஜாதகம் கனித்தார். அப்போது அவர் கிருஷ்ணம்மாள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளார்.

இவரது ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளது. அதற்கு பரிகாரமாக வீட்டிலேயே கீரிப்பிள்ளை ஒன்றை வளர்த்து வாருங்கள் என்று கூறினார்.ஜோதிடர் கூறியதன்படி வல்லநாடு மலையிலிருந்து நண்பர்கள் பிடித்து வந்த கீரிப்பிள்ளையை வளர்த்து வந்தார் அரிகிருஷ்ணன். அதனைக் கண்டு அச்சம் கொண்டிருந்த அனந்தாயி, நாளடைவில் கீரிப்பிள்ளையை தனது பிள்ளையாக நினைத்து அன்போடும் பரிவோடும் வளர்த்து வந்தாள்.

குழந்தை கிருஷ்ணம்மாளும், கீரிப்பிள்ளையுடன் நெருங்கி பழகி வந்தாள். அனந்தாயி கோயிலுக்கு போகும் போதெல்லாம், தங்கை குட்டி பாப்பாவ பார்த்துக்கோ என்ற படி உரிமையுடன் கூறிச்செல்ல, கீரிப்பிள்ளையும் அனந்தாயி வரும்வரை குழந்தையின் தொட்டில் இருக்கும் இடத்தை விட்டு நகருவதில்லை. ஒரு நாள் அரிகிருஷ்ணன், அனந்தாயிடம் ‘‘நான் நெல்லை சீமை  வரைக்கும் போயிட்டு வந்திடுறேன். தோட்டத்தில் கடலை எடுக்க ஆள் விட்டுருக்கிறேன். எட்டி பார்த்துக்கோ.’’ என்று கூறிவிட்டு சென்றார்.

பதியின் கட்டளைக்கிணங்க அனந்தாயி தோட்டத்திற்கு சென்றாள்.

அந்த நேரம் வீட்டு மடை வழியே நாகம் ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. அதைக்கண்ட கீரிப்பிள்ளை நாகத்தினுடன் சண்டை போட்டு இறுதியில் கடித்து குதறியது. பின்னர் அந்த நாகத்தின் உடற் பாகத்தை வீட்டிற்கு வெளியே எடுத்துக்கொண்டு போட்டது. இதை அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைத்த கீரிப்பிள்ளை, அனந்தாயியை தேடி தோட்டத்திற்கு சென்றது.

நாகத்தை கடித்துக்கொன்றதால் கீரிப்பிள்ளையின் வாய் மற்றும் முகம் முழுக்க ரத்த கறை படிந்திருந்தது. கீரிப்பிள்ளை வேகமாக வருவதை கண்ட வேலையாள், சாமி வீட்டு அம்மா, கீரிப்பிள்ளை யாரையோ கடித்து கொன்று விட்டு வருதே, வீட்டுக்கு யாராச்சும் வந்தாங்களா, இல்ல, வீட்டுல இருக்கிறவங்களில யாரையும் கடிச்சுதோ தெரியலையே, என்று கூற, திடுக்கிட்டாள் அனந்தாயி.

பிள்ளையா வளர்த்த கீரிப்பிள்ளை, நம்ம மகளை கடிச்சு கொன்று விட்டதோ! என்று மனதிற்குள்ளேயே அஞ்சி, நடுங்கிக்கொண்டு வீட்டிற்கு புறப்படலானாள். கீரிப்பிள்ளை அருகே வந்ததும். எதிரே இருந்த மண்வெட்டியை எடுத்து அதை விரட்டும் நோக்கில் வீசினாள். அந்த மண்வெட்டி கீரிப்பிள்ளையின் மேல் பட்டு அந்த இடத்திலேயே அது இறந்து போனது.

வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது, குழந்தை கிருஷ்ணம்மாள் விளையாடிக்கொண்டிருந்தாள். வீட்டு துளசிமாடம் அருகே இறந்த நாகத்தின் உடல் பாகங்கள் 3 துண்டுகளாக கிடந்தது. நடந்ததை யூகித்தாள். தவறு செய்து விட்டோம். வளர்த்த கீரிப்பிள்ளையை நானே கொன்று விட்டேனே! என்று அழுது புலம்பினாள். அப்போது வீட்டிற்கு வந்த அரிகிருஷ்ணனிடம் நடந்தவற்றை கூறினாள். ‘‘ஏண்ணா, நான் பெரும் பாவம் செய்துவிட்டேன்.

என் பாவம் தீர நான் தீர்த்த யாத்திரை செல்லவேண்டும்’’ என்றாள். அதைக்கேட்ட அரிகிருஷ்ணன். ‘‘கணவர் உயிருடன் இருக்கும்போது மனைவி யாத்திரை செல்வது வழக்கம் இல்லையடி, உனக்காக நானே யாத்திரை போகிறேன்’’ என்று கூறிவிட்டு, தோழர்கள் ஏழு பேருடன் தீர்த்த யாத்திரைக்கு சென்றார்.பாபநாசத் தீர்த்தக்கரை சென்று தீர்த்தமாடி பரமனைத் தொழுதார். மனம் உருகி வேண்டிய அரிகிருஷ்ணன் சற்று தியானத்தில் அவ்விடம் அமர்ந்தார். நேரம் சென்றது மாலை ஆனது. இருள் சூழ்ந்தது. கண் விழித்த அரிகிருஷ்ணன் போகலாமா என்று நண்பர்களிடம் கேட்க, இனி இரவாகி விட்டது. போக முடியாது இங்குள்ள மடத்தில் தங்கி விட்டு நாளை காலை செல்லலாம் என முடிவு செய்தனர். அதன் படி அன்று இரவு கானகத்தில் உள்ள பாழடைந்த மடம் ஒன்றில் தங்கினர்.

நள்ளிரவு நேரம் கருநாகம் ஒன்று அரிகிருஷ்ணனை தீண்டியது. இதனால் மறுகனமே உயிரிழந்தார். மறுநாள் காலை நண்பர்கள் எழுந்து, அரிகிருஷ்ணனை எழுப்பியபோது அவர் உடலில் அசைவு இல்லை. அரிகிருஷ்ணன் இறந்ததை அறிந்து கதறினர். பின்னர் அவரது உடலை அங்கிருந்து கொண்டு செல்ல இயலாது என்பதால் அங்கேயே எரியூட்டினர்.

நண்பர்கள் அங்கிருந்து ஸ்ரீ வைகுண்டம் சென்று  அரிகிருஷ்ணன் மனைவி அனந்தாயிடம் நடந்ததை தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியுற்று மயங்கி விழுந்தாள். இந்த துக்கம் ஒன்றரை மாதம் நீடித்த நிலையில் அரிகிருஷ்ணன் தம்பி உறவு முறையில் ஒருவன் வந்து அனந்தாயி, நீ உன் பிள்ளையுடன் பிறந்த ஊருக்கு சென்று விடு.

அரிகிருஷ்ணன் சொத்தில் ஒரு பங்கும் கிடையாது என்று உரைத்தான். இதைக்கேட்ட அனந்தாயி, உடனே மணியக்காரர் முத்தையாவிடம் முறையிட்டாள். அப்போது மணியக்காரர் எனக்கு ஈஸ்வரன் பெண் மகளை கொடுத்துள்ளான். நான் பொய் உரைக்க மாட்டேன். அதனால் உனது கணவருக்கு சொந்தமான வயல்கரையும், வலிய வீடும், மாடும் ஆடும் அம்பலமும், ஆள் அடிமையும், பரிகரியும் உனக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தான்.இது நடந்து ஒரு வாரமான நிலையில் அரிகிருஷ்ணன் தம்பி முறையானவன் மணியக்காரரின் வீட்டுக்கு சென்று ஆயிரம் பணம் கொடுத்து, தனக்கு சாதகமாக தீர்ப்பு கூறுமாறு தெரிவிக்கிறான்.

அதில் மனம் மாறிய மணியக்காரர், மறுநாள் அனந்தாயியை வீட்டிற்கு அழைத்து உனக்கு சொத்துக்கு உரிமையில்லை. பிறந்ததும் ஆளப்போகும் ஆண் வாரிசாக இல்லை. எனவே நகையும், பணமும் பெற்றுக்கொண்டு பிறந்த ஊருக்கு சென்றுவிடு என்று கூறினார்.

அதனைக்கேட்ட அனந்தாயி மணியக்காரனே,

சுணை வெள்ளம் ஆறாய் பாய்ந்து

உன் வீட்டை அழிக்க வேணும்.

உன் சீமையில் வெள்ள எருக்கு

முளைக்க வேணும்.

சிறுநெருஞ்சி படர வேணும்

 - என சாபமிட்டாள்.

ஒரு மாதம் முடிந்தது. மணியக்காரர் மகள் திருமணம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. மனம் வெதும்பிய அனந்தாயி கைக்குழந்தையுடன் காட்டு வழி நடந்தாள். ஸ்ரீவைகுண்டம் ஊரின் மேற்கு பக்கம் உள்ள சுணை அருகே வந்து ஈஸ்வரனை மனம் உருக வேண்டி அழுதாள். வாழ விருப்பமின்றி கைலாசம் வருகிறேன். என்னை ஏற்றுக்கொள் என்று கூறி, தனது கைக்குழந்தையை சுனையில் வீசினாள். பின்னர் அவளும் அதில் விழுந்தாள். இருவரும் விழுந்ததும் சுணை வெள்ளம் மேலெழுந்து, சுணை உடைந்து பெரு வெள்ளமாகி ஓடியது.

ஊரையே வெள்ளக் காடாக்கியது. மணியக்காரர் முத்தையாவின் மகளையும், மாப்பிள்ளையும் மணக்கோலத்திலேயே வெள்ளம் இழுத்துச் சென்றது. உறவினர்களும், ஊராரும் அழுது புலம்பினர். அந்த வெள்ளத்தில் அனந்தாயின் உடல் மிதந்து வந்தது. அந்த உடல் மணியக்காரர் முத்தையன் வீட்டில் ஒதுங்கியது.

இரண்டு நாட்களாகியும் ஒதுங்கிய உடலில் இருந்து துர்நாற்றம் எதுவும் வீசவில்லை. உடலை எரியூட்டுவது எப்படி என்று யோசிக்கும்போது அந்த உடலில் இருந்து சந்தன வாசம் வந்தது. அப்போது மணியக்காரர் முத்தையன் செய்த தவற்றை உணர்ந்து வீட்டு தூணில் முட்டி கதறி அழுதான். மாண்டு போக முற்பட்டான். அப்போது  அசரீரி கேட்டது. ‘‘தவறை உணர்ந்த முத்தையனே, எனக்கு நிலையம் கொடுத்து பூஜித்து வா, நீ செய்த பாவங்கள் விலகும். உன் வம்ச வழியினரை வளமாக்கி வைப்பேன்’’ என்றது. அதன்படி மணியக்காரர் முத்தையன் அனந்தாயி அம்பாளுக்கு கோயில் எழுப்பினார்.

வெள்ளத்தில் வந்ததால் வெள்ளமாரி என்றும். அந்தணர்குலத்தில் தோன்றிய பெண் என்பதால் பிராமணத்தி அம்மன் என்றும் பாப்பாத்தி அம்மன் என்றும் அழைத்து வழிபட்டு வந்தனர்.இந்த கோயில் ஸ்ரீவைகுண்டம் அக்ரஹாரம் அருகே உள்ளது. கோயிலில் மூலவர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கரங்களில் எந்த ஆயுதம் ஏந்தவில்லை. காரணம் ஆயுதத்தால் ஒரு உயிரு பறிபோனது என்பதால் சிலை சந்தன மரத்தால் ஆனது.

Related Stories: