வீண் பழியை போக்கும் பாவாயி

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி சேளூர். இங்கு சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தவர் குமாரசாமி என்னும் பக்தர். செயலிலும், சொல்லிலும் நேர்மை தவறாமலும், நெறி மாறாமலும் வாழ்ந்து வந்தார். தவறு யார் பக்கம் இருந்தாலும் அதை சுட்டிக்காட்ட தயங்க மாட்டார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பதினெட்டுப்பட்டி கிராமங்களுக்கும் பஞ்சாயத்து செய்யும் நாட்டாண்மையாக திகழ்ந்தார். இவரது பஞ்சாயத்தால், தண்டனைக்குள்ளான நிலச்சுவான்தார்கள் இருவர் மற்றும் இவரது உறவினர் ஒருவர் என மூவரும் குமாரசாமியை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்தனர். குமாரசாமியின் நேர்மைக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று கங்கணம் (திட்டம்) கட்டி இருந்தனர். அதற்கான நேரம் பார்த்துக் காத்துக்

கொண்டிருந்தார்.

இவரது மனைவி பாவாயி. கற்பு நெறி பிறழாமல் வாழ்ந்து வந்தார். வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை. வீட்டுக்குத் தேவையானவைகளை குமாரசாமியே வாங்கிக் கொடுத்துவிடுவார். தினமும் காலையில், குமாரசாமியினுடைய தம்பி கந்தசாமி வந்து பால் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் குமாரசாமி வீட்டில் இல்லாத சமயம், அன்றைய தினம் காலையில் கந்தசாமி பால் எடுத்து வந்து அண்ணியை அழைத்தான். வீட்டுக்குள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த பாவாயிக்கு கொழுந்தனாரின் குரல் கேட்கவில்லை.

இதனால், கந்தசாமி பாலை ஊற்றி வர வீட்டிற்குள் சென்றார். அதை சந்தித்தெருவில், மரத்தின் கீழ் இருந்து பேசிக்கொண்டிருந்த குமாரசாமியின் எதிரிகள், குமராசாமியின் வீட்டுக் கதவின் நாதங்கியைப் (வௌிப்புற தாழ்ப்பாள்) போட்டுவிட்டனர். பின்னர், கூட்டத்திலிருந்த ஒருத்தனை அனுப்பி குமாரசாமியிடம் ‘‘உன் மனைவி, உன் தம்பியோடு கூத்தடிக்கிறதை வந்து பாரும்’’ என்று கூறுகின்றனர். அவர் கோபத்தோடும், வேகத்தோடும் வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டின் கதவைத் திறந்தார். அவருடன் ஊர் பிரமுகர்கள் அடங்கிய ஊரார்கள் நின்று கொண்டிருந்தனர். வீட்டின் உள்ளே கந்தசாமி சுவரோரம் சாய்ந்தபடி பால் பாத்திரத்துடன், தலையில் கட்டியிருந்த தலைப்பாகை துணியை கைக்கு இடையில் வைத்துக்கொண்டு சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார்.

குமாரசாமியின் மனைவி பாவாயி, ஊர் தெய்வமான காளியம்மனையும், தன் வழிபாட்டு தெய்வமான மலையாள சாமி என்று அழைக்கப்படுகிற சுடலைமாடன் மற்றும் கருப்பன் என்று இரண்டு பெயர்களில், அப்பகுதியில் சொல்லப்படுகிற தெய்வத்தை மனதில் எண்ணி நடக்கப்போகும் விபரீதத்தை நினைத்து கலங்கிக்கொண்டிருந்தாள். சமையலறை வாசல் கதவோரம் நின்று கொண்டிருந்தாள். வீட்டிற்குள் வேகமாக வந்த குமாரசாமியை பார்த்து ‘‘அண்ணே,’’ என்றான் கந்தசாமி. ‘‘ஏன்றா, நாயே என்ன காரியம்

பண்ணிட்ட’’ என்றபடி எட்டி மிதித்தார்.

தன் மனைவி பாவாயின் தலை முடியைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்து வந்து உதைத்தார். தலைவிரி கோலமாக மிதியை வாங்கிக்கொண்டு அழுதுகொண்டிருந்த பாவாயியை, வெட்டுவதற்காக, அரிவாளை எடுத்து வந்தார் குமாரசாமி. ‘‘ஏனுங்க, உங்க பொஞ்சாதி நான் சொல்றத கேளுங்க. நான் உத்தமி’’ என்றாள். அதையெல்லாம் காதில் வாங்காதவனாய் குமாரசாமி அரிவாளால் வெட்டுவதற்காக ஓங்கினார். பாவாயி தடுத்தாள், ‘‘நான் உத்தமி, உத்தமி’’ என்று உரக்கக் கத்தினாள், ஆனாலும், குமாரசாமி நம்புவதாக இல்லை. உடனே வீறுகொண்டாள்.

``என்ன சொன்னாலும் நீங்க கேக்க மாட்டீங்க, சரி. என்னை வெட்டியே தீரணுமுன்னு முடிவு பண்ணிட்டீங்க. வெட்டுங்க நான் மனசார கும்பிடுற சாமி, அந்த மலையாள சாமி முன்னாடி கொண்டுபோய் விட்டு என்னை வெட்டுங்க. தயவு செய்து அதையாவது செய்யுங்க’’ என்றாள். உடனே ஒப்புதல் அளித்த குமாரசாமி, காளியம்மன் கோயிலில் உள்ள மலையாள சாமி பீடம் முன்பு கொண்டு போய் நிறுத்தினார். ஊரே கோயிலில் திரண்டு வந்து நின்றது. கோயிலில் மலையாள சாமி பீடம் முன்பு நிறுத்தப்பட்ட பாவாயி, சாமிய பார்த்து பேசினாள். ‘‘சாமி, ஊரார் பேச்சைக் கேட்டு சந்தேகப்படும் புருஷனோடு வாழ்வதைவிடக் கற்புக்கரசியாய் உயிர்விடுவதே மேல். அதற்குமுன் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுறேன். பிறகு நீங்களே என்னை வெட்டிடுங்க’’ என்றாள். குமாரசாமி, சரி என்று ஒப்புக்கொண்டார். ‘‘என் கழுத்தில மாலை போடணும் என்ற பாவாயின் கோரிக்கையை ஏற்று கோயில் பூசாரி வந்து மாலை அணிவித்தார். காளியம்மனை பார்த்து பேசத் தொடங்கினாள் பாவாயி. ‘ஓரி கொட்டி பறை முழங்க ஒவச்சாண்டி என்னைப் பெண்ணெடுக்க.... நான் உத்தமிப் பத்தினியா இருந்தா... என்னைத் தூத்திப் பேசினவங்க வாழும் இந்த ஊரு மண்மேடு மலைமேடாய் போகணும்.... வெங்கரைக் காளி என் குறையைக் கேளு...’’ என்று மனம் வெந்து பேசி மண்ணை வாரித் தூற்றினாள்.

உடனே குமாரசாமி, பாவாயியை வெட்டிக் கொன்றார். அந்த நேரம் வேகமாக ஓடி வந்த கந்தசாமி, ‘‘அண்ணே, உன்னை பாத்து, பொறாமைப்பட்ட பொசக்கெட்டவங்க பேச்சை கேட்டு, ஆத்தாவாட்டம் இருந்த அண்ணிய கொன்னுட்டியே அண்ணே. புள்ள மாதிரி பாத்த என்ன வச்சா சந்தேகப்பட்டுட்ட, நீ எல்லாம் என்னண்ணே பெரிய மனுஷன் என்றபடி தன் நாக்கைப் பிடுங்கி தானே மாண்டுபோனார் கந்தசாமி. தவறை உணர்ந்த குமாரசாமி ரத்தம் படிந்த கையோடு சாமியை வணங்கி நின்றார். சிறிது நேரத்தில், மண்ணில் சாய்ந்து விழுந்து மாண்டார்.

பாவாயின் சாபத்தினால் சேளூரிலிருந்து வெங்கரை வரை மணல்மேடு மலைமேடாய் உருமாறியது. இந்நிகழ்வுக்குப் பிறகு, இந்த மூவரும் கொலையில் உதித்த தெய்வங்களாய் மலையாளசாமி வேலிற்கு எதிர்புறக் கூடாரத்தில் வழிபாட்டிற்குரியவர்களாய் வழிபடப்பட்டு வருகின்றனர். சேளூரைச் சுற்றியுள்ள 18 பட்டிக் கிராமங்களில் உள்ள மாரியம்மன், காளியம்மன், கொங்களம்மன், பகவதியம்மன், கருப்பனார் கோயில் முதலான கோயில் விழாக்களின்போது, இவ்வேல் எடுத்துச் செல்லப்பட்டுக் காவிரியாற்றில் நீராட்டல் செய்யப்பட்டு மாலை அணிவித்து மேள, தாளம் முழக்கத்தோடு எடுத்து வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றது. விழா நாளன்று ஒவ்வொரு வீட்டிற்கும் வேல் எடுத்துச் செல்லப்பட்டு மஞ்சள் ஊற்றித் தேங்காய் உடைத்து வழிபடப்படுகின்றது. பண்டிகைக்கு எடுத்துவரும் ‘வேல்’ மூன்றாம் நாளன்று சேளூர் மலையாளசாமி கோயிலில் எடுத்து வந்த இடத்திலேயே திரும்பவும் குத்தி வைத்துவிடுகிறார்கள். காளியம்மன் கோயில் சேளூரில் அமைந்துள்ளது. கோயிலின் கருவறையில், மூலவர் காளியம்மன் அமர்ந்த கோலத்தில் அருட்பாலிக்கிறாள். கோயில் வளாகத்தில் பாவாயி, குமாரசாமி நின்றகோலத்தில் அருட்பாலிக்கிறாள். பரிவார தெய்வமாக மலையாள சாமி என்று அழைக்கப்படும் மலையப்ப சுவாமி நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார். கோயிலுக்கு பரமத்திவேலூரிலிருந்து ஜோடர்பாளையம் செல்லும் பஸ்சில் செல்லலாம். பரமத்தி

வேலூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது சேளூர்.

Related Stories: