நாரணன் மார்பின் ஆரணம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வைணவ ஜோதியாக மட்டும் இல்லாமல் வையஜோதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீராமானுஜர். ஒரு சிலர் மட்டும் உரிமை கொண்டாடிய முக்திப்பேற்றை மனித குலம் முழுமைக்கும், பொதுமை ஆக்கிய புரட்சி வீரர் ராமானுஜர். கி.பி.1017 - பிங்கல வருடம் சித்திரை மாதம் பிறந்த சீர்திருத்த சமயஞானியாவார். அரங்கப் பெருமான், அகில அரங்கிற்கு அனுப்பிவைத்த அற்புத மகானாக அவர் தோன்றினார். சித்திரைத் திங்களில் திருவாதிரை நாளில், ஸ்ரீபெரும்புதூர் தலத்தில் வித்தகராக தோன்றினார்! விழித்தது வைணவம்! வேதங்கள் உயிர் பெற்றன! வைணவம் பெற்றவர் ஆழ்வார்கள்! இங்கு அதை வளர்த்தவர் ராமானுஜர்!  ‘முதல் தாய் சடகோபன் - வளர்த்த இத்தாய் ராமானுஜன்’ என்பார்கள். மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பு நடைபெறுவதற்கு முன்பே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, அரிசனங்களை `திருக்குலத்தார்’ என பிரகடனப்படுத்தி பெரிய புரட்சிக்கு அடிக்கல் நாட்டினார் ராமானுஜர்.

முக்தி பெறுவதற்கான மூல மந்திரத்தை உயர்சாதியினர் மட்டுமே குரு மூலமாகப் பெற வேண்டும். அந்த மந்திரம், மிகமிக ரகசியமாக பெற்ற சீடனால் பேணிக் காக்கப்பட வேண்டும் என்று அப்போதிருந்த பழமைச் சடங்கை அடியோடு பெயர்த் தெறிந்தவர் ராமானுஜர். இவ்வுலக மக்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள்தானே! அவர்களுக்குள் பேதங்கள் வகுப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? ஆன்மிக நாட்டத்திற்கு ஒரு சிலர் மட்டும் பிறப்பால் உரிமை பெறுவது எப்படிச் சரி? என ஓங்கிக் குரல்கொடுத்த உத்தமர் அவர். பாவேந்தர் பாரதிதாசன் தன் பாட்டில் கூறுகிறார்.

‘முக்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்இத் தமிழ்நாடு தன் இருந்தவப் பயனால்இராமானுஜனை ஈன்றது அன்றோ!

திருவரங்கத்தில் இருந்தபோது உபதேசம் பெறவேண்டி திருகோஷ்டியூருக்கு ஆளவந்தாரின் சீடரான நம்பி அவர்களை நாடினார். ஒருமுறை இருமுறை அல்ல… பதினெட்டு முறை நடையாய் நடந்த பிறகே நல்உபதேசம் வாய்க்கப் பெற்றார். ராமானுஜர், குரு மூலமாக பெற்ற உபதேச ரகசியத்தை ஊரறிய கோபுரத்தின் மீதேறி கூறினார். கோபம் கொப்பளிக்க குரு, சீடன் ராமானுஜனை நோக்கி  ‘உன் செய்கைக்கு நரக வாசமே தண்டனை’ என்றார்.

‘தெரியும் எனக்கு மட்டும் தானே நரகம்! மந்திரம் கேட்ட மற்றவர்களுக்கெல்லாம் சொர்க்கம் சொந்த மாகிறதே! என்றார். இவ்வாறு ஆன்மிகப் பொதுமைக்கு வழிகோலியவர் ராமானுஜர். அன்னைத் தமிழுக்கு ஆலய வழிபாட்டில் முதலிடம் ஏற்படுத்திக் கொடுத்தவரும் அவரே. ஆண்டாளை வாழ்த்திப் பாடும் செய்யுள் ஒன்று, ஸ்ரீராமானுஜருக்குப் பின் வந்த ஆண்டாள் நாச்சியார் வாழ்க! என்று போற்றிப் பாடுகிறது.

‘பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!

என்பது அச்செய்யுளின் வரி.

ராமானுஜரின் அக்காவான ஆண்டாள் பெருமாட்டியைத் தங்கை என அவ்வாழ்த்துப்பாடல் கூறுவதிலே, அற்புதமான அர்த்தம் ஒன்று புதைந்துள்ளது. அது என்னவென்று அறிவோமா? திருமால் இடுஞ்சோலை பெருமாளுக்கு ஆண்டாள், பாட்டின் மூலமாக நிவேதனம் வைக்கிறாள்! ஏதோ பேருக்கு நாம் எல்லாம் பிரசாதம் படைக்கிறோம்! ஆண்டாளுக்கோ நிறைந்த ஆசையில், நிறைய படைக்க எண்ணம். ‘நூறு தடாவில் வெண்ணெய், நூறு தடாநிறைந்த அக்கார அடிசில்’ அண்டா நூறில் சர்க்கரைப் பொங்கல், அவ்வாறே வெண்ணெய் என ஆண்டாளின் ஆசைகள் பாட்டளவில் இருக்கலாமா என எண்ணி பின்னால் வந்த பெரும்புதூர் ராமானுஜர், நிஜமாகவே நிவேதனத்தை திருமால் இடுஞ்சோலை பெருமாளுக்குச் சமர்ப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று ‘ஆண்டாள்!

உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டேன்’ என்று தெரிவித்தாராம். பொதுவாக தங்கையின் ஆசையை அண்ணன்தானே நிறைவேற்றுவார். அதனால்தான் ஆண்டாள், ராமானுஜருக்குத் தங்கையாக வாழ்த்துப் பாடலில் மாற்றம் பெற்று விட்டாள்!எண்ணியாப் பெருமைகள் பெற்ற ராமானுஜரை எண் அலங்காரம் வழியே ஏற்றிப் போற்றுகிறார் கவிஞர்.

ஓர் இறையாய் திருமாலைக் கண்டார்!

பக்தி, உணர் ஞானம், இரண்டும் வேண்டும் என்றார்!

முத்தமிழ் முறையோடு நால் வேதமும் உணர்ந்தார்!

ஐந்து குருமகான் தனிடம் பயின்றார்!

ஆறு நெறி உரைத்த அவர்

ஏழு மலை தீர்ப்பளித்தார்!

எண்குணம் வேண்டும் என்றார்!

ஒன்பது நூல்கள் எழுதினார்!

பெருமைகள் பல பெற்ற ராமானுஜர், வடிவத்தைக் கவனித்தால் ஒரு உண்மை புரியும்! இருகைகளும் கூப்பி நாம் வணங்கத்தக்க வகையில் வளர்ந்துள்ள அவர் நம்மைப் பார்த்து இருகையும் குவித்து வந்தனம் செய்கிறார்.

பணியுமாம் என்றும்

பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து!

என்ற திருக்குறளுக்கு அவரின் வடிவமே உரை சொல்கின்றது அல்லவா!

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Related Stories: