இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்!

‘பிலாத்து இயேசுவை சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து, ‘யூதரின் அரசே வாழ்க’ என்று அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், ‘‘அவனை நான் உங்கள் முன் வெளியே கூட்டி வருகிறேன். பாருங்கள், அவரிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்’’ என்றான். இயேசு முள்முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார்.

பிலாத்து அவர்களிடம் ‘இதோ! மனிதன்’ என்றான். அவரைக் கண்டதும், தலைமைக் குருக்களும், காவலர்களும் ‘‘சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்’’ என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம் நீங்களே இவரைக் கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். இவரிடம் குற்றம் இருப்பதாகத் தெரியவில்லையே என்றார். யூதர்கள் அவரைப் பார்த்து, ‘‘எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறை மகன் என்று உரிமை கொண்டாடுகிறான்’’ என்றனர். பிலாத்து இதைக்கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான்.

அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், ‘‘நீ எங்கிருந்து வந்தவன்? என்று கேட்டான். ஆனால், இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. அப்போது பிலாத்து, ‘‘என்னிடம் பேச மாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பதும் உனக்குத் தெரியாதா?’’ என்றார்.இயேசு மறுமொழியாக, ‘‘மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன் தான் பெரும்பாவம் செய்தவன் என்றார்.

’’ - (யோவான் 19:1-11) ‘‘குற்றம் சாட்டுவதையும் பொல்லாங்கு பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்தோருக்கு உன்னையே கையளித்து வரியோரின்

தேவையைப் பூர்த்தி செய்தால் இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.’’அன்புத் தந்தையே! மனமாற்றத்திற்காக நீரே எங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கும் இத்தவக்கால முயற்சிகளை மேற்கொள்கின்றோம். இந்நாட்களில் உம் திருமகனின் இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றில் மறைபொருளை ஆய்த்து உணரவும், அதன்படி எங்கள் வாழ்வு சிறக்கவும் செய்தருளும்.

உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம். இயேசு தன் உடலைப் பலியாக ஒப்புக்கொடுத்து இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார். இறைவன் மனிதன் ஆக வேண்டும் என்பது ஆதிகாலத்திலேயே இறைவன் குறித்து வைத்த திட்டம். முதல் மனிதன் செய்த பாவத்தைக் களையவே இறைவன் மனிதராக உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனிதனைப் புனிதமாக்கும் இந்த இறைவனின் திட்டத்தில் இறைமகன் தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்கின்றார்.

இது மனமாற்றத்தின் காலம். தீமையை விட்டு நன்மைக்கும் அநீதியை அகற்றிவிட்டு நீதிக்கும், சுய நம்பிக்கையைத் துறந்து நம்பிக்கைக்கும், சாத்தானது அரசைக் கைவிட்டு இறையரசுக்கும் கடந்து வரவேண்டிய காலமாகும். இதற்கு முதல் தேவை உண்மையான மனமாற்றம். இத்தவக்காலம் நம்மை ஆதித்திருச்சபையின் மனநிலையைப் பெற அழைக்கிறது. தவக்காலம் நமக்கு இறைவன் எல்லாம் என்று நம்ப வேண்டிய காலம். ஏனென்றால், அவரே இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுவித்து, தம் அன்பார்ந்த மகனின் அரசில் கொண்டுவந்து சேர்த்தார். இம்மகனால்தான் நமக்கு மீட்பு உண்டு, பாவ மன்னிப்பு உண்டு.-

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: