வைகாசி மாதத்தின் முக்கிய நன்னாட்களும் அதன் மகத்துவமும்!

வைகாசிப் பிறப்பு முதல் நாளே, புண்ணிய நாளும், பரம பவித்திரமுமான (15-5-2022) ஞாயிற்றுக்கிழமையன்று, “நாளை என்பதில்லை, நரசிம்மரிடத்தில்...!” என்ற மூத்தோர் வார்த்தைகளை மெய்ப்பிப்பதற்கென்றே தெள்ளிய சிங்கம் அவதரித்த நன்னாள். இன்று அதிகாலையிலேயே விழித்தெழுந்து குளித்துவிட்டு, உபவாசத்துடன் (ஏதும் சாப்பிடாமல்), துளசி இலையால் இறைவனை அர்ச்சித்து, “உக்ரம், வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் நரசிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் மருத்யும் நமாம்யஹம்”  எனும் மகா மந்திரத்தையோ அல்லது “மாதா நரசிம்ம! பிதா நரசிம்ம!! ப்ராதா நரசிம்ம!! சகா நரசிம்ம! வித்யா நரசிம்ம!! த்ரவினம் நரசிம்ம!! ஸ்வாமி நரசிம்ம!! சகலம் நரசிம்ம  எனும் அதியற்புத சக்திவாய்ந்த மந்திரத்தையோ முக்கியமாக பிரதோஷ காலமாகிய மாலை 5.30 லிருந்து 7.30 மணி வரை) ஜபித்துவரவேண்டும்.

பிறகு, பானகம், கோசுமல்லி எனச் சொல்லப்படும் (ஊறவைத்த பயத்தம் பருப்பு, சிறிதளவு உப்பு, எலுமிச்சைச் சாறு, கருவேப்பிலை கொத்துமல்லி சேர்த்தது) வடை பாயசத்துடன் நைவேத்தியம் செய்து விரதத்தை முடித்தல் வேண்டும். பலனோ, அபரிமிதமானதாக இருக்கும். தீராக் கடன், நோய், நெடுநாளைய உடலுபாதை, நெருங்கிய உறவினரிடையே தீராப் பகை, பில்லிசூனியம், போன்றவை கதிரவனைக் கண்ட பனிபோல் விலகிடும்.

அனுபவத்தில் காணலாம். அன்றைய தினமே பௌர்ணமி தினமுமாக அமைவதால், மாலையில் சந்திரனை தரிசித்த பிறகு, சத்திய நாராயண விரத பூஜை செய்தால், சகல ஐஸ்வர்யங்களையும் அளித்தருள்வேன் என சத்தியப் பிரமாணமே செய்துள்ள காரணத்தினாலேயே அவருக்கு சத்தியநாராயணர் எனப் பெயர் உண்டாயிற்று! இந்நாளிலேயே அர்த்தநாரீஸ்வரர் விரதமும் சேர்ந்தே வருகின்றது. இவ்விரதம் கடைப்பிடிப்போருக்கு, கணவர் மனைவியரிடையே பரஸ்பர அன்னியோன்யமும், விட்டுக்கொடுக்கும் தன்மையும் ஓங்கி, பிரச்னைகளால் பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்றுசேர்ந்து, என்றும் இணைபிரியாதிருப்பர்!

16-5-2022: கௌரி விரதம் : ஓரிடத்திலும் நில்லாத செல்வமாகிய   பணம்   அஷ்ட லட்சுமிகளும்   இவ்விரதத்தைக் கைகொள்பவர்க்கு, நீங்காத செல்வமாக இவர்களிடத்திலேயே நிலைத்து நிற்கும் ஏழேழ் பிறவிக்கும்!

18-5-2022: ஞானக்குழந்தை திருஞான சம்பந்தர் அவதரித்த நன்னாள்.

21-5-2022 : ஸ்ரீ கந்தர் சஷ்டி விரதம் “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்...?” சஷ்டியில் விரதமிருந்தால், அகப்பையாகிய   கருப்பையில் ஸ்ரீமுருகப் பெருமானைப்போன்று அழகுடனும், அறிவுத்திறனுடன் கூடிய குழந்தைப் பாக்கியம் உண்டாகும்! போனஸாக, இன்று திருவோண விரதம் சேர்ந்துள்ளதால், இவ்விரதங்களைக் கடைப்பிடிப்பவர்தம் வாழ்நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி, இன்பத்தைத் தவிர வேறெதுவும் காணமாட்டார்கள்!

22-5-2022: சதா சிவாஷ்டமி. இந்நன்நாளில் விரதமிருப்போரின் மனோ வியாதி நீங்கித் தெளிவு பெற்று, ஒரு இருட்டறைக்கு ஓர் ஒளிவிளக்கைப் போல் பிரகாசிப்பர். அஹோபில மடம் 27 வது பட்டம் ஸ்ரீஅழகிய சிங்கர் திருநட்சத்திரம்.

28-5-2022: மாத சிவராத்திரி மகத்தான புண்ணிய பலன்களை அளித்தருளும் புனித தினம்.

31-5-2022: புன்னாக கௌரி விரதம்: நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர்களுக்காகப் பரிபூரண குணமடையச் செய்யப்படும் இவ்விரதம், வீட்டில் எவருக்கும் எப்பிணியும் உண்டாகாமல் காக்கும்.

2-6-2022: ரம்பா திருதியை, கதலி கௌரி விரதம்: பெயரிலேயே கூறப்பட்டுள்ள, ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்துமை போன்று அழகான, வசீகரமான மேனி அழகைப் பெறவும் கன்னியருக்கு, நெடுநாட்களாகத் தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கும் திருமண பாக்கியமும் விரைவில் கைகூடவும்; நல்ல மனத்திற்கு உகந்த மணாளன் அமையவும் இவ்விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு உண்டாகும்.

4-6-2022: பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரின் அவதார தினம்.

7-6-2022: ஆதி பராசக்தியின் மறுவடிவமாகிய தூமாவதீ அவதரித்த திருநன்னாள். மகாவிஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவள், ஸ்ரீ மத்ஸ அவதாரத்திற்கு இணையான பராக்கிரமத்துடன் கூடியவளாகவும், இரு சாயாக் கிரகங்களாகிய, ராகு கேது கிரகங்களின் சஞ்சாரத்தின்போதும் யாதொரு தீங்கும் ஏற்படா வண்ணம் தடுத்துக் காத்திடுவாள் நம்மை!

12-6-2022: நம்மாழ்வார் திருநட்சத்திரம்;  பிரதோஷ விரதம் இருந்தால், சந்தான பிராப்தியும், கடன் ஏதும் இல்லா நிலையும், நோய்   நொடியற்ற, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை, கணவர் மனைவியரிடையே அந்நியோன்யம் அபிவிருத்தியடையும்.

14-6-2022: வட சாவித்திரி விரதம் இவ்விரதத்தை மேற்கொள்ளும் தம்பதியருக்கு, நோய் நொடியில்லாத, நல்ல திடகாத்திரமுடையவர்களாகவும், தீர்க்க சுமங்கலியாகவும் சுகபோகங்களை அனைத்தையும் அனுபவித்து, மகிழ்வுடனும் மன நிறைவுடனும் இல்லற தர்மத்தை வெகுச் சிறப்பாக நடத்திடுவர். இந்நன்னாளில், சத்தியவான் சாவித்ரி கதைகளைப் படித்தாலும், கேட்டாலும், நினைத்தாலுமே தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களனைத்தும் தீயினில் தூசாகும்!

Related Stories: