நெஞ்சம் பயில நினைகின்றிலேன்

நெஞ்சம் பயில நினைகின்றிலேன்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-94

நோன்பு - உபாசனை நெறியில் உபாசகன் எந்த தெய்வத்தை உபாசிக்கிறானோ அதற்கு உகந்த நாட்களில் பசிப்பிணியை பாராது பட்டினி கிடந்து இறையை நினைத்து வழிபடுவதை நோன்பு என்பர். அந்த வகையில் உமையம்மைக்கு அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, என்ற திதிகளிலும், பூச நட்சத்திரத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும், உண்ணாது, உறங்காது தன்னை வருத்தி இறை அருளை பெற முயலும் சாதனத்தையே நோன்பு என்கிறோம். “தவ” என்ற சொல்லால் குறிப்பிடுவர்.

விரதம் - ரதம் என்ற வட சொல்லிற்கு விரும்புவது, இச்சிப்பது என்பது பொருள். “வி” என்பதற்கு இல்லாதது என்பது பொருள். “விரதம்” என்பதற்கு விருப்பமில்லாமல் இருப்பது என்பது பொருள். இந்த இடத்தில் இறைவியை தவிர, அவள் அருளை பெறுவதைத் தவிர பிறபொருள்களில் விருப்பமில்லாது இறையருள் ஒன்றையே நாடியிருப்பதையே “விரதம்” என்கிறோம். “உண்ணாது ஒழியினும் உன்னிறும் வேண்டுவது ஒன்றில்லையே’’- 55 எனும் வரியினின்றும் அறியலாம்.

இதை வடமொழி “பாவம்” (Bhavam) என்கிறது. குழந்தையாய் [சத்புத்ர பாவம்] என்னுவது, தாயாக எண்ணுவது [மாத்ரு பாவம்] “உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே” - 33 இந்த பாவத்தையே விரதம் என்று பொருள்படும் “தவ” சொல்லால் குறிப்பிடுகிறார். “தீ” - தவ என்பதற்கு தீ என்பது பொருள். இறைவியை தீயில் வழிபடுவதற்கு வேள்வி என்று பொருள். மேலும், தீபம் ஏற்றி வழிபடுவதற்கு உபசாரம் என்று பொருள். விளக்கில் தோன்றும் ஒளியாக கருதி வழிபடுவதற்கு த்யானம் என்பது பொருள்.

இவ்வனைத்து வகையாலும், இறைவியை தொழுவதற்கு சாதனமாக உள்ள ”தவ” எனும் பொருள்படும் தீயை குறிப்பிடுகிறார். தவத்தின் பயனாக ஏற்படும் ஞான ஒளிக்கும் தீ என்றே பொருள். இதை “முந்நான்கிரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின்”-65 என்பதனால் சிவபெருமானின் முகத்தோற்றத்திலிருந்து தோன்றிய தீயை குறிப்பிடுகிறார். “தீபத்தை” “ஒளியே ஒளிரும்'’-24 “கனலும்” -68 என்பதனாலும் அறியலாம். காடு - தவ என்ற சொல்லிற்கு காடு என்பது பொருள்.

கொடிய மிருகங்கள் இல்லாததும் குளிர்ந்த அருவிகள் கொண்டதும், அஞ்சத்தக்க சூழல் இல்லாததும் ஆகிய இடத்தில் தன்னந்தனியாக தவம்புரிவார்கள். இந்த இடத்திற்கு காடு என்று பெயர். வானப்பிரஸ்தன் என்பது காட்டைக் குறித்து தவம்செய்ய புறப்பட்டோரை குறிப்பிடும் சொல். உமையம்மை எழுந்தருளியிருப்பது வில்வவனமாகும் (திருக்கடையூர்) ஸ்ரீவித்யா எழுந்தருளியிருப்பது கடம்பவனம். மேலும், சுடுகாட்டையும் காடு என்ற சொல்லால் குறிப்பிடுவர்.

கடவூர் மயானம், காசி மயானம்,கச்சி மயானம், என்ற இடங்களில் இறைவன் வசிக்கிறார். சுடுகாட்டையும் “தவ” என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறார். சக்தி வழிபாடு செய்வோரில் ஒருசிலர் காளியை (மசானக்கொள்ளை) வழிபடுவார்கள். அந்த வகையில் உமையம்மை “அங்காளி” எனப்படுகிறாள். “தவ” என்பது ஸ்தவ என்ற வடசொல்லின் தமிழாக்கமாகும். தன்னை இறைவிக்கு அறிமுகப்படுத்திக் கொள்ள, இறைவியை தான் அறிய பயன்படும் வகையில் அமைவது துதி. இதையே “தோத்திரம் செய்து தொழுது”-67 என்பதனாலும் அறியலாம்.

உன் தவநெறிக்கே என்ற சொல்லால் இறைவியை வழிபட உதவும் ஆகமம், மற்றும் காட்டில் சென்றுசெய்யும் தவம், மனதினால் செய்யும் விரதம், உடலால் செய்யும் நோன்பு, தவம் செய்வதற்குரிய இன்னபிற இடம், அதற்குறிய மந்திரம், இறைவிக்கான திருஉருவம் அமைக்கும் முறை அகத்திலும், புறத்திலும், மனதாலும், வாக்காலும், காயத்தாலும், அறிவாலும், நெறியாலும் (ஒழுக்கத்தாலும்) செய்ய வேண்டிய அனைத்தையும் “தவ” என்ற சொல்லாலேயே குறிப்பிட்டுவிட்டார். “உன் தவநெறிக்கே” என்பதனால் அதை குறித்து அபிராமிபட்டர், தான் முயற்சி செய்வதை குறிப்பிடுகிறார்.

“நெஞ்சம் பயில நினைகின்றிலேன்”“நெஞ்சம் பயில” என்ற சொல்லானது இந்த இடத்தைப் பொறுத்தவரை மனதாலே இறையருளை பெறுவதற்கான முயற்சியையே குறிக்கிறது.

மனதாலே பயிலுதலுக்கு ஒன்பது இடையூறுகளும், ஒன்பது முயற்சிகளும் உள்ளன. அந்த முயற்சியையே நெஞ்சம்பயில் என்கிறார். அதை ஒவ்வொன்றாய் காண்பது இச்சொல்லின் ஆழத்தை உணர உதவியாய் இருக்கும்.

(கடவுளை வணங்க கண், காது, மூக்கு, செவி, மெய் போன்றவை உபாதையற்று இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் வழிபாட்டில் முழுமையாய் ஈடுபடமுடியும்) காதை கவரும் வகையில் இசை, கண்ணை கவரும் ஒளி மற்றும் வண்ணப் பொருட்கள், மூக்கை மயக்கும் வாசனை, மெய்யை கவரும் குளிர்ச்சி, சூடு வாய்கு இனிய அறுசுவைப் பண்டம், இவற்றின் வசம் மனம் சென்று தடுமாறாமல் இருக்க வேண்டும். கேட்க இன்னா ஒலி, உடலுக்கு சகிக்க இயலாத வியர்வை, நுகரமுடியாத வாசனை, கண்ணைத் தடுமாற வைக்கும் காணமுடியா இருட்டு, உச்சரிப்பு முதலியவையும் மனதிற்கு உள்ளே உள்ள நிறைவேறாத ஆசை, பூசனையை பற்றி அறியாத அனுபவமில்லாத மனம், பண்பு, பூசனையை விரைவாக செய்ய வேண்டிய சூழல்.

மனதிலே தீர்க்க முடியாத துக்கம், மனதிலே இறைவியைத் தவிர பிறவற்றினால் ஏற்படும் மகிழ்ச்சி, சாத்திரங்களை அறியாததும், பூசனை முதலியவற்றில் சிரத்தை இல்லாததும், இறைவன் மீது அச்சமில்லாததும், அலட்சியமானதும், அதிக ஆவலுடையதும் ஆன மனநிலை விலக்கத்தக்கது. மனமானது ஆசை (காமம்), சினம் (க்ரோதம்), பற்று (லோபம்), ஆணவம் (மத), பொறாமை

(மாச்சர்யம்), மயக்கம் (மோஹம்) என்று அறுவகை

பகையற்றதாய் இருக்க வேண்டும். சோம்பல்

(தாமசம்),  வேகம் (ராஜசம்) என இரு குணங்கள்

இல்லாமல் இருக்க வேண்டும்.

பூசைக்குரிய திருமேனி சிதைந்துள்ளதாக இருக்கக்கூடாது. பொருள் குறைவுபட்டு இருப்பதனால் நொந்து கொள்ள கூடாது. இவை அத்துணை பண்புகளும் மனதிற்கு இயல்பாகவே இருக்கும். மேற்கண்ட இந்த ஒன்பதையும் நீக்கும் முயற்சியையே “நெஞ்சம் பயில” என்கிறார். மேலும் ஒன்பது உத்தமமான குணங்களை பெறுவதையும் நெஞ்சம் பயில என்கிறார். அவற்றை காண்போம்.

இறைவனின் புகழைக் கேட்டல் (ஸ்ரவணம்) இறைவனின் புகழைப் பாடுவது (கீர்த்தனை) தேவாரம், திருவாசகம். இறைவனை நினைப்பது (ஸ்மரணம்) மந்திரம் சொல்லுதல், கோயிலை தூய்மை செய்தல், பூசனைக்குரிய மலர் பறித்து உதவுதல் முதலானவைகள் சேவனம் எனப்படும்.

திருமேனியில் (விக்ரஹம்) இறைவன் இருப்பதாக கருதி அதை குறித்து செய்யப்படும் அபிஷேகம், அலங்காரம் போன்றவை செய்வது. இறைவனை பற்றி சான்றோர்களிடத்தும், பக்தர்களிடமும் பேசுவது. இறைவனுடைய அடியவர்களுக்கு உதவுவது (தாஸ்யம்) இறை அன்பர்களாகிய உபாசகர்களிடம் நட்புகொள்வது (யோகம்). ஜபம், ஞான நூல்களை பயிலுதல் இவை ஆத்மநிவேதம் எனப்படும். இந்த ஒன்பது பண்புகளையும் மனம் பெறும்படி முயற்சிப்பது “நெஞ்சம் பயில்தல்” எனப்படும். அபிராமிபட்டரோ இந்நற்பண்புகளை கொள்ளவும், முன்சொன்ன ஒன்பது தீய பண்புகளை தள்ளவும் தான் முயற்சி செய்யவில்லை என்பதை “நெஞ்சம் பயில நினைகின்றிலேன்” என்கிறார்.

சிலை என்பது வில்லையும், நீள் சிலை என்பது நெடிய வில்லையும், ஒற்றை நீள் சிலை என்பது, பிறிது யாரிடத்திலும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த நெடிய வில்லைக் குறித்தது. ஒவ்வொரு வில்லிற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவபெருமான் மலையை வில்லாகக் கொண்டவர். விஷ்ணு கோதண்டத்தை வில்லாக கொண்டவர். விஜயன் காண்டீபத்தை வில்லாக பெற்றவன். இந்த வில்கள், இவர்களைத் தவிர வேறு யாரிடத்தும் இல்லை. இவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அதை போலத்தான் மனதையே வில்லாக பெற்றவர் உமையம்மை அதைபற்றி சிறிது காண்போம்.

மனமானது, சுகம் முதலிய அனுபவத்திற்கு கருவியாகிய இந்திரியம். அதுவும் ``உயிர் தோறும் நியத மாயிருத்தலின் அனேகமாய் பரமாறுரரூபமாய் நித்தமாய் இருக்கும்’’. இந்த தரிசன சாத்திர வாக்கியத்தை சற்று விரிவாக சிந்தித்தால் இந்த “ஒற்றை நீள் சிலையின்” பெருமையை உணரமுடியும். ஆன்மாக்கள் உடலின் உதவியின்றி அனுபவம் எதையும் பெற இயலாது. ஜடம் போல் இருக்கும் தன்மையை பெற்றது. இறைவனானவன், கருணையினால் உடலை ஆன்மாக்களுடன் இணைக்கிறார். அதன் வழியே ஆன்மாக்கள் சுக, துக்கத்தை அனுபவிக்க இயலும். அப்படி ஆன்மாவையும், உடலையும், இணைக்கும் ஒரு கருவியே மனமாகும்.

இந்த மனமானது புலன்களின் வழியாக வரும் தகவல்களை பதிவு செய்து தேவையான போது, தேவையானதை மட்டும் வெளிப்படுத்தி, அதற்கு தக்கவாறு உடலை இயக்கி துன்பத்தையோ, இன்பத்தையோ ஆன்மா அனுபவிக்க உதவும். மனமின்றி அனுபவிக்க இயலாது. மேலும், மனமானது நியதி என்கின்ற ஒழுங்கு முறையின் வழி சுகத்தையோ, துக்கத்தையோ, அதிகமாக்கவோ, குறைக்கவோ செய்யும் வல்லமை உடையது. இந்த மனதை ஆன்மாக்களுக்கு உதவியாய் அளிப்பவள் உமையம்மையே. அதனாலேயே, அம்பிகைக்கு மனோன்மணி என்பது பெயர்.

மனம் என்பது உடல் போல் அழிவுறும் தன்மையுற்றதில்லை. உடல் இறந்த பிறகும் மனம் என்பது தான் தனித்து, ஆன்மாவோடு சேர்ந்துவிடும் பண்புடையது. (உதா) நூறு பசுக்கள் இருக்கும் இடத்தில், ஒரு பசுங்கன்று தன் தாயை தனித்து அறியும் தன்மையுடையது. அதுபோல், மனமும் உடல் இழந்த பின்பு தனக்கு சொந்தமான ஆன்மாவோடு இணைந்துவிடும். மனதின் இப்பண்பைக் கொண்டே அடுத்தடுத்த பிறவிகளை அடைந்து, ஆன்மாக்கள் உய்வு பெற உதவுவது மனமே. அந்த மனதையே உமையம்மை கைகளில் வைத்திருக்கிறாள். சிற்பசாத்திரம் அதை கரும்பாக

வடித்துள்ளது.

கருப்பு சிலையையும், மென்-2 சிற்ப சாத்திரத்தையும் கரும்பை மனம் என்று குறிப்பிட்டதற்கு காரணம், கரும்பானது ஒரு போகம் விளைந்த பிறகு முழுவதுமாய் வேரோடு அழிக்கப்படாமல் மேலோடு வெட்டி எடுத்து அதிலிருந்து அடுத்த கரும்பு வர வழி செய்வார்கள். அது போல் மனம் என்பது, மரணத்தில் அழியாமல் அடுத்த பிறவிக்கு தொடரும் வரை இருக்கும் பண்புடையது. தனுகரும்பு-73 அதனால் தான், மனதை கரும்பு வடிவத்தில் சிற்பிகள் காட்டினர். இதையே சகஸ்ரநாமம், மனோரூபேக்ஷூ கோதண்டா என்று கூறுவதை அறியலாம். மேலும், மனம் என்பது ஐந்து கலைவடிவானது. அதையே கரும்பின் தழையாக, சிற்பிகள் வடிவமைக்கின்றனர். இதை ஸ்ரீவித்யா வடிவத்தில் காணலாம்.

ஐந்து கலை என்பது எண்ணங்களை பதிவுசெய்வது (ப்ரதிஷ்டாகலை) எண்ணங்களை மறக்க வைப்பது (நிவர்த்திகலை) தேவையான போது வெளிப்படுத்தி நினைவிற்கு கொண்டு வருவது (வித்யாகலை) உறங்கும் போது புலன்களுக்கு ஓய்வளித்து பிற உடல் உறுப்புக்களை இயக்கி மறுநாளைக்கு தேவையான ஆற்றலை உற்பத்தி செய்வது (சாந்திகலை) மனம் மரணத்திற்கு பின் உடலை விட்டிறங்கி பிறிதொரு உடலைப் பற்றி முற்பிறவி நினைவுகளை அனுபவங்களாய் பெற்று அடிப்படை அறிவாய் மாற்றித் தருவது. அதாவது கண்டு, கேட்டு, உற்று, ருசித்து, உணரும் “ஐ”

அறிவாய் அடுத்த பிறவிக்கு பயன்படும்.

இதற்கு `சாந்யாதீத’ கலை என்று பெயர். இது உபாசனை விஷயத்தில் சென்ற பிறவியில் அடைந்த ஆன்மஞானம் அடுத்த பிறவிக்கும் தொடர வழிவகை செய்வது. மேலும், கணு வைத்தல் என்பதன் பேரில் அந்தணர்கள் பொங்கல் அன்று, மறுநாள் உடன் பிறந்தார் நலன் சிறக்க பொங்கல் அன்று செய்து மீதமுள்ள உணவை படைத்து வழிபாடு செய்து நிராடுவர். இது சென்ற பிறவியில் செய்த கர்மாவை கழிப்பதாகும். இந்த கர்மாவானது ஒரு பிறவியில் முழுவதும் அனுபவிக்கவில்லை என்றால் தீரும்வரை அடுத்தடுத்த பிறவியிலும் தொடரும் வல்லமை பெற்றது.

அந்த தொடர்ச்சியையே “நீள்” என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். ஒற்றை என்பதனால் ஒவ்வொருவரும் தான் செய்யும் பாவம் அவரையே அடையும். அதனால்தான் “ஒற்றை” என்று குறிப்பிட்டார். முடிவில் ஒற்றை நீள் சிலையும் என்பது உமையம்மையின் கருணையினால் அவள் கையில் இருக்கும். கரும்பு வடிவில் இருக்கும் மனம் அதன் தன்மையான சுக துக்கம் அதற்கு காரணமான கர்மா (பாவ புண்ணியம்) அதை அனுபவிக்கும் வரை உள்ள காலம், அதை அனுபவிக்கும் முறை, நியதி, சாந்தி முதலிய கலை இவை அனைத்தும் கரும்பு, கணு, தழைகளாக உமையம்மையின் கைகளில் உள்ளது. இதையே “ஒற்றை நீள் சிலையும்”என்று குறிப்பிட்டார்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: