கடவுள் ஒரு தோழர்

அன்புக்குரியோரே! இறைமைந்தர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் வாழ்த்துகள். மே. 1ஆம் தேதி உலகத் தொழிலாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ``உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்”. என்று 19ஆம் நூற்றாண்டில் எழுப்பிய முழக்கம் இன்றும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இன்று நாம் இருக்கும் உலகம் உழைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களால் தக்கவைக்கப்பட்டு வருகிறது (Sustain). எத்தனை தொழில் நுட்பங்கள் வந்தாலும் அவை மனிதருக்கு, உழைப்பாளர்களுக்கு மாற்றாக அமையாது என்பதை நாம் உணரவேண்டும். எடுத்துக்காட்டாக, இயந்திரங்களால் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரிலிந்து கழிவாகும் வைக்கோலுக்கும், உழைப்பாளர் கைபட்டு வெளிவரும் வைக்கோலுக்கும் எத்தனை வித்தியாசம் என்பதற்கு அதை உணவாக உட்கொள்ளும் கால்நடைகளே சான்றளிக்கின்றன.

கடவுள் ஒரு தொழிலாளர்.கடவுள் உலகைப் படைத்தவர். அவர் இந்த உலகைப் படைக்க எவ்வித கடினப்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பது ஒரு இறையியல் புரிதல் ஆகும். ஆனால்

கடவுள் ‘‘அவர் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவுபெறச் செய்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி அதைப் புனிதப்படுத்தினார்” (தொடக்கநூல்2:2-3). இங்கு யாருக்கு உண்மையில் ஓய்வு தேவை? நிச்சயமாக உழைப்பவருக்குத்தான். இங்கு ஓய்வு கட்டாயமாக்கப்படுகிறது மட்டுமல்ல, அது புனிதப்படுத்தப்படுகிறது. மேலும் ஓய்வு என்பது கட்டளையாக்கப்படுகிறது. அக்கட்டளையில் ‘‘உன் அடிமையும், அடிமைப் பெண்ணும், உன் கால்நடைகளும், உன் நகர்களில் இருக்கும் அன்னியனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம் (விடுதலைப் பயணம் 20:10) என்று ஓய்வு யாவருக்கும் பொதுவானது மட்டுமல்ல விலங்குகளுக்கும் உரியது என்று வலியுறுத்தப்படுகிறது. இது மேலும் திருத்தம் பெற்று ‘‘நீ ஓய்வெடுப்பது போல் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்” (இணைச்சட்டம் 5:14) என்பது ஊதியத்துடன் கூடிய ஓய்வை வலியுறுத்துவது ஆகும். ஒரு தொழிலாளியின் நிலையிலிருந்து கடவுள் சிந்திப்பது பெரும் பாக்கியம் எனலாம்.

கடவுள் ஒரு தோழர், கடவுள் தோழர்களின் தலைவரும் கூட.கடவுள் ஒரு தொழிலாளி, தொழிலாளர்களின் தோழர், தோழர்களின் தலைவர் என்று உணரலாம். தொடக்கநூல் இரண்டாம் அதிகாரத்தில் கடவுள் ஏதேன் தோட்டத்தில் உண்பதற்குத் தேவையான மரங்களை வளரச்செய்தார், அங்கு நீர் பாய்ச்சுவதற்கு ஆறு ஓடிற்று என்றுள்ளது. (தொடக்கநூல் 2:8-15). இதில் கடவுள் ஒரு தோட்டக்காரராகவும் விவசாயவேலைகள் செய்பவராகவும் காணமுடிகிறது. நிலத்தின் மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கினார் (தொடக்கநூல் 2:7) என்பதிலிருந்து அவரை ஒரு மண்பாண்டத் தொழிலாளராகவும் காணமுடிகிறது. மேலும் கடவுளை மேய்ப்பராகவும் உருவகப்படுத்தி இருப்பதையும் காண்கிறோம்.

கடவுள் ஒரு தொழிலாளி மற்றும் தொழிலாளர்களின் தோழர் மட்டுமல்ல தொழிலாளர் பிரச்னைகளை அறிந்தவராகவும், தொழிலாளர்களுக்காகக் குரல்கொடுப்பவராகவும், அவர்களின் விடுதலைக்குத் தலைமை ஏற்பவருமாக உள்ளார்.

இஸ்ரவேல் மக்களின் வரலாறு அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்ததிலிருந்து தொடங்குகிறது எனலாம். ‘‘அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலைக் கேட்டேன்; ஆம் அவர்களின் துயரங்களை நான் அறிவேன்” (விடுதலைப் பயணம் 3:7-8) என தொழிலாளர் மற்றும் அடிமைகளின் துயரங்களை அறிந்ததோடு அவர்களை விடுவிக்கவும் களம் இறங்குவதாகக் கடவுள் கூறுகிறார். அதுமட்டுமல்ல கடவுளின் அக்கறை என்பது ஒவ்வொரு ஏழாம் ஆண்டும் அடிமைகள் விடுவிக்கப்பட வேண்டும்; (இணைச்சட்டம் 15:12) கூலியாள் கொடுமைப்படுத்தக் கூடாது. (இணைச்சட்டம் 24:14)

உழைத்தவரின் கூலியை அந்தந்த நாளே தரவேண்டும்; (இணைச்சட்டம் 24:15) என தொழிலாளருக்காகக் குரல் கொடுப்பவராகக் கடவுள் இருக்கிறார். அருள்நாதர் இயேசு கிறிஸ்துவும் உழைப்பாளருக்கு முழு ஊதியத்தின் தேவையை, நியாயத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு நேர இடைவெளியில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களுக்கு கூலியை வழங்கிய நிலக்கிழார் பற்றிய உவமையின் வழியாகக் கூறியுள்ளார். (லூக்கா 20:1-15).உழைக்கும் மக்களுக்கு வேலை கிடைக்கவும், தொழிலாளர் உரிமைகள் காக்கப்படவும், கொத்தடிமைகள் மீட்கப்படவும் அக்கறை கொள்வோம். கடவுளிடம் மன்றாடுவோம்.

Related Stories: