எத்திசையும் புகழும் சித்திரை தெய்வீகப் பெருமைகளும் ராசி பலன்களும்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

வருடத்திற்கு 12 மாதங்கள்! அனைவரும் அறிந்ததுதான் இது!!

இவற்றுள், ஒவ்வொரு மாதத்திற்கும் பல விசேஷ சிறப்புகள் உண்டு. இருப்பினும், சித்திரை மாதத்திற்கென்று பல தனிப் பெருமைகளும், தெய்வீக சக்திகளும் உள்ளதை மிகப் புராதனமான “சூரிய சித்தாந்தம்'', “பாஸ்கர ஸம்ஹிதை” போன்ற பிரசித்தி பெற்ற நூல்களும், ரிக், யஜூர், சாம அதர்வண வேதங்களும், உபநிடதங்களும் விளக்கியுள்ளன. நமது வான் மண்டலத்தில் சதா சுழன்றுகொண்டேயிருக்கும் சந்திரன், செவ்வாய்,  சனி, புதன், குரு, சுக்கிரன் ஆகிய ஆறு முக்கிய கிரகங்களும் சூரியனிடமிருந்தே தங்கள் சக்தியைப் பெறுகின்றன என ரிக்வேதம் கூறுகிறது.

சூரியனை வலம் வந்துகொண்டிருக்கும் பூமியின் சாய்மானக் கோணம் Angular inclination) மாறி மாறி வருவதால்தான் பருவங்கள் மாறி, மாறி வருகின்றன. மழைபொழிகிறது. மலர்கள் மலர்கின்றன. விருட்சங்கள் செழிக்கின்றன. மரங்கள் காய்-கனிகளைத் தருகின்றன, இரவு - பகல் நிகழ்கின்றன. கற்பனை செய்து பார்த்தும்கூட உணர்ந்து கொள்ள முடியாத சக்திவாய்ந்த சூரியன், மேஷ ராசியைக் கடக்கும்போது, புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் தீவிர உச்ச சக்தியைப் பெறுகிறார்.

இந்த வானியல் விஞ்ஞான சக்தியை உணர்ந்துதான், நமது வேதகால மகரிஷிகள் சூரியன், மேஷராசியில் பிரவேசிக்கும் சித்திரை மாதத்தைப் புத்தாண்டாக உபதேசித்தருளியுள்ளனர்; காலங்காலமாக நாம் கொண்டாடியும் வருகின்றோம். நவீன வசதிகள் இல்லாத காலத்திலிருந்தே, அமாவாசை, பௌர்ணமி மாதப் பிறப்பு, வருடப் பிறப்பு, சூரிய - சந்திர கிரகண காலங்கள் ஆகிய அனைத்தையும் நம் முன்னோர்கள் டிகிரி சுத்தமாகவும், வினாடி சுத்தமாகவும் கணித்துக் கூறி வந்துள்ளதை உலகம் அறியும்!

மறைந்த நம் முன்னோர்களும் சூரியனும்..!

சூரியனைப் “பித்ருகாரகர்” எனப் போற்றுகின்றன, வேதங்களும், உபநிடதங்களும் ஜோதிடக் கலையும்!நமது மூதாதையர்களுக்கு, நாம் பக்தியுடன் அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய - சந்திர கிரகணப் புண்ணியக் காலங்கள், ஆண்டுத் திதிகள், மஹாளயப் புண்ணியக் காலம் ஆகியவற்றின்போது செய்யும் பூஜைகளின் பலனை, அவர்கள் எங்கிருந்தாலும், எப்பிறவி எடுத்திருந்தாலும், அவர்கள் இருக்கும் இடத்தையறிந்து, அவர்களிடம் சேர்த்துவிடுவதால்தான், சூரிய பகவானைப் பித்ருகாரர் எனப் புகழ்கின்றன, தர்ம சாஸ்திரமும், ஜோதிடமும்! மேலும், ஆண்டுதோறும் மறைந்த நமது தாய் - தந்தையருக்குச் செய்யும் “சிரார்த்தம்'' எனப்படும் விசேஷ திதி பூஜையை அவர்கள் சுவர்ண (தங்க) விமானங்களில் சூரியனின் கதிர்கள் மூலம் நேரில் வந்து, ஏற்று, நம்மை ஆசீர்வதித்துச் செல்வதாகவும் “கருட புராணம்'' மற்றும் சில சூட்சும கிரந்தங்களும் விவரித்துள்ளன.

சித்திரை மாதத்து முக்கிய தினங்கள்!

சூரிய பகவான், ராசி மண்டலத்தில் முதன்மை ராசியான மேஷராசியில் பிரவேசிக்கும் தினத்தையே, அதாவது, சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. நான்முகக் கடவுளான பிரம்ம தேவர் இப்பூவுலகைப் படைத்ததும் இம்மாத முதல் தேதியில்தான்! இந்நன்னாளில் பாரதத்தின் பல மாநிலங்களும் சூரிய பகவானைக் குறித்து வழிபாடு செய்வர்.

வாழ்க்கைத் தத்துவம்!

அறுசுவைகளும் (இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு) கலந்த கலவைதான் நமது வாழ்க்கை என்ற தத்துவத்தைப் போதிப் பதற்காகத்தான், வேப்பம்பூ, மாங்காய், வெல்லம், சிறிது  காய்ந்த மிளகாய், கடுகு சேர்த்து பச்சடி செய்து சாப்பிடுவார்கள். எல்லாச் சுவைகளையும், சமமாக ஏற்றத் - தாழ்வில்லாமல் பாவித்தால் நமது வாழ்க்கை கசக்காது என்பதே அதன் உள்ளர்த்தம்.

பஞ்சாங்கத்தின் பெருமை!

இந்நன்னாளில்தான் பஞ்சாங்கம் வாசிப்பர். இன்றும் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிக் கோயில் போன்ற திருக்கோயில்களில் பஞ்சாங்கம் படிப்பதைப் பார்க்கலாம். பஞ்சாங்கம் என்றால் பஞ்ச - அங்கங்கள் = ஐந்து + அங்கங்களைக் கொண்டது. யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம். இதில் யோகம் - நோயற்ற வாழ்வு வாழ்வதற்கும், திதியை அறிந்துகொள்வதால், திருமகளின் அருளையும், கரணத்தைப் பற்றி அறிந்துகொண்டால் எக்காரியத்தில் இறங்கினாலும் வெற்றிதான் வாரம் - ஆயுளை அதிகரிக்கச் செய்யும், நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்துகொண்டால் வினைகள் அகலும் -இவைகளைப் பெறுவதற்காகவேதான் பஞ்சாங்கத்தை தினமும் படிக்கவேண்டும்.

அவ்வாறு தினமும் படிக்க இயலாதோர், சித்திரை முதல் நாளிலாவது படிக்கவேண்டும். அவ்வாறு ஒருநாள் படித்தாலே, தினமும் படித்த பலன் கிடைக்கும். மேலும், ஒருமுறை படித்துவிட்டால், தினமும் படிக்கத் தோன்றும் என்பதற்காகத்தான் வருடத்திற்கு ஒருமுறையாவது படியுங்கள் என்று சொன்னார்கள், நம் மூதாதையர். அங்ஙனம் படிக்கத் தெரியாவிடினும் கோயில்களில் தினமும் படிப்பார்கள்; அதைக் காதால் கேட்டாலே மகத்தான புண்ணியபலன் நம்மை வந்தடையும்.

சித்ரா பௌர்ணமியும் கூடியிருந்து குளிர்தலும்!

ஸ்ரீ மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம், பிரதோஷத்துடன் கூடியது இந்நன்னாள், மகா வீரர் ஜெயந்தி, இந்த மாதத்தில் வரும் பௌர்ணமியை சித்ராபௌர்ணமி என்றும், தேவர்களுக்கு உகந்த நாளாகவும் (16-4-2022) அழைக்கப்படுகிறது. அன்றைய நாளில் முழுநிலவில் பலவித (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளியோதரை இத்தியாதி) கலந்த சாதங்களை (சித்ரான்னம்) எடுத்துக்கொண்டு, நிலா வெளிச்சத்தில் அனைவரும் கூடியிருந்து உணவருந்துவர்.

தேவி பாத்ரா பூஜை!

அன்றைய தினம் குபேரனின் துணைவியாரை நெய் தீபம் ஏற்றி, பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும்; இந்நாளில் உப்பில்லா உணவருந்தி விரதமிருந்தால், வாழ்நாள் முழுவதும் உடற்பிணியிலிருந்து விடுபடுவர். இந்த மாதத்தில், சில இடங்களில் மட்டுமே தோன்றும் உப்பு, மற்றும் சித்த மருந்துகளுக்குக் கூடுதலான மகத்துவம் - சக்தி உண்டாவதாக சித்தர்புராணம் கூறுகிறது. அதன் காரணமாகவேதான் சித்தர்கள்  பௌர்ணமி எனவும் கூறுவர்.

சித்திர குப்தனுக்குப் பூஜை!

நம்மை யாரும் கவனிக்கவில்லை, எந்தத் தவறையும் செய்யலாம் என்று பல தவறுகளைச் செய்கின்றோம். ஆனால், நாம் செய்யும் தவறுகளைக் கணக்-கச்சிதமாகக் குறிப்பெடுத்துக்கொள்ளும் சித்ரகுப்தன் அவதரித்த இந்நாளில், பக்தி சிரத்தையுடன் ஒரு பாவமும் செய்யாமல் பாவக் கணக்கைக் குறைக்கும் விதமாக இனியாகிலும் நெஞ்சம் புனிதம் அடையட்டுமே என்றெண்ணி விரதமிருக்கின்றனர். சித்திரகுப்தனும் அவரது துணைவியார் கர்னிகா தேவியாரும் திருமணக்கோலத்தில் காட்சி தந்தருள்வார், காஞ்சிபுரத்தில்! மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றதும், அழகர் வைகை ஆற்றில் இறங்குவதும் இம்மாதத்தில்தான்! 16-4-2022 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கல்.

20-4-2022 வராஹ ஜெயந்தி, 24-4-2022 திருவோண விரதம், 26-4-2022 ஏகாதசி புண்ணியதினம் அன்றைய தினம் நிர்ஜலமாய் (பூரண உபவாசம்) இருத்தல் மகத்தான புண்ணிய பலனைப் பெற்றுத் தரும். 29-04-மாத சிவராத்திரி - சிவபெருமானின் திருவடியில் ஒரு வில்வ இலையைப் சமர்ப்பித்தாலே போதும், நமக்குத் தேவையானவற்றையும், நாம் கேட்டதையும் - கேட்காததையும்கூட சேர்த்தே கொடுத்துவிடுவார் ஸ்ரீமகேஸ்வரர்!

அமாவாசை திதி!

30-4-2022 சர்வ அமாவாசை: நம்மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த நம் முன்னோர்களுக்கு திதிகொடுத்தால், வாழ்நாளில் துன்பக் கதவுகள் திறக்காது; எங்கும் எதிலும் இன்பமே!

அட்சயதிருதியை!

2-5-2022 கார்த்திகை விரதமிருந்தால், எதிரிகளே இல்லா நிலை உருவாகும். 3-5-2022 அட்சயதிருதியையும், படைப்புக் கடவுளான நான்முகனும் தனது சிருஷ்டி தொழிலைத் தொடங்கியதும், மறைந்த மூதாதையருக்கு தர்ப்பணங்களும், ஆடை, ஆபரணங்கள், பால், தயிர், குடை, செருப்பு, காய்கறிகள், பழங்கள், தானியங்களை வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாகக் கொடுப்பது அளவிடற்கரிய புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரும். சித்திரை - சுக்கிலபட்ச, அஷ்டமியில்தான் அம்பிகை அவதரித்தாள்.

திருவோணமும் சிவபெருமானும்!

வருடத்திற்கு ஆறு அபிஷேகங்களைக் கண்டறியும் ஸ்ரீ சிவபெருமானுக்கு, இம்மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் விசேஷ பலனை அள்ளித் தரக் கூடியது. சித்திரை மாத - சுக்கிலபட்ச - பஞ்சமி திதியில்தான் ஸ்ரீ லட்சுமி தேவி, வைகுண்டத்திலிருந்து பூலோகத்தில் அவதரித்தாள். அன்றைய தினம் ஸ்ரீ மகாலட்சுமிக்கு விசேஷ பூஜை செய்வித்தால், அனைத்து செல்வ வளங்களுடன், நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வர். மகாவீர் வர்த்தமான பகவான் அவதார தினம், 04-5-சதுர்த்தி விரதம்; 11-5-வாசவி ஜெயந்தி; 12-5-ஏகாதசி விரதம் - சகல பாவங்களையும் போக்கடிக்கும். 13-5-பிரதோஷம்.

Related Stories: