கூட்டுத் தொழுகை..!

கூட்டுறவே நாட்டுறவு.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதெல்லாம் நாம் அறிந்த பழமொழிகள்தாம். இஸ்லாமிய வாழ்வியல் ஒருபடி மேலே சென்று அந்தப் பழமொழிகளை உண்மையாக்குகிறது. “லா இஸ்லாம் இல்லா ஜமாஅத்” என்று பேரறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். “கூட்டமைப்பு இல்லாமல் இஸ்லாம் இல்லை” என்பது அதன் பொருள். இஸ்லாமிய வாழ்வியல் வலியுறுத்தும் வழிபாடுகள் அனைத்தும் கூட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டவைதாம். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய உன்னத வழிபாடுகள் கூட்டுமுறையில்தான் நிறைவேற்றப்படுகின்றன. கடமையாக்கப்பட்ட ஐந்து நேரத் தொழுகைகளையும் கூட்டுமுறையில், ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிட்டுள்ளது.

“கடமையாக்கப்பட்ட தொழுகையைத் தனியாக நிறைவேற்றுவதைவிட கூட்டுமுறையில் நிறைவேற்றினால் இருபத்தேழு மடங்கு அதிக நன்மை கிடைக்கும்” என்று இறைத்தூதர் கூறியிருக்கிறார். கூட்டுமுறையில் தொழுகை நிறைவேற்றப்படும்போது ஏராளமான நன்மைகள் கிடைப்பதை நாம் அன்றாட வாழ்விலேயே பார்க்கலாம். ஓர் எடுத்துக்காட்டு. ஐந்து வேளைத் தொழுகையையும் சரியான நேரத்தில் பள்ளிவாசலுக்கு வந்து கூட்டுமுறையில் ஒருவர் நிறைவேற்றுவார். நாள்தோறும் வருவதால் தொழ வைக்கும் இமாம் முதல் பள்ளிவாசல் நிர்வாகி வரை பலரும் அவரை நன்கு அறிந்திருந்தார்கள்.

திடீரென்று சில நாட்களாய் அவரைத் தொழுகையில் காண முடியவில்லை. இரண்டு மூன்று நாள் எதிர்பார்த்தார்கள். ஆள் வரவில்லை. “நல்ல மனிதர்... ஐந்து வேளைத் தொழுகையையும் பயபக்தியுடன் நிறைவேற்றுபவர்.. என்ன ஆயிற்றோ தெரியவில்லையே?” என்று யோசித்த பள்ளிவாசல் நிர்வாகி, அவருடைய வீட்டு முகவரியைத் தெரிந்துகொண்டு நேரில் பார்த்துவரக் கிளம்பினார். அந்தத் தொழுகையாளி வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். நல்ல காய்ச்சல். வீட்டில் அவ்வளவாக வசதிகள் இல்லை. நடுத்தரக் குடும்பம். பிள்ளைகள் வெளியூரில். மனைவி மட்டும் கவலையோடு கஞ்சி. மாத்திரை என்று கொடுத்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக பள்ளிவாசல் நிர்வாகி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். மருத்துவ சிகிச்சைக்கான செலவையும் தாமே முன்வந்து ஏற்றுக்கொண்டார். இது ஓர் எடுத்துக்காட்டுதான். இது போல் ஏராளமான நன்மைகள் கூட்டுத் தொழுகையில் உள்ளன. கூட்டுத் தொழுகையால் கிடைக்கும் ஆன்மிக நன்மைகள் இன்னும் நிறைய உள்ளன. ஒரே நேரத்தில் பலரும் சேர்ந்து மனம் உருகி இறைவனின் திருப்பெயர்களை உச்சரித்துத் தியானத்தில் ஈடுபடும்போது கிடைக்கும் மனநிம்மதிக்கும் அமைதிக்கும் இணை ஏது?

அதனால்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஒரு கிராமத்திலோ காட்டிலோ மூன்று பேர் இருந்து அவர்கள் கூட்டுமுறையில் (ஜமாஅத்தாக) தொழவில்லை என்றால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செலுத்துவான். ஆகவே கூட்டுமுறையில் தொழுவதைப் பற்றிப்பிடியுங்கள். ஏனென்றால் மந்தையைவிட்டுத் தனித்துவிட்ட ஆட்டைத்தான் ஓநாய் தன் உணவாக ஆக்கிக்கொள்கிறது.”(ஆதாரம்: அபூதாவூத்) கூட்டுத் தொழுகைக்கு முன்னுரிமை அளிப்பதோடு இருபத்தேழு மடங்கு இறையருளையும் பெற்றுக்கொள்வோம்.

- சிராஜுல்ஹஸன்

Related Stories: