குரு தலங்கள்

திருஇலம்பையங்கோட்டூர்

பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர். ரம்பை முதலான தேவகன்னிகைகள் ஈசனை பூஜித்த தலம். இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு முன் தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகோடு அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார் இவர். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பது போல் அமைந்துள்ளது.

ஆலங்குடி

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி சாலையில் 17வது கிலோமீட்டரில் உள்ளது ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியின் மூலவர் மட்டுமே பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் இருக்கும். ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தியின் உற்சவர் திருமேனியை சிறந்த வேலைப்பாடுகளுடன் தரிசிக்கலாம். திருத்தேரில் பவனி வரும் மூர்த்தி இவர். ஆறு கால அபிஷேகம் கண்டருளும் தெய்வம்.

குருவித்துறை

குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம், குருவித்துறை. மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு செல்ல பேருந்துகள் உள்ளன. குருவின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தேரில் காட்சியளித்ததால் சித்திர ரத வல்லப பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.  

திருவையாறு

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி வலது மேல் கையில் கபாலமும், கீழ் கையில் சின்முத்திரையும், இடதுகரத்தில் சூலமும், கீழ் இடக்கையில் சிவஞான போதத்துடனும் திருவடியின் கீழ் ஆமையுடன் திருக்காட்சியளிக்கிறார். சுரகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார் இவர்.  

திருவலிதாயம் (பாடி)

சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்க நிலையில் உள்ளது. புலித்தோல் தரித்து, பூணூல் அணிந்துள்ளார். இந்த திருவடிவம் ‘வ்யாக்யான தட்சிணாமூர்த்தி’ என அழைக்கப்படுகிறது.

ஏரையூர்

தட்சிணாமூர்த்தி என்றாலே கல்லால மரமும், அதனடியில் ஸனத் சகோதரர்கள் அமர்ந்திருக்க ஈசன் தட்சிணாமூர்த்தியாக அவர்களுக்கு மௌன உபதேசம் செய்யும் காட்சிதான் நினைவுக்கு வரும். ஏரையூர் திருத்தலத்தில் ஸ்தித தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் இவர் தரிசனம் தருகிறார். இந்தக் கோயிலில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் கல்லால மரம் வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறது. இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்பதூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

திருநெடுங்களம்

திருநெடுங்களம் தலத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படுகிறார். இவருக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபட தடைகள் தவிடு  பொடியாவதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருச்சியிலிருந்து 19 கி.மீ.தொலைவில் உள்ளது திருநெடுங்களம்.

திருப்புனவாசல்

இடது கரத்தை நாகப்பாம்பு அணி செய்கிறது. கால்களோ அசுரனை மிதித்தபடி தன் வெற்றியை பறைசாற்றுகின்றன. கம்பீரமான தோற்றம். ‘அவநம்பிக்கை, பொறாமை, கோபம் போன்ற துர்குணங்களை நசுக்குவதுபோல, கால்களால் அசுரனை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் இந்த தட்சிணாமூர்த்தி. திருச்சியிலிருந்து புதுக்கோடை வழியாக அறந்தாங்கி சென்று அங்கிருந்து 42 கி.மீ. தொலைவில் பயணித்து அடையலாம்.

 - பரிமளா

Related Stories: